நூல் அறிமுகம்: ’ ஏலோ ... லம் ’ - விவசாயத் தொழிலாளிகள் ஏலத் தோட்டங்களில் படும்பாட் டை விவரிக்கும் ஜனநேசனின் நாவல் . பெ.விஜயகுமார் பணி ஓய்வு பெற்ற அரசு கல்லூரி நூலகர் ஜனநேசனின் இயற்பெயர் இரா . வீரராகவன் . நான்கு குறுநாவல்கள், ஏராளமான சிறுகதைகளை ஏற்கனவே எழுதியுள்ள ஜனநேசன் ‘ ஏலோ *** லம் ’ எனும் தன்னுடைய முதல் நாவலை தற்போது எழுதியுள்ளார் . தான் மேற்கொண்ட கள அனுபவங்களின் அடிப்படையில் ரத்தத்தை உறிஞ்சுகின்ற அட்டைகள் நிறைந்த மலைப் பிரதேசத்தில் உள்ள ஏலத் தோட்டங்களில் உடலை வதைக்கும் குளிரில் குடிசை வீடுகளுக்குள் ஒதுங்கி உழைக்கின்ற விவசாயக் கூலிகள் படும்பாட்டை எழுதியுள்ளார் . பல நாவல்களிலும் மலைவாழ் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் துயரங்கள் பதிவாகி உள்ளதை அறிவோம் . மலேசியாவிற்கு 1950 களில் பஞ்சம் பிழைக்கப்போன தமிழர்கள் ரப்பர் தோட்டங்களில் அனுபவித்த சொல்லொண்ணாத் துயரங்களை ‘ பால்மரக் காட்டினிலே ’ என்ற நாவலில் அகிலன் சித்தரித்துள்ளார் . மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்ட மலைவாழ் மக்கள் படும் அவதிகளை ‘ மனிதர்கள் விழ...