நூல் அறிமுகம்
ஹிட்லரின் வதைமுகாம்கள்
ஆசிரியர் : மருதன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை :
ரூ.200/-
புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்ததும்
ஒருவித பயம் கவ்வியது.
படிப்பதை விட்டுவிட்டு நகர்ந்துவிடுவோம் என்ற எண்ணம் எழுந்தது.
இருப்பினும் மனதைத் தைரியப்படுத்திக் கொண்ட பின்னரே படிப்பதைத் தொடர்ந்தேன்.
நெஞ்சைப் பதறவைக்கும் கொடுமைகள், மனிதனுக்கு மனிதன்
இத்தகு கொடுமைகளை இழைக்க முடியுமா? உயிரினங்களில் மனிதன் உயர்ந்த
உயிரினம் என்று சொல்லுவது சரியானதுதானா? ஹிட்லரின் நாஜிசம் நடத்திச்
சென்ற வன்முறைகள் குறித்து சிறுவயதில் வரலாற்றுப் பாடத்தில் படித்திருந்தாலும் அது
இவ்வளவு கொடூரமானதாக இருந்திருக்குமா? மனித குலம் வன்முறைகளைக்
கைவிட்டுவிட்டு என்று அமைதியை நாடப்போகிறது? இரண்டு உலகப் போரின்
கொடுமைகளிலிருந்து பாடங்கள் ஏதும் கற்றுக்கொண்டுள்ளோமா? ஹிட்லரின்
வதைமுகாம்களுக்கும் இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திவரும் கவுந்தமாலா வதைமுகாமுக்கும்
அப்படி ஏதும் பெரிய வித்தியாசங்கள் இல்லையே? அன்று யூதர்களுக்கு
ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கும் இன்று பாலஸ்தீனத்தில் யூதர்கள் அரேபிய
இஸ்லாமியர்களுக்கு இழைத்திடும் கொடுமைகளுக்கும் வேறுபாடுகள் ஏதும் உண்டா? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கிடையில்தான் புத்தகத்தை படித்து முடித்தேன்.
மருதன் நிறைந்த வாசிப்பிற்குப்
பின்னரே இப்புத்தகத்தை எழுதியுள்ளார். எண்ணற்ற தகவல்களைத் திரட்டி,
அவைகளைப் பாங்குறத் தொடுத்து, எழுதி புத்தகத்தை
வெற்றிபெறச் செய்துள்ளார். ஹிட்லரின் வதைமுகாம்கள் குறித்த ஆன்
பிராங்கின் டயரிக் குறிப்புகள் காட்டிச் சென்றுள்ளது பனிப்பாறையின் ஒரு சிறுமுனையைத்தான்
என்று அறிகிறோம். ஆஷ்விட்ஸ் வதைமுகாமில் பாதிக்கப்பட்ட எலி வீசல்
மற்றும் பிரைமோ லெவி ஆகிய இருவரின் பதிவுகளும் பிரச்சனையை இன்னும் ஆழமாகவும்,
ஆணித்தரமாகவும் விளக்குகின்றன என்கிறார் மருதன். ஹிட்லரின் இனவெறி அரசியலால் மனிதன் மட்டும் இறக்கவில்லை; மனிதன் என்ற கருத்தாக்கமும் இறந்துவிட்டது என்கிறார். வதைமுகாம்களின் கொடுமைகளை விவரிப்பதற்கு நம்முடைய மொழிகளில் அவ்வளவு கடுமையான
வார்த்தைகள் இல்லை. இதற்குத் தோதான கடினமான மொழி நம்மிடம் இல்லை
என்கிறார். எலி வீசல் தன்னுடைய ”நைட்”
புத்தகத்தில் கொடுக்கும் எச்சரிக்கை மணி இன்றைய உலக நாடுகள் அனைத்துக்கும்
பொருந்தும்.
அதேபோல் பிரைமோ லெவி, “தி பீரியாடிக்
டேபிள்“ என்ற புத்தகத்தின் மூலம் பாசிசத்தின் கோர முகங்களைக்
காட்சிப்படுத்துகிறார். “எங்கெல்லாம் அதிகாரம் ஒன்றுகுவிக்கப்படுகிறதோ,
அங்கெல்லாம் பாசிசத்துக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிடுகின்றன.
அங்கெல்லாம் மனிதர்கள் சுதந்திரமாகத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவோ,
சுயமாக நடந்துகொள்ளவோ முடிவதில்லை. இந்நிலை அடைய
காவல்துறை ஒடுக்குமுறை மட்டுமே தேவைப்படும் என்றில்லை. மக்களுக்குத்
தேவையான தகவல்கள் மறுக்கப்படலாம், திரிக்கப்படலாம். நீதித் துறையின் அடித்தளம் அறுக்கப்படலாம். கல்வித்துறை
முடக்கப்படலாம்.” இவையெல்லாம் பாசிசத்தின் அறிகுறிகள் என்கிறார்
பிரைமோ லெவி. வதைமுகாம்களின் கொடுமைகள் பற்றி வெளிவந்துள்ள முக்கியமான
புத்தகங்களின் சாரத்தையெல்லாம் மருதன் இப்புத்தகத்தில் வழங்குகிறார்.
ஆர்.எஸ்.எஸ் மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்தத் துடிக்கும் பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது மிகப்
பொருத்தமானதாகும். மருதன் இப்புத்தகத்தின் மூலம் இன்றைய அரசியல்
தேவையைப் பூர்த்தி செய்துள்ளார். தன் வரலாற்றுக் கடமையையும் செவ்வனே
நிறைவேற்றியுள்ளார். பாசிசத்தின் ஆபத்தை முழுவதும் அறிந்திராத
தமிழ்ச் சமூகம் இப்புத்தகத்தின் மூலம் கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது. இப்புத்தகத்தை இந்தியாவின் பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து எடுத்துச் செல்வது
நலம். கிழக்கு பதிப்பகம் நல்ல தெளிவான படங்களுடன் புத்தகத்தை
நேர்த்தியுடன் கொண்டுவந்துள்ளது.
பெ.விஜயகுமார்
Comments
Post a Comment