கேதரின் மேன்ஸ்ஃபீல்டு
’கதிரவன் மறையாத பேரரசு’ என்று பிரிட்டிஷ் பேரரசை ஒரு காலத்தில் பெருமையுடன் அழைத்தனர். அமெரிக்கா, ஆஸ்டிரேலியா, கனடா, நியுஷீலாந்து, மற்றும் நிறைய ஆப்பிரிக்க ஆசிய நாடுகள் என்று உலகம் முழுவதும் வியாபித்திருந்தது. விடுதலை பெற்றுள்ள முன்னாள் பிரிட்டிஷ் காலனிய நாடுகள் எல்லாம் இன்று காமன்வெல்த் நாடுகள் என்றழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் ஆங்கில மொழியில் படைக்கப்படும் இலக்கியங்கள் ’காமன்வெல்த் இலக்கியங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. கேதரின் மேன்ஸ்ஃபீல்டு நியுஷீலாந்து நாட்டைச் சேர்ந்த காமன்வெல்த் இலக்கிய படைப்பாளியாவார். நியூஷீலாந்தில் பிறந்து வாழ்ந்த கேதரின் பின்னர் இங்கிலாந்தில் குடிபுகுந்து குறைந்த வயதில் நிறைய எழுதி மரணத்தைத் தழுவினார். மிகச் சிறந்த சிறுகதைகளைப் படைத்துள்ள கேதரின் ரஷ்ய எழுத்தாளர் அண்டன் செக்காவ் தன்னை ஆகர்ஷித்த எழுத்தாளர் என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டார். அவர் காலத்திய ஆங்கில இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களான டி.எஸ்.இலியட், ஜேம்ஸ் ஜாய்ஸ், வெர்ஜினியா உல்ஃப் ஆகியோருக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறார்.
கதாபாத்திரங்களின் குணநலன்களைச் சித்தரிப்பது, கதைக்கான சூழலை உருவாக்குவது இவற்றில் கேதரின் அதிக கவனம் செலுத்தினார். கதைகளில் நிகழ்வுக் கூறுகள் அதிகம் இருப்பதில்லை. ஒரு சிறு நிகழ்வு, பிரச்சனை, அதன் உச்சம் ஆகியனவே கேதரின் கதைகளில் விரிந்து செல்கின்றன. சாதாரண மனிதர்களின் வாழ்வில் நடக்கும் அசாதாரண நிகழ்வுகளே கதைப் பொருளாகின்றன. பூக்கள், வண்ணங்கள், தென்றல், மேகக் கூட்டங்கள் என்று இயற்கைக் காட்சிகளே கதையில் குறியீடுகளாகின்றன. தி கோல்டன் பார்ட்டி, தி டால்ஸ் ஹவுஸ், மிஸ்.பிரில், ப்ரிலூட், எ கப் ஆஃப் டீ போன்ற கதைகள் கேதரினின் சிறந்த படைப்புகளுக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
