Skip to main content

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

 

 

 

நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,  புத்துயிர்.(Resurrection).

--பெ.விஜயகுமார்.

                     

ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.  ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்கியது. இதனால் டியுகோபர்கள் ரஷ்யாவிலிருந்து தப்பிச் சென்று கனடா நாட்டிற்குப் புலம் பெயர முடிவெடுத்தனர். இதற்காகச் செலவாகும் பணத்தைத் திரட்டிக் கொடுக்க டால்ஸ்டாய் விரும்பினார். இந்த நாவல் விற்பனையில் கிடைத்த லாபம் முழுவதையும் இவர்களுக்குக் கொடுத்து உதவினார். தமிழில் ’புத்துயிர் என்ற பெயரில் இந்நாவல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. புத்துயிர்’ நாவல் டால்ஸ்டாய் நீண்ட இடைவெளிக்குப்பின் எழுதிய நாவல் என்பதால் மிகப் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளானது. ஒட்டுமொத்த  ரஷ்யாவும் கொண்டாடியது. நாவல் லட்சக்கணக்கில் விற்றது.

டால்ஸ்டாய் தன்னைவிட பதினாறு வயது இளையவரும் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சோஃபியா என்ற பெண்மணியை மணம்புரிந்தார். டால்ஸ்டாயின் எழுத்துப் பணியில் சோஃபியா மிகுந்த அக்கறை காட்டினார். திருத்துதல், நகல் எடுத்தல், போன்ற பணிகளில் கண்ணும் கருத்துமாக இருந்து உதவினார். ஆனால் பின்னாட்களில் டால்ஸ்டாயின் சோசலிசச் சித்தாந்தத்தை சோஃபியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

1860களில் நடந்த கிரிமியன் போரில் ராணுவ அதிகாரியாக டால்ஸ்டாய் பங்கேற்றார். போரின் கொடூரத்தை நேரில் பார்த்த டால்ஸ்டாய் நாடுகளிடையிலான போர் அர்த்தமற்றது என்று எண்ணினார். உலக அமைதிக்காகக் குரல் கொடுத்தார். அவர் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணத்தின்போது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆளுமைகள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதனால் சோசலிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டார். அதிலும் குறிப்பாக ஹென்றி ஜார்ஜ் என்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞரின் ’ஜார்ஜிசம்’ என்றழைக்கப்பட்ட தத்துவம் அவரை மிகவும் கவர்ந்தது. இது ’ஜியோயிசம்’ (Geoism) என்றும் குறிப்பிடப்படுகிறது. நிலச் சீர்திருத்தம், சமூகநீதி போன்ற சமத்துவக் கருத்துகளை உள்ளடக்கிய இத்தத்துவத்தில் டால்ஸ்டாய் தனது வாழ்நாளின் கடைசி நாட்களில் அதிகம் நம்பினார்.

’புத்துயிர்’ நாவல் நெக்லுடாவ் எனும் பணக்கார கனவான் தான் இளைஞனாக இருந்தபோது செய்த தவறுக்காக வாழ்நாள் முழுவதும் வருந்துவதைச் சித்தரிக்கும் மிகை உணர்ச்சியியல் நாவலாகும். பாவம், பாவத்திற்கான பிராயச்சித்தம் எனும் இவ்விரண்டு வினைகளுமே நாவலின் மையக் கருத்துகளாகும். கல்லூரி மாணவனான நெக்லுடாவ்  விடுமுறை நாட்களை தன் இரு அத்தைகளுடன் கழித்திட பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வருகிறார். செல்வச் செழிப்பில் வாழும் அத்தைகள் சோஃபியா, மரியா இருவரும் அவர் மீது அன்பைப் பொழிகின்றனர். செல்லப் பிள்ளையாக நெக்லுடாவ் அவர்கள் வீட்டில் வலம் வருகிறார். அவருக்குச் சேவைகள் செய்திட நிறைய ஊழியர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் பதினாறு வயது நிரம்பிய பேரழகி மஸ்லோவா. அன்பின் வடிவமான சோஃபியா அத்தை அவளைத் தன் குழந்தைபோல் பாவித்து அரவணைத்தார். மரியா அத்தை அவளை ஒரு வேலைக்காரியாகவே நடத்தினார்.

