மா.அரங்கநாதன்
நாஞ்சில் நாட்டில் திருவெண்பரிசாரம் எனும் ஊரில் பிறந்தவர். நூற்றுக்கணக்கில் கதைகளும், கட்டுரைகளும், இரண்டு நாவல்களும் எழுதியுள்ளார். இவரின் ‘பொருளின் பொருள் கவிதை’ கட்டுரையும், ’பறளியாற்று மாந்தர்’ என்ற நாவலும் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் பேசப்படுபவை. ‘முன்றில்’ இலக்கிய இதழ் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தியவர். தமிழக அரசு விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழில் ஆழ்ந்த புலமையும், புலமையை மீறிய எளிமையும் கொண்டிருக்கிறார். அரங்கநாதனின் படைப்புகள் தமிழ் வாழ்வின் நுட்பங்களை அழகுடன் பதிவுசெய்கின்றன. அரங்கநாதனின் படைப்புகளைப் புறந்தள்ளிவிட்டு தமிழகத்தில் எந்தவொரு சமூக அரசியல் இயக்கமும் செயல்பட முடியாது. மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டுகிற ஆர்வத்தை அவர் கதைகளில் காண்கிறோம். “சிறுகதையில் ஒவ்வொரு சொல்லும் முக்கியமானதாகிறது. கதை முழுவதையும் ஒரு வலுவான சொல் கொடிபிடித்துக் கொண்டு நிற்கும். அதற்கு மாறாக வேறொரு சொல்லை அந்தக் கதையாசிரியன்கூட போட்டுவிட முடியாது. சொல் மந்திர சக்தி கொண்டு விளங்குவதை சிறுகதைகளில் நிறைய பார்க்க முடிகிறது. இதற்கு உதாரணம் “புதுமைப்பித்தன்தான்”. என்று சிறுகதை பற்றிய தன்னுடைய கட்டுரையில் புதுமைப்பித்தனின் ஆற்றலைப் பற்றியும் எழுதுகிறார்.
அரங்கநாதனின் ‘ஞானக்கூத்து’ சிறுகதை எள்ளல் நடையில் எழுதப்பட்டது. தமிழ்ச் சமூகத்தில் சாதியக் கட்டுமானம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதைக் கிண்டல் மிளிர எடுத்துரைக்கும் கதை. சாதிச் சங்கங்கள் தனி மனித வாழ்விலும், குடும்ப விஷயங்களிலும் எந்தளவுக்குச் செல்வாக்கு பெற்றுள்ளன என்பதையும் உணர்த்துகிறது. முத்துக்கறுப்பன் மகன் சிவா என்ற சிவசங்கரன் நியூயார்க் நகரில் பன்னாட்டுக் கம்பெனியில் வேலை பார்க்கிறான். முத்துக்கறுப்பன் தெற்கிலிருந்து வேலை நிமித்தம் சென்னையில் குடியேறியவர். அவர் மனைவி சரஸ்வதி பள்ளி ஆசிரியை. பெற்றோர்களிடம் சிவா தன்னுடைய நியூயார்க் அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறான். வேலை பார்க்கும் அலுவலகம் அருகில் இருப்பதால் தங்குமிடத்திலிருந்து நடந்தே போகிறான். இதனால் ஒரு டாலர் மிச்சமாகிறது. அருகில் இருக்கும் கோயிலுக்கு ஒருமுறை போயிருக்கிறான். விரைவில் சாக்லேட் சிட்டி என்ற இடத்திற்கு பணி மாற்றலாகிறது. சம்பளம் ஐநூறு டாலர் கூடும். சமையல் செய்வதில் கஷ்டமில்லை. வெண்டைக்காயும், பிஞ்சுக் கத்திரிக்காயும் கிடைக்கின்றன. நிறைய நேரமிருந்தும் படிப்பதற்கு ஆர்வமில்லை. திருமந்திரமும், அருட்பாவும் பத்திரமாக இருக்கின்றன. நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் நிருபராக இருக்கும் செல்வி லவூலா என்ற பெண் நன்றாகப் பழகுகிறாள். நிறையப் படிக்கிறாள்.