’எ கப் ஆஃப் டீ’ கதையில் கேத்தரின் மேன்ஸ்ஃபீல்டு ஒரு பெண்ணின் பலவீனத்தைச் சித்தரிக்கிறார். ரோஸ்மேரி ஃபெல் ஒரு படித்த பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய பொருளாதார வசதி அவளுக்கு அனைத்து சுதந்திரத்தையும் அளிக்கிறது. மழை தூறும் ஒரு மாலைப் பொழுதில் ஆடம்பர அழகுப் பொருட்கள் விற்கும் கடை வாசலில் ஓர் ஏழைப் பெண்ணைச் சந்திக்கிறாள். அந்த அபலைப் பெண் ரோஸ்மேரியிடம் ஒரு கப் டீ குடிப்பதற்கான காசுக்காக மட்டுமே கையேந்துகிறாள். ரோஸ்மேரி அவளிடம் அதீத அக்கறையை வெளிப்படுத்தி அவளை தன்னுடைய காரில் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். ஏழைப் பெண் ஒருத்திக்கு வாரி வழங்கப் போகும் பணக்காரப் பெண்ணாகத் தன்னைக் கற்பனை செய்துகொள்கிறாள். ஏழைப் பெண்களைக் காப்பதற்கு தேவதைகள் தோன்றுவது வாழ்வின் நிஜமாகட்டும்; பணக்காரர்களும் கருணை உள்ளம் படைத்தவர்கள் தான் என்பது நிரூபணமாகட்டும்; பெண்கள் வர்க்கங்களைக் கடந்து சமமானவர்கள் தான் என்பது தெளிவாகட்டும் என்றெல்லாம் எண்ணிக் கொள்கிறாள். குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் உடனடித் தேவையான பசியை நீக்கிட வேண்டும் என்பதைக் கூட உணர்ந்திடாமல் கற்பனை உலகில் மிதக்கிறாள். பசியிலும், குளிரிலும் நடுங்கிக் கொண்டிருக்கும் ஸ்மித் என்ற அந்தப் பெண்ணின் வாழ்வில் ஒளியேற்றப் போவதாகப் பெருமிதம் கொள்கிறாள். அந்த அப்பாவிப் பெண், “மேடம்! எனக்கு பசி காதை அடைக்கிறது; எனக்கு மயக்கம் வருகிறது” என்று சொன்ன பின்னரே வேலைக்காரியை அழைத்து ஸ்மித் சாப்பிடுவதற்கு உணவும், குடிப்பதற்கு டீயும் கொடுக்கச் சொல்கிறாள். அவள் பசியாறியதும் அவளுக்கு பெரிய உதவிகள்
செய்யக் காத்திருப்பதாகக் கூறுகிறாள். அந்நேரத்தில் ரோஸ்மேரியின் கணவர் ஃபிலிப் அறைக்குள் நுழைகிறார். அப்பாவிப் பெண் ஸ்மித்தைப் பார்த்து
’யார் இந்த அழகி’ என்று கேட்கிறார். தான் கடைத்தெருவில் கண்டெடுத்தவள் என்றும்
அவளுக்கு அடைக்கலம் கொடுக்கப் போவதாகவும் சொல்கிறாள். ரோஸ்மேரியை தனியே அழைத்து ”இந்தப் பேரழகிக்கு என்ன செய்யப்போகிறாய்”, என்று கேட்கிறார். கணவன் ஃபிலிப் பேச்சைக் கேட்டதும் ரோஸ்மேரியின்
மனநிலை முற்றிலும் மாறிவிடுகிறது. வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்ற நினைத்த பெண்ணுக்கு மூன்று
ஐந்து பவுண்டு நோட்டுக்களைக் கொடுத்து அனுப்பிவிடுகிறாள். ஃபிலிப்பின் கைகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு ”நான் அழகிதானே ஃபிலிப்?” என்று கொஞ்சுகிறாள் என்று கதை முடிகிறது. தன் வீட்டில் இன்னொரு அழகிய பெண்ணுக்கு
இடமில்லை என்பதில் ரோஸ்மேரி உறுதியாக இருக்கிறாள்.
