நூல் அறிமுகம் ’அங்கிள் டாமின் குடிசை’ (Uncle Tom’s Cabin) 1850களில் அமெரிக்க நாட்டை உலுக்கிய ஹாரியட் பீச்சர் ஸ்டோவின் நாவல்.
அமெரிக்க ஐக்கிய நாடு இன்று உலகின் வல்லரசாகத் திகழ்வதற்கு அதன் பரந்த இயற்கை வளங்கள் மட்டும் காரணமல்ல. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றழைக்கப்படும் கறுப்பின மக்களின் கடுமையான உழைப்பும் காரணமாகும். 1514இல் ஒரு போர்ச்சுக்கீஸ் கப்பல் அட்லாண்டிக் கடலைக் கடந்து ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விற்கும் வணிகத்தைத் துவக்கியது. 1500-1865 இவற்றிற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 12.5 மில்லியன் ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அப்பாவி மக்களைப் பிடித்துச் சென்று அமெரிக்காவின் சந்தைகளில் விற்கப்படும் கொடூரத்தை அலெக்ஸ் ஹேலி ’தி ரூட்ஸ்’ என்ற நாவலில் உணர்ச்சிப் பூர்வமாகச் சித்தரித்துள்ளார். கறுப்பின மக்கள் இன்றும் அமெரிக்காவின் நிறவெறிக்குப் பலியாவதை அன்றாடம் பத்திரிகைகளில் பார்க்கிறோம். மிகச் சமீபத்தில் ஃப்லைடு லாய்டு என்ற கறுப்பின இளைஞரை அமெரிக்காவின் காவல்துறை அதிகாரி காலில் மிதித்துக் கொன்ற காட்சி உலகையே உலுக்கியது.
கறுப்பின மக்கள் அமெரிக்காவில் அடைந்த துயரங்களை பலரும் இலக்கியங்களில் சொற்சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர். ரிச்சர்டு ரைட், ஜேம்ஸ் பால்டுவின், ஜோரா ஹர்ஸ்டன், அலிஸ் வாக்கர், டோனி மாரிசன் போன்ற நிறைய ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கறுப்பின மக்களின் சொல்லித் தீராத துயரங்களை படைப்பிலக்கியத்தின் பல வடிவங்களிலும் வடித்துள்ளனர். இவ்வரிசையில் முன்னத்தி ஏராக வருபவர் ’அங்கிள் டாமின் குடிசை’ எனும் நாவலை எழுதிய ஹாரியட் பீச்சர் ஸ்டோ (1811-1896) எனும் வெள்ளையினப் பெண்மணி ஆவார்.
வெள்ளையினப் பெண்மணி கறுப்பின மக்கள் படும்பாட்டை எழுத்தோவியமாகத் தீட்டியது அன்றைய அமெரிக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் தென் மாநிலங்களில் வாழ்ந்த வெள்ளையின மக்களின் நிந்தனைக்கு ஆளானார். அன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென்பகுதியில் அடிமைமுறை கொடூரமாக நிலவியது. அடிமைகளை வைத்திருப்பதைப் பெருமையாகவே கருதினார். மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவது ஓர் அறமற்ற செயல் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. வீட்டு மிருகங்களில் ஒன்றாகவே கறுப்பின மக்களைக் கருதினர். அவர்களை விற்கவும், வாங்கவும், அடிக்கவும், கொல்லவும் உரிமை பெற்றவர்களாகவே எண்ணினர். அவர்கள் புனித நூலாகக் கருதும் பைபிளிலும் அதற்கு ஒப்புதல் இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.
அங்கிள் டாமின் குடிசை இரண்டு பாகங்களில் அறுநூறு பக்கங்களாக விரிந்து செல்லும் நாவல். முதலில் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. 1852இல் நாவலாக வெளிவந்ததும் மூன்று லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பைபிளுக்கு அடுத்ததாக அதிகம் விற்ற புத்தகம் என்ற பெருமை படைத்தது. அடிமைமுறை ஒழிப்புச் சட்டம் (1807) இயற்றப்பட்டதும் அமெரிக்காவின் வடமாநில மக்கள் அதை எளிதில் ஏற்றுக்கொண்டனர். அடிமை ஒழிப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள் (Abolitionists) இந்நாவலைக் கொண்டாடினர். ஆனால் அமெரிக்காவின் தென்மாநில மக்கள் கடுமையாக எதிர்த்தனர். ’ஜிம் குரோ சட்டம்’ எனும் கறுப்பின மக்களைப் பாகுபடுத்தும் கொடூரச் சட்டத்தைக் கொண்டுவந்தனர். தப்பிச் செல்லும் அடிமைகளைத் திரும்பப் பிடித்துவருவதற்கென்று சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது (Fugitive Slaves Act- 1850).
