Skip to main content

அருந்ததிராய் ‘தோழர்களுடன் ஒரு பயணம்

 

அருந்ததி ராயின் தோழர்களுடன் பயணம்’ (Walking with the Comrades) கட்டுரை. தோழமையின் அடையாளம்!

 தண்டகாரண்யா எனப்படும் அடர்ந்த காடு மத்திய இந்தியாவில் வடக்கிலிருந்து தெற்காக 300 மைல்களும் கிழக்கிலிருந்து மேற்காக 500 மைல்களும் நீண்டு வளைந்து செல்லும் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இயற்கை வளம் கொழிக்கும் இக்காட்டில் இரும்பு, பாக்சைட் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. சந்தால், கோந்த், முண்டா, கோல், ஒரோன், ஹோ போன்ற பழங்குடி மக்கள் இக்காடுகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரங்களான காட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்திட தொன்று தொட்டுப் போராடிய வண்ணமே இருக்கின்றனர். அன்றைய ஜமீந்தார்கள், ஆங்கிலேய ஆட்சியாளர்களில் தொடங்கி இன்று சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சி செய்யும் மத்திய மாநில ஆட்சியாளர்கள் வரை ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் வரலாறு வீரத்திலும், தியாகத்திலும் எழுதப்பட்டதாகும்.

அடர்ந்த காடுகளில் உயர்ந்து வளர்ந்துள்ள மரங்களை வெட்டி விற்கவும், நிலத்தில் ஆழக்கிடக்கும் தாதுப் பொருட்களைத் தோண்டி எடுக்கவும் கார்ப்பரெட் கழுகுகள் வட்டமிட்ட வண்ணமே இருக்கின்றன. டாட்டா, எஸ்ஸார், வேதாந்தா போன்ற பெரு முதலாளிகள் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசு அதிகாரகளிடம் பேரம் பேசி நிறைவேற்றிய வண்ணமே உள்ளனர். இந்நிறுவனங்கள் தங்களின் லாப வேட்டைக்காக இயற்கை வளங்களைச் சூறையாட ஆட்சிக் கட்டிலேறும் கட்சிகள் துணைபோவது பழங்குடி மக்களை வஞ்சிப்பதன்றி வேறென்ன? பழங்குடி மக்களின் வாழ்வைச் சீரழிக்கும் கார்ப்பரெட்டுகள்  முன் கைகட்டி சேவகம் செய்யும் ஏவலர்களாக காங்கிரஸ், பாஜக போன்ற முதலாளித்துவக் கட்சிகள் எப்போதும் காத்திருக்கின்றன. இத்தொல்குடிகளின் மீட்பர்களாக ஆயுதம் ஏந்திப் போராடி வரும் மாவோயிஸ்டுகளின் பின் இலட்சக்கணக்கான மக்கள் அணி வகுப்பதில் வியப்பேதுமில்லை.    

தண்டகாரண்யாவில் நடந்திடும் வீரஞ் செறிந்த போராட்டத்தை நேரில் கண்டு கள ஆய்வு மேற்கொள்ளனர் இரண்டு இந்தியப் பெண்மணிகள். ’டில்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்பேராசிரியர் நந்தினி சுந்தர் துணிச்சல் மிகு பயணத்தை மேற்கொண்டு ’The Burning Forest: India’s War in Bastar’ எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார். இந்நூலினை பேரா.தருமி  தமிழில் மொழிபெயர்த்துபற்றியெறியும் பஸ்தர்என்ற நூலாக வெளிவந்துள்ளது. சமூகச் செயல்பாட்டாளாரும், எழுத்தாளருமான அருந்ததி ராய் தண்டகாரண்யா காடுகளில் பயணித்து மாவோயிஸ்ட்டு போராளிகளுடன் தான் பெற்ற அனுபவங்களை ‘Walking with the Comrades’ என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து எழுத்தாளர் .முத்துக்கிருஷ்ணன்தோழர்களுடன் ஒரு பயணம்என்று நூலாக வழங்கியுள்ளார்.    

