நூல் அறிமுகம்
கொம்மை ( மறுகுரலில் மகாபாரதம்)
ஆசிரியர் : பூமணி
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை
விலை : ரூ. 555/-
மகாபாரதம் படிக்க படிக்கத்
திகட்டாத நல்சுவை விருந்தாகும். புதுப்புது வடிவில் பாண்டவர்களின் கதை சொல்லப்படுகிறது.
வில்லிபுத்தூராழ்வார் 4350 பாடல்களில் வரம்பின்றி
வட சொற்களைப் பயன்படுத்தி சந்த இனிமை பொருந்த வில்லிபாரதம் என்ற பெயரில் கவிதை நடையின்
உச்சியைத் தொட்டு மகாபாரதக் கதையை நல்கினார். பாரதியாரின் பாஞ்சாலி
சபதம் அன்றைய இந்தியாவின் நிலையை பாரதக் கதையின் உள்ளீடாக இழையோடவிட்ட தெறிக்கும் கனல்போல்
அமைந்த குறுங்காப்பியம். மூதறிஞர் ராஜாஜிக்கு வியாசர் விருந்தாகவும்,
ஜெயமோகனுக்கு வெண் முரசாகவும், எஸ்.ராமகிருஷ்ணனுக்kகு உப பாண்டவமாகவும், பிரபஞ்சனுக்கு மகாபாரதமாகவும், அருணனுக்கு பூரு
வம்சமாகவும், யார்லகட்ட லட்சுமிபிரசாத்துக்கு துரௌபதியாகவும்
இன்னும் பலருக்கும் பலவாறாகவும் பாரதக்கதை எழுதப்பட்டு வருகிறது, இன்று பூமணியின் கைவண்ணத்தில் கொம்மை என்றாகியுள்ளது. கொம்மை என்பது இருபதுக்கும் மேலான பொருள் கொண்ட ஒரு சொல். பருத்த கொங்கையைச் சுட்டும் அடைமொழி அல்லது தானியத்தை உதிர்த்த பின்னர்
கதிரில் எஞ்சியிருக்கும் பதர். இவைகளையே புத்தகத்தின்
அட்டைப் படம் சுட்டுகிறது.
மகாபாரதக் கதையை மக்கள்
மொழியில், மறு குரலில் சொல்லிட வேண்டும் என்ற படைப்பாளியின் ஆசை வெற்றிகரமாக
நிறைவேறியுள்ளது. மகாபாரதம் எனும் மகா சமுத்திரத்தில்
குதித்து கரையேறியது மட்டுமல்ல முத்துக்கள் அள்ளி எடுத்துவந்து வாசகர்களுக்கு
வழங்கியுள்ளார் பூமணி. மகாபாரதத்தில் நிறைந்து நிற்கும் பெண்களின் சொல்லோன்னா
துயரங்களை சொல்லிச் செல்கிறார் பூமணி. காலமெல்லாம் நித்திய
கன்னியாகவே வாழ்ந்த கங்காதேவியில் தொடங்கி காவியம் முழுவதும் அபலைப் பெண்களின்
அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. சத்தியவதி பராசுர
முனிவனுக்கு கன்னிகாபுத்திரனாக வியாசனைப் பெற்றுத் தருகிறாள். வயோதிகன் சத்தியவானுக்கு வாக்கப்படுகிறாள். சத்தியவான்
அவளுக்கு இரண்டு புத்திரர்களை தந்துவிட்டு விரைவில் கண் மூடுகிறான். குரு வம்சத்தைக் காப்பாற்றும் பொறுப்பு அவள் மீது சுமத்தப்படுகிறது.
ஆணாதிக்கத்தின் உச்சபட்ச வஞ்சனைக்கு ஆளானவள் அம்பை. அவளைக் காதலித்த சால்வனும் கைவிடுகிறான். சுயம்வரத்தில்
வென்று அவளைத் தூக்கிவந்த பீஷ்மரும் மணமுடிக்க மறுக்கிறார். பீஷ்மரைப்
பழி தீர்ப்பேன் என்று சபதமேற்று தன் வாழ்வை முடித்துக் கொள்கிறாள்.
