நூல் அறிமுகம்
அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.250/-
நாட்குறிப்புகள் நல்லதொரு படைப்புகளாகப்
பரிணமிப்பதில் வியப்பேதுமில்லை.
அ.முத்துலிங்கம் அவர்களின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” வாசகர்களுக்கு நல்விருந்து
நல்கும் நூலாகியுள்ளது. நாஜி ஜெர்மனியிலிருந்து தப்பி
ஆம்ஸ்டர்டாமில் ஒளிந்து வாழ்ந்த பதின்மூன்றுவயதுச் சிறுமி
ஆன் ஃப்ராங்க் எழுதிய டைரி அற்புதமான வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. புதுச்சேரியில் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு துபாசியாக வேலைபார்த்த அனந்தரங்கம்
பிள்ளை அவர்களின் நாட்குறிப்புகள் பிரெஞ்சு காலனிய கால வாழ்வை அறிந்துகொள்ள ஏதுவான
ஏடாகிறது. அதுபோல் தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரப் பிரச்சனைகள்,
நிகழ்வுகள் குறித்து தோழர் தமிழ்ச்செல்வன் அவ்வப்போது எழுதிய
நாட்குறிப்புகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய சரித்திரச் சுவடுகளாகும். ஒரு தேர்ந்த படைப்பாளியின் ஆழ்ந்த விமர்சனங்களாக, நினைவலைகளாக
பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றினைத் தொகுத்து பாரதி புத்தகாலயம்
“அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்” என்ற தலைப்பில் 59 கட்டுரைகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டுள்ளது
பாராட்டுதலுக்குரியது.
இந்தியக் கலாச்சாரத்தின் காவலர்கள் என்று
தங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டு சங் பரிவாரங்கள் கருத்துரிமைகளுக்கு எதிராகத் தொடுத்துவரும்
தாக்குதலைச் சந்திக்க தமிழ்ச்செல்வன் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் தொடர்ந்து எதிர்வினை
ஆற்றிட வேண்டியுள்ளது. பண்பாட்டுத் தளத்தில் தீவிரமாகச்
செயல்படும் தமிழ்ச்செல்வன் இக்கடமையை மிகுந்த பொறுப்புடனும், நிதானத்துடனும் செவ்வனே செய்து வருகிறார். அதன்
வெளிப்பாடே இந்நாட்குறிப்புகள். புத்தகங்களைக் கொண்டாடும்
குழந்தைகளைப் பற்றிய முதல் கட்டுரை குழந்தைகளின் உளவியலை ஆழ்ந்தறிந்து
எழுதப்பட்டுள்ளது. குழந்தைகள் எவ்வாறு குதூகலத்துடன்
புத்தகங்களை வரவேற்கிறார்கள் என்பதை கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ சிறுகதை மூலம் விளக்குகிறார். குழந்தைகளுடன் உறவாடுவதை வாழ்வின் லட்சியமாகக் கருதும் தமிழ்ச்செல்வன்
சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியும்,
பட்டுக்கோட்டை இந்தியன்வங்கி ஊழியர் சங்கப் பள்ளியும் அளித்திடும்
அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் கழிக்கும் அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்கிறார். நாட்குறிப்பின் பக்கங்கள் தோறும்
நிறையப் புத்தகங்களைப் பற்றிய பதிவுகள் சிதறிக் கிடக்கின்றன. தஞ்சை விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் வாழ்நாள்
முழுவதும் பணியாற்றிய தோழர் வீரய்யனின் சுயசரிதை ‘செங்கொடியின்
பாதையில் நீண்ட பயணம்” படித்தபோது அடைந்த நெகிழ்ச்சியை ”உண்மையில் உலகளந்த கால்கள் எங்கள் தோழர் வீர்ய்யனின் கால்கள் அல்லவா?”
என்று உணர்ச்சி பொங்க எழுதுகிறார். குற்ற
மனதின் குறிப்புகள் கட்டுரையில் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு, ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு, இமையனின் ’எங்கதெ’ ஆகிய மூன்று
படைப்புகளின் தனித்துவமான பெருமைகளை விளக்குகிறார்.
கரீம் எழுதிய தாழிடப்படாத கதவுகள்
சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்ச்செல்வன் வழங்கியுள்ள முன்னுரை காத்திரமான
கட்டுரையாகும். “துயரத்தில்
தூரிகை தொட்டு வரைந்த அந்த ஓவியங்கள் அழியாத கோலங்களாக வாசகர் மனத்திரையில்
நிலைபெற்றுவிட்டன. நினைக்குந்தோறும் அக்கோலங்கள் குற்ற
உணர்வை ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மை சமூகத்தின் ஓர்
அங்கமாக வாசகன் தன்னை உணரும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி மேலெழும்ப வருவதைத்
தவிர்க்க முடியாது. இதுதான் கரீமின் வெற்றி.” என்று தன்னுடைய முன்னுரையை எழுதிச் சென்றுள்ளார் நவகவியின் ஆயிரம்
பாடல்களைத் தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள தொகுப்பிற்கான முன்னுரையும்
வாசகர்களை புத்தகத்தைத் தேடி சென்றடையத் தூண்டும் எழுத்தாகும். “சிக்கல் சிடுக்குள்ள வார்த்தைகள் இன்றி, முக்கித்
திணறும் சொற்சிலம்பமும் இன்றி, நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய
நீர்போன்ற எளிய நேரடியான சொற்களால் நிரம்பிய உணர்ச்சி மிக்க கவிதைகள் நவகவியின்
கவிதைகள்” என்று கவித்துவத்துடன் வர்ணிக்கிறார். சோவியத்தின் மாயகவ்ஸ்கி போலத் தமிழில் நமக்கு வாய்த்த அருங்கவி, பெருங்கவி நம் தோழர் நவகவி. அவரைப் போதிய அளவு;
உரிய அளவு கொண்டாடத் தவறிவிட்டோம் என்கிறார்.
