நிகோலாய் கோகாலின்,
’ஓவர்கோட்’, அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தைச் சொல்லிடும் கதை.
உலகளவில் புனைவிலக்கியத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்து, புதுப்புது முயற்சிகள்
செய்து சாதித்துக் காட்டியவர்கள் ரஷ்ய எழுத்தாளர்கள். லியோ டால்ஸ்டாய், அன்டன் செக்காவ், மாக்சிம் கார்க்கி, ஃபியோடார் தஸ்தயெவ்ஸ்கி, இவான் துர்கெனிவ், சிங்கிஸ் ஐத்மாத்தவ், என்று ரஷ்ய புனைகதை எழுத்தாளர்கள் பட்டியல் நீண்டது மட்டுமல்ல வலுவானதுமாகும். இவ்வரிசையில் நிகோலாய் கோகால் (1809-1852) தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ளார். சார் மன்னர் குடும்பத்திற்கு ஆதரவான அரசியல் நிலைபாடுடையவராக இருந்தாலும், தன்னுடைய படைப்புகளில் முற்போக்கு சிந்தனைகளையே வெளிப்படுத்தினார். கோகால் ரஷ்ய மொழியில் எழுதினாலும், உக்ரெய்ன் மண்ணின் மணத்துடனேயே அவரின் கதைகள் மணந்தன. சார் மன்னரின் ரொமனொவ் குடும்பத்துடனான உறவைத் துண்டித்துக் கொள்ளாமல் மன்னர் ஆட்சி காலத்திய குறைபாடுகளை அவரால் விமர்சிக்க முடிந்தது. “நாம் எல்லோரும் கோகாலின் ’ஓவர்கோட்’ லிருந்து வெளிவந்தவர்கள் தான்”, என்று தஸ்தயெவ்ஸ்கி பெருமையுடன் சொல்லுமளவிற்கு கோகால் சிறந்து விளங்கினார். அவரின் ’ஓவர்கோட்’ சிறுகதை உலகச் சிறுகதைகளில் நட்சத்திரமாக மின்னுகிறது.
‘ஓவர்கோட்’ சிறுகதை அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களின் உளவியலைச் சித்தரிக்கிறது.. அதிகாரம் தரும் போதையில் சாதாரண மக்களைத் துச்சமாக மதிக்கிறார்கள். பிரமிடு வடிவ அரசு அதிகார அமைப்பில் அடிநிலை ஊழியர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவே இருக்கிறது. ‘ஓவர்கோட்’ சிறுகதையில்
(1942) அககி அககேவிட்ச் என்றொரு அப்பாவி குமாஸ்தா படும்பாட்டை சொற்சித்திரமாக கோகால் தீட்டியுள்ளார்.
பீட்டர்ஸ்பெர்க் நகரில் அரசு அலுவலகம் ஒன்றில் அககி குமாஸ்தாவாக வேலை பார்க்கிறார். அககி ஐம்பது வயது நிறைந்த எளிமையான மனிதர். எப்போதும் கசங்கிய ஆடையுடனும், கவலை தோய்ந்த முகத்துடனும் காட்சியளிப்பார். அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் அவரைக் கேலி பேசுவார்கள். அலுவலகத்தில் அவருக்கிட்ட பணி நகல் எடுப்பதுதான். மனிதன் நகல் எடுப்பதில் சளைப்பதில்லை. அவரைப் பொறுத்தவரை உலகத்திலேயே மிகச் சிறந்த வேலை நகல் எடுப்பதுதான். வேலையில் அப்படியொரு அர்ப்பணிப்பு! அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும்போதும் ஒரு கட்டுக் கோப்புகளை எடுத்துச்செல்வார். வீட்டில் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு நீண்ட நேரம் விளக்கு வெளிச்சத்தில் நகல் எடுத்துக்கொண்டுதான் இருப்பார். திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தைக் கழித்துவிட்ட அககி ஒரு சிறிய மாடி வீட்டில் குடியிருந்தார். அலுவலகத்திற்கு நடந்தே போய்வருவார்.