அபிரகாம் லிங்கன் ஒருமுறை ஹாரியட் பீச்சரைச் சந்தித்தபோது ”பெண்ணே! உன் நாவல் ஒரு உள்நாட்டுப் போரையே ஏற்படுத்திவிட்டது” என்று சொல்லிப் பாராட்டியுள்ளார். கனெக்டிகட் நகரத்தில் பிறந்த ஹாரியட் பீச்சர் ஆசிரியராகப் பணி ஆற்றினார். கிறித்துவ மதக் கோட்பாடுகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
கிறித்துவம் வலியுறுத்தும் அன்பும், அறமும் அடிமைமுறை ஒழிப்புக்கு ஆதரவானதே என்று நம்பினார். தன்னுடைய நாவலின் கதாநாயகன் அங்கில் டாமும் கிறித்துவ மதத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராகச் சித்தரித்தார். இன்றைய புரட்சிகரக் கறுப்பின எழுத்தாளர்களால் ஹாரியட் பீச்சரின் இந்த வாதத்தையும், அவரின் கதாநாயகர் அங்கில் டாமையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
கெண்டகி மாநிலத்தில் வாழும் ஆர்தர் ஷெல்பி மனிதநேயம் கொண்ட பண்ணையார். அவரின் பண்ணையில் நிறைய அடிமைகள் இருந்தனர். அவரும் அவர் மனைவியும் அடிமைகளை அன்புடன் நடத்தினர். பண்ணையார் ஷெல்பிக்கும், அடிமைகளை விற்றுப் பிழைக்கும் ஹேலி என்பவனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலுடன் நாவல் தொடங்குகிறது. பண்ணையார் ஷெல்பி பண நெருக்கடியில் இருப்பது அறிந்து அவரிடமிருக்கும் அடிமைகள் சிலரை விலைக்கு வாங்கும் எண்ணத்துடன் ஹேலி வருகிறான். அவர்களின் உரையாடலைக் கேட்கும் எலிஷா என்ற அடிமைப் பெண் மனம் பதறுகிறாள். தன்னுடைய மனைவி அதிகம் நேசிக்கும் அடிமையான எலிஷாவை விற்பதற்கு தன் மனைவி சம்மத்திக்கமாட்டார் என்று ஆர்தர் ஷெல்பி உறுதியுடன் கூறுகிறார். இறுதியில் எலிஷாவின் குழந்தையையும், பண்ணையில் எல்லோராலும் அன்புடன் ’அங்கிள்’ (மாமா) என்று அழைக்கப்படும் டாம் ஆகிய இருவரையும் விற்பதற்கு ஆர்தர் ஷெல்பி சம்மதிக்கிறார். பணநெருக்கடி மனிதநேயத்தை அசைத்துவிடுகிறது.
எலிஷா-ஜார்ஜ் ஹாரிஸ் கருத்தொருமித்த தம்பதிகள். ஜார்ஜ் அருகில் இருக்கும் மற்றொரு பண்ணையில் அடிமையாக இருந்தான். மிகுந்த திறமைசாலி. அவன் கண்டுபிடித்த ஒரு கருவியின் மூலம் அவனுடைய பண்ணையார் நிறைய சம்பாதித்தான். இருப்பினும் அவனை மோசமாகவே நடத்தினான். அடிமைகளை அடித்துத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவன். ஜார்ஜை விற்பது என்ற முடிவை எடுக்கிறான். ஜார்ஜ் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு கனடாவுக்குத் தப்பிச் செல்வது என்று திட்டமிடுகிறான். தென்மாநிலங்களிலிருந்த பல அடிமைகள் கனடாவுக்கு தப்பித்துச் செல்லும் பழக்கம் அன்றிருந்தது. ஜார்ஜும் விடுதலைக் காற்றைச் சுவாசிக்க விரும்பினான். ஜார்ஜ் இந்த ஆபத்தான முடிவை எடுத்தது குறித்து எலிஷா மனம் பதறுகிறாள். கனடா சென்று பணம் சம்பாதித்து எலிஷாவையும், அவர்களின் மகன் குட்டி ஜார்ஜையும் மீட்டுவேன் என்று உறுதி கூறுகிறான். இதனை ஏற்று எலிஷா அவனை வழியனுப்பி வைக்கிறாள்.
