Skip to main content

குஜராத் கோப்புகள் - ராணா அயூப்


நூல் அறிமுகம்
குஜராத் கோப்புகள்
ஆசிரியர்: ராணா அயூப்
தமிழில்; ச.வீரமணி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.170/-

 இந்தியாவையே திகைக்கவைத்த நூல்
ராணா அயூப் என்ற இளம் இஸ்லாமியப் பெண் தன்னுடைய தீரச் செயல் மூலம் இந்தியாவையே திகைக்க வைத்துள்ளார். எழுத்து எவ்வளவு வலுவான ஆயுதம் என்பதை நிரூபித்துள்ளார். 2002ஆம் ஆண்டு உலகையே குலுக்கிய குஜராத் வன்முறை குறித்த திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொணர்ந்து சாதனை படைத்துள்ளார். அன்று மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த குஜராத் வன்முறை இந்தியர்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைத்தது. இச்சம்பவம் குறித்த உண்மைகளை ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையாளர் என்ற முறையில் தன் உயிரையும் பணயம் வைத்து மறைக்கப்பட்ட கோர வடிவங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.

குஜராத் கோப்புகள்என்ற இந்த நூல் வெளிவந்த விதமே சுவையானதாகும். தெஹல்கா, “ஸ்டிங் ஆப்பரேஷன்மூலம் அதிகார வர்க்கத்தினரின் ரகசிய பேரங்களை அம்பலப்படுத்திடும் ஒரு புலனாய்வுப் பத்திரிக்கை. பா...வின் அன்றைய தலைவர் பங்காரு லஷ்மணன் இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்களை விற்க வந்த தரகர்களிடம் பேரம் பேசுவதாக நினைத்துக்கொண்டு, தெஹல்கா பத்திரிக்கையாளர்களிடம் பேரம் பேசி கத்தை கத்தையாக நோட்டுக் கட்டுகளைப் பெற்று, கையும் களவுமாக மாட்டிக் கொண்டதை நாமெல்லாம் தொலைக்காட்சியில் கண்டு களித்தது நினைவிருக்கலாம். குஜராத் படுகொலைகள் குறித்தும் இதுபோன்று இரண்டு ஸ்டிங் ஆப்பரேஷன்களை தெஹல்கா நடத்தியுள்ளது. இப்பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த அஷிஷ் கேதன் தானொரு சங்பரிவார் ஆதரவாளர் போல் நடித்து வன்முறைகளில் ஈடுபட்ட பஜ்ரங்தள் தலைவர்களையும், மற்ற அடியாட்களையும் சந்தித்து, அந்த உரையாடல்களை வெளியிட்டார். இதன் தமிழாக்கத்தை பேரா..மார்க்ஸ், ”குஜராத் 2002: தெஹல்கா அம்பலம்என்ற தலைப்பில் எழுதியுள்ளார். ராணா அயூப் எனும் இந்த இளம் எழுத்தாளர் தெஹல்காவின் மற்றுமொரு ஸ்டிங் ஆப்பரேஷனை வெற்றிகரமாக நடத்திகுஜராத் கோப்புகள்-மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்என்ற நூலினை எழுதியுள்ளார். இந்த இடைவெளிக்குள் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானதும், தெஹல்கா பத்திரிக்கை இந்த நூலினை வெளியிடத் தயங்கியதுபா...வையும், சங் பரிவாரங்களையும் பகைத்துக் கொண்டு நூலினை வெளியிட வேறு எந்த நிறுவனமும் முன்வராததால், ராணா அயூப் அவராகவே இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளார் என்பது அவரின் வீரத்திற்கும், தீரத்திற்கும் மற்றுமொரு சாட்சியாகும்.