அப்பா முத்துக்கறுப்பனுக்கு சிவாவின் திருமணம் குறித்து ஒரு கடிதம் வருகிறது. பணி ஓய்வு பெற்ற தலைமைச் செயலக இணைச் செயலர் முத்துக்குமாரசாமி பிள்ளை எழுதியுள்ளார். சாதிச்சங்க அலுவலகத்தில் தகவல் கிடைத்ததாம். பரம்பரைச் சைவக் குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கும் பூர்வீகம் தெற்கேதானாம். முத்துக்குமாரசாமி பிள்ளையின் ஒரே பெண் எம்.எஸ்.சி. படித்துவிட்டு சென்னையில் ஒரு கல்லூரியில் வேலை பார்க்கிறாள். அவருக்கு சொந்த ஊரில் நான்கு கோட்டை விதைப்பாடு வயலும், சென்னை அசோக் நகரில் ஒரு வீடும் இருக்கிறது. நாற்பதாண்டு காலமாக சென்னையில் குடியிருந்த அவர்கள் இருவரும் அறிமுகம் ஆகாமல் இருந்தது அதிசயம் என்று நினைக்கிறார். முத்துக்கறுப்பனையும், அவர் குடும்பத்தினரைப் பற்றியும் நன்கு அறிந்திராவிட்டாலும் நம் முன்னோர்களின் ஆசியாலும், நமது சாதிச்சங்கத்தின் உதவியாலும் இச்சம்பந்தம் நடைபெறவுள்ளது சிவனருள் போலும் என்று கடிதத்தில் எழுதியுள்ளார். முத்துக்குமாரசாமி பிள்ளைக்கு உடனே பதில் எழுதுகிறார். தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் ஒளிவு மறைவின்றி
எழுதுகிறார். “நான் பள்ளியிறுதியில் தேறாதபடியால் இங்கு வந்து வேலை தேடிக்கொண்டேன். என் மூத்த சகோதரரின் மகனுக்கு ஆபத்தில்லாத
மனநோய். நாற்பத்தைந்து
வயதாகும் என் தம்பி இப்போதுதான் எஸ்.எஸ்.எல்.சி. தேறியுள்ளான். விடுதலைப் போராட்டத்தின் போது வேதாரண்யத்தில்
இருந்த என் பெரியப்பா பலசரக்கு கடையில் உப்பு வாங்கிவந்த போது கைதாகி ஜெயிலுக்குப்
போனார். தியாகிகள் பென்ஷன்
பணத்தைப் பெற்றுவந்தவர் சமீபத்தில் காலமாகியுள்ளார். என் பெரியம்மா வீட்டில் நான் மாடுகள்
மேய்த்துக் கொண்டிருந்தேன். என் கவனக் குறைவால் மேய்ச்சலில் ஒரு மாடு காணாமல் போனது. நான் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு
வந்துவிட்டேன், என் தாய் மாமா
எங்களூரில் தென்னை மரங்களிலிருந்து காய்களைத் திருடுபவர். இப்போது அம்மன் கோயில் சொத்து அவர்
கையில். சென்னையில் வேலை
பார்த்துக் கொண்டிருந்தபோது என் கல்யாணம் முடிந்தது. சாதிச்சங்கத்தில் போய் அழைப்பு வைத்தேன். அந்தச் செயலாளர் சாந்தமாக “நீ அழைப்புத் தரவேண்டியது அரசுக்குத்தான்; சங்கத்திற்கல்ல”. என்றார். அவர் சொன்னது உண்மைதான். நான் மணஞ்செய்துகொண்டது ஓர் ஆதி திராவிடப்
பெண். இப்போது சங்கத்தில்
எனக்கு யாரையும் தெரியாது. இருப்பினும் அவர்கள் எனக்கு உதவியாக இருப்பது நல்ல காரியம்” என்று எழுதி கடிதத்தை முத்துக்குமாரசாமி
பிள்ளைக்கு அனுப்பி வைக்கிறார். அவருடைய மனைவி தன்னுடன் வேலை பார்க்கும் ஆசிரியைகள் “உன் மகன் அமெரிக்காவிலிருந்து யாரையாவது
கூட்டிட்டு வந்தா என்ன செய்வ?” என்று கேட்கிறார்கள். அதுபோலவே நம்ம சிவாவும் ஏதோ வெள்ளைக்காரியைப்
பற்றி எழுதியிருக்கானே. வெள்ளைக்காரியைக் கூட்டி வந்துருவானோ?” என்று கேட்கிறாள். “அமெரிக்காவில் வெள்ளைக்காரிகள் மட்டுமில்லை
கறுப்பர்களும் உண்டு; தெரிஞ்சுக்கோ!” என்று சொல்லி முத்துக்கறுப்பன் சாய்வு
நாற்காலியில் சாய்ந்து கொள்கிறார்.
தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பது
கடந்த ஐம்பதாண்டுகளாகத்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்களுடன் அமர்ந்து அலுவலகங்களில் வேலை
பார்ப்பதை முந்தைய தலைமுறையினரால் ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது. சமீபத்தில்கூட ஒரு பெரிய மடத்தைச் சேர்ந்த
சாமியார் வேலைக்குச் செல்லும் பெண்களால் ஒழுக்கக் கேடு ஏற்படும் என்று அபத்தமாகப் பேசியுள்ளார். அரங்கநாதனின் ‘முறுக்கு’ கதையில் இது குறித்த சுவையான விவாதம்
நடைபெறுகிறது. முத்துக்கறுப்பன்
ஊருக்கு வெளியே ஒரு நாற்சந்தியில் டீக்கடை வைத்திருக்கிறார். கடை என்றால் அது ஓர் ஓலைக் குடிசைதான். அந்த இடம் செல்லமுத்துப் பாட்டாவின்
தென்னந்தோப்பு. தோப்பின் முகனையில்
முத்துவுக்கு இடம் கிடைத்ததற்கு பாட்டாவின் விசாலமான மனசுதான் காரணம். பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது
என்று சொல்லும் சாமியார் படம் போட்டிருந்த காலண்டர் அந்தக் கடையில் மாட்டியிருந்தது. ஊரில் உள்ள எல்லா வீடு, கடைகளிலும் இந்தக் காலண்டரைக் காணலாம். சாமியாரின் ஆத்மார்த்த பக்தர் ஒருவர்
அந்த ஊரில் இருந்தார். அவரின் உபயம்தான்
இந்தக் காலண்டர். முத்து கடையின்
சிறப்பு அங்கு கிடைக்கும் மொரு மொரு முறுக்கு. இசக்கி அம்மாள் தன்னுடைய பேத்தி காமாட்சியுடன்
சேர்ந்து செய்யும் முறுக்கு அவ்வளவு சுவையானது. கடையில் டீ குடித்துவிட்டு முறுக்கையும்
வாங்கிச் செல்வார்கள். ஒரு நாள் முத்துவிடம்
பெரும் சப்தத்துடன் சண்டையிட்டு இசக்கி அம்மாள் முறுக்குச் சுடும் கரண்டியால் அவனை
அடித்துவிடுகிறாள். கடையில் கூட்டம்
கூடிவிடுகிறது. ஆளாளுக்கு ஒரு
காரணம் சொல்கிறார்கள். முத்து ஒன்றும்
பேசாமல் சிரித்துவிட்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தான். கூட்டம் கூடியிருந்ததால் டீ அமோகமாக
விற்றது. காமாட்சி பள்ளியிறுதி
வரை படித்துள்ளாள். அவளுக்குப் பெற்றோர்கள்
இல்லை. ஆச்சிதான் எல்லாம். ஏதாவது வேலை தேடிக் கொள்ள வேண்டும்
என்று நினைத்தாள். செல்லமுத்து பாட்டா
அவள் மீது உண்மையான அக்கறை கொண்டவர். முத்து பேப்பரில் வந்த ஒரு விளம்பரத்தைக் காட்டுகிறான். அங்கிருந்து 200 மைல் தள்ளியிருந்த நகரத்தில் புதிதாக
ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட் கொடுத்திருந்த விளம்பரமது. “சூப்பர் மார்க்கெட்டிற்குப் படித்த
பெண்கள் தேவை – பள்ளியிறுதிப் படிப்பு – ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் – உடனே விண்ணப்பிக்கலாம் – நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டும் – அந்தக் கட்டிடுத்து மாடியிலேயே தங்குவதற்கு
இடவசதி செய்து தரப்படும்” இதுதான் விளம்பரம். செல்லமுத்துப் பாட்டா காமாட்சியை விண்ணப்பிக்கச்
சொல்கிறார். அவருக்குத் தெரிந்த
ஒருவரின் பேத்தியும் முயற்சி செய்கிறாள் என்று கேள்விப்பட்டார். பாட்டா கொடுத்த தைரியத்தில் காமாட்சி
விண்ணப்பிக்கிறாள். அடுத்த வாரம்
நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் வருகிறது. முத்துக்கறுப்பன், காமாட்சி, செல்லமுத்துப் பாட்டா மூவரும் சேர்ந்து
திட்டமிடுகிறார்கள். பள்ளியில் மாணவிகளை
அழைத்துக் கொண்டு சுற்றுலாச் செல்கிறார்கள் அதில் காமாட்சியும் சேர்ந்துகொள்ளட்டும்
என்று பாட்டா சொன்னதும் ஆச்சி அனுமதி தருகிறாள். நேர்காணலில் ஐம்பது பெண்கள் பங்கேற்க, காமாட்சி உட்பட இருபதுபேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். செய்தி அறிந்ததும் இசக்கி அம்மாள் கொதித்துப்
போகிறாள். முறுக்கு சுடும்
கரண்டியால் முத்துக்கறுப்பன் அடி வாங்கியது இதனால்தான். செல்லமுத்து பாட்டா அவளிடம் பக்குவமாக
விளக்குகிறார். ”உனக்குப் பின்னால் இந்தப் பொண்ணுக்கு யார் ஆதரவு? அவளுக்கு நல்ல வேலை கிடைக்கும் போது
வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். இந்த மடத்துச் சாமியார் பேச்சையெல்லாம் நம்ப வேண்டாம். சாமியாரின் பக்தர்கள் எல்லாம் அவர்கள்
வீட்டுப் பிள்ளைகளைப் படிக்கவைத்து வேலைக்கு அனுப்பியுள்ளார்கள். வெளிநாடுகளுக்குக் கூட அனுப்பியுள்ளார்கள். உபதேசம் எல்லாம் அடுத்தாளுக்குத்தான். வளர்ந்து வரும் இந்த நிறுவனத்தின் கடை
நம்முடைய ஊருக்குப் பக்கத்தில் வரும் வாய்ப்பும் இருக்கிறது, அப்போது காமாட்சி மாற்றலாகி இங்கு வந்திடலாம். நீ ஒண்ணும் நினைக்காம அனுப்பி வை; காமாட்சி என்றென்றும் நல்லா இருப்பா” என்றதும் இசக்கி அம்மாள் ஒத்துக்கொள்கிறாள். அடுத்த நாள் டீக்கடைக்கு அருகிலும், இசக்கி அம்மாள் வீட்டுக்கருகிலும் ஒரு
காலண்டர் தூக்கி எறியப்பட்டிருந்தது பாட்டாவின் கண்களில்பட்டது.