குட்டி ஜார்ஜை பண்ணையார் ஆர்தர் ஷெல்பி விற்க முடிவெடுத்ததும், எலிஷா குழந்தையுடன் கனடாவுக்குத் தப்பிச் செல்கிறாள். கைக்குழந்தையுடன் கனடாவுக்கு தப்பிச் செல்வதில் இருக்கும் அபாயத்தை அவள் அறிந்தே அந்த முடிவெடுக்கிறாள். கடும் சோதனைகளுக்குப் பிறகு அவள் வெற்றியும் பெறுகிறாள்.
ஆர்தர் ஷெல்பியின் பண்ணையில் தன் மனைவி மக்களுடன் வாழ்ந்த டாம் அன்பின் வடிவமானவர். பண்ணையில் இருந்த அடிமைகள் அனைவரும் அவரை மதித்தனர். அவர்களுக்கு எந்நேரமும் பைபிளைப் போதித்தார். அன்புடன் வாழக் கற்றுக் கொடுத்தார். அங்கில் டாமை விலைக்கு வாங்கிய ஹேலி அவரை நியூ ஆர்லியானில் விற்பதற்கு படகில் ஏற்றிச் செல்கிறான். மிசிசிப்பி நதியில் பயணித்த அந்தப் படகில் பல அடிமைகளும் கட்டிவைக்கப்பட்டுள்ளனர். ஓர் அடிமைப் பெண் தன் குழந்தையுடன் நதியில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள். கடவுள் மீதான ஆழ்ந்த நம்பிக்கையில் வருவதுவரட்டும் என்று அங்கில் டாம் எந்த சஞ்சலமுமின்றி அமைதியுடன் வாழ்வை எதிர்கொள்கிறார். படகில் அகஸ்டின் என்ற பண்ணையார் குடும்பமும் பயணிக்கிறது. அகஸ்டினின் மகள் ஈவா படகிலிருந்து தவறி ஆற்றில் விழுந்துவிடுகிறாள். அடுத்த நொடியில் நதியில் பாய்ந்து குழந்தையைக் காப்பாற்றுகிறார் அங்கிள் டாம். குழந்தை ஈவா அவரை பெரிதும் நேசிக்கிறாள். தன் மகளின் உயிரைக் காப்பாற்றிய டாமை விலைக்கு வாங்கிக்கொள்ள அகஸ்டின் முடிவெடுக்கிறார். நல்ல விலை கிடைத்ததால் ஹேலி மகிழ்ச்சியுடன் அவரை விற்றுவிடுகிறான்.
அகஸ்டின் அடிமைகளை அன்புடன் பராமரிக்கிறார். அவருடைய பண்ணையில் டாம் தன்னுடைய வாழ்வில் முதன்முதலாக அன்பான, அமைதியான சூழலைக் காண்கிறார். டாம்- ஈவா இருவரும் பைபிள் படிப்பதும்; அதன் பெருமைகளை மற்ற அடிமைகளுக்குச் சொல்வதிலும் பொழுதைக் கழிக்கிறார்கள். ஈவா நோயில் விழுகிறாள். மரணம் தன்னை நெருங்குகிறது என்பதை அறிந்ததும் அதற்குப் பயப்படாமல் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகிறாள். பண்ணையில் இருக்கும் அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தன் தந்தை அகஸ்டினிடம் வாக்குறுதி பெறுகிறாள். தன் தலைமுடிக் கொத்தை வெட்டி அடிமைகளுக்குப் பரிசாகக் கொடுத்து அவர்கள் அனைவரையும் கிறித்துவத்துக்கு நேர்மையாக இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்கச் சொல்கிறாள். ஈவாவின் அகால மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஈவாவின் மரணத்தைத் தாங்க முடியாத சோகத்தில் அகஸ்டின் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறார். ஒரு நாள் குடி போதையில் நடந்த சண்டையில் கொல்லப்படுகிறார். தன் மகள் ஈவாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் முன் மரணம் அவரைத் தழுவுகிறது.
அகஸ்டின் மனைவி தன் கணவன் மற்றும் மகள் ஈவாவின் ஆசையை நிறைவேற்றத் தவறுகிறார், பண்ணையில் இருக்கும் அடிமைகளை விற்கிறார். டாம் மீண்டும் அடிமைச் சந்தைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். இம்முறை சைமன் லெக்ரி என்ற கொடியவன் அவரை வாங்குகிறான். சைமன் பிறரின் துயரத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் ஒரு வக்கிரப் புத்தி கொண்டவன். அடிமைகளை விதவிதமாகத் துன்புறுத்தி இன்படைகிறான். பெண் அடிமைகளை பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்குகிறான். தன் இச்சைக்கு அடிபணியாதவர்களை கொடூரமாகத் தாக்குகிறான். டாம் எந்நேரமும் பைபிளும் கையுமாக இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. டாம் மற்ற அடிமைகளுக்கு கிறித்துவத்தைப் போதிப்பதையும் தடுக்கிறான். பண்ணைகளில் இருக்கும் அடிமைகளை அடிப்பதற்கு அடிமைகளையே பயன்படுத்தும் பழக்கம் அன்றிருந்தது.
