பொம்மை வீடு , கலகக்காரர் ஹென்ரிக் இப்சனின் பெண்ணியம் பேசிய நாடகம் ! நவீன நாடகங்களின் நாயகன் என்றழைக்கப்படும் ஹென்ரிக் இப்சன் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாடக மேடைகளில் கலகக்காரராக வலம்வந்தார் . நார்வேயைச் சேர்ந்த இப்சன் ( 1828-1906) டேனிஷ் மொழியில் எழுதிய நாடகங்கள் ஏற்படுத்திய தாக்கம் ஐரோப்பா முழுவதும் புயலென வீசியது . சமூகப் பிரச்சனைகளை மட்டுமே தன்னுடைய நாடகங்களின் கருப்பொருளாக எடுத்துக்கொண்டார் . அன்றைய அரசியல் கொந்தளிப்புகளையும் , நாடுகளுக்கிடையே நடந்த மோதல்களையும் , போர்களையும் முற்றிலும் தவிர்த்தார் . மர்மக் கொலைகள் , திகில் காட்சிகள் , இவைகளுக்குப்பின் இறுதியில் மர்மமுடிச்சு அவிழ்ந்து அனைவரும் அமைதியுடன் களைந்திடும் அன்றைய பாணி நாடகங்களிலிருந்தும் விலகி நின்றார் . குடும்ப உறவுகளில் ஏற்படும் சலனங்கள் , சஞ்சலங்கள் , சமரசங்கள் பற்றியே அவரின் நாடகங்கள் மையங்கொண்டிருந்தன . சமூகத்தின் ஒழுக்க விதிகள் , அறநெறிக் கோட்பாடுகள் , வரையறைகள் , சட்டதிட்டங்கள் , கட்டுப்பாடுகள் இவற்றில் சிக்கித் தவிக்கும் மனி...