ஆங்கில நாவல் இலக்கிய உலகின் தனித்துவமான நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் எழுதிய நாவல் ’ப்ரைடு அன் ப்ரஜுடிஸ்’ -- பெ.விஜயகுமார். நாவல் இலக்கியம் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மொழிகளில் மிகப் பெரும் வெற்றி பெற்றது. காவியமும், கவிதையும் கோலோச்சிய சூழலில் எளிய மனிதர்களும் படித்து இன்புற உரைநடையில் எழுதப்பட்ட நாவல் பரந்த வாசிப்பு உலகை உருவாக்கியது. ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் நாவல் இலக்கிய வகைமை மிகப் பெரிய தாக்குதலை ஏற்படுத்தியது. நவீன காவியம் என்று போற்றப்பட்டது. ஆங்கிலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் சாமுவேல் lரிச்சர்ட்சன் தொடங்கி இன்றுவரை ஆங்கில நாவலாசிரியர்கள் இலக்கிய உலகில் சிறந்து விளங்குகின்றனர். ஆங்கில நாவல் உலகிற்கு ஜேன் ஆஸ்டின் அளித்துள்ள கொடை அளப்பரியது. பெண்கள் நாவல் எழுத்துலகில் நுழைந்திட முடியாத காலத்தில் தன் அடையாளத்தை மறைத்தே நாவல்கள் படைத்தார். ’எம்மா’ ’மான்ஸ்ஃபீல்டு பார்க்’, ’சென்ஸ் அன் சென்சிபிலிடி’, ’நார்த்தங்கர் அபி’, ப்ரைடு அன் ப்ரஜுடிஸ், ’பெர்சுவேஷன்’ ஆகிய ஆறு நாவல்கள் மட்டும் எழுதி உலகின் சிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார் ...