Skip to main content

சல்மாவின் ‘மனாமியங்கள்’ நாவல்

 

மனாமியங்கள்’, புற உலகை அறியாத அப்பாவிப் பெண்களின் அக உலகை விவரிக்கும் சல்மாவின் நாவல்.

தமிழ் இலக்கிய வானில் கவிஞராகப் பரிணமிக்கும் சல்மா புனைவிலக்கியத்திலும் தடம்பதித்து சாதனை படைத்துள்ளார். ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’, ‘மனாமியங்கள்எனும் இரண்டு நாவல்களும்சாபம்எனும் சிறுகதைத் தொகுப்பும் சல்மாவின் புனைவிலக்கிய வெற்றிக்குச் சாட்சியமாகின்றன. ’கனவுவெளிப் பயணம்சல்மாவின் சிறந்த பயண நூலாகும். ‘ஒரு மாலையும், இன்னொரு மாலையும்’, ‘பச்சை தேவதைஆகிய கவிதைத் தொகுப்புகளையும் கொணர்ந்துள்ளார். சல்மாவின்இழப்புசிறுகதை கதா-காலச்சுவடுபோட்டியில் பரிசு பெற்றுள்ளது. சேனல்-4 தயாரிப்பில் சல்மாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டசல்மாஎனும் ஆவணப்படம் நூற்றுக்கும் மேற்பட்ட உலகப் படவிழாக்களில் திரையிடப்பட்டு 14 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ஃபிராங்பர்ட், லண்டன், பெய்ஜிங் புத்தகக் கண்காட்சிகளில் சல்மா பங்கேற்றுள்ளார். சல்மாவின் படைப்புகளை முன்வைத்துநார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு சிகாகோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. ‘சாபம்சிறுகதைத் தொகுப்பு மலையாளத்திலும் வெளிவந்துள்ளது. ’இரண்டாம் ஜாமங்களின் கதைஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஜெர்மன், கடலான் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர் வாழ்வியலை தமிழ்ப் புனைவிலக்கியத்தில் சித்தரித்துள்ள தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ஜாகீர்ராஜா, கரீம், ஆகியோர் வரிசையில் இடம்பெறும் சல்மா இஸ்லாமியப் பெண்களின் சமகால வாழ்வைப் படம்பிடித்துக் காட்டி இவர்களிடமிருந்து தனித்தும் நிற்கிறார். சல்மாவின்இரண்டாம் ஜாமங்களின் கதை  மனாமியங்கள்’ (கனவுகள்) நாவல்கள் இரண்டும் வெளியுலகை அதிகம் அறிந்திராத இஸ்லாமியப் பெண்களின் அக உலகை விவரிக்கும் நாவல்களாகத் திகழ்கின்றன.

உறக்கத்தில் வந்த மனாமியத்தில் அம்மாவின் அழுகுரலும் ஆசியா நன்னியின் புலம்பலும் கேட்டன. உறக்கத்தில் தன்னைத் துரத்திக் கொண்டிருக்கிற கனவுகளின் அழுத்தம் தாளாமல் திடுக்கிட்டு விழித்தவளுக்கு, அறைக்குள் கிடந்த இருள் பயத்தை உண்டாக்கிற்று”. ஆம்; கனவிலும், நனவிலும் பயமும், துயரமும் துரத்திட சாஜிதா எனும் சிறுமி சந்திக்கும் சொல்லொண்ணா சோகங்களைமனாமியங்கள் நாவல் சொல்லிச் செல்கிறது. நாவலில் சாஜிதா மட்டுமல்ல அவளின் தாய் மெஹருன்னிசா (மெஹர்), நன்னி (பாட்டி) ஆசியா, நன்னி சுபைதா, குப்பி (அத்தை) பர்வீன், அனைவரும் ஆணாதிக்க அடக்குமுறையாலும், மதவொழுக்கம் என்ற பெயரில் சுமத்தப்படும் கட்டுப்பாடுகளாலும் வாழ்வைத் தொலைத்து நிற்கிறார்கள். ‘இரண்டாம் ஜாமங்களின் கதைநாவலின் வஹிதாகதாபாத்திரம் ஒரு காவியநாயகி போல் செவ்வியல் படைப்பாகத் திகழ்கிறாள். ’மனாமியங்கள்நாவலின் சாஜிதா கதாபாத்திரம் அந்தளவுக்கு பரிணமிக்காவிட்டாலும் வாசகர்களின் நெஞ்சை நெகிழவைக்கும் படைப்பாகும்.