மாஸ்லோவாவின் இளமை, அழகு, துடிப்பு அனைத்தும் நெக்லுடாவைக் கவர்ந்தன. நெக்லுடாவ் மனதில் காதல் துளிர்விட்டது. மாஸ்லோவா மனதிலும் சலனம் ஏற்படுகிறது. நெக்லுடாவ்வின் விடுமுறை முடிவுக்கு வந்ததும் காதலர்கள் பிரிந்தனர். மூன்றாண்டுகள் கழித்து படிப்பு முடிந்ததும், நெக்லுடாவ் மீண்டும் பீட்டர்ஸ்பர்க் வருகிறார். இராணுவத்தில் சேரவிருக்கும் நெக்லுடாவ் இம்முறை நான்கு நாட்கள் மட்டுமே தங்குகிறார்.

ஈஸ்டர் பண்டிகை வருகிறது. திருவிழா கொண்டாட்டத்தில் இருவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். ”ஏசு எழுந்துவிட்டார்! ஏசு எழுந்துவிட்டார்!” என்று சர்ச்சில் எல்லோரும் ஒரு சேரப் பாடுகிறார்கள். காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்கின்றனர். அன்றிரவு நெக்லுடாவ் தூக்கமின்றித் தவிக்கிறார்.  காதல்நோய் தீவிரமாகிறது. வீட்டில் அனைவரும் துயில் கொண்டிருந்த வேளையில் நெக்லுடாவ் மெல்லச் சென்று மாஸ்லோவ்வாவின் அறைக்குள் நுழைகிறார். மாஸ்லோவா திடுக்கிட்டு, அவரைப் போகச் சொல்லிக் கெஞ்சுகிறாள். நெக்லுடாவ் ஆசையுடன் அவளை நெருங்குகிறார்.  இருளும், தனிமையும் அவர்கள் காதலின் தீபத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்கின்றன, தன்னை மறந்து கட்டுண்டு கிடக்கின்றனர். அன்றிரவு நடந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதறியாமல் பிரிகிறார்கள்.

மறுநாள் இராணுவத்தில் சேருவதற்கு பீட்டர்ஸ்பர்க் நகரைவிட்டு நெக்லுடாவ் செல்கிறார். தான் நடத்திய காதல் களியாட்டம் முழுவதையும் மறந்துவிடுகிறார். ஆனால் மாஸ்லோவாவால் மறக்க முடியவில்லை. மறக்க முடியாது. அவள் வயிற்றில் நெக்லுடாவ்வின் சிசு வளர்கிறது. இது தெரியவந்ததும் நெக்லுடாவ்வின் அத்தைகள் அவளை வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறார்கள். மாஸ்லோவா ஓடுகிறாள்; ஓடுகிறாள்; வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடுகிறாள். பிறந்த ஆண் குழந்தையை வைத்துக்கொண்டு என்னசெய்வதென்று அறியாது தவிக்கிறாள். பலரிடமும் அடைக்கலம் கேட்டு அலைகிறாள். அடைக்கலம் தர யாரும் தயாரில்லை. கைக்குழுந்தையும் இறந்துவிட சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளான மாஸ்லோவா இறுதியில் விபச்சார விடுதியில் சேர்ந்து பாலியல் தொழிலாளி ஆகிறாள்.

 இடியென இறங்குகிறது அடுத்தப் பிரச்சனை. அவளுடைய வாடிக்கையாளர் ஒருவனைக் கொலை செய்தாள் என்று சொல்லி  மாஸ்லோவாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்கள். நீதிமன்றத்தில் அன்று மூன்று குற்றவாளிகளின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தில் இருந்த ஆண்கள்  மாஸ்லோவாவை காமவெறி கொண்டு பார்க்கிறார்கள். அன்றைய ரஷ்யாவில் நீதிமன்ற நடைமுறையில் நீதிபதிகளுக்குத் துணையாக நின்று நீதியை நிலைநாட்ட ’ஜூரி’களாக சமூகத்தின் பெரிய மனிதர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் சட்டம் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. சமூக அந்தஸ்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்கள். நெக்லுடாவ் அதில் இடம்பெறுகிறார்.

மாஸ்லோவாவின் வழக்கை முதலில் எடுக்கச் சொல்கிறார் தலைமை நீதிபதி. அரசு வழக்கறிஞர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  விடியவிடிய குடித்தும், சீட்டு விளையாடியும் பொழுதைக் கழித்த அவன் இந்த வழக்கு பற்றிய குறிப்புகளைப் படிக்கவே இல்லை. எனவே தப்புத் தப்பாக வழக்கை முன்மொழிகிறான். மேடையில் வீற்றிருந்த நெக்லுடாவ் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் பெண் மாஸ்லோவா என்பதைக் கண்டதும் மனம் பதறுகிறார்.  மாஸ்லோவா தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் தெரிகின்றன.. வறுமையின் பிடியிலும், காமுகர்களின் கரங்களிலும் சிக்கித் தவித்த அவள் தன் பொலிவை இழந்திருந்தாள். நெக்லுடாவ் குற்ற உணர்வு மேலிட அவள் நிலைமை கண்டு கவலை கொள்கிறார்.