குருவம்சத்து மருமகளாகப்
போகிறோம் என்ற கனவில் காந்தாரத்திலிருந்து கனவுகளுடன் வரும் காந்தாரி தான்
கைப்பிடித்த கணவன் திருதிராஷ்டிரன் பிறவிக் குருடன் என்பதறிந்து கலங்குகிறாள். காந்தாரி
யாரையும் பார்க்க விரும்பாமல் தன் கண்களை வாழ்நாள் முழுவதும் கட்டிக்கொண்டு
கண்னிருந்தும் குருடியாகிறாள். அவளைப் பொறுத்தவரை அவள்
திருமணம் குருட்டுத் திருமணம் மட்டுமல்ல. திருட்டுத் திருமணம்.
இருட்டுத் திருமணமுங்கூட. குரு வம்சத்திற்கு
மூத்த மருமகளான குந்தியின் சோகம் அதனினும் பெரிது. மன்னன்
பாண்டுவை மணந்து எந்த சுகமும் அடையாதவள். அவள் துருவாச
முனிவரிடம் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி சூரிய பகவானை புணர்ந்து ஏற்கனவே கர்ணனைப்
பெற்றிருந்தாள். பெற்ற பிள்ளையை ஏற்றுக்கொள்ள முடியாமல்
ஆற்றில்விட்ட பாவத்துக்கு ஆளானவள். கட்டிய கணவன் மலடன்
என்பதால் தருமதேவனைப் புணர்ந்து யுதிஷ்டரனையும், வாயு பகவனை
நினைத்து பீமனையும், இந்திரனுடன் இனைந்து அர்ச்சுனனையும்
ஈன்றெடுத்தாள். சகுனியும், துரியோதனனும்
தீட்டிய சதியால் பாண்டவர்கள் அல்லல்பட்ட போதெல்லாம் அவர்களுடனிருந்து அவள் படாத
கஷ்டங்களில்லை. ஐவருக்கு மனைவியான துரௌபதியின் துயரம் கதை
முழுவதும் வியாபித்துள்ளது. அம்பிகை, அம்பாலிகை,
மாதுரி, இடும்பி, உலுபி,
சிவை, துச்சலை என்று அரச குலத்தால்
அவலத்துக்கு ஆளான காரிகைகள் ஏராளம்.
இரணியவதி நதிக்கரையில்
பதினெட்டு நாட்கள் தொடர்ந்து பாரதப் போர் நடக்கிறது. சஞ்சயன் போர் வர்ணனையாளனாகி
திருதிராஷ்டிரனுக்கு போர்க்காட்சிகளை விளக்கிக்கொண்டே இருக்கிறான். போரில் இரு தரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் எல்லாம்
வகுக்கப்படுகின்றன. ஆனால் போர் என்பதே எதிரியை
அழித்தொழிப்பதற்குத் தானே. அனைத்து அறங்களும் கைவிடப்படுகின்றன.
பிதாமகர் பீஷ்மரைக் கொல்வதற்கு சிகண்டி என்ற பெண்ணை
முன்னிறுத்துகிறார்கள். அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாகப் பொய்
சொல்லி துரோணரை வீழ்த்துகிறார்கள். ஆனால் இறந்தது
அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானைதான். அதுவும் தர்மனே
இந்தப் பொய்யைச் சொல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறான், நிராயுதபானியாக
நின்ற கர்ணனைத் தாக்கிச் சாய்க்கிறார்கள். இடுப்புக்குக்
கீழே தாக்கப்பட்டு துரியோதனன் சித்தரவதைக்குள்ளாகி சாகிறான். இரவில் பாசறைக்குள் தூங்கிக் கொண்டிருந்த உப பாண்டவர்களை அநியாயமாகக்
கொல்கிறான் அஸ்வத்தாமன். போரில் வெற்றி பெற ஈவு இரக்கமின்றி
அரவாணை உயிர்பலியிடுகிறாற்கள். கவுரவர்கள் பக்கம் பீஷ்மரும்,
பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணனும் இருந்து என்ன பயன்? அனைத்து அறங்களும் மீறப்பட்ட பின்னரே பாண்டவர்களுக்கு வெற்றி கிடைக்கிறது.