சைமன் ஒரு முறை ஒரு அடிமையை சவுக்கால் அடிக்கச் சொல்லி டாமுக்கு கட்டளையிடுகிறான். டாம் இப்பாவச் செயலைச் செய்ய மறுக்கிறார். ஒரு கிறித்துவன் எந்தவொரு மனிதனையும் அடித்துத் துன்புறுத்தக் கூடாது என்பதில் டாம் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். சைமனின் கட்டளையை நிறைவேற்ற மறுக்கிறார். தன்னுடைய கட்டளையை மீறும் டாமுக்கு தண்டனை கொடுக்க வேறு இரண்டு அடிமைகளை அழைத்து டாமை அடிக்கச் சொல்கிறான். டாம் தண்டனையை ஏற்றுக்கொள்கிறார். சாவின் விளிம்பில் இருக்கிறார்.
இச்சமயத்தில் சைமனுக்குப் பணம் கொடுத்து அங்கிள் டாமை விடுவிக்க ஆர்தர் ஷெல்பியின் மகன் ஜார்ஜ் ஷெல்பி வருகிறார். மரணத்தைத் தழுவவிருக்கும் அத்தருணத்திலும் அங்கிள் டாமின் கண்களில் நன்றியுணர்வு மிளிர்வதை ஜார்ஜ் ஷெல்பி பார்க்கிறார். அதே நேரத்தில் அங்கிள் டாமை அடித்த அடிமைகள் தாங்கள் செய்த பாவத்துக்கு மன்னிப்புக் கோருகிறார்கள். அவர்கள் பாவத்தையும் அங்கில் டாம் மன்னிக்கிறார். பாவம், பாவத்திற்கான மன்னிப்பு ஆகிய இவ்விரு வினைகளுடன் நாவல் முடிவடைகிறது.
ஹாரியட் பீச்சர் இந்நாவலை எழுதிய காலத்தில் கறுப்பின மக்கள் அவரைத் தங்களின் இரட்சகராகப் பார்த்தனர். அடிமை வணிகர்களும், அடிமைமுறையை ஆதரிப்பவர்களும் அவரை எதிரியாகப் பாவித்தனர். அங்கிள் டாம் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற விரும்பாத மனநிலையை கறுப்பின விடுதலை இயக்கத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் கொண்டாடும் தலைவன் அடிமைச் சங்கிலியை அறுத்துக்கொண்டு கனடாவுக்குத் தப்பித்துச் செல்லும் ஜார்ஜ் மட்டுமே. கிறித்துவ சித்தாந்தத்தில் தோய்ந்த ஹாரியட் பீச்சர் நாவலில் இரண்டு கதாநாயகர்களையும் கொண்டாடுகிறார். அங்கிள் டாம் வாழ்வில் தனக்கு ஏற்படும் அனைத்துக் கொடுமைகளும் கடவுள் தரும் சோதனைகள் அதனைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்புகிறார். சைமன் கொடுக்கும் கொடூரத் தண்டனையை அங்கிள் டாம் ஏற்றுக்கொள்ளும் பொறுமையை, இயேசுநாதரைச் சிலுவையில் அறைந்தபோது அவர் கொண்டிருந்த பொறுமைக்கு ஈடாக நாவலாசிரியர் ஹாரியட் பீச்சர் கருதுகிறார்.
’அங்கிள் டாமின் குடிசை’ நாவல் எழுதப்பட்டு 175 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. இன்றும் இந்நாவல் ஒரு புனைவிலக்கியமாக மட்டும் அல்லாமல் வரலாற்று ஆவணமாகவும் போற்றப்படுகிறது. ஒரு வெள்ளையினப் பெண்மணி கறுப்பின மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர் என்ற முறையில் என்றென்றும் ஹாரியட் பீச்சர் ஸ்டோ நினைவுகூரப்படுவார். ’அங்கிள் டாமின் குடிசை’ நாவலுக்கு உலக இலக்கிய வரலாற்றில் ஒரு தனித்துவமான இடமுண்டு.
--------------------------------------
Comments
Post a Comment