தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர்கள் ஓர்
அறிமுகம் - கி.ராஜநாராயணன்
கி.ரா. என்று
எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் தமிழின்
மிகப் பெரிய கதைசொல்லி. நாற்பது வயதுக்கு மேல் எழுதத் தொடங்கிய
கி.ரா. இன்று 95 வயதிலும்
தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். சிறுகதை, நாவல், கடிதங்கள், நாட்டுப்புறப்
படைப்புகள், வரலாறு, வட்டாரச்சொல்
அகராதி என்று தமிழின் அனைத்து இலக்கிய வகைகளிலும் இவரின் கைவண்ணம் வெளிப்பட்டுக்
கொண்டிருக்கிறது. “மழைக்குப் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன்.
ஆனால் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக் கொண்டிருந்து
விட்டேன்” என்கிற கிராவை புதுவை பல்கலைக்கழகம் அவரை வருகைதரு
போராசிரியராக பணியிலமர்த்தி கரிசல் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தென் தமிழகத்தின் கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலை பலரும் எழுதிச்
சென்றிருந்தாலும் கரிசல் வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று கி.ராதான் போற்றப்படுகிறார். கோபல்லபுரத்து மக்கள்
நாவலுக்காக சாகித்ய அகாதமி இவருக்கு விருது வழங்கியது. இதனை
இந்திய வாய்மொழி மரபுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை என்று திறனாய்வாளரும், படைப்பாளியுமான ஏ.கே.ராமானுஜன்
பாராட்டினார். மானாவாரிப் பிரதேசமான கரிசல் காட்டில்
விவசாயிகள் இயற்கையுடன் மல்லுக்கட்டியே வாழ்கின்றனர். கி.ரா. விவசாயிகளோடு விவசாயியாக வாழ்ந்து அவர்களுக்கான போராட்டத்திலும் கலந்துகொண்டு இரண்டு முறை சிறை சென்றவர். வெள்ளந்தியான கிராம மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சித்தரிக்கும்
இவரின் எழுத்துக்கள் நகரப்புற மக்கள் மீதும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது
என்பதில் ஐயமில்லை.
பொதுவுடைமை இயக்கத்தோடு கி.ரா. கொண்டிருந்த உறவுதான் அவரை எழுத்தாளராகப்
பரிணமிக்கச் செய்தது. 1960-ல் கோவையில் கூடிய தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம் கி.ரா.வை
நாட்டுப்புறக் கதைகளைத் திரட்டும்படி பணித்தது. கதைகளைச்
சேகரிக்கச் சென்ற கி.ரா. ஒரு கை
தேர்ந்த கதைசொல்லியாகவே மாறிவிட்டார். தமிழக விவசாயிகள்
இன்று டெல்லிவரை சென்று போராடுகிறார்கள். அவர்களின்
வாழ்வாதாரமான விளைநிலங்களைப் பெருநிறுவனங்கள் கையகப்படுத்திக் கொள்வதை சட்டமாகவே
இயற்றியுள்ளார்கள். இந்த அவலத்தை கி.ரா.
1950-களிலேயே படம்பிடித்துக் காட்டியுள்ளார். சாதியையும்,
அதன் கொடூர வடிவமான தீண்டாமையையும், விளிம்பு
நிலை மனிதர்கள் அன்றாடம் சந்திக்கும் அவலத்தையும் அவமரியாதையையும் கி.ரா.-வின் கதைகள்தோறும் காண்கிறோம்.
1959-ல் தாமரை இதழில் கி.ரா. எழுதிய ’கதவு’ கதை வாசகர் நெஞ்சை உருக்கிடும். இக்கதையில் வாழ்ந்து
கெட்ட ஒரு குடும்பத்தின் துயரத்தைக் காட்சிப்படுத்துகிறார். பழைய
காலத்து காரை வீட்டில் வாழ்கிறார்கள். வீட்டில் இருக்கும்
ஒரே சொத்து அதன் கதவு மட்டுமே. பெரிய வலுவான ஒற்றைக் கதவு.