 ராணா அயூப் மேல்சாதி இந்து பெண்போல் வேஷமிட்டு தன்னுடைய பெயரை மைதிலி தியாகி என்று மாற்றிக் கொண்டு களமிறங்கினார். தான் அமெரிக்காவில் வாழும் ஒர் இந்தியப் பெண்மணியென்றும் குஜராத் மாநிலத்தின் அருமை பெருமைகளைக் குறும்படமாக எடுப்பதற்காக குஜராத் வந்திருப்பதாகவும் சொல்லிச் சென்றுள்ளார். அவருக்குப் படம் எடுப்பதற்குத் துணையாக ஒரு பிரான்சு நாட்டு இளைஞனையும் சேர்த்துக் கொண்டுள்ளார். அகமதாபாத் நகரில் பல மாதங்கள் தங்கி மிகுந்த சிரமங்களுக்கிடையே காரியத்தைக் கச்சிதமாக முடித்துள்ளார். இவர் சந்தித்த நபர்கள் எல்லாம் அதிகாரப் படிகளின் உச்சத்தில் இருப்பவர்கள். வன்முறைகள் நடந்த காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அமைச்சர்கள், ..எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையிலும் அசாத்திய துணிச்சலுடன் நேர்காணல்களை நடத்தியுள்ளார். இறுதியில் அன்றைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்தது இதன் உச்சம்.

ஒரு துப்பறியும் நாவல் போல் புத்தகம் விறுவிறுப்புடன் விரிந்து செல்லுகிறது. உரையாடல்களை உரையாடல் வடிவத்திலேயே கொடுத்திருப்பது மேலும் சுவையூட்டுகிறது. சிங்கால் என்ற காவல்துறை அதிகாரியின்நாங்கள் நான்கு பேரை என்கவுண்டர் செய்தோம். இரண்டு பேர் பாகிஸ்தானியர்கள், இரண்டு பேர் மும்பையிலிருந்து வந்தவர்கள். அவர்களில் ஒருவர் பெண். அவர் பெயர் இஸ்ரத்என்று அன்று நடந்த என்கவுண்டர் பற்றி வெளிப்படையாகவே கூறுகிறார். காவல்துறையில் ஊடுருவியிருக்கும் சாதியத்தையும் அப்பட்டமாக வெளியிடுகிறார் சிங்கால், “என்கவுண்டர்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் கீழடுக்கில் உள்ள சாதிகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பயன்படுத்தப்பட்டு பின்னர் இந்த அரசியல் அமைப்பில் கைவிடப்பட்டவர்கள்என்கிறார்.

காவல்துறை அதிகாரிகள் ராஜன் பிரியதர்சி, ரெய்கர், பி.சி.பாண்டே, சக்கரவர்த்தி உள் துறைச் செயலாளர் அசோக் நாராயண், மாநிலத்தின் சமூக நலத்துறை அமைச்சர் மாயா கோட்னாணி, என்று பலரையும் சந்தித்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார். உளவுத் துறையின் தலைவராக இருந்த ரெய்கர் மோடி அரசு அதன் கட்டளைகளை நிறைவேற்றாதவர்களை எப்படி பந்தாடியது என்று கூறுகிறார்.   “ராகுல் சர்மா, நேர்மையான காவல்துறை அதிகாரி, அவர் முஸ்லீம்களைப் பாதுகாத்ததற்காக, அரசாங்கம் துருவித் துருவி ஆராய்ந்து வருகிறது. அவர் ஒரு பள்ளிக்கூடத்திலிருந்த முஸ்லீம் குழந்தைகளைப் பாதுகாத்தார். அவ்வாறு குழந்தைகளைப் பாதுகாத்தது மட்டுமல்ல, சிலரைக் கைதும் செய்தார்.  ஆளும் கட்சி உறுப்பினரைக் கைது செய்தார். எனவே அவரை அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு தூக்கி அடித்தார்கள்”  கலவரத்தைக் கட்டுப்படுத்திட மிகவும் மெதுவாகப் போகுமாறு முதல்வர் மோடி உங்களைக் கேட்டுக் கொண்டாரா என்ற ராணா அயூபின் கேள்விக்கு உள்துறைச் செயலர் அசோக் நாராயணனின் பதில் இதோ….