ஹசன்-.மெஹர் தம்பதிகள் தங்களின் குழந்தைகள் சாஜிதா, அஷ்ரப்புடன் ஓரளவு வசதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகிறார்கள். பிரச்சனையே ஹசனின் ஹஜ் யாத்திரைக்குப் பின்னர்தான் முளைக்கிறது. ஹசன் இளைஞனாக இருந்தபோது வாழ்வின் அனைத்துச் சுகங்களையும் சுகித்து வளர்ந்தவன் தான். வாலிப வயதில் புதுத் திரைப்படங்கள் தியேட்டரில் திரையிடப்பட்டதுமே நகரத்துக்குச் சென்று காண்பதோடு காசட்டுகளை வாங்கி திரைப்படப் பாடல்களைக் கேட்ட வண்ணம்தான் இருப்பான். உற்சாகமும், பாட்டமும் சொல்லிமாளாது. சவுதிப் பயணமும், ஹஜ் யாத்திரையும் அவனிடம் தலைகீழ் மாற்றங்களை உண்டாக்கின. அவனது தோற்றமும், செயலும் ஒடுங்கிப்போய் வயதான மனிதனைப் போல வாழ்க்கையில் பிடிப்பற்றவனாக மாறிவிட்டான். எந்நேரமும் அறிவுரை, அறவுரைதான். “பெண்கள் பாத்திஹா ஓதக்கூடாது. சபுர் கழிவுக்கு வெளியே போகக் கூடாது. சினிமா பார்க்கக் கூடாது. தெருவுல நிக்கக் கூடாது. வீட்டவிட்டு வெளியே போனா புர்காவுல கண்ணுகூடத் தெரியக் கூடாது. லிப்ஸ்டிக் போடக் கூடாது. நல்லவிதமா ஜோடிக்கக் கூடாது. டிவி. பார்க்கக் கூடாது. வெளிநாட்டுச் சேலை கட்டக் கூடாது. தர்காவுக்கு போகக் கூடாது. நிரோத் போடக் கூடாது. பிள்ளையக் கழிக்கக் கூடாது. கர்ப்பத்தடை பண்ணக் கூடாதுஎன்று அவன் விதித்த தடைகள் ஒன்று இரண்டல்ல. தன்னுடைய நம்பிக்கையை மற்றவர்கள் மீது திணிக்கிறான். ஷரியத்தைத் துணைக்கு வைத்துக்கொள்வான். தனது தவறுகளைத் தவறு என்று ஒப்புக்கொள்கிறவனில்லை. குரானில் இருக்கிறது, ஷரியத்தில் இருக்கிறது என்று நியாயப்படுத்துவான். மதமும், மார்க்கமுமே அவனுக்கு எல்லாம். .

ஹசனின் ஆணாதிக்க மனோபாவமும், அதீத மார்க்கமும் வீட்டின் அமைதியைச் சீர்குலைத்தன. குருவிக் கூட்டைக் கலைத்தது போல் ஆனது. ஹசனின் பிடிவாதமும், மூர்க்கத்தனமும் அவன் தங்கை பர்வீனையும், தாய் சுபைதாவையும் பாதித்தன. பர்வீனின் கணவன்  ரஹீம் செய்யும் தவறினாலயே பர்வீன்-ரஹீம்  தாம்பத்தியம் தோல்வியுறுகிறது.. தன்னுடைய ஆண்மையின்மையை பர்வீன் அறியவந்த நொடியில் அவளைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். பர்வீன் பெண்களுக்கே உரிய நிதானத்துடன் பிரச்சனையை அணுக நினைத்தாள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்ற அவளின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாமல் இல்வாழ்க்கையை ரஹீம் சூன்யமாக்கினான். பர்வீன் வாழாவெட்டி என்ற அவப்பெயருடன் தாய்வீடு திரும்புகிறாள். ஏற்கனவே அந்த வீட்டில் இரு கண்களிலும் பார்வையை இழந்து தனித்து வாழும் அவளின் சின்ன நன்னி அமீனாவுடன் சேர்ந்து வாழ்கிறாள்.