வீட்டின் குழந்தைகள் லட்சுமியும், அவளுடைய
தம்பி சீனிவாசனும் அந்தக் கதவின்மீது ஏறி எந்நேரமும் விளையாடிக்
கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சேக்காளிகளும் அவர்களோடு
சேர்ந்துகொள்வார்கள். அந்தக் கதவை ஒரு பஸ் போன்று கற்பனை
செய்துகொள்வது அவர்களுக்கு எளிதானது. குழந்தைகளால் எதையும்
எதாகவும் கற்பனை செய்துகொள்ள முடியும்தானே. கதவின் மீது ஏறி
ஆடுவது அவர்களுக்கு பஸ்ஸில் பயணிப்பது போலாகும். லட்சுமியின்
தாய் காட்டு வேலைக்கு போய்விட்டு இருட்டிய பிறகுதான் வருவாள். அவள் தந்தை வேலை தேடி மணிமுத்தாறு போய் பலநாட்கள் ஆகிவிட்டன. அவரிடமிருந்து தகவல் ஏதுமில்லை. தீர்வை வசூலிக்க
தலையாரி வீட்டிற்கு வருகிறான். தீர்வை கட்ட தவணை கேட்கிறாள்
லட்சுமியின் தாய். அவள் சொல்லும் காரணங்களை தலையாரி
ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஆட்களுடன் வந்து கதவை கழற்றி
எடுத்துச் செல்கிறான். இழப்பைப் புரிந்துகொள்ள முடியாத
குழந்தைகள் கழற்றி எடுத்துச்செல்லப்படும் கதவின் பின்னால் ஊர்வலமாகச்
செல்கிறார்கள். வேலை முடித்து இரவு வீட்டுக்கு வந்த
லட்சுமியின் தாய் அதிர்ச்சி அடைகிறாள். அவளின் கைக்குழந்தைக்கு ஏற்கனவே காய்ச்சல். கார்த்திகை
மாதக் கூதலில் குழந்தைகள் நடுங்குகிறார்கள். பச்சைக் குழந்தை
குளிர் தாங்காமல் இறந்தே போய்விடுகிறது. சிறுவன் சீனிவாசன்
அவர்கள் வீட்டுக்கதவு சாவடிச் சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருப்பதை
பார்த்துவிடுகிறான். அக்கா லட்சுமியை கூட்டிக்கொண்டு
சாவடிக்குச் செல்கிறான். இருவரும் கதவை
கட்டிப்பிடித்துக்கொள்கிறார்கள். லட்சுமி கதவில்
பிடித்திருக்கும் கரையான் மண்ணை தன் பாவாடையில் துடைக்கிறாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. இருவரின்
கைகளும் கதவைப் பலமாகப் பற்றிக்கொள்கின்றன. அவர்களால் வேறு
என்ன செய்ய முடியும்?
கி.ரா.-வின்
’நாற்காலி’ நகைச்சுவை நிரம்பி வழியும் சிறுகதை.