பீட்டர்ஸ்பர்க் நகரில் குளிர்காலம் பொல்லாதது. நல்ல வலுவான கோட் இல்லாமல் சமாளிக்க முடியாது. குளிரைத் தாங்குவதற்கு ஓவர்கோட் அவசியம் வேண்டும். அககி நல்ல ஓவர்கோட் இல்லாமல் தவித்தார். கிழிசல்கள் நிறைந்த அவருடைய ஓவர்கோட் நைந்து தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு நாள் தனக்கு நன்கு பரிச்சயமான டெய்லர் பெட்ரோவிட்ச் என்பவரை அணுகி தன்னுடைய பழைய ஓவர்கோட்டைச் சரி செய்து தருமாறு கேட்கிறார். ஓவர்கோட்டின் நிலைமையைப் பார்த்த டெய்லர் ”இதனை நிச்சயம் சரி செய்ய முடியாது; புதிய ஓவர்கோட் தைத்துக்கொள்வதே நல்லது”, என்றார். புதிய கோட் தைப்பதற்கு 150 ரூபிள்கள் ஆகும் என்றதும் அதிர்ந்து போகிறார். இருப்பினும் பணம் சேமிக்கத் தொடங்கினார். ஆண்டு இறுதியில் கிடைக்கும் போனஸ் பணத்தையும் சேர்த்துக் கொண்டு ஓவர்கோட் தைத்துவிடுவது என்ற முடிவெடுத்தார். போனஸ் பணம் வந்ததும் அககியும், பெட்ரோவிட்ச்சும் நகரின் துணிக் கடைகளில் அலைந்து தேவையான துணிகளை எடுக்கிறார்கள். பூனை ரோமத்தில் செய்யப்படும் மலிவான கம்பளித்துணியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெட்ரோவிச் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர் மட்டுமல்ல ஒரு கண்ணில் பார்வை இழந்தவருங்கூட. இருப்பினும் நண்பருக்காக அதிக சிரத்தை எடுத்துத் தைக்கிறார். கலிக்கோ துணியில் லைனிங் வைத்து, அழகிய மெட்டல் பட்டன்களுடன் ஓவர்கோட் தைத்து முடிக்கிறார். தன்னுடைய கைவண்ணத்தில் நேர்த்தியாகச் செய்து முடித்த ஓவர்கோட்டை நண்பரின் வீட்டுக்கே வந்து கொடுத்துச் செல்கிறார். நண்பரிடமிருந்து தையற் கூலியாக வெறும் 12 ரூபிள்கள் மட்டுமே வாங்கிக் கொள்கிறார். அககி மிகுந்த மகிழ்ச்சியுடன் அடுத்த நாள் அலுவலகத்திற்குச் செல்கிறார். தன்னுடைய ஓவர்கோட் அழகாக இருக்கிறது என்ற நினைப்பே அவருக்குத் தன்னம்பிக்கையைத் தருகிறது. ‘ஆள் பாதி ஆடை பாதி என்பது போல் அககியிடம் இதுநாள் வரை இருந்த அவநம்பிக்கை மறைந்துவிடுகிறது. மிடுக்கு நடையுடன் கம்பீரமாக அலுவலகம் செல்கிறார். எல்லோரும் பாராட்டுகிறார்கள். அவருடைய பணிக்காலத்தில் முதன் முதலாக கிடைக்கும் பாராட்டு மழையில் நனைகிறார். ”அககியின் புது ஓவர்கோட்டைக் கொண்டாடுவோம்! அககி ஒரு டிரீட் கொடுக்கட்டும் என்கிறார்கள்”. அககி பதறுகிறார். இருந்த பணமெல்லாம் கோட் தைப்பதற்கே போய்விட்டதே! தலைமை குமாஸ்தா தான் விருந்து தருவதாகச் சொல்லி எல்லோரையும் தன்னுடைய வீட்டுக்கு அழைக்கிறார். பொதுவாக இது போன்ற விருந்துகளுக்கெல்லாம் அககி செல்வதில்லை. ஆனால் புது ஓவர்கோட் தரும் தெம்பிலும், உற்சாகத்திலும் விருந்துக்குக் கிளம்புகிறார். வீதியில் நடக்கும் போது கண்ணில் தட்டுப்படும் பெண்களைக் கண்டு கிளர்ச்சி அடைகிறார். ஒரு வித்தியாசமான மனிதராக தலைமை குமாஸ்தா வீட்டுக்கு வந்து சேருகிறார். தன்னுடைய புது ஓவர்கோட்டை ஸ்டாண்டில் பத்திரமாக மாட்டிவைத்துவிட்டு விருந்தில் கலந்துகொள்கிறார். பல சுற்றுகள் ஒயின் குடித்த போதையில் நேரம் போனதே தெரியவில்லை. மணி பனிரெண்டாகிறது. கீழே விழுந்துகிடக்கும் தன்னுடைய கோட்டை உதறி எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். பீட்டர்ஸ்பர்க் நகரத் தெருக்களில் இவ்வளவு இருட்டில் அவருக்கு நடந்து பழக்கமில்லை. ஒருவித பதற்றத்துடனும், பயத்துடனும் நடந்துவருகிறார். திடீரென்று இருவர் அவரெதிரில் வந்து மோதி