Skip to main content

 

தஞ்சை பிரகாஷ்.

காவிரி பாயும் தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல கலைகளின் களஞ்சியமுமாகும். தென்னிந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களிலும் தஞ்சை முக்கியமானதொரு இடத்தைப் பெற்றுள்ளது. சோழ மன்னர்களின் கட்டிடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் கட்டியம் கூறும் எண்ணற்ற கோயில்களைக் கொண்ட இம்மண்ணில் சொற்சித்திரங்கள் தீட்டும் அரிய எழுத்தாளர்களும் அவதரித்துள்ளனர். பல்லவர்கள், தெலுங்கர்கள், மராத்தியர்கள், மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என்று ஒவ்வொருவராக தஞ்சையை நோக்கிப் படையெடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் பல்வேறு கலாச்சாரங்கள் சங்கமிக்கும் இடமாக தஞ்சை இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் பல்வேறு கலைஞர்கள் காலச் சக்கரத்தின் சுழற்சியில் சிக்கி ஏற்றமும், இறக்கமும் பெற்று தஞ்சை மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய கலைஞர்களின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் தஞ்சை பிரகாஷ் தன்னுடைய படைப்புகளில் சித்தரிக்கிறார்.

தஞ்சை பிரகாஷின் முழுப்பெயர் கார்டன் மார்க்ஸ் லயனல் பிரகாஷ் ஆகும். சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், இந்தி, வங்காளம், ஆங்கிலம், உருது, ஜெர்மன் என்று பல மொழிகள் தெரிந்தவர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று, ரெயிவே துறையில் க்ரைம் பிராஞ்சில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார். பிரகாஷின் கலை உள்ளத்திற்கு அந்த வேலை ஒத்துவராததால் அதிலிருந்து வெளியேறினார். இதழாசிரியர், பதிப்பாளர், வெங்காய வியாபாரி, பால்கடை முகவர், பிளாக் மேக்கர் என்று இருபதுக்கும் மேற்பட்ட தொழில்களைச் செய்தார். ஒன்றிலும் நிலைக்காமல் இலக்கியமே வாழ்வாக வாழ்ந்தார். பாலம், வைகை, சாளரம், குயுக்தம், தஞ்சை முரசு ஆகிய சிற்றிதழ்கள் நடத்தினார். சும்மா, ஒளிவட்டம், கதை சொல்லிகள், இலக்கிய கும்பல், தளி ஆகிய இலக்கிய அமைப்புகளையும் நடத்தி வந்தார். கள்ளம், மிஷன் தெரு, கரமுண்டார் வூடு, மீனின் சிறகுகள் ஆகிய நாவல்கள்,  கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்று அனைத்து  இலக்கிய வகைமைகளிலும் தடம் பதித்தார். சுதா சூடாமணி விருது, குமரன் ஆசான் விருது, ஆகிய விருதுகளையும் பெற்றார். தீவிர இலக்கியத்தில் இயங்க விரும்பிய இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கினார்.

தஞ்சை பிரகாஷ் மனித மனதின் பிறழ்வுகளையும், துரோகங்களையும் அதனால் விளையும் ஏமாற்றங்களையும், துன்பங்களையும் கதைகளில் எழுதிச் சென்றார். இருள் உலகத்தில் வாழ வேண்டி நிர்பந்திக்கப்பட்ட அபலைப் பெண்களையும், ஆக்ரோஷமான ஆண்களையும் கதைகளின் நாயகர்களாக நடமாட விடுகிறார். வாழ்வில் தோல்வியையும், கீழ்மையையும் மட்டுமே சந்திக்கும் மக்களின் மனதில் பீறிக் கிளம்பும் பாசத்தையும், நேசத்தையும் எடுத்துக்காட்டி அவர்களின் இருப்பின் நியாயத்தை விளக்குகிறார். வயிற்றுப் பசியையும், காமத்தின் வேட்கையையும் தணித்திட மனிதர்கள் நடத்திடும் போராட்டங்களே பிரகாஷின் கதைக் களங்களாகும்.

