Skip to main content

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா



                                                        
இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா
 சல்மாவின்இரண்டாம் ஜாமங்களின் கதைநாவல் படித்துப் பரவசம் அடைந்தேன். இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார். ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள். அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது. எத்தனை சிக்கல்களுக்கும், சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது. வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள். இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்துவிடுகிறது. ஏக்கமும், ஏமாற்றமுமே மிஞ்சுகிறது. நாவலின் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் ரத்தமும், சதையுமான உயிரோட்டமுள்ள  படைப்புகளாகும். எத்தனை அவலங்கள் நேர்ந்தாலும் வாழ்வின் அனைத்து சுகங்களையும் துய்த்திடவே விரும்புகிறார்கள். ஆனால், அவர்களின் கனவுகள் பலிப்பதில்லை. காதலும், காமமும், கலந்த அவர்களின் வாழ்வு இறுதியில் நிறைவைத் தருவதில்லை.
நாவலின் பல பெண்களும் அவர்களுக்குப் பொருத்தமான கணவர்களை அடைந்திடாமல் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாவதைக் காண்கிறோம். பொருந்தமற்ற தாம்பத்தியம் ஆண்களைவிடப் பெண்களையே அதிகம் பாதிக்குகிறது என்பதையும் நாவல் காட்டிச் செல்கிறது. இதுதான் வாழ்வின் நியதியோ என்று நினைக்கச் செய்கிறது. ஆங்கில நாவலாசிரியர் தாமஸ் ஹார்டியின் நாவல்களிலும் இதுபோன்ற பொருத்தமற்ற ஜோடிகளையே பார்க்கிறோம். சல்மாவின் கதைமாந்தர்கள் ஹார்டியின்தி ரிடர்ன் ஆப் தி நேட்டிவ்”, ”ஜுட் தி அப்ஸ்கியூர்”, ”டெஸ் ஆப் தி டர்பவிய்போன்ற நாவல்களின் கதை மாந்தர்களை ஒத்திருக்கின்றனர். நாவலில் வஹிதாவின் பங்கு காத்திரமானது. நாவல் முழுவதும் ஒரு காவிய நாயகி போல் வலம்வருகிறாள். அவள் வாழ்வு பிரகாசிக்க வேண்டும் என்று வாசகர் நெஞ்சம் ஏங்குகிறது. ஆனால், இறுதியில் அவளும் பெண்மையின் மென்மையைப் புரிந்துகொள்ளாத சிக்கந்தர் எனும் முரடனின் கையில் சிக்கிச் சீரழிவது நாவலை துன்பியல் காவியமாக்குகிறது. மைமூன், பிர்தவ்ஸ், பாத்திமா இம்மூவரின் துயரும், கோர முடிவும் படிப்பவர் நெஞ்சைப் பதறவைப்பவை. மென்மையின் அடையாளமாகவே சித்தரிக்கப்பட்ட வஹிதா திடீரென்று அவ்வளவு வன்மத்துடன் பிர்தவ்ஸ்ஸைக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. வஹிதாவை பழிவாங்கும் முகத்தான் பிர்தவ்ஸ் வஹிதா மிகவும் நேசிக்கும் அவளின் சித்தி றைனாவைப் பற்றிய ரகசியத்தைச் சொல்லி மிரட்டுகிறாள். அந்த ரகசியம் என்னவாக இருக்கும் என்பதைச் சொல்லாமலே விட்டுச் செல்வது நாவலின் உச்சம்.
                                                                                                பெ.விஜயகுமார்.

 


Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...