எப்போதுமே அவர் அவ்வாறு செய்ததில்லை. அதேபோல் எழுத்து பூர்வமாக எப்போதும் அவர் கேட்டுக்கொள்வதில்லை. அவருக்கு ஆட்கள் இருந்தார்கள். விசுவ இந்து பரிசத் தொண்டர்கள், காவல்துறையின் கீழ் மட்டத்தில் பணிபுரியும் காவல்துறை ஆய்வாளர்கள் என்று அவர் கட்டளையிடுவதைச் செய்வதற்கு ஆட்கள் இருந்தார்கள். எந்தவொரு மாநில அரசாங்கமும் கலவரங்களை இதுபோன்று எதிர்கொண்டிருக்காது. கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு எங்களிடம் நான்கு கம்பெனிகள் மட்டுமே இருந்தன. மத்திய துணை பாதுகாப்புப் படையும்கூட வல்லமை பொருந்தியதாக இல்லை. மேலும் அப்போது மத்தியில் இருந்ததும் பா...ஆட்சிதான். இரண்டாவதாக இந்து சமூகத்தினர், அவர்கள் நடந்துகொண்ட விதம், உண்மையில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கின….எவ்வித வெட்கமும் இன்றி வீடுகளைச் சூறையாடினர். கார்களில் வந்து வீடுகளைச் சூறையாடினார்கள். மனிதர்கள் மிகவும் மட்டமான நிலைக்குச் சென்றார்கள்.” 

பத்தாண்டு காலம் குஜராத்தில் இத்தகு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டவர்தான் இன்று இந்தியப் பிரதமராக வீற்றிருக்கிறார். இதையெல்லாம் நேரில் கண்டறிந்து துணிச்சலுடன் புத்தகமாக வெளியிட்டுள்ள ராணா அயூப் மிகப் பெரிய பாராட்டுதலுக்குரியவர். ஆனால், இவரைக் கொண்டாடுவது இருக்கட்டும், இவரைப் பற்றிய செய்திகளைக் கூட இந்திய ஊடகங்கள் வெளியிடுவதில்லை. கள்ள மௌனம் சாதிக்கின்றன. இருட்டடிப்பு செய்கின்றன. காரணம்; பயம். மோடி அரசின் நற்சான்றிதழுக்காக காத்திருப்பவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

பெ.விஜயகுமார்



நூல் அறிமுகம்
அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்
ஆசிரியர் : .தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.250/-

நாட்குறிப்புகள் நல்லதொரு படைப்புகளாகப் பரிணமிப்பதில் வியப்பேதுமில்லை. .முத்துலிங்கம் அவர்களின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்வாசகர்களுக்கு நல்விருந்து நல்கும் நூலாகியுள்ளது. நாஜி ஜெர்மனியிலிருந்து தப்பி ஆம்ஸ்டர்டாமில் ஒளிந்து வாழ்ந்த பதின்மூன்றுவயதுச் சிறுமி ஆன் ஃப்ராங்க் எழுதிய டைரி அற்புதமான வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. புதுச்சேரியில் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு துபாசியாக வேலைபார்த்த அனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்புகள் பிரெஞ்சு காலனிய கால வாழ்வை அறிந்துகொள்ள ஏதுவான ஏடாகிறது. அதுபோல் தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரப் பிரச்சனைகள், நிகழ்வுகள் குறித்து தோழர் தமிழ்ச்செல்வன் அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய சரித்திரச் சுவடுகளாகும். ஒரு தேர்ந்த படைப்பாளியின் ஆழ்ந்த விமர்சனங்களாக, நினைவலைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றினைத் தொகுத்து பாரதி புத்தகாலயம்  “அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்என்ற தலைப்பில் 59 கட்டுரைகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது.
 
இந்தியக் கலாச்சாரத்தின் காவலர்கள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டு சங் பரிவாரங்கள் கருத்துரிமைகளுக்கு எதிராகத் தொடுத்துவரும் தாக்குதலைச் சந்திக்க தமிழ்ச்செல்வன் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் தொடர்ந்து எதிர்வினை ஆற்றிட வேண்டியுள்ளது. பண்பாட்டுத் தளத்தில் தீவிரமாகச் செயல்படும் தமிழ்ச்செல்வன் இக்கடமையை மிகுந்த பொறுப்புடனும், நிதானத்துடனும் செவ்வனே செய்து வருகிறார். அதன் வெளிப்பாடே இந்நாட்குறிப்புகள். புத்தகங்களைக் கொண்டாடும் குழந்தைகளைப் பற்றிய முதல் கட்டுரை குழந்தைகளின் உளவியலை ஆழ்ந்தறிந்து எழுதப்பட்டுள்ளது. குழந்தைகள் எவ்வாறு குதூகலத்துடன் புத்தகங்களை வரவேற்கிறார்கள் என்பதை கு.அழகிரிசாமியின் அன்பளிப்புசிறுகதை மூலம் விளக்குகிறார். குழந்தைகளுடன் உறவாடுவதை வாழ்வின் லட்சியமாகக் கருதும் தமிழ்ச்செல்வன் சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியும், பட்டுக்கோட்டை இந்தியன்வங்கி ஊழியர் சங்கப் பள்ளியும் அளித்திடும் அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் கழிக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். நாட்குறிப்பின் பக்கங்கள் தோறும் நிறையப் புத்தகங்களைப் பற்றிய பதிவுகள் சிதறிக் கிடக்கின்றன. தஞ்சை விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில்  வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய தோழர் வீரய்யனின் சுயசரிதை  ‘செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்படித்தபோது அடைந்த நெகிழ்ச்சியை உண்மையில் உலகளந்த கால்கள் எங்கள் தோழர் வீர்ய்யனின் கால்கள் அல்லவா?” என்று உணர்ச்சி பொங்க எழுதுகிறார். குற்ற மனதின் குறிப்புகள் கட்டுரையில் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு, ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு, இமையனின் எங்கதெஆகிய மூன்று படைப்புகளின் தனித்துவமான பெருமைகளை விளக்குகிறார்.

கரீம் எழுதிய தாழிடப்படாத கதவுகள் சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்ச்செல்வன் வழங்கியுள்ள முன்னுரை காத்திரமான கட்டுரையாகும். “துயரத்தில் தூரிகை தொட்டு வரைந்த அந்த ஓவியங்கள் அழியாத கோலங்களாக வாசகர் மனத்திரையில் நிலைபெற்றுவிட்டன. நினைக்குந்தோறும் அக்கோலங்கள் குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மை சமூகத்தின் ஓர் அங்கமாக வாசகன் தன்னை உணரும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி மேலெழும்ப வருவதைத் தவிர்க்க முடியாது. இதுதான் கரீமின் வெற்றி.” என்று தன்னுடைய முன்னுரையை எழுதிச் சென்றுள்ளார் நவகவியின் ஆயிரம் பாடல்களைத் தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள தொகுப்பிற்கான முன்னுரையும் வாசகர்களை புத்தகத்தைத் தேடி சென்றடையத் தூண்டும் எழுத்தாகும். “சிக்கல் சிடுக்குள்ள வார்த்தைகள் இன்றி, முக்கித் திணறும் சொற்சிலம்பமும் இன்றி, நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர்போன்ற எளிய நேரடியான சொற்களால் நிரம்பிய உணர்ச்சி மிக்க கவிதைகள் நவகவியின் கவிதைகள்என்று கவித்துவத்துடன் வர்ணிக்கிறார். சோவியத்தின் மாயகவ்ஸ்கி போலத் தமிழில் நமக்கு வாய்த்த அருங்கவி, பெருங்கவி நம் தோழர் நவகவி. அவரைப் போதிய அளவு; உரிய அளவு கொண்டாடத் தவறிவிட்டோம் என்கிறார்.