மகள்  பர்வீனின் அவலத்தை நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்த சுபைதாவுக்கு இடியென இறங்குகிறது அடுத்த பிரச்சனை. மகன் ஹசன், மருமகள் மெஹர் தாம்பத்தியத்திலும் விரிசல் உண்டாகி ஹசன் இரண்டாம் தாரமாக கதீஜாவை மணமுடிக்கிறான். மெஹர் கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறி தன்வயதான தாய் ஆசியா வீட்டில் தஞ்சம் புகுகிறாள். கணவனைப் பழிக்குப் பழிவாங்கிட குலாகொடுக்கிறாள். (மனைவி கணவனுக்குக் கொடுக்கும் மணமுறிவு). இதைச் சற்றும் எதிர்பாராத ஹசன் வெறிகொண்டவன் ஆகிறான். ஆண் நான்குமுறை திருமணம் முடிக்கலாம் என்றுஷரியத்கூறுவதாகச் சொல்லி தன்னுடைய தவறை நியாயப்படுத்துகிறான். ஆனால் மெஹர் கொடுக்கும்குலாவைஅவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிள்ளைகளை மெஹரிடமிருந்து பிரிக்கிறான். சாஜிதா வளர்ந்த பெண் என்பதால் தந்தையின் கட்டுப்பாடுகளையும் மீறி தாயைப் பார்க்க வருகிறாள். அஷ்ரப் சிறுவன் என்பதால் தந்தை சொல்லை மீறித் தாயைப் பார்க்க வருவதற்குத் தயங்குகிறான்.

மகனைப் பார்க்க முடியாத துயரம் மெஹரை வாட்டுகிறது. மெஹரின் வாழ்வு பாழானது குறித்து அவளின் தாய் ஆசியா கோபத்தில் நிதானம் இழக்கிறார். எந்நேரமும் ஹசனைத் திட்டிக்கொண்டே இருக்கிறார். மகளின் வாழ்வைச் சீரழித்தவனைப் பழிவாங்கிட எண்ணுகிறார். தன்னுடைய தூரத்து உறவுப்பையன் அபிபுல்லாவை மணக்கச் சொல்லி மெஹரை நாளும் அணத்துகிறார். மெஹர் வழியின்றி ஒத்துக்கொள்கிறாள். ஹசனைப் பழிவாங்க தான்கொடுக்கும் அடுத்த அடி என்ற நினைப்பு; இதுவரை தொலைத்திருந்த வாழ்வு திரும்பக் கைகூடுமோ என்ற ஆசை; பிள்ளைகளைப் பார்க்க முடியாத ஏக்கம்; தாய் ஆசியாவின் ஓயாத புலம்பல் இவற்றின் காரணமாய் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு அபிபுல்லாவுடன் வாழ்ந்திட கொச்சின் நகருக்குச் செல்கிறாள். அங்கும் அவளால் நிம்மதியாக வாழமுடியவில்லை. எந்நேரமும் பிள்ளைகளின் நினைப்பு அவளை வாட்டுகிறது. சாஜிதாவுக்கு உடல்நலமில்லை என்று கேள்விப்பட்டதும் அபிபுல்லாவிடமிருந்து விடைபெற்று ஊர் திரும்பிவிடுகிறாள். மனமெல்லாம் பிள்ளைகளின் நினைவில் இருக்கும் மெஹருடன் வாழ முடியாது என்ற முடிவுக்குவந்த அபிபுல்லா அவளை உடனே அனுப்பிவைக்கிறான்.

