வில்லியம் சாமர்செட் மாம்.
வில்லியம் சாமர்செட் மாம் (William Somerset Maugham) ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த கதைசொல்லிகளில் ஒருவர். நாடகம், நாவல், சிறுகