Skip to main content

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம்
சங்கப் பெண் கவிதைகள்
ஆசிரியார்; சக்தி ஜோதி
வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.400/-

சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும், அன்பின் மிளிர்வையும், வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம். சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம். சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம், வரலாற்றுப் பெட்டகம், உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம். ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது? பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன. அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல. தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள். பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம். மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுவது கல்வி குறித்த நமது சிந்தனைகளின் போதாமையை வெளிப்படுத்துகிறது. இதனால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழாசிரியர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது.   சங்க இலக்கியத்தின் மாண்புகளைக் கற்பிக்க போதுமான இடமும், நேரமும் இல்லாமல் தவிக்கின்றனர்.

இச்சூழலில் கல்வி பயின்ற காரணத்தால் சங்க இலக்கியம் எனும் பெருங்கடலில் நீந்தி முத்தெடுக்கத் தவறிய நம்மில் பலருக்கும் சங்க இலக்கியம் பயில வேண்டும் என்ற ஏக்கமும், ஆவலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சங்க இலக்கியத்தை அவ்வளவு எளிதில் கற்றுக்கொள்ளவும் இயலாது. கைப்பிடித்து கூட்டிச் சென்று சங்கக் கவிதைகளை கற்றுத்தர ஆளின்றித் தவித்தவர்களுக்கு சக்தி ஜோதி எனும் நல்லாசிரியை கிடைத்துள்ளார். இவரின் சங்கப் பெண் கவிதைகள்எனும் நூல் சங்கக் கவிதைகள் கற்றுத் தரும் அருமையான கையேடாகும். குங்குமம் - ’தோழிஇதழில் பெண்உடல் மனம் மொழிஎனும் பெயரில் நாற்பத்தைந்து சங்கப் பெண் கவிஞர்களை அறிமுகம் செய்து தொடர் கட்டுரைகளாக எழுதிவந்தார். இக்கட்டுரைகளைத் தொகுத்து சந்தியா பதிப்பகம் சங்கப் பெண் கவிதைகள்எனும் நூலைக் கொண்டுவந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. சக்தி ஜோதி சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். சங்க இலக்கிய ஆய்விலேயே முனைவர் பட்டமும் பெற்றவர். பல்கலைக்கழக அய்வுகள் தரம் தாழ்ந்து போயுள்ள இன்றைய சூழலில் நல்லதொரு ஆய்வை மேற்கொண்டு சங்க இலக்கியத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். பத்துக்கும் மேலான கவிதைத் தொகுப்புகள் மூலம் நவீன கவிதை உலகில் தடம் பதித்துள்ள கவிஞர் சக்தி ஜோதி இந்நூலின் மூலம் உரைநடைத் தமிழிலும் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார்.

சங்க இலக்கிய ஆய்வில் ஆழ்ந்த அறிவும், அனுபவமும் பெற்ற தாயம்மாள் அறவாணனின்மகடூ முன்னிலைஎனும் நூலை அடியொற்றி சங்கப் பெண்பாற் புலவர்கள் 45 பேர் என வரையறுத்துக் கொண்டு அவர்கள் பற்றிய கட்டுரைகளை எழுதிச் சென்றுள்ளார். வெள்ளிவீதியார், பொன்முடியார், அஞ்சில் அஞ்சியார், நல்வெள்ளியார், குன்றியளார், தாயங்கண்ணியார், நக்கண்ணையார், நெட்டிமையார், பாரி மகளிர், ஒளவையார் போன்ற நாற்பத்தைந்து கவிஞர்களின் படைப்பை வாசகர்களுக்கு நல்விருந்தாக்கியுள்ளார். கவிதைகள் பெரும்பாலும் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்ற சங்க இலக்கிய நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. சங்க கவிதைகளை அன்றைய வரலாற்றுப் பின்புலத்தோடு இன்றைய நோக்கிலிருந்து விவரித்துள்ளதால் வாசகர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்க முடிகிறது. இன்றைய பெண் கவிஞர்கள் லீனா மணிமேகலை, இவள் பாரதி, உமா மகேஸ்வரி, ராதிகா, மாலதி மைத்ரி, மனுஷி பாரதி, .விஜயலட்சுமி, ரோஸ்லின், லாவண்யா, மதுமிதா, கனிமொழி, தேன்மொழி, தி.பரமேஸ்வரி, குட்டி ரேவதி, சத்யா, இரா.மீனாட்சி, அனார், எழிலரசி, சல்மா என அறுபதுக்கும் மேற்பட்டவர்களின் கவிதைகளிலிருந்து சங்க கவிதைகளுக்கு இணையான காட்சிகளைச் சுட்டிக் காட்டுகிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களிலும் சங்கப் பாடல்களுக்கு இணையான காட்சிகள் இருப்பதை உணர்த்துகிறார். அசோகமித்திரன், .முத்துலிங்கம், செகாவ் ஆகியோரின் சிறுகதைகள், கல்யாண் ஜி, ஞானக்கூத்தன், கலாப்பிரியா, ஆகியோரின் கவிதைகளும் சங்க கவிதைகளுக்கு இணையாகப் பரிணமிப்பதையும் பார்க்கிறோம்சக்தி ஜோதியின் பரந்த வாசிப்பு அவருக்கு உற்றுழி உதவுகின்றது.