மாஸ்லோவா தான் குற்றமற்றவள் என்பதை எடுத்துரைக்கிறாள். ஆனால் எழையின் சொல் அம்பலம் ஏறவில்லை. சைபீரியாவில் நான்கு மாதங்கள் கடும் உழைப்புடனான தண்டனை வழங்கப்படுகிறது. தான் செய்த பாவச் செயலே மாஸ்லோவாவின் வாழ்வைச் சீரழித்தது. எனவே அவளை எப்படியாவது தண்டனையிலிருந்து விடுவித்து அவளுக்கு மறுவாழ்வு அளித்திட வேண்டும் என்று நெக்லுடோவ் துடித்தார். தன் வழக்கறிஞர் நண்பர்களைக் கலந்தாலோசித்தார். அவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என்றனர். வழக்கு மேல்முறையீட்டிலும் தோற்றது. நீதியின் எந்தக் கதவுகளும் ஏழைகளுக்காகத் திறப்பதில்லையே! மாஸ்லோவா கொலைக் குற்றம் செய்யவில்லை என்பதை நெக்லுடாவ் முழுவதும் நம்பினார். வக்கிரமனம் கொண்ட  வாடிக்கையாளன் ஒருவன் அவளை மிகவும் துன்புறுத்தினான். அவனிடமிருந்து தப்பித்துச் செல்ல அவனுக்கு மயக்க மருந்து கொடுக்கிறாள். ஆனால் மருந்தின் அளவு அதிகமாகி அவன் இறந்து போகிறான். அதுவொரு திட்டமிட்ட கொலையில்லை.  

மாஸ்லோவாவை முதலில் பீட்டர்ஸ்பர்க் சிறையில் அடைக்கிறார்கள். நெக்லுடாவ் தினமும் சிறைக்குச் சென்று அவளைச் சந்திக்கிறார். அவர் காட்டும் பரிவையும், அன்பையும் மாஸ்லோவா வெறுக்கிறாள். தன் வாழ்வைச் சீரழித்த அவரை அவளாள் ஏற்றுகொள்ள முடியவில்லை. பிறந்ததிலிருந்து செல்வச் செழிப்பில் வாழ்ந்த நெக்லுடாவ் சிறையின் நிலைமைகள் அறிந்து மனம் கொதிக்கிறார். மாட்டுக் கொட்டடி போன்ற இடத்தில் நிறையக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். பல கைதிகள் நோய்க்கு ஆளாகி  அவதிப்படுகிறார்கள். தன் தாயுடன் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சிறுவனைப் பார்த்து நெக்லுடாவ் மனம் பதறுகிறார். சுத்தம் செய்யப்படாத கழிப்பிட அறையின் வாசலில் படுத்துக்கிடக்கிறான். சிறை வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்பதை அறிந்து அதிர்ந்து போகிறார்.

தொடர்ந்து தன்னைச் சிறைக்குவந்து பார்க்கும் நெக்லுடாவின் அன்பு உண்மையானது என்பதை மாஸ்லோவா சிறிது நாட்களில் புரிந்து கொள்கிறாள். தனக்கு எந்த உதவியும் கேட்காமல், சிறையிலிருக்கும் மற்ற பெண்களுக்கு உதவிடச் சொல்லுகிறாள். நெக்லுடாவ் அவள் சொல்வது அனைத்தையும் நிறைவேற்றுகிறார். ஒரு நாள் அவளிடம் தன் காதலைச் சொல்கிறார். அவளைத் திருமணம் செய்து தான் செய்த பாவத்தைக் கழுவ நினைப்பதாகச் சொல்கிறார். மாஸ்லோவா அவர் காதலை ஏற்க மறுத்துவிடுகிறார்.