நாவல் முழுவதும் மனம் பொருந்தாத் தம்பதிகளையே பார்க்கிறோம். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற நினைப்பில் நடக்கும் திருமணங்களும் வெற்றியில் முடிவதில்லை. ஜாதகம் இன்னும் என்னென்னமோ பொருத்தங்கள் பார்த்து முடிவாகும் மணங்களும் முறிந்துவிடுகின்றன. மனமொத்து இணையும் காதலர்களை இச்சமூகம் வாழவிடுவதில்லை. காதல் பறவைகளைக் கொடூரமாகப் பிரிக்கின்றனர். பெற்ற பிள்ளைகளையே கொல்வதற்கும் தயாராகின்றனர். மதவெறி சாதிவெறி ஆணவத்தில் நடக்கும் இவ்வன்முறையை கௌரவக் கொலை என்றழைப்பது மிகப் பெரிய கேலிக்கூத்து. இத்தகு சமூகத்தின் அச்சு அசலான பிரதிநிதியாக ஹசனைப் பார்க்கிறோம். சாஜிதாவின் கல்விக் கனவுகளை நாசப்படுத்துகிறான். ஆண்-பெண் இருபாலர் படிக்கும் கல்லூரியில் மகளைச் சேர்க்க மாட்டேன் என்ற பிடிவாதம். அத்தை பர்வீன் உதவியின்றி சாஜிதா கல்லூரியில் சேர்ந்திருக்கவே முடியாது. மருத்துவப்படிப்பில் ஆர்வமிருந்த சாஜிதாவின் ஆசையை ஹசன் நினைத்திருந்தால் நிறைவேற்றியிருக்கலாம். அஷ்ரப்பின் கல்வி குறித்தும் ஹசன் பிற்போக்குத்தனமான முடிவெடுக்கிறான். நவீன கல்வியை மறுத்து அவனுக்கு மதரஸ்ஸா கல்வியை மட்டும் அளிக்க விரும்புவது வன்முறையன்றி வேறென்ன?

குழந்தைத் திருமணம், கல்விமறுப்பு, பெண்ணடிமைத்தனம், சுதந்திரக் காற்றும், வெளிச்சமும் இல்லாத வீடுகள் என்று இருண்மையில் வாழும் இஸ்லாமியக் குடும்பங்களை நாவல் முழுவதும் காண்கிறோம். என்ன உண்பது, உடுத்துவது, எங்கு செல்வது, என்ன செய்வது, எதைப் படிப்பது என்பதையெல்லாம் பெண்கள் முடிவெடுக்க முடியாது.  ஆண்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதும், இச்சைகளைப் பூர்த்தி செய்வதும் மட்டுமே பெண்களின் கடமை! இதுவே வீடுதோறும் நடந்தேறும் அலங்கோலம்! நன்னி சுபைதா, அம்மா மெஹர், மகள் சாஜிதா என்று மூன்று தலைமுறைப் பெண்களும் ஒரே மாதிரி வாழ்க்கையை வாழப் பணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு விதிக்கப்பட்ட நசீப் என்று நம்பவைக்கப்படுகிறார்கள்.