அந்தக் காலத்துக் கிராமத்து வீடுகளில் எல்லோரும் தரையில்
உட்கார்வதுதான் வழக்கம். விருந்தாளிகள் வந்தால் ஜமுக்காளம்
விரித்து உட்காரவைப்பார்கள். நகர நாகரீகம்தான் கிராமத்தையும்
மெதுவாகச் சென்றடைந்து விடுகிறதே. நாற்காலி செய்ய வேண்டும்
என்று ஆசைப்படும் ஒரு கிராமத்துக் குடும்பத்தினரின் அனுபவத்தை கி.ரா. இக்கதையில் சொல்கிறார். வீட்டினருக்கு
நாற்காலியில் நாட்டம் வந்ததே ஒரு சுவாரசியமான அனுபத்தினால்தான். ஒரு நாள் அவர்கள் வீட்டுக்கு கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு சப்ஜட்ஜ்
வருகிறார். வீட்டிலிருக்கும் முக்காலியில் அவரை உட்காரச்
சொல்கிறார்கள். உட்கார்ந்த நொடியில் முக்காலி சாய்ந்து அவர்
தரையில் விழுகிறார். பொங்கி வரும் சிரிப்பை அடக்க முடியாமல்
குழந்தைகள் அறைக்குள் ஓடுகிறார்கள். பெரியவர்கள்
செய்வதறியாது திகைக்கிறார்கள். இந்நிகழ்வுக்குப் பின்னரே
அவர்கள் நாற்காலி செய்ய வேண்டுமென்று முடிவெடுக்கிறார்கள். விலைக்கு
வாங்காமல், தச்சனை அமர்த்தி வீட்டிலிருக்கும் மரத்தைப்
பயன்படுத்தி நாற்காலி செய்வது என்றும் முடிவெடுக்கிறார்கள். குழந்தைகளின்
தாய்மாமா இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய வீட்டிற்கும் ஒரு நாற்காலி
செய்ய வேண்டும் என்கிறார். அவர் கஞ்சர் மட்டுமல்ல, சாமர்த்தியமும் கொண்டவர். செலவழிக்காமல் நாற்காலி
கிடைத்துவிட்டதில் அவருக்கு மகிழ்ச்சி. அழகிய
வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட ராமர்-லட்சுமணர் போல்
ஒரேமாதிரியாக இருக்கும் இரண்டு நாற்காலிகள் வந்தடைகின்றன. நாற்காலி
வந்ததும் குழந்தைகளுக்கு உற்சாகம். நாற்காலியில்
உட்கார்வதற்கு எப்போதும் போட்டிதான். ஆனால் ஓர் இரவில்
சற்றும் எதிர்பாராத பிரச்சனை வருகிறது. ஊரில் ஒரு பெரியவர்
இறந்துவிட்டார் என்றும், பிணத்தை உட்கார வைக்க நாற்காலி
வேண்டும் என்று கேட்கிறார்கள். இறந்தவர் அவர்களுக்கு
தெரிந்தவர் என்பதால் தட்ட முடியவில்லை. அதுவரை இறந்தவர்களை
அம்மியின் மீது சாய்த்து தரையில் உட்காரவைப்பதுதான் கிராமத்து வழக்கம். நாற்காலி வந்ததும் வழக்கமும் மாறுகிறது. இழவு
வீட்டிலிருந்து திரும்பி வந்த நாற்காலியில் உட்காருவதற்குக் குழந்தைகள்
பயப்படுகிறார்கள். வாளி வாளியாக தண்ணீரைக் கொட்டிக்
கழுவுகிறார்கள். பின்னர் இது தொடர்கதையாகிவிடுகிறது. கிராமத்தில் யார் இறந்தாலும் நாற்காலி கேட்டு வந்துவிடுவார்கள். அதுவும் எப்போதும் இரவில்தான் கதவு தட்டப்படுகிறது. அவர்களுக்குச்
சலிப்பு வந்துவிடுகிறது. ஓர் இரவு நாற்காலி கேட்டு
வந்தவர்களிடம் மாமா வீட்டில் போய் வாங்கிக்கொள்ளச் சொல்கிறார்கள். பிரச்சனை ஒருவழியாக தீர்கிறது. ஆனால் பாவம் மாமா
இப்போது மாட்டிக்கொண்டார். ஒரு நாள் மாமா வீட்டிற்குப்
போனபோது அவர் வீட்டில் நாற்காலியைக் காணவில்லை. விசாரித்தபோது
அதைப் பொதுப் பயன்பாட்டுக்கே கொடுத்துவிட்டதாக மாமா கூறினார். இந்தக் காரியத்திற்கென்று ஒரு நாற்காலி தேவைப்படுகிறதுதானே என்றார்.
அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
முதலாளித்துவ சமுதாயத்தில் எப்போதும்
வஞ்சிக்கப்படுபவர்கள் விவசாயிகளே. கிராமங்களுக்கு மின்சாரம் வந்ததும்
கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கு மோட்டார் பயன்படுத்தலாம் என்று மகிழ்ந்தனர்.