மாஸ்கோ சென்று தண்டனையைக் குறைக்கச் சொல்லும் Mercy Petition போடுகிறார். தன்னுடைய செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தி அவளின் தண்டனையைக் குறைக்கப் பெரும் முயற்சிகள் எடுக்கிறார். மாஸ்கோ நகரில் வாழும் பெரிய மனிதர்கள் எல்லாம் சிறிய மனம் கொண்டவர்கள் என்பதறிகிறார். உல்லாச வாழ்வு வாழும் அவர்களுக்கு ஏழைகள் படும்பாடு தெரியவில்லை. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. சுயநலம் மிக்க அவர்களிடமிருந்து கருணையை எதிர்ப்பார்க்க முடியாது என்பதறிகிறார். இருப்பினும் நெக்லுடாவ் எடுத்த முயற்சியினால் தண்டனை குறைக்கப்படுகிறது. சைபீரியாவில் கடின உழைப்புடனான தண்டனை என்பது குறைக்கப்பட்டு வெறும் சைபீரியாவுக்கு கடத்தப்படுதல் என்றாகிறது.

சைபீரியாவிற்கு கடத்தப்படவிற்கும் கைதிகளை ரயில் நிலையத்துக்கு கைவிலங்கிட்டு நடத்தியே கூட்டிச் செல்கின்றனர். நெக்லுடாவ்வும் அவர்களுடன் நடந்தே ரயில் நிலையம் செல்கிறார். வழியில் கைதிகள் கேட்பதை வாங்கிக் கொடுக்கிறார். ரயில் பெட்டிகளில் கைதிகளை  அடைக்கிறார்கள். அவர்களுடன் மூன்றாம் வகுப்பு பெட்டியிலேயே பயணிக்கிறார். அப்போதுதான் மாஸ்லோவாவை எளிதில் சந்திக்க முடியும் என்பதால் வசதிகள் ஏதும் இல்லாத, அவருக்குப் பழக்கப்படாத மூன்றாம் வகுப்பில் பயணிக்கிறார். இப்பயணத்தின்போது நெக்லுடாவ் ரஷ்யாவின் சமூகம், பொருளாதாரம், அரசியல் குறித்த பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்.

நிறைய அரசியல் கைதிகளும் குற்றவாளிகளுடன் சேர்ந்தே அழைத்துச் செல்லப்படுகின்றனர். நெக்லுடாவ் அரசியல் கைதிகளுடன் உரையாடுகிறார். அவர்களின் புரட்சிகர எண்ணம், பேச்சு, செயல்பாடு அனைத்தையும் கண்டும், கேட்டும் வியக்கிறார். புரட்சி வழி வரும் சமூக மாற்றம் எவ்வளவு உன்னதமானது என்பதை அறிகிறார். பயணத்தின்போது சைமன்சன் என்ற அரசியல் கைதியுடனான நட்பு அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய புரட்சிகர வீரமும், தீரமும் கண்டு வியக்கிறார். புரட்சிக்காக தங்கள் உயிரைத் துச்சமென நினைக்கும் அவர்களின் தியாகச் சிந்தனையைப் பாராட்டுகிறார். மாஸ்லோவா மனதையும் புரட்சியாளர் சைமன்சன் கவர்ந்துவிடுகிறார். இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. அவர்களின் காதலை நெக்லுடாவ் மனமாற வாழ்த்துகிறார். அவர்கள் தண்டனைக் காலம் முடியும்வரை அவரும் சைபீரியாவிலேயே குடியேறுகிறார் என்று நாவல் முடிவடைகிறது.

டால்ஸ்டாய் வாழ்ந்த காலத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட இந்நாவல் டால்ஸ்டாயின் போரும் அமைதியும், அன்னா கரேனினா போன்ற செவ்வியல் நாவல்கள்போல் இல்லை என்பது இன்றைய திறனாய்வாளர்களின் கருத்து. டால்ஸ்டாய் தான் உயர்வாகக் கருதிய ஜார்ஜிசக் கோட்பாட்டை இந்நாவல் வழி அறிமுகப்படுத்துகிறார். நாவலின் கதாநாயகன் நெக்லுடாவ் தன்னுடைய நிலங்கள் முழுவதையும் குத்தகை விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். சைபீரியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் கைதிகளுடன் பயணிக்கிறார்.  மிகையியல் உணர்ச்சியுடன் படைக்கப்பட்டுள்ள புத்துயிர் நாவலின் கதாபாத்திரங்கள் மிகவும் தட்டையாக இருக்கின்றன என்பதும் திறனாய்வாளர்களின் கருத்து. இருப்பினும் நாவலின் கதாநாயகன் நெக்லுடாவ்வின் அன்பும், நேர்மையும் வாசகர் மனதை நெகிழச் செய்கின்றன என்பதில் ஐயமில்லை.

                                  ----------------------------------

 

 

கட்டுரையாளர்: பெ.விஜயகுமார், மதுரை - 625018

செல்: 9500740687

vijayakumarmuta@gmail.com

 

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...