அருந்ததி ராய் எழுதியுள்ள ஆங்கிலக் கட்டுரையை நெல்லை  மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எம். ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடப் புத்தகமாக வழங்கியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக பாடத்திட்டத்தில் இருந்துவரும் இக்கட்டுரையை நீக்கச் சொல்லி ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யின் மிரட்டலுக்குப் பயந்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இக்கட்டுரையைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது மிகப் பெரிய அவலம். பாடத் திட்டம்  குறித்த முடிவுகளை பல்கலைக்கழகத்தின் கல்விக் குழுவில் விவாதித்த பின்னரே எடுக்க வேண்டும். இவ்வரைமுறைகளைப் பின்பற்றாமல் துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஏபிவிபி உறுப்பினரகள்  கலாச்சாரக் காவலர்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டு கருத்துரிமைகளுக்கு எதிராகவும், பல்கலைக்கழகங்களின் சுதந்திரச் செயல்பாடுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபடுவது கல்விச் சூழலை பெரிதும் பாதிக்கிறது. இதேபோல் டில்லி பல்கலைக்கழகம் ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு பேராசிரியர் .கே.ராமானுஜன் எழுதியமுன்னூறு ராமாயணங்கள்: ஐந்து எடுத்துகாட்டுகளும், மொழிபெயர்ப்பு குறித்த மூன்று சிந்தனைகளும்என்ற கட்டுரையை பாடத் திட்டத்தில் சேர்த்திருந்ததையும் ஏபிவிபி எதிர்த்த காரணத்தால் டில்லி பல்கலைக்கழகம் கட்டுரையை விலக்கிக் கொண்டது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும். மும்பை பல்கலைக்கழகத்தின் பி. ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களின் பாடத் திட்டத்தில் ரோஹிண்டன் மிஸ்டிரி எழுதியமிக நீண்ட பயணம் (Such a Long Journey) என்ற பல பரிசுகளை வென்ற நாவல் இடம் பெற்றிருந்தது. இந்நாவல் மராத்திய மாநிலத்தின் சிவசேனைத் தலைவர் பால் தக்கரேயை தவறாகச் சித்தரிப்பதாகச் சொல்லி சிவசேனா நடத்திய போராட்டத்திற்கு அடிபணிந்து, மும்பை பல்கலைக்கழக நிர்வாகமும் கல்விக் குழுவைக் கூட்டி விவாதிக்காமல் நாவலை விலக்கிக்கொண்ட தவறும் உயர்கல்வித் துறையில் நடந்தேறியுள்ளது.  

அருந்ததி ராய் எழுதியுள்ளதோழர்களுடன் பயணம்இன்றைய இந்தியாவின் சமூகம், பொருளாதாரம், அரசியலைத் தெரிந்து கொள்வதற்கு அனைத்து இளைஞர்களும் படிக்க வேண்டிய கட்டுரையாகும். மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை இக்கட்டுரையைத் தேர்ந்தெடுத்தது சாலப் பொருந்தும். ’சின்ன விஷயங்களின் கடவுள் (The God of Small Things)’, ‘மிகுந்த மகிழ்ச்சிக்கான அமைச்சரவை (The Ministry of Utmost Happiness)’, ’கற்பனையின் முடிவு’ (The End of Imagination), ‘முதலாளித்துவம்- ஒரு பேய்க் கதை (Capitalism- A Ghost Story)’ போன்ற சிறந்த படைப்புகளை அளித்திருக்கும் அருந்ததி ராய்புக்கர் பரிசு’, ’நார்மென் மெய்லர் பரிசு’, சிட்னி அமைதிக்கான பரிசு’, சாகித்ய அகாதமி விருது ஆகியன பெற்றுள்ளார். தோழர்களுடன் பயணம் கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் தண்டகாரண்யா காட்டுக்குள் பயணிக்கும் உணர்வைப் பெறுகிறார்கள். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தண்டகாரண்யா காட்டில் தொல்குடி மக்களின் நலங் காக்க இந்திய அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் நடத்தி வரும் போர் எவ்வளவு நியாயமானது என்பதை வாசகர்களை உணரச் செய்யும் கட்டுரையிது.

சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா நகரிலிருந்து அருந்ததி ராயின் பயணம் தொடங்குகிறது. தண்டேவடா நகரின் தண்டேஸ்வரி அம்மன் கோயில் வாசலில் அவரை அழைத்துச் செல்லவிருக்கும் சந்து என்ற மாவோயிஸ்ட் இளைஞனுக்காகக் காத்திருக்கிறார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலவியிருந்த பல முரண்பாடுகளையும் நகைச் சுவை மிளிர விளக்குகிறார். காடு முழுவதிலும் காவல்துறையினர் சிவில் உடையிலும், மாவோயிஸ்ட்டுகள் சீருடையிலும் வலம் வருகிறார்கள்! சிறை சூப்பிரண்டெண்ட் ஜெயிலில் வீற்றிருக்க; கைதிகள் எல்லாம் வெளியில் உலாவுகிறார்கள்! ஆமாம்; அருந்ததி ராய் பயணம் தொடங்கிய சமயத்தில் தண்டேவடா சிறையிலிருந்து முன்னூறுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பித்திருந்தார்கள். பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை காவல்நிலையத்தில் பூட்டி வைத்திருக்கிறார்கள். அவர்களை பாலியல் வன்முறை செய்த கயவர்கள் எல்லாம் மேடைகளில் சுதந்திரமாக முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்! இந்திராவதி ஆற்றின் மேற்புறத்திலிருந்த காடு முழுவதும் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும், ஆற்றின் கீழ்ப்புறம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கின்றன. கிராமங்கள் எல்லாம் காலியாக இருக்க, காடு முழுவதிலும் கிராம மக்கள் நிறைந்திருக்கிறார்கள்! பள்ளிகளில் இருக்க வேண்டிய குழந்தைகள் எல்லாம் பள்ளி வளாகத்துக்கு வெளியில் இருந்தனர்! பள்ளி வளாகத்துக்குள் காவல்துறையினர் தங்கியிருந்தனர்! இந்த முரண்பாடுகளுக்கு எல்லாம் காரணம் இந்திய ராணுவம் பசுமை வேட்டை’ (Operation Green Hunt) என்ற நடவடிக்கையைத் தொடங்கியிருந்ததேயாகும். அன்றிருந்த உள்துறை அமைச்சர் .சிதம்பரம் இவ்வுண்மையை மறுத்ததோடு இது ஊடகங்கள் கிளப்பிவிட்ட புரளி என்றார். ஆனால் பசுமை வேட்டை நடவடிக்கைக்காக அரசு கணிசமான நிதியை ஒதுக்கியிருந்ததும், ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் காடு முழுவதும் வலம் வருவதும் அப்பட்டமான உண்மை என்பதை உலகறியும். கனிமப் பொருட்கள் நிறைந்திருந்த சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பரந்து விரிந்து கிடக்கும் தண்டகாரண்யா பழங்குடி மக்களின் தாயகமாகவும், கார்ப்பரேட்டுகளின் கனவுலகமாகவும் இருப்பது முரண்பாட்டின் உச்சமாகும்.

அரசுக்கு எதிரான இன்றைய போருக்கு மாவோயிஸ்ட்டுகள் தலைமை தாங்கலாம், ஆனால் சந்தால், கோந்த், ஒரொன், ஹோ இன மக்கள் காலங்காலமாக கலகம் நடத்திய வண்ணமே உள்ளனர். தொடர்ந்த போராட்டங்கள் இப்பூர்வகுடிகளை வீரர்களாகவும், தீரர்களாகவும் புடம் போட்டு வளர்த்துள்ளது. சுரங்கங்கள், தொழிற்சாலைகள், பாலங்கள், அணைகள் கட்டுவதற்கு இவர்களை வனப்பகுதிகளிலிருந்து நீக்கும்போதெல்லாம்  பழங்குடி மக்களை தேசிய நீரோட்டத்திற்கு கொண்டு வரும் திட்டம் என்ற பசப்பு வார்த்தைகளைச் சொல்லியே ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருகிறார்கள். வேதாந்தா நிறுவனம் எங்கெல்லாம் புற்று நோய் மருத்துவ மனை கட்டுகிறதோ, அல்லது பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி அளிக்கிறதோ அங்கெல்லாம் பாக்ஸைட் சுரங்கத்திற்கான திட்டம் உருவாகிறது என்பது உறுதி. சந்துவின் மோட்டார் சைக்கிளில் அருந்ததி ராய் ஏறிக்கொள்ள நீண்ட பயணத்திற்குப் பின் இருவரும் ஒரு கிராமத்தை வந்தடைகின்றனர். ஆண்களும் பெண்களுமாக இருபது இளைஞர்கள் காவல் பணியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சீருடைய அணியாதிருந்த அந்த இளைஞர்கள் சமீபத்தில் மாவோயிஸ்ட் படையில் சேர்ந்திருக்கிறார்கள் என்று சொல்லி சந்து அவர்களை அருந்ததி ராய்க்கு அறிமுகம் செய்கிறான். அவர்கள் கையில் ஏந்தியிருந்த துப்பாக்கி அவர்களைவிட உயரமாக இருந்தது. அன்றிரவு இருபது இளைஞர்களுடன் முகாமில் அருந்ததி ராய் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். அவருக்கான உணவையும் ஏற்பாடு செய்துவிட்டு சந்து விடைபெற்றுக் கொண்டான். அடுத்த நாள் காலை ஒரு சகோதரி வருவார் என்றும், அவருடன் அருந்ததி ராய் பயணத்தைத் தொடர வேண்டும் எனவும், தனக்கிடப்பட்ட பணி முடிந்துவிட்டதாகவும் சொல்லிச் சென்றான். அன்றிரவு அத்துவானக் காட்டில், கட்டாந்தரையில் ஜில்லி எனப்படும்  பாயில் படுத்து இளைஞர் படையுடன் உறங்கத் தயாரானார். பயணங்களின் போது அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல்களில் இருந்திடும் ஆடம்பர வசதிகளின் நினைவுகள் மேலிட பயணக் களைப்பில் தூக்கம் அவரைத் தழுவுகிறது.