சோடியம் விளக்கின் கீழேதஞ்சை பிரகாஷின் நட்சத்திரக் கதைகளில் ஒன்றாகும். வறுமையின் கொடுமை தாங்காது விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்ட அபலைப் பெண் அகிலாவின் கதையிது, கேரளாவில் ஒரு தர்மாஸ்பத்திரியில் பிறந்ததுமே தன் தாயை இழந்த அகிலா வாழ்க்கையின் ஓரத்திற்கு விரட்டப்படுகிறாள். டெல்லி, கல்கத்தா மும்பை, நாக்பூர்  என்று இந்தியாவின் பெரிய நகரங்களில் எல்லாம் சுற்றி அலைந்தாள். ஆனால் அவளுக்காக விதிக்கப்பட்டது பாலியல் தொழில்தான். போலீஸ் ஸ்டேஷன், சிறைச்சாலை என்று அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தஞ்சையில் தஞ்சமடைகிறாள். இருளைத் தேடி அலையும் அகிலாவுக்கு வெளிச்சம் எதிரி. தஞ்சைத் தெருக்களில் பிரகாசித்து எரியும் சோடியம்வாயு விளக்குகள் அவள் தொழிலுக்கு மிகப் பெரிய இடையூறாக நிற்கின்றன. முச்சந்திகளில் வலை வீசிப் பிடிக்கும் வாடிக்கையாளர்கள் பளிச்சென்ற வெளிச்சத்தைக் கண்டு நழுவிவிடுகிறார்கள். போலீஸ்காரர்களின் கெடுபிடியையும் சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களும் தங்கள் காமப் பசியைத் தீர்த்துக்கொள்ள அவ்வப்போது காவல் நிலையத்துக்கு அவளை அழைத்துச் சென்றுவிடுவார்கள். தொழில் பாதிக்கப்பட்டு என்ன செய்வதென்று அறியாதிருந்த அகிலா தெருவில் கிடந்த கற்களை எடுத்து சோடியம் விளக்குகளை அடித்து நொறுக்குகிறாள். தெருவை இருள் கவ்வுகிறது. ஆனால், அடுத்த நிமிடம் அவளைக் கவ்விப் பிடித்து இழுத்துச் செல்கிறான் ஒரு போலீஸ்காரன். மீண்டும் சிறைக் கதவுகள் திறக்கின்றன அகிலாவுக்கு.

தஞ்சை பிரகாஷின்திண்டிநகைச்சுவை ததும்பும் அருமையான கதை. காவிரிக் கரையோரக் கிராமம் ஒன்றில் நடக்கும் மாயா யதார்த்தவாதக் கதை. கிராமத்தில் திண்டி என்றொரு கில்லாடி. அவன் சிறுவனாக இருக்கும் போது ஊரே அவனை ஊட்டி வளர்க்கிறது. அதற்கேற்ற அளவும் அதற்கு மேலும் அவனிடம் வேலையும் வாங்கிவிடுவார்கள். திண்டி சோற்றை மலைபோலக் குவித்துவைத்து கவளம் கவளமாக உண்டு வளர்ந்தான். திண்டி பெரியவன் ஆனாதும் அவன் சாப்பாடு அளவு கூடியது. அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவனைப் பட்டினிபோடுகிறார்கள். திண்டி அவன் கைவண்ணத்தைக் காட்டுகிறான். வீடு தோறும் திருடு போகிறது. ஆனால் திருடனைப் பிடிக்க முடியவில்லை. யாரெல்லாம் திண்டியைப் பிடிக்க முயலுகிறார்களோ அவர்கள் வீட்டிலேயே திருடு போகிறது. காவல்துறை வருகிறது. இன்ஸ்பெக்டரின் ஜீப்பையே திருடிவிடுகிறான் மாயக்கள்ளன். திண்டிதான் திருடன் என்று எல்லோருக்கும் தெரிகிறது.  ஆனால் நிரூபிக்க முடியவில்லை. திண்டிக்கு கல்யாணம் முடித்துவைத்தால் அவன் பெண்டாட்டி அடக்கிவிடுவாள் என்று நினைக்கிறார்கள். அவனுக்கேற்ற பெண்ணும் ஊரில் கிடைக்கிறாள். இப்போது திண்டியும் அவன் மனைவியும் சேர்ந்து ஜமாய்க்கிறார்கள். பஞ்சாயத்து கூடி அவனைக் கட்டிப்போடுகிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில் திண்டி இரும்பு விலங்கை உடைத்துப்போட்டு தப்பிவிடுகிறான். திண்டி சொந்த ஊரில் திருடுவதை நிறுத்திவிட்டு பக்கத்து ஊர்களில் கைவரிசையைக் காட்டுகிறான். இப்போது ஊரிலேயே பெரிய பணக்காரன் திண்டிதான். ஊர்ப் பெரிசுகள் எல்லாம் திண்டியிடமும் அவன் பெண்டாட்டி கமலாம்பாளிடமும் கைகட்டி நிற்கிறார்கள் என்று நகைச்சுவை மேலிடக் கதையை முடிக்கிறார் தஞ்சை பிரகாஷ்.

தஞ்சை பிரகாஷின் கதாபாத்திரங்கள் பலரும் ஒழுக்க நெறிகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். மனித மனம் நல்லதும், கெட்டதும் கலந்த கலவைதானே. மனித மனத்தின் ஆழத்தில் கிடக்கும் காதலையும், காமத்தையும்; பாசத்தையும். பகைமையையும்; வீரத்தையும் கோழைத்தனத்தையும்; வாஞ்சையையும் வன்மத்தையும் நேர்மையுடன் எந்த மிகைபடுத்தலுமின்றி தஞ்சை பிரகாஷ் தனது கதைகளில் சித்தரிக்கிறார்.

                              -பேரா.பெ.விஜயகுமார்

                          

                       --------------------------------------------- 


Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...