அரங்கநாதனின் கதைகளில் மெல்லிய நகைச்சுவை மிளிர்வதைக்
காணலாம். ‘ஏடு தொடங்கல்’ கதை நகைச்சுவை
ததும்பிடும் ஓர் இனிய கதை. நாஞ்சில் நாட்டில் குழந்தைகள் ஐந்து வயது நிரம்பியதும் ஏடு தொடங்கல்
என்ற விஷேசம் நடத்தப்படும். குழந்தையை சந்நிதி முன்னால் உட்காரவைத்து எதிரே தாம்பாளத்தில்
அரிசி அல்லது மணலைப் பரப்பி குழந்தையின் விரலைப் பிடித்து ‘அ-ஆ’ எழுதி அம்மனுக்கு ஒரு கும்பிடு போடச்செய்ததும்
சடங்கு முடிந்துவிடும். சடங்கு முடிந்ததும் வந்திருந்தவர்களுக்கு வெல்ல எள்ளுருண்டை
கொடுத்து அனுப்புவார்கள். அந்த ஊரில் ஏடு தொடுங்கலை அண்ணாவிதான் நடத்திக் கொடுப்பார். அவர் வர முடியாது போனால் அவர் மகன்
சுப்பையா வருவான். சுப்பையாவுக்கு
பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் தெரியுமென்றாலும் மணலில் விரல் பிடித்து குழந்தையை எழுதவைப்பதற்கு
நடுங்குவான். சென்ற வருடம்
ஒரு குழந்தை எழுதுவதற்குப் பதிலாக மணலை வாரி அவன் கண்ணிலே இறைத்துவிட்டது. இதனால் ஏடு தொடங்கல் விஷேசம் என்றதும்
அவன் ஊரில் தென்படுவதில்லை. அன்று ஊரின் பெரிய மனிதர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் பையனுக்கு
ஏடு தொடங்கல் விழா. அண்ணாவிக்கு உடல்
சுகமில்லை. சுப்பையாவை போகச்
சொல்கிறார். சுப்பையா நேராக
நண்பன் முத்துக்கறுப்பன் வீட்டுக்குச் சென்று அவனின் கறுப்புக் கண்ணாடியை இரவல் வாங்கிக்
கொள்கிறான். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான். ஏடு தொடங்கல் விழா சிரமங்கள் ஏதுமின்றி
முடிந்தது. உடனே முத்துக்கறுப்பன்
பாதுகாப்பாக இரவல் கொடுத்த கண்ணாடியை வாங்கித் தான் மாட்டிக்கொண்டான். பெண்களும், ஆண்களுமாக ஒரு முப்பது நாற்பதுபேர்
கூடியிருந்தனர். திடீரென்று கூட்டத்தில்
ஒருவர் அப்படியே ஒரு பதிகம் பாடி குழந்தைக்குச் சொல்லிக்கொடு என்கிறார். சுப்பையாவுக்கு ஒரு பதிகமும் தெரியாது. நண்பன் முத்துக்கறுப்பன் கோயில் மாடக்குழியிலிருந்த
திருவாசகம் நூலை எடுத்துக் கொடுக்கிறான். அது சீர் பிரித்துப் போடப்படாத பதிப்பு. சுப்பையா திணறுகின்றான். மீண்டும் நண்பன் முத்துக்கறுப்பன் உதவிக்கு
வருகிறான். புத்தகத்தைப்
பார்க்காமலே பதிகங்களை குழந்தைக்குப் படிப்பித்துக் கொடுக்கிறான். விழா இனிதே முடிகிறது. அடுத்த வாரம் முத்துக்கறுப்பனுக்கு
தன் மூத்த மகளைக் கொடுக்க முன்வருகிறார் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. முத்துக்கறுப்பன் தந்தைக்கு மட்டற்ற
மகிழ்ச்சி. தன் மகனுக்கு
ஊர் பெரிய வீட்டிலிருந்து பெண் கிடைக்கணுமே! ”பத்தாம் கிளாஸ் படித்தும் ஊர் வயல்லேதான்
உழனுமா என்று அங்கலாத்தான்”, முத்துக்கறுப்பன். அப்பாவை எதிர்த்துப் பேசமுடியாமல் ஒத்துக்கொண்டான். கல்யாணம் முடிந்ததும்தான் தெரிந்தது “கட்டிக்கிட்டா இவனைத்தான் கட்டிப்பேன்” என்று கல்யாணப் பெண் ஒற்றைக்காலில்
நின்றாளாம். கல்யாணத்திற்குப்பின்
முத்துக்கறுப்பன் கறுப்புக் கண்ணாடியை அணிவதேயில்லை என்பது வேறு கதை.
----------------------------------------------------------
Comments
Post a Comment