மறுநாள் காலையில் அவரை அழைத்துச் செல்ல கமலா என்ற தோழர் வருகிறார். கையில் பிஸ்டலுடன் வந்திருந்த கமலாவுக்கு வயது பதினேழு இருக்கும். இந்திய ராணுவத்தினர், காவல்துறையினர், சல்வா ஜுடும் என அழைக்கப்படும் தனியார் ராணுவத்தினர் யார் கையில் சிக்கினாலும் தோழர் கமலா பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொல்லப்படுவது உறுதி என்பதை நினைக்கவே மனமில்லை. ஆனால் தோழர் கமலா எந்தச் சலனமுமின்றி புன்னகையுடன் இருந்தது கண்டு அருந்ததி ராய் வியக்கிறார். அவருடன் இணைந்து அடுத்த பயணம் தொடருகிறது. ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் பாதுகாப்புடன் அவரை அடுத்த முகாமிற்கு அழைத்துச் செல்கிறார்கள். பகல் முழுவதுமான பயணத்திற்குப் பின் மிகப் பெரிய ராணுவ முகாமை வந்தடைகிறார்கள். தோழர் வேணு என்ற மூத்த தோழரின் தலைமையில் மக்கள் விடுதலை கொரில்லா படையின் (People’s Liberation Gorilla Army- PLGA) ஓரணி முகாமிட்டுள்ளது.

தோழர் வேணு ஆந்திராவில் கொண்டபள்ளி சீத்தாராமைய்யா தலைமையில் இருந்தமக்கள் போராட்ட குழுவில் (People’s War Group) இருந்தவர். 1980இல் ஆந்திராவிலிருந்து கோதாவரி ஆற்றினைக் கடந்து  ரெட் காரிடார் வழியாக தண்டகாரண்யா வந்து சேர்ந்த ஏழு கொரில்லா படைப் பிரிவின் தலைவர். தோழர் வேணு மாவோயிஸ்ட் போராளிகளின் முப்பதாண்டு வரலாற்றை மாவோயிஸ்டுகளின் பார்வையில் சொல்லிச் செல்கிறார். பெண்கள் பிரிவைத் தலைமை தாங்கும் தோழர் நர்மதாவுடனான சந்திப்பில் மேலும் சில செய்திகளைச் சேகரிக்கிறார். முகாமுக்கு ஒரு துயரச் செய்தி வந்தடைகிறது. நேற்று அருந்ததி ராய் தங்கியிருந்த முகாம் காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி ஐந்து தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களாம்! அன்றிரவு தன்னுடன் முகாமில் படுத்திருந்த  இளைஞர்களில் ஐவர் இன்று உயிருடன் இல்லை என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைகிறார். மாவோயிஸ்டுகளைப்  பொறுத்த வரை ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், சட்டீஷ்கர், போன்ற மாநிலப் பிரிவுகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவர்களைப் பொருத்த அளவில் ஆந்திராவில் தொடங்கி தண்டகாரண்யா மலையை நோக்கிய பாதைகள் எல்லாம் அவர்களின் எல்லைக்கு உட்பட்டவைகளே.

தோழர் வேணு பழங்குடி மக்கள் எவ்வாறெல்லாம் வியாபாரிகளால் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற செய்தியையும் கூறுகிறார். அவர்களின் கடும் உழைப்பில் சேகரிக்கும் பீடி இலை, மூங்கில் போன்ற பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கிறார்கள்.  கூரிய முட்களுடன் இருக்கும் மூங்கில் கம்புகளை வெட்டித் தலையில் சுமந்து சென்று கொடுக்கப்படும் இருபது மூங்கில் கொண்ட ஒரு கட்டுக்கு பழங்குடி மக்கள் பெறுவது வெறும் முப்பது பைசாக்களே! இந்த சொற்ப விலை கொடுத்து மூங்கில் வாங்கி பாலார்ப்பூர் பேப்பர் மில் ஈட்டும் லாபம் பல கோடிகளாகும். மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் காடு விரிவடைந்துள்ளது என்பதைக் காட்டிலாகா ஒத்துக்கொண்டுள்ளது. ஏனெனில் இப்பகுதிகளில் மரங்களை எளிதில் வெட்டிச் செல்ல முடியாது, ஆனால் காடுகளைப் பாதுகாப்பதாகச் சொல்லி பழங்குடியினரை காட்டிலிருந்து விரட்ட நடவடிக்கை எடுப்பதும் வனத்துறையினரே. 

