தமிழ்ச் சிறுகதைகள்
எழுத்தாளர்கள் ஓர் அறிமுகம் - கந்தர்வன்
ஒரு தொழிற்சங்கத் தலைவர் தமிழ்ச் சிறுகதை
எழுத்தாளராகப் பரிணமித்த பெருமை கந்தர்வனுக்கு மட்டுமே உண்டு. இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தில் பிறந்த கந்தர்வனின் இயற் பெயர்
நாகலிங்கம். கந்தர்வன் அரசு ஊழியராகக் கருவூலத் துறையில்
சேர்ந்ததிலிருந்து தொழிற்சங்கம், மார்க்சீயம், பொதுவுடைமைக் கட்சி என்று தன் வாழ்நாள் முழுவதும் இடதுசாரி சிந்தனைகளில்
திளைத்தவர். கவிதையில் தொடங்கி சிறுகதையை நோக்கி நகர்ந்தவர்.
”நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை; ஞாயிற்றுக்
கிழமையும் பெண்களுக்கில்லை” என்ற இவரின் கவிதை வரிகள்
இன்றும் பெண்ணியம் குறித்த மேடைகளில் அனைத்திலும் முழங்கப்படுகின்றன. சென்னையில் இருந்தபோது மக்கள் எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பில் சிகரம்
செந்தில்நாதன், தி.க.சி. டி.செல்வராஜ் ஆகியோருடன்
இணைந்து செயல்பட்டார். பின்னர் இது தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர்கள் சங்கத்துடன் இணைந்தது. தொழிற்சங்கப் போராட்டத்தால்
ஒரு சில ஆண்டுகள் வேலையிழந்தது, தன் மகனை இழந்ததால் பெற்ற
புத்திரசோகம் இவைகளிலெருந்தெல்லாம் வெளிவர தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்
சங்கத்தில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு உதவியது. தான் வாழ்ந்த
அறுபது வயதில் அறுபத்தொரு சிறுகதைகளைப் படைத்து தமிழ்த் இலக்கிய உலகில் தனக்கென ஓரிடத்தைச் செதுக்கிக்கொண்டார். கந்தர்வனின் முதல் சிறுகதை ’துணைப்பிணம்’ தாமரை இதழில் பெருத்த பாராட்டுகளுக்கிடையில் வந்தது.
இந்தியச் சமூகத்தின் சாபக்கேடு அதன் பிரமிடு
அமைப்பிலான சாதியக் கட்டுமானமாகும். இதன்
அடித்தளத்தில் இருக்கும் தலித் மக்கள்படும் அவலம் சொல்லித் தீராதது. கந்தர்வனின் கதைகள் துண்டு, சாசனம், இரண்டும் சாதியக் கொடுமைகளை துல்லியமாகவும்
அதே சமயம் வன்முறையற்ற மொழியிலும் சித்தரிக்கின்றன. துண்டு
சிறுகதையில் அம்பலகாரர் வீட்டில் எடுபிடி வேலைகள் செய்யும் வேலு மாடாய் உழைக்கிறார்.
வேலு எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி வெளிப்படும். அம்பலகாரரின் மகன் துபாயிலிருந்து வந்திருப்பதால் வேலு உடனே
அழைக்கப்படுகிறார். ”அப்பத்தா, வேலு
வந்திருக்கிறான்!” என்று வேலுவின் வரவை அம்பலகாரரின் பேரன்
எட்டு வயதுச் சிறுவன் அறிவிப்பதில் துவங்குகிறது வேலு மீதான வன்முறை. அம்பலகாரர் ஒவ்வொரு வேலையாக ஏவுகிறார். கொடூர
வெயிலில் கடுமையான வேலைகள் ஒவ்வொன்றாக செய்து முடிக்கிறார். வீட்டிலிருப்பவர்கள்
யார் கண்ணில் பட்டாலும் வேலு தன் மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு
மரியாதை செய்யவேண்டிய கட்டாயம். உள்ளே கோழிக்கறி சமைக்கும்
வாசம் வீடெங்கும் மணக்கிறது. ஆனால் அம்பலகாரரின் மனைவி
தட்டில் ஊத்தும் பழைய கஞ்சியை வாங்கிக்கொண்டு சாணமும், மூத்திரமுமாய்
கிடக்கும் தொழுவத்தில் வைத்துக் குடிக்கிறார். வேலைகள்
எல்லாம் முடிந்ததும் ”இந்தாடா, வேலு”
என்று கூப்பிட்டு ஒரு ரூபாய் நோட்டை நீட்டுகிறார். வேலு இரண்டு கைகளையும் முறம்போல் சேர்த்துக்கொண்டு மரியாதையுடன்
வாங்குகிறார். வேலைகள் நிறைய இருப்பதால் அடுத்த நாளும் வர
வேண்டும் என்கிறார் அம்பலகாரர். அடுத்த நாள் காலை வேலு மேல்
துண்டை எடுத்துக்கொள்ளாமல் வேலைக்குப் புறப்படுகிறார். அவரின்
மனைவி, ”இந்தா துண்டு” என்று எடுத்துக்
கொடுத்தவுடன் வேலு “இந்தத் துண்டுக்கு எழவு கூட்டத்தான்
நேரஞ் சரியாயிருக்கு. தலையில கட்டுறது. ஆளைக் கண்டா அவுத்து இடுப்பிலெ கட்டுறதுனு இதுக்கே பொழுது சரியாயிருக்கு.
துண்டே வேணாம். நான் போறேன்”. என்று ஆத்திரம் பொங்கிடக் கூறுகிறார். இத்துடன் கதை
முடிவடையும் என்று வாசகர்கள் அனைவரும் எதிர்பார்ப்போம். ஆனால்
கந்தர்வன் கதையை முடிக்கும் திறன் அலாதியானது. அம்பலகாரர்
வீட்டுமுன்பாக வேலு மேல் துண்டு இல்லாமல் நிற்கிறார். அம்பலகாரர்
உற்றுப்பார்த்துவிட்டு உள்ளே போய் ஒரு புதுத் துண்டை எடுத்துக்கொண்டு வருகிறார்.
”இந்தாடா வேலு துண்டில்லாமல் நல்லா இல்லடா ஒனக்கு. இதை வைச்சுக்கோ. அப்பத்தான் அம்சமா இருக்கும்”
என்கிறார். கந்தர்வனின் கதையின் முடிவுகள்
அனைத்தும் வாசகர்களை ஆச்சரியப்படுத்தும் இத்தகு எதிர்பாராத முடிவுகளுடனேயே
இருக்கும்.
சாசனம் கதையில் கந்தர்வன் சாதியாகவும், வர்க்கமாகவும் அடிமைப்பட்டுக் கிடக்கும் தலித் மக்களின் வலியையும்,
அவர்கள் மீது ஆதிக்க சாதியினர் செலுத்தும் வன்மத்தையும் கந்தர்வன்
காட்டுகிறார். இந்திய விடுதலைக்கு முன் அப்பகுதியின்
மகாராஜாவிற்கு சேவகம் செய்து அவர் நன்மதிப்பைப் பெற்று ஏராளமான சொத்துச்
சேர்த்துள்ளார் இக்கதையில் வரும் தாத்தா. ஐந்து மைல்
விஸ்தீரணத்தில் அனைத்து கிராமங்களின் நன்செய், புன்செய்
நிலங்கள், தோட்டம், துரவு அனைத்தும்
தாத்தாவுக்குச் சொந்தம். அக்காலத்தில் தாத்தா போடாத ஆட்டம்
இல்லை. இராத்திரி யார் வீட்டில் தங்கியிருப்பார் என்று
யாருக்கும் தெரியாது. அவருக்குப்பின் அப்பா தன் தகப்பனார்
விட்டுச் சென்ற சொத்துக்களைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்தார். சொத்துக்களின் சாசனங்களை எல்லாம் பத்திரமாக ஓர் அறையில் பூட்டிவத்து
அவ்வப்போது படித்துப் பார்த்துக்கொள்வார். அவ்வாறு படிக்கும்போதெல்லாம்
அவரிடம் ஒரு பதட்டம் காணப்படும். அவர்கள் வீட்டு முன்பாக ஒரு
பெரிய புளிய மரம் அடர்ந்து வளர்ந்து வானளாவ நிற்கும். அந்தப்
புளிய மரத்தின் காய்கள் தனித்துவமானவை. அப்பா அதை கொறட்டுப்
புளி என்பார். குற வீட்டுப் புளி என்பதைத்தான் அப்பா
மாற்றிக் குறிப்பிட்டார் என்பது பின்னர் தெரியவந்தது. அந்தப்
புளிய மரமும், அது நின்றிருந்த இடமும் தனக்குச் சொந்தமில்லை
என்ற உண்மை அப்பாவுக்கு தெரிந்திருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொண்டதில்லை.
வருடந்தோறும் புளியம்பழ உலுக்கல் அப்பா முன்னால் நடக்கும். அப்போது எதிரில் இருந்த குறவர் குடியிலிருந்து ஒரு கிழவியும் அவள் மகளும்
வந்து நிற்பர். அந்தப் பெண் ஜாடையில் அப்படியே தாத்தாவைப்
போல் இருப்பாள். அப்பா அவர்களிடம் ஒன்றும் பேசாமல் புளியம்
பழங்கள் சிலவற்றை அவர்கள் பக்கம் காலில் தள்ளிவிடுவார். அவர்கள்
அதனை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். ஆனால் ஒரு வருடம்
உலுக்கலின் போது நிலைமை மாறியது. கிழவி, அவள் மகள், மகளின் கணவன் இன்னும் குறவீட்டு ஆட்கள்
பலரும் கூடியிருந்தனர். அப்பாவின் ஆட்கள் மரத்தை உலுக்க
ஆரம்பித்த உடன் கிழவி புளியமரத்தில் எனக்கும் பாத்தியதை இருப்பதால் இனிமேல்
நாங்கள்தான் உலுக்குவோம் என்றாள். அப்பா ஒன்றும் சொல்லாமல்
வீட்டுக்குள் வந்துவிடுகிறார். அவரிடம் அதற்கான சாசனம்
இருந்தால்தானே உரிமை கொண்டாட முடியும். சாசனம் கதை ஆதிக்க
சாதியினரின் ஆணவத்தை மட்டுமல்ல அதற்கெதிரான தலித்துகளின் எழுச்சியையும்
வெளிப்படுத்துகிறது.
உடல் நோய்கள் அனைத்தையும்விட மன நோய் கொடியது. உடல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது இரக்கம் கொள்கிறோம். அவர்களின் வேதனைகளைப் புரிந்து கொள்கிறோம். ஆனால் மன
நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நமக்கு இரக்கத்தைவிட கோபமே மேலிடுகிறது. அவர்களின் நடவடிக்கைகள் நமக்கு எரிச்சலூட்டுகின்றன. அதனால்
மன நோயாளிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். சில
சமயம் அறைகளில் அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். கந்தர்வனின் ’பத்தினி ஓலம்’ கதையில்
புத்தி கலங்கிய ஒரு பெண்ணைச் சந்திக்கிறோம். ஓர் நள்ளிரவில்
கும்பகோணம் செல்லும் பேருந்தில் ஓர் இளைஞன் அவன் மனைவியுடனும், புத்தி சுவாதீனமற்ற அவனின் அக்காவுடனும் ஏறுகின்றான். பயணம் முழுவதும் அந்தப் பெண் ஓலமிட்டபடி வருகிறார்கள். “நான் பத்தினிடா, உத்தமிடா என்னை அடிக்காதெ, ஏன் ரூமுக்குள்ளே என்னை அடைக்கிற” என்று கதறுகிறாள்.
அவள் சேலை நழுவி விழுவது அறியாது மயக்க நிலையில் இருக்கிறாள்.
இளைஞனும் அவன் மனைவியும் சிரமப்பட்டு அவளை அடக்குகிறார்கள். இளைஞன் அவளை அடிக்கவும் செய்கிறான். ”ஏங்க! என்னைப் போட்டு அடிக்கிறாங்க நீங்க மாடியில் என்ன செய்கிறீர்கள்?” என்று கதறுகிறாள். ”அவன் இப்படித்தானே வந்தான்.
நான் அவனோடு பேசக்கூட இல்லையே. பாவிகளா;
பொய் சொல்லாதியடா. கண் அவிஞ்சுரும்டா. காளி கேப்பா உங்களை” என்று அழுது புலம்புகிறாள்.
டிரைவரைப் பார்த்து அடே! வண்டியை நிறுத்துடா.
காரை ஒட்டாதே. நான் குதிச்சிருவேன். நான் உத்தமிடா. பத்தினிடா என்று புலம்பித்
தவிக்கிறாள். வாயில் மாத்திரையைத் திணிக்கிறார்கள். தண்ணீர் பாட்டிலைத் தட்டிவிடுகிறாள். பயணிகள்
அனைவரும் எரிச்சல் அடைகிறார்கள். டிரைவர் இளைஞனைப் பார்த்து
இப்படியெல்லாம் பஸ்லெ கூட்டிக்கிட்டு வரலாமா என்று திட்டுகிறார். பஸ் கும்பகோணம் வந்தடைந்ததும். ஆட்டோ ஒன்றைப்
பிடித்து எங்கோ செல்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு எதனால்
பைத்தியம் பிடித்தது? எங்கே கூட்டிச் செல்கிறார்கள்? என்பதையெல்லாம் கந்தர்வன் சொல்லாமல் வாசகர்களின் கற்பனைக்கு
விட்டுவிடுகிறார். இது போன்ற மனதை உலுக்கும் காட்சிகள் நாம்
பொதுவெளிகளில் காண்பவைதான். ஆனால் செய்வதறியாது திகைத்து
நிற்கிறோமே.
தராசு கதை அப்பா - பிள்ளைகள்
பாசம் மேலிடும் கதை போல் தெரியும். ஆனால் அதையும் தாண்டி
கதையில் அப்பாவுக்கு தன் மனைவி மேலிருக்கும் பாசமும் வெளிப்படுகிறது. பர்மாவிலிருந்து அப்பா திரும்பிவந்தபோது நான்கு பொக்கிஷங்களோடு வந்தார்.
ஒன்று கதராடை, இரண்டு சைவம், மூன்று தமிழ், நான்கு நீண்ட அடர்த்தியான கூந்தல்.
முடியை மட்டும் வெட்டி கிராப்வைக்க வேண்டிய நிர்ப்பந்தம். மற்ற விஷயங்களில் அப்பா கறார். கதர் ஆடையும்,
அவரின் சைவ உணவுப் பழக்கமும் அவருக்கு மரியாதையைக் கொடுத்தன.
பஞ்சாயத்தில் அவரின் தீர்ப்புக்கு மறு தீர்ப்பு சுப்ரீம்
கோர்ட்டில்கூடக் கிடைக்காது. தமிழ் இலக்கியத்தில் சைவத்
திருமறைகள் அவருக்கு மனப்பாடம். குழந்தைகள் தினம் ஒரு
திருக்குறள் படிக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். “கொல்லான்
புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும்
தொழும்.’ எனும் குறளுக்கு இரண்டு மணி நேரம் விளக்கம்
அளிப்பார். ஆனால் அம்மா வளர்ந்தவிதம் தனி. தாத்தா வீட்டில் கருவாடு, உப்புக்கண்டம் இல்லாத
சாப்பாடு இல்லை. ஒரு தட்டு நிறைய கஞ்சியும் ஒரு தட்டு நிறைய
மீனும் சாப்பிட்ட வீடு அம்மா வீடு, அம்மாவாசை தவிர மற்ற
நாட்களில் கவிச்சி இல்லாமல் சாப்பாடு இருக்காது. கல்யாணம்
ஆனதும் அம்மாவிற்கு சைவ சமையல் பழக வெகுநாள் பிடித்தது. தாத்தாவின்
வீடு அவர்களின் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளிதான் இருந்தது. வீட்டில் எல்லோரும் உறங்கிய பின்னர் அம்மா அவர் தாய் வீட்டிற்குப் போய்
மீன் குழம்பு ஊற்றிச் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு வருவார்.
அம்மாவின் சாப்பாட்டு விஷயத்தில் அப்பா தலையிடுவதில்லை.
ஒரு நாள் பண்ணையாள் வரவில்லை என்பதால் அப்பா வயலுக்கு
நீர் பாய்ச்ச செல்கிறார். மடையைத் திறந்ததும் பெரிய விரால் மீன்
ஒன்று துள்ளிக் குதித்து வருகிறது. அப்பா அதை விரட்டி
விரட்டிப் பிடிக்கிறார். சேற்றில் விழுந்து மீன் பிடித்ததில்
வேட்டி முழுவதும் சகதி. பண்ணையாள் வந்ததும் அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னாராம், “அம்மாவிடம் போய் கொடு; ரொம்ப நாளாச்சு அவ வெத்தலை போட்டு” என்று. அம்மா மீதிருந்த பிரியத்தில் அப்பா அந்த விரால் மீனைப் பிடித்தாரா,
அல்லது அந்த பெரிய விரால் வீணாகக் கூடாது என்பதற்காக பிடித்தாரா
என்ற கேள்விக்கு அப்பா தன் வாழ் நாள் முழுவதும் பதில் சொல்லவில்லை என்று கதை
முடிகிறது.
பெ.விஜயகுமார்
Comments
Post a Comment