என் பிரிய நண்பா/ பிணத்தை ஏரித்துவிட்டு/
சுடுகாட்டிலிருந்து/ கிளம்புவர்களிடம்/
சொல்வதைப்போல சொல்கிறேன்:/
’திரும்பிப் பார்க்காமல்/ முன்னே நடந்து போ”
என்று மரணத்தின் வலி குறித்து கவிஞன் நா.முத்துக்குமார்
எழுதிய வரிகளின் நினைவுகளே அவன் உடலைப் புதைத்துவிட்டு வந்தபோது ஏற்பட்டது என்று
துக்கம் மேலிட அஞ்சலி செலுத்துகிறார் தமிழ்ச்செல்வன். தமுஎகசவுடன்
துவக்கம்முதல் இறுதிவரை நட்பும், தோழமையும் கொண்டிருந்தவர்.
மாநாடு மற்றும் நிகழ்வுகளுக்கு மகிழ்ச்சியுடன் நிதி நல்கியவர்.
அழைத்தபோதெல்லாம் நிகழ்வுகளில் வந்து கலந்துகொண்டு பங்காற்றியவர் நா.முத்துக்குமார் என்று கண்ணீர் மல்க நினைவுகூர்கிறார். அதேபோல் இசைபட வாழ்ந்த மக்கள் பாடகர் திருவுடையானின் எதிர்பாராத மரணம்
கொடுத்த அதிர்ச்சியையும் தமிழ்ச்செல்வன் பதிவு செய்துள்ளார். “எட்டுக்கட்டையில் பாடக்கூடிய அவனது குரல், இசை
உலகில் அபூர்வமானது. இசை மேதை தண்டபாணி தேசிகரைத் தன்
மானசீகக் குருவாகக் கொண்ட இசைப்பயணம் திருவுடையானது. தன்
இசையால் பணம் சம்பாதிக்க வந்த வாய்ப்புகளை உதறி மறுத்துவிட்டு மக்கள் வாழ்வைப்
பாடுவதே தன் வாழ்வின் அர்த்தம் எனக்கொண்டவன், திருவுடையான்”
என்கிறார். ”காலுக்குச் செருப்புமில்லை;
கால்வயிற்றுக் கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே’ என்கிற ஜீவாவின் பாடல் வரிகளில் துவங்கிய தமிழக இடதுசாரிகள்
இசைப்பயணத்தில் ஒரு தனித்த இடம் திருவுடையானுக்கு உண்டு என்றும், அவரது வளமான குரலில் அமைந்த பாடல்கள் நாம் சுவாசிக்கும் இந்தக்காற்றில்
கலந்திருக்கின்றன என்றும் நம்புகிறார்.
மார்க்சீயப் பாதையில் சமரசமின்றிக்
கம்பீரமாக நடைபோட்ட கவிஞர் இன்குலாப் மரணத்தின்போது சொற்களை நெருப்புத்
துண்டங்களாக்கிய கவிஞன் இன்குலாப் என்று சொல்லி அஞ்சலி செலுத்துகிறார். அருவியை நீரின் உச்ச
முழக்கம் என்றும் கிணற்றை நீரின் ஆழ்நிலைத் தியானம் என்றும் ஒரு கவிதையில்
இன்குலாப் வர்ணித்தார். அவருடைய கவிதைப் பயணமும் அவ்வாறே
அமைந்தது. இளமையில் அவர் எழுதிய கவிதைகள் அருவியாக முழங்கின.
பிற்காலத்தில் ஆழ்ந்தடங்கிய மௌனமும், அமைதியும்
அவருடைய கவிதைகளில் கோலோச்சின என்று குறிப்பிடுகிறார்.
சாதிஆணவக் கொலைகள், பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவல், தமிழகத்தில்
கருத்துரிமை காக்க எடுத்த முயற்சிகள், தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழா, ஆன்ந்த் பட்வர்தனின் ஆவணப் படங்கள், குற்றம் கடிதல்
திரைப்படம், தமிழர் உரிமை மாநாடு, திருமங்கையர்களின்
அவலம், திவ்யாவின் கக்கூஸ் ஆவணப்படம், அய்ஜாஸ்
அகமதுவின் பின் நவீனத்துவம் பற்றிய கட்டுரை என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும்
தமிழ்ச்செல்வன் தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளது வருங்காலச் சந்ததியருக்கு
கிடைக்கவிருக்கும் வரலாற்றுப் பெட்டகமாகும். கவிதைகளில் பயணம்
துவக்கி, சிறுகதையில் சற்றே காலுன்றி, பின்
புனைவில்லா எழுத்தென நகர்ந்த தமிழ்ச்செல்வனின் இந்நாட்குறிப்புகள் படிப்பவர்களைப்
பரவசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இத்தொகுப்பில்
தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ள சிறுகதைகள், கவிதைகள்,
நாவல்கள், கட்டுரைகள், ஆங்கிலம்
மற்றும் தமிழ் புத்தகங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு எழுதி வைத்துக்கொண்டு
படிக்கத் துவங்கினால் வாழ்நாள் முழுவதும் படிக்கலாம். இந்தப்
பட்டியல் இப்போது என்னிடம் தயார். நான் பெற்ற இவ்வின்பம்
செம்மலர் வாசகர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
பெ.விஜயகுமார்
Comments
Post a Comment