பா . செயப்பிரகாசம் கி . ரா ., கு . அழகிரிசாமி , மேலாண்மை பொன்னுச்சாமி , லட்சுமணப் பெருமாள் என்று காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து வரிசையில் மற்றுமொரு தவிர்க்க முடியாத பெயர் பா . செயப்பிரகாசம் . படைப்பும் , செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறவர் . தமிழக அரசின் செய்தி - மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற செயப்பிரகாசம் ‘ சூரிய தீபன் ’ என்ற புனைப் பெயரில் எழுதிவருகிறார் . 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருந்தார் . தாமரை , தினமணி , புதிய பார்வை , தீராநதி , கணையாழி , காலச்சுவடு , மனஓசை போன்ற இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன . சமூக நீரோட்டத்துடன் செல்லாமல் எதிர்க் கருத்தியலை வைத்து நடைபோட்ட ‘ மனஓசை ’ இதழின் பொறுப்பாசிரியராக இருந்தவர் . இலக்கிய மேடைகளிலும் , அரசியல் அரங்குகளிலும் கருத்து செறிந்த சொற்பொழிவுகள் ஆற்றுபவர் . இதுவரை கதை உலகின் காலடி பட...