மகாபாரதக் கதை சொல்லிகள்
அவரவர் பார்வையிலேயே கதையைச் சொல்லிச் செல்கிறார்கள். பூமணிக்கு
கிருஷ்ணன் பிடித்தமான கதாபாத்திரம். அறுநூறு பக்கங்கள்
விரிந்து செல்லும் கொம்மை நாவலின் கணிசமான பக்கங்கள் கிருஷ்ணனின் லீலைகளை விவரிக்கின்றன. யாது குலத் தலைவன் கிருஷ்ணன்
அர்ச்சுனனுக்கு மைத்துனன் மட்டுமல்ல நல்ல நண்பனும் ஆவான். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருப்பது மட்டுமல்லாது போரின் சூத்திரதாரியாக
இருந்து பாண்டவர்களுக்கு வெற்றியை ஈட்டித் தருகிறான். கோகுலத்தில்
கோபியர்களுடன் கூடிக் கும்மாளம் அடித்தாலும் யாது குலத்திற்கு இன்னல்
வந்தபோதெல்லாம் அவர்களுக்கு உற்ற துணையாக நின்று பாதுகாக்கிறான். மகாபாரதத்தில் நிறைய கதைகள் கிளைவிட்டு வியாபித்துள்ளன. மகாபாரதம் எனும் நாடகத்திற்குள் நாடகமாக வரும் யயாதி, நளன் – தமயந்தி, சகுந்தலை
– துஷ்யந்தன் ஆகியோர் வாழ்வியல் சித்திரங்களையும் பூமணியின்
தூரிகையில் காண்கிறோம். கவுரவர், பாண்டவர்
என நூற்றைந்து சகோதரர்களுக்கும் ஒரே தங்கை துச்சலை. ஜெயத்ரதனுக்கு
வாக்கப்பட்டு அவளும் அல்லல்படுகிறாள். ஜெயத்ரதன் காமவெறியில்
உறவுமுறை தவறி துரௌபதியை தூக்கிச்செல்லும் போது, பீமனிடன்
பிடிபடுகிறான். துச்சலை மீது கொண்டிருந்த சகோதர பாசத்தில்
பாண்டவர்கள் அவனை மன்னித்து விட்டுவிடுகிறார்கள்.
மகாபாரதக் கதையில்
துரௌபதிக்கும் கிருஷ்ணனின் மனைவி பாமாவிற்கும் இடையில் ஓர் சுவையான உரையாடல் உண்டு. ஐந்து
கணவர்களை எப்படிச் சமாளிக்கிறாய் என்ற பாமாவின் கேள்விக்கு துரௌபதி தன் தாம்பத்திய
வாழ்வின் ரகசியங்களை அவளிடம் பகிர்ந்து கொள்வாள். பூமணி ஏனோ
இந்த உரையாடலைத் தவிர்த்துவிட்டார். கோவில்பட்டி வட்டார
மொழியில் எளிய நடையில் கதையை பூமணி நகர்த்திச் செல்வது படிப்பதற்கு இனிமையான
அனுபவமாக இருக்கிறது. இருப்பினும் மகாபாரதம் போன்ற உன்னத
காவியத்தை இவ்வளவு எளிய மொழியில் சொல்லிட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. அரசர்களும், சாமானியர்களும் ஒரே மொழியில் பேசுவது
ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது. நடையில் எளிமைக்கு
முக்கியத்துவம் கொடுக்கும்போது உணர்ச்சிப் பூர்வமான சித்தரிப்புகளுக்கு
இடமில்லாமல் போய்விடுகிறது. பூமணியின் அஞ்ஞாடி,
பிறகு போன்ற செவ்வியல் நாவல்களில் அவர் பயன்படுத்திய மொழிக்கும்
கொம்மையில் அவர் பயன்படுத்தும் மொழிக்கும் இடையிலான வேறுபாடு நம்மை மலைக்க
வைக்கிறது. இந்தக் குறைகளைத் தவிர கொம்மை
மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்வெளிவந்துள்ள
மகாபாரதத்தின் அனைத்து எளிமையான பிரதிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பூமணியின்
கொம்மை முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை.
பெ.விஜயகுமார்
Comments
Post a Comment