 தோல்வியில் முடிந்த திருமணத்தால் பாலியல் சுகத்தை இழந்த பர்வீன் சுயஇன்பத்தை நாடவேண்டிய  சோகத்துக்குத் தள்ளப்படுகிறாள். அவளின் சின்ன நன்னி அமீனா பார்வை இழந்தவள் என்பதால் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதையும் இருளில் கழிக்கிறார். பர்வீன், அமீனா இருவர் வாழ்விலும் இருள் சூழ்ந்துள்ளது. பர்வீன் சுய உதவிக் குழுவில் சேர்ந்து வாழ்வைச் சற்றே அர்த்தமுள்ளதாக்க எடுக்கும் முயற்சிக்கும் தடைபோடுகிறான் அண்ணன் ஹசன். வெளி உலகின் அறிமுகம் கிடைத்ததும் நம்பிக்கையின் கீற்று பர்வீனுக்கு தென்படுகிறது. தாசில்தார், அவரின் மருத்துவர் மனைவி,  சுய உதவிக் குழுக்களின் மேற்பார்வையாளர் மூர்த்தி என்று நல்ல அறிமுகங்கள் கிடைக்கின்றன. மூர்த்தியுடனான உறவு பர்வீனைச் சற்றே சலனப்படுத்துகிறது. மூர்த்தியுடனான போன் உரையாடலை கண்காணிக்கும் அளவிற்கு அவளின் தனிப்பட்ட வாழ்வில் ஹசன் தலையிடுகிறான். அதையும்மீறி இன்னொரு போன் வாங்கி மூர்த்தியுடன் தொடர்பைத் துண்டித்துவிடாமல் பார்த்துக்கொள்கிறாள். இந்த நல்ல நண்பர்களின் உதவியின் மூலமே பர்வீனால் சாஜிதா பி.எஸ்சி. படிக்க கல்லூரியில் சேர்க்கமுடிகிறது. விடுதியில் தங்கிப்படிக்கும் சாஜிதாவைப் பார்க்க அடிக்கடி கல்லூரிக்கும் வருகிறாள். தந்தை ஹசனின் எதிர்ப்பையும் மீறி படிப்பை முடிக்கும் உறுதியுடன் சாஜிதா இருக்கிறாள். தடைகளை எல்லாம் தாண்டி வாழ்வில் முன்னேறிட வேண்டும் என்ற வேட்கை சாஜிதா, பர்வீன் போன்ற பெண்களிடம் இருப்பது நம்பிக்கையளிக்கிறது. ஆனால் நாவலின் இறுதியில் நடக்கும் ஒரு விபரீத நிகழ்வு அந்த நம்பிக்கை வீணாகிவிடுமோ என்ற பதற்றத்தை  ஏற்படுத்துகிறது. ஜெஸி என்ற பெண் உடன்பயிலும் மாணவனுடன் பேசிக்கொண்டிருந்தாள் என்பதற்காக அந்தப் பையனை அடித்துப்போட்டு ஜெஸியை வீட்டில் சிறைப்பிடித்துள்ளனர் என்ற செய்தியை ஊரிலிருந்து அம்மா மெஹர் போனில் பதற்றத்துடன் கூறுகிறாள். ஜெஸ்ஸிக்கு நேர்ந்தது தன்னுடைய படிப்பையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிடுமோ என்று சாஜிதா கலக்கம் அடைகிறாள் என்ற சோகத்துடன் நாவல் முடிகிறது. ஆனால் கூட்டை உடைத்துக் கொண்டு வெளிவரத் துடிக்கும் சாஜிதா, பர்வீன் போன்ற புதுமைப் பெண்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். அவர்களின் மனாமியங்கள் நனவுகளாகட்டும்!

தமிழ்ச் சமூகத்தில் ஆண்-பெண் உறவில் தேவைப்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் குறித்து நாவல் வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது. எல்லா மதங்களும் ஆணாதிக்கத்துக்கு ஆதரவாகவும், பெண்ணடிமைத்தனத்திற்கு துணைபோவதாகவுமே இருக்கின்றன என்பதை அறிவோம். அதிலும் இஸ்லாம் இன்னும் ஒருபடி மேலே சென்று பெண்களை புர்காவுக்குள் மறைத்துவைத்து, கல்வியை மறுத்து, வாழ்வின் அனைத்துச் சுகங்களுக்கும் தடையாக இருப்பது வருந்தத்தக்கது. தமிழ்ச் சமூகத்தில் சாதி, மத வேறுபாடின்றி பெண்கள் குடும்ப வன்முறைகளுக்குள்ளாவது அன்றாடச் செய்தியாகி உள்ளது. ஆண்களின் குடிப்பழக்கம், பாலியல் வக்கிரங்கள், ஆணாதிக்க மனோபாவம் இவற்றில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு சட்டம் அளிக்கும் பாதுகாப்புகளை எல்லாம் தாண்டி ஆண்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படும். ’ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வோம்எனும் பாரதியின் முழக்கத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே ஆண்-பெண் உறவில் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும். வீடே உலகமென வாழும் பெண்களுக்கு ஆண்கள் எதைப் பரிசாகக் கொடுக்கிறார்கள்?

கள்ளிச் செடிகள் மட்டும்தான் / நம் வாழ்க்கை முழுவதற்குமான

மலர்ச் செண்டுகளாய் /அனுப்பப்படுகின்றன.”

சல்மாவின் கவிதை வரிகள்   

பெ.விஜயகுமார்.

                   -----------------------------------------------------

 

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...