ஆனால் அதில்தான் எத்தனை பிரச்சனைகள். கி.ரா.-வின் ‘கரண்டு’ கதையில் விவசாயத்திற்குக் கரண்டு கனெக்ஷன் வாங்கிய
ராமசாமி நாயக்கர் படும்பாடு சொல்லிமாளாது. ராமசாமி நாயக்கர்
இரண்டாயிரம் ரூபாய் செலவழித்து பம்புசெட் நிறுவினார். முதலில்
சந்தோஷமாகத்தான் இருந்தது. கமலையில்லை, மாடுகள் இல்லை மாயமாக வந்து விழுதே தண்ணீர் என்று ஆச்சரியப்பட்டார்.
ஆனால் கொஞ்ச நாட்களிலேயே பிரச்சனைகள் முளைத்தன. மோட்டார் ஓட்டினாலும் ஓட்டாவிட்டாலும் சரி வருஷத்திற்கு நூத்திஅறுபது
ரூபாய் கட்டியாக வேண்டும். மாதாமாதம் மின்கட்டணம்
கட்டுவதற்கு கோவில்பட்டி போகவேண்டும். அதுவும் திங்கள் கிழமை
மட்டும்தான் கட்டமுடியும். மின்சார இலாகாவினர் கரண்ட்
உபயோகிக்கும் விவசாயிகளை கன்ஸுமர்கள் என்றழைத்தனர். நாயக்கரைப்
பொருத்தவரை இதற்கு அர்த்தம் ”நாய்க்குப் பிறந்த பயல்கள்”.
ராமசாமி நாயக்கர் தன்னுடைய நாலு ஏக்கர் தோட்டத்தில்
சோளம் முளைக்கட்டி இருந்தார். தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சினால்தான்
பயிர் பிழைக்கும். கரண்ட் விநியோகத்திற்கு மின்சார இலாகா
ஷிப்ட் முறையை ஏற்படுத்தியிருந்தார்கள். ஒரு வாரம்
மத்தியானம் வரை கரண்ட், அடுத்த வாரம் மத்தியானத்துக்குமேல்
கரண்ட், இடையில் வாரத்தில் ஒரு நாள் மின்சாரம் நின்றுவிடும்.
அணைகளில் தண்ணீர் பொங்கி வழிந்தாலும் ஷிப்டுதான். நாள் முழுவதும் கரண்ட் வேண்டும் என்று ஒரு மனு எழுதிக்கொண்டு ராமசாமி நாயக்கர்
கோவில்பட்டி போகிறார். முதலில் ஒரு குட்டி அதிகாரியைப்
பார்த்தார். மனுவை வாங்கி பார்க்காமலேயே “நோ, நோ, முடியாது, எங்களுக்கு மேலே இருந்து கண்டிப்பா ஆடர் வந்திருக்கு” என்று தலையை பலமாக குலுக்கி மறுத்துவிட்டார். அவருக்கு
மேலே உள்ள அதிகாரியைப் ராமசாமி நாயக்கர் பார்க்கிறார். பத்திரிகை
படித்துக்கொண்டிருந்த அந்த அதிகாரி மனுவை வாங்கி அதன் மேல் கல்லைத் தூக்கிவைத்து
அதை சமாதி பண்ணினார். விஷயத்தைக் கேட்டுக்கொண்ட மாதிரி தலையை
ஆட்டி. “போம், போம்! பதில் வரும்” என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி
மீண்டும் பத்திரிகையில் ஆழ்ந்துவிட்டார். ராமசாமி நாயக்கர்
வேறுவழியின்றி கிராமத்திற்குத் திரும்பினார். கோவில்பட்டி
நகரத் தெருக்களில் ஒரே ஒளி மயம். கடைகளில் பகல்
வெளிச்சத்திலும் லைட் எரிந்து கொண்டிருந்தது. ரேடியோக்கள்
போட்டி போட்டு பாடிக்கொண்டிருந்தன. கோபத்துடன் ஊர்வந்து
சேர்ந்தார். தோட்டம் சென்று டிரான்ஸ்பார்மரை நோக்கிப் போனார்.