அன்றிலிருந்து இன்று வரையிலும் ஒரே வாழ்வையே எல்லாப் பெண்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வாசிப்பின் முடிவில் தெளிவாகிறது. ஒரு பெண்ணாக வாழ்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதையே சங்க இலக்கியமும், நவீன இலக்கியமும் சொல்லிச் செல்லுகின்றன. குடும்ப உறவுகள் இன்றி சமூகம் என்பதில்லை. இந்த வரம்புகளுக்குள் இருந்து கொண்டுதான் வெள்ளிவீதியாரும் பின்னர் வந்த ஆண்டாளும் பாடினார்கள். இந்த மரபின் நீட்சியையே இன்றைய பெண் கவிஞர்களிடமும் காண்கிறோம் என்கிறார் சக்தி ஜோதி. தலைவி, தோழி, பரத்தையர், செவிலித்தாய் போன்ற பெண் பாத்திரங்களை இன்றைய புரிதலோடு பார்ப்பது தவறாகும் என்கிறார். இப்பாத்திரங்கள் குறித்த மாற்றுச் சிந்தனையை முன்வைக்கிறார். தோழி என்பவள் தலைவியின் மனசாட்சியாகவும், பரத்தையர் என்பது வெறுமனே குறியீடாகவும் இருக்கலாம் என்று சக்தி ஜோதி கருதுகிறார். சங்ககாலம் தொட்டு இன்று வரையில் ஆண் மீதான ஈர்ப்பை விலக்க முடியாமலும், நாணத்தை விட்டுவிட முடியாமலும் தவித்திருக்கும் பெண்ணின் தயக்கத்தின் மீதே ஆணுடைய ஆதிக்க உணர்வு நிலைபெற்றிருக்கிறது. ஆணும், பெண்ணும் இருவரும் சம்பந்தப்பட்டிருந்தாலும் கண்ணீரும், காதலும், காமமும் அவரவர்களுக்கான தனித்த உணர்வுதான் என்பதுவே யதார்த்தம்.

சங்க இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு திணைக்குறிப்புகள் குறித்து ஆசிரியர் கொடுக்கும் விளக்கம் ஏதுவாக இருக்கிறது. கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை எனும் ஏழு அகத்திணைகளையும், வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனும் ஏழு புறத்திணைகளையும் விளக்கியுள்ளார். சக்தி ஜோதியின் பரந்த வாசிப்பு எனும் ஊற்றிலிருந்து பெருகிய நதியே இந்த நாற்பத்தைந்து கட்டுரைகளும். சக்தி ஜோதி போன்ற இலக்கியத் திறனாய்வாளர்கள் உதவி கொண்டுதான் சங்க இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியும். திறனாய்வாளர் என்பவர் தேர்ந்த வாசகர் என்பார் ஆங்கில இலக்கியத் திறனாய்வாளர் டி.எஸ்.இலியட். சங்க இலக்கியம் பிரவாகம் எடுத்து ஓடும் பெரு வெள்ளமாகும். இதனைக் கடந்திட சக்தி ஜோதி போன்ற சிறந்த திறனாய்வாளர்கள் தேவை. சங்க இலக்கியத்தின் மேன்மைகள் குறித்து தொடர்ந்து எழுதி தமிழ் கூறும் நல்லுலகிற்கு சக்தி ஜோதி நற்பணிகள் ஆற்றிடுவார் என்ற எதிர்பார்ப்பை இந்த நூல் உறுதியளிக்கிறது.

                             பெ.விஜயகுமார்

Comments

Popular posts from this blog

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...