பொதுவாக எல்லா சமூகத்திலும் வர்க்க பாகுபாடுகள் இருக்கவே
செய்கின்றன. அதிலும் ஆங்கிலேயர்கள்
மத்தியில் வர்க்க பாகுபாடு அதீதமாகவே இருக்கிறது. ஆனால் கள்ளங்கபடமற்ற குழந்தைகள் வர்க்க
வேறுபாடு அறியாதவர்கள். கேதரினின் ‘தி டால்ஸ் ஹவுஸ்’ கதையில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பிஞ்சுகள் மனதில் வர்க்க
உணர்வு எனும் நஞ்சை விதைக்கும் கொடுமையைச் சித்தரிக்கிறார். ’பர்னல்’ குடும்பம் வர்க்கப் பாகுபாடுகாட்டும்
ஒரு பணக்காரக் குடும்பம். இஸபெல், கெசியா, லாட்டி என்ற மூன்று குழந்தைகளுக்கும் வர்க்கப் பாகுபாட்டினை
ஊட்டி வளர்க்கிறார்கள். அந்த ஊரில் இருப்பது ஒரே பள்ளி என்பதால் அனைத்துச் சமூகத்தைச்
சேர்ந்த குழந்தைகளுடனும் ஒன்றாகவே படிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே உயர்வகுப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள்
தங்கள் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பேசவும், பழகவும் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் லில் மற்றும் அவள்
தங்கை எல்சி இருவரும் வீட்டு வேலை செய்யும் ஒர்
ஏழைப் பெண்ணின் குழந்தைகள். பள்ளியில் படிக்கும் பணக்கார வீட்டுக்
குழந்தைகள் எல்லாம் இவர்களிடம் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர். இவர்களுடன் பேசுவதில்லை, பழகுவதில்லை. நெருங்கி உட்காருவதும் இல்லை.
பர்னல் வீட்டுக் குழந்தைகளுக்கு ஓர் அழகிய ’பொம்மை வீடு’ பரிசாகக் கிடைக்கிறது. சகோதரிகள் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். ’பொம்மை வீடு’ வீட்டுக்கு வெளியே இருக்கும் தாழ்வாரத்தில்
வைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும்
பள்ளியிலிருந்து இரு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டுவந்து பொம்மை வீட்டைக் காட்டுகின்றனர். பள்ளியில் இதுவே பேசு பொருளாகிறது. கிட்டதட்ட எல்லா குழந்தைகளூம் பொம்மை
வீட்டைப் பார்த்து மகிழும் வாய்ப்பை அடைகின்றனர். ஆனால் பாவம்! ஏழைப் பெண்கள் லில் மற்றும் எல்சி இருவரும்
மட்டும் அந்த பாக்கியம் கிடைக்காமல் ஏமாந்து நிற்கின்றனர். பர்னல் குடும்பத்தின் இளைய மகள் கெசியா
சற்று இளகிய மனம் கொண்டவள். ஏழைப் பெண் லில் அவள் தங்கை எல்சி இருவரையும் ஒரு நாள் வீட்டுக்குள்
அழைத்து பொம்மை வீட்டைக் காட்டுகிறாள். இதைப் பார்த்த கெசியாவின் அத்தை பெரில்
வீட்டிலிருந்து ஓடோடி வந்து ஏழைக் குழந்தைகள் இரண்டையும் திட்டி, அவமதித்து கோழிகளை விரட்டுவது போல்
விரட்டிவிடுகிறார். அப்பாவிக் குழந்தைகள்
இருவரும் செய்வதறியாது ஓடி ஒடுங்கிப் போய்விடுகின்றனர்.
அடுத்த நாள் பெரில் அத்தைக்கு வில்லி பெரண்ட் என்பவரிடம்
இருந்து ஒரு கடிதம் வருகிறது. “உடனே என்னை வந்து பார்த்து விளக்கம்
தர வேண்டும்; இல்லையேல் நானே
நேரில் வருவேன்” என்று கடிதத்தில்
வில்லி பெரண்ட் மிரட்டியுள்ளார். என்று கதை முடிகிறது. யார் இந்த வில்லி பெரண்ட்? பெரில் அத்தைக்கும் அவருக்கும் இடையிலான
உறவு என்ன? என்பதை எல்லாம்
வாசகர்களின் ஊகத்திற்கு விட்டுவிடுகிறார் கதையாசிரியர். கதை ஆக்கத்தில் வாசகர்களுக்கோர்
பங்கினைக் கொடுப்பதும் ஓர் உத்தியாகும். அவ்வழியில் கேதரின் மேன்ஸ்ஃபீல்டு கதையின்
முடிவை வாசகர்களின் கற்பனைக்கு விட்டுச் செல்கிறார்.
-------------------------------------------------------
Comments
Post a Comment