திடீரென்று மனம்மாறி செய்ய வேண்டிய காரியம் இதுவல்ல. அதைவிட முக்கியமானது தன் சக விவசாயிகளை திரட்டுவதுதான் என்ற முடிவுடன்
அவர்களை நோக்கி நடந்தார். ஒன்றுபட்ட போராட்டம்தான்
விவசாயிகளின் துயர் ஓட்டும் என்று சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் கி.ரா.
உடல் ஊனமுற்றவர்கள் தங்களின் ஊனத்தால் படும்
அவஸ்தையைவிட அவர்களைக் குடும்பத்தாரும், சமூகமும்
அவமதிப்பதில்தான் மனம் நொந்து போகிறார்கள். கி.ரா.-வின் ‘ஜீவன்”
கதையில் அங்குப்பிள்ளை ஊமை மட்டுமல்ல செவிடும்கூட அங்குப்பிள்ளை ஒரு
கிராம முன்சீப் பிள்ளையின் மூத்த மகன். அவனுடைய தம்பி
ஆதிலிங்கப்பிள்ளையைக் கொண்டாடும் பெற்றோர்கள் அங்குப்பிள்ளையை ஒரு உணர்ச்சியுள்ள
ஜீவனாகவே மதிப்பதில்லை. உடல்ரீதியாக திருமணம் செய்துகொள்ள
தகுதி பெற்ற அண்ணன் அங்குப்பிள்ளையை புறக்கணித்துவிட்டு தம்பிக்கு பெண் பார்த்து
திருமணம் ஏற்பாடு செய்கின்றனர். விரக்தியின் உச்சத்தில்
அங்குப்பிள்ளை தன்னுடைய ஆண்குறியையே வெட்டிக்கொண்டு ரத்தவெள்ளத்தில் மிதந்து
திருமண வீட்டையே கதிகலங்க வைக்கிறான்.
பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் கிட்டத்தட்ட
நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்டது. இவ்வியக்கத்தை
வளர்த்திட எண்ணற்ற தோழர்கள் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்துள்ளனர். ‘தோழன் ரங்கசாமி’
கதையில் அவ்வாறான தன்னலமற்ற ஒரு கட்சித் தோழனை கி.ரா. சித்தரிக்கிறார். ஒரு மில்
தொழிலாளியான ரங்கசாமி நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு வேலையை இழக்கிறான். போராட்டத்தில் கைதாகி காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான சித்ரவதைக்கும்
ஆளாகிறான். கட்சியின் முழுநேர ஊழியனாகி விவசாயத்
தொழிலாளிகளைத் திரட்டுவதில் முனைப்புடன் உழைக்கிறான். கட்சி
தடைசெய்யப்பட்டதால் ஊழியர்களை தலைமறைவாகச் செல்லும்படி கட்சி சொல்கிறது. க்ஷயரோகத்தால் பாதிக்கப்பட்ட ரங்கசாமி ஊரைவிட்டுச் செல்லும்போது ரயில்வே
லைன் அருகே மயக்கமுற்று கீழே விழுகிறான். கேங்மேன் எனப்படும்
ரயில்வே தொழிலாளர்கள் அவனைக் காப்பாற்ற முயலுகிறார்கள். தன்
கையிலிருந்த கட்சிக்கொடியை அவர்களிடம் கொடுத்துவிட்டு உயிர் துறக்கிறான்.
ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு தோழன் ரங்கசாமி இறந்த அதே நாளில்
கேரளத்தில் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. ஆனால் இந்த
செய்தியைக் கேட்க ரங்கசாமி உயிருடன் இல்லை.
பெ.விஜயகுமார்
Comments
Post a Comment