நிற்கிறார்கள். அவரின் முகத்தில் ஓங்கிக் குத்திவிட்டு அவருடைய புது ஓவர்கோட்டைக் கழற்றிக் கொண்டு போய்விடுகிறார்கள். அககி அதிர்ச்சியில் என்ன செய்வதென்று அறியாது வீடு நோக்கி நடக்கிறார். ஒரு பாலத்தின் அருகில் இரவு நேரக் காவலன் ஒருவன் நிற்பதைப் பார்த்து அவனிடம் தனக்கு நேர்ந்த இழப்பை விவரிக்கிறார். அவன் தான் ஒற்றையாளாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், மறு நாள் காலை போலீஸ் சூப்பிரடெண்ட் அலுவலகம் சென்று முறையிடுமாறும் சொல்கிறான். கோட் தொலைந்த சோகத்துடன் முகத்தில் விழுந்த அடியின் வலியும் சேர்ந்துகொள்ள பாவம் தள்ளாடியபடி வீடு வந்து சேருகிறார். மறுநாள் காலை அவர் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரப் பெண்மணி தனக்கு போலீஸ் சூப்பிரடெண்ட் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தியைத் தெரியும் என்றதால் அவள் உதவியுடன் காவல்துறை அதிகாரியைச் சந்திக்கச் செல்கிறார். காவல்துறை அலுவலகத்தில் ஏழை சொல் அம்பலம் ஏறவில்லை. அககி தன்னை ஒரு குமாஸ்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்டதுமே அதிகாரி அவரை அலட்சியமாகப் பார்க்கிறார். அககியின் அழுக்கான ஆடை, பரிதாபமான தோற்றம், பேசுவதில் தயக்கம் இவற்றினைப் பார்த்த அதிகாரி அவரை விரைவில் விரட்டிவிடுவதில் குறியாக இருக்கிறார். மாநகரச் ’சிறப்பு அதிகாரி’யைச் சந்திக்கச் சொல்லி
அனுப்பிவிடுகிறார். அடுத்த நாள் மாநகரச் ’சிறப்பு அதிகாரி’ அலுவலகம் செல்கிறார். அங்கும் எந்தவித இரக்கமும் இல்லாமல் விரட்டப்படுகிறார். ’சிறப்பு அதிகாரி’யின் மிரட்டலும், விரட்டலும் அககியை நடுங்கச் செய்கிறது. பயந்துபோய் வீடு
வந்து சேருகிறார். மன உளைச்சல், உடல் அசதி,
கடுமையான குளிர் எல்லாம் ஒன்று சேர அடுத்த நாள் காய்ச்சலில் படுத்துவிடுகிறார்.
மருத்துவர் மருந்து கொடுத்தும் பயனில்லை. காய்ச்சலின்
உச்சத்தில் புலம்புகிறார். உடல்நிலை மோசமடைந்ததும் மருத்துவர்
குறைந்த விலையில் ஒரு சவப்பெட்டியைத் தயார் செய்யுமாறு வீட்டுச் சொந்தக்காரப் பெண்மணியிடம்
சொல்கிறார். அவருடைய மரணமும், அதையொட்டிய
இறுதி நிகழ்ச்சிகளும் ஆரவாரங்கள் ஏதுமின்றி நடந்து முடிகிறது. பீட்டர்ஸ்பர்க் நகரத் தெருக்களில் இரவு நேரங்களில் பேயொன்று அலைவதாகவும்;
அது ஓவர்கோட்டுகளைப் பிடுங்க முயற்சிப்பதாகவும் பலரும் சொல்கின்றனர்.
இதற்கிடையில் மாநகரச் ’சிறப்பு அதிகாரி’
தான் அககியிடம் அநியாயமாக நடந்துகொண்டோமே என்று வருந்துகிறார்.
மனச்சாட்சி உறுத்துகிறது. குற்ற உணர்வுடன் இரண்டு
ரவுண்டு மது குடித்துவிட்டு தன் காதலி வீட்டுக்குச் செல்கிறார். ஸ்லெட்ஜ் வண்டியில் போய்க்கொண்டிருக்கும் போது அவரது ஓவர்கோட்டை யாரோ பிடித்து
இழுப்பதுபோல் இருக்கிறது. அககியின் வெளுத்த முகம் தெரிகிறது.
கண்களில் கோபம் கொப்பளிக்க “வா! வா! உனக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்”.
என்று சொல்லி அவரின் ஓவர்கோட்டைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடுகிறது அககியின்
பேயுருவம். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பீட்டர்ஸ்பர்க் நகரில் பேய்
நடமாட்டம் இல்லை என்று பேசிக்கொண்டார்கள். மாநகரச் ”சிறப்பு அதிகாரி’யின் ஓவர்கோட்டைப் பிடுங்கிக் கொண்டதில்
திருப்தியடைந்து அககியின் மனம் அமைதி அடைந்திருக்கலாம்!
-----------------------------------------------
Comments
Post a Comment