என் பிரிய நண்பா/ பிணத்தை ஏரித்துவிட்டு/ சுடுகாட்டிலிருந்து/ கிளம்புவர்களிடம்/ சொல்வதைப்போல சொல்கிறேன்:/        ’திரும்பிப் பார்க்காமல்/ முன்னே நடந்து போஎன்று மரணத்தின் வலி குறித்து கவிஞன் நா.முத்துக்குமார் எழுதிய வரிகளின் நினைவுகளே அவன் உடலைப் புதைத்துவிட்டு வந்தபோது ஏற்பட்டது என்று துக்கம் மேலிட அஞ்சலி செலுத்துகிறார் தமிழ்ச்செல்வன். தமுஎகசவுடன் துவக்கம்முதல் இறுதிவரை நட்பும், தோழமையும் கொண்டிருந்தவர். மாநாடு மற்றும் நிகழ்வுகளுக்கு மகிழ்ச்சியுடன் நிதி நல்கியவர். அழைத்தபோதெல்லாம் நிகழ்வுகளில் வந்து கலந்துகொண்டு பங்காற்றியவர் நா.முத்துக்குமார் என்று கண்ணீர் மல்க நினைவுகூர்கிறார். அதேபோல் இசைபட வாழ்ந்த மக்கள் பாடகர் திருவுடையானின் எதிர்பாராத மரணம் கொடுத்த அதிர்ச்சியையும் தமிழ்ச்செல்வன் பதிவு செய்துள்ளார். “எட்டுக்கட்டையில் பாடக்கூடிய அவனது குரல், இசை உலகில் அபூர்வமானது. இசை மேதை தண்டபாணி தேசிகரைத் தன் மானசீகக் குருவாகக் கொண்ட இசைப்பயணம் திருவுடையானது. தன் இசையால் பணம் சம்பாதிக்க வந்த வாய்ப்புகளை உதறி மறுத்துவிட்டு மக்கள் வாழ்வைப் பாடுவதே தன் வாழ்வின் அர்த்தம் எனக்கொண்டவன், திருவுடையான்என்கிறார். ”காலுக்குச் செருப்புமில்லை; கால்வயிற்றுக் கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா என் தோழனேஎன்கிற ஜீவாவின் பாடல் வரிகளில் துவங்கிய தமிழக இடதுசாரிகள் இசைப்பயணத்தில் ஒரு தனித்த இடம் திருவுடையானுக்கு உண்டு என்றும், அவரது வளமான குரலில் அமைந்த பாடல்கள் நாம் சுவாசிக்கும் இந்தக்காற்றில் கலந்திருக்கின்றன என்றும் நம்புகிறார்.

மார்க்சீயப் பாதையில் சமரசமின்றிக் கம்பீரமாக நடைபோட்ட கவிஞர் இன்குலாப் மரணத்தின்போது சொற்களை நெருப்புத் துண்டங்களாக்கிய கவிஞன் இன்குலாப் என்று சொல்லி அஞ்சலி செலுத்துகிறார். அருவியை நீரின் உச்ச முழக்கம் என்றும் கிணற்றை நீரின் ஆழ்நிலைத் தியானம் என்றும் ஒரு கவிதையில் இன்குலாப் வர்ணித்தார். அவருடைய கவிதைப் பயணமும் அவ்வாறே அமைந்தது. இளமையில் அவர் எழுதிய கவிதைகள் அருவியாக முழங்கின. பிற்காலத்தில் ஆழ்ந்தடங்கிய மௌனமும், அமைதியும் அவருடைய கவிதைகளில் கோலோச்சின என்று குறிப்பிடுகிறார்.

சாதிஆணவக் கொலைகள், பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவல், தமிழகத்தில் கருத்துரிமை காக்க எடுத்த முயற்சிகள், தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழா, ஆன்ந்த் பட்வர்தனின் ஆவணப் படங்கள், குற்றம் கடிதல் திரைப்படம், தமிழர் உரிமை மாநாடு, திருமங்கையர்களின் அவலம், திவ்யாவின் கக்கூஸ் ஆவணப்படம், அய்ஜாஸ் அகமதுவின் பின் நவீனத்துவம் பற்றிய கட்டுரை என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் தமிழ்ச்செல்வன் தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளது வருங்காலச் சந்ததியருக்கு கிடைக்கவிருக்கும் வரலாற்றுப் பெட்டகமாகும். கவிதைகளில் பயணம் துவக்கி, சிறுகதையில் சற்றே காலுன்றி, பின் புனைவில்லா எழுத்தென நகர்ந்த தமிழ்ச்செல்வனின் இந்நாட்குறிப்புகள் படிப்பவர்களைப் பரவசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இத்தொகுப்பில் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ள சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு எழுதி வைத்துக்கொண்டு படிக்கத் துவங்கினால் வாழ்நாள் முழுவதும் படிக்கலாம். இந்தப் பட்டியல் இப்போது என்னிடம் தயார். நான் பெற்ற இவ்வின்பம் செம்மலர் வாசகர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

                             பெ.விஜயகுமார்

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...