2005இல் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவின் மிகப் பெரிய ஆபத்து மாவோயிஸ்ட்டுகளே என்று அறிவித்தார். இவர்களைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் எம்எல்ஏ மஹேந்திர கர்மா என்பவனை சல்வா ஜுடும் என்ற தனியார் படையை உருவாக்க காவல்துறையும், ராணுவமும் அனுமதித்தன. மஹேந்திர கர்மா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் காட்டின் ரகசியங்களையும், மாவோயிஸ்ட்டுகளைப் பற்றியும் நன்கறிந்தவன். அவனைப் பயன்படுத்தி மாவோயிஸ்ட்டுகளை பழிவாங்க நினைத்தனர். சல்வா ஜுடும் உறுப்பினர்கள் கிராமங்களுக்குள் புகுந்து பெண்களை பாலியல் வன்முறை செய்தும், வீடுகளைக் கொள்ளையடித்தும், தீயிலிட்டும், கொலைவெறித் தாக்குதல் நடத்தியும் அராஜகம் செய்தனர். சல்வா ஜுடும் தேவையை  ராணுவம் கிராமங்களைத் திறம்பட நடத்துதல்’ (Strategic Hamleting) என்று  சொல்லி நியாயப்படுத்தியது மிகப் பெரிய மோசடியாகும். ஒரு முறை சட்டீஸ்கர் காவல்துறை ராணி பொடிலி கன்னியாஸ்திரிகள் ஆஸ்ரமத்தில் முகாமிட்டு விடுதியில் தங்கியிருந்த பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தியது. பெண்களுக்குப் பாதிப்பேதும் ஏற்படாமல் மாவோயிஸ்டுகள் காவல்துறையை திறம்பட எதிர்கொண்டு விரட்டி அடித்த நிகழ்வையும் தோழர் நினைவுகூர்ந்தார். மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு விதவிதமான படைகளை அனுப்பியது இந்திய அரசு. சட்டீஸ்கர் தனிப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ், பார்டர் செக்கியுரிடி படை, இந்தோ-திபெத் எல்லைப் படை, கிரேஹவுண்ட்ஸ், ஸ்கார்ப்பியன்ஸ், கோப்ராஸ் என்ற அனைத்து விதமான படைகளை அனுப்பியும் தோல்வியையே சந்தித்தது என்ற விவரத்தையும் தோழர் வேணு கூறுகிறார்.

ஆண்டுதோறும் மாவோயிஸ்ட்டுகள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்ற பூம்கல் கலகத்தின் நினைவு நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அருந்ததி ராய்க்கு கிடைக்கிறது. 1910இல் ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக கோயா இனத்தவர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டமேபூம்கல் கலகம்ஆகும். மாவோயிஸ்ட்டுகளின் மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்புகள் எவ்வாறு நியாயமாக வழங்கப்படுகிறது என்பது குறித்தும் அருந்ததி ராய் அறிந்து கொள்கிறார். தொடக்க காலத்தில் மாவோயிஸ்ட் ஆண்கள் மத்தியில் ஆணாதிக்கப் போக்கு நிலவியதையும் ஆனால் பெண்களின் தொடர்ந்த போராட்டத்தினால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் தோழர் கமலா விளக்குகிறார்.

பயணத்தின் இறுதி நாளில் அருந்ததி ராய்க்கு மிகச் சிறந்த வழியனுப்பு விழாவை ஏற்பாடு செய்கிறார்கள். ஃப்ய்ஸ் அகம்மது ஃப்ய்ஸ் எழுதியஹம் தேக்கேங்கே’ (We will Witness the Day)  பாடலைப் பாடுகிறார்கள். ”மகுடங்கள் வீழப்போகின்றன! சிம்மாசனங்கள் கவிழப்போகின்றன! நாம் பார்க்கப் போகிறோம்!” என்று உணர்ச்சி மேலிட பாடி வழியனுப்புகிறார்கள். சந்து மீண்டும் வருகிறான். அவனுடைய மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டு அனைவரிடமும் விடைபெறுகிறார் அருந்ததி ராய்.

                                          --பெ.விஜயகுமார்.

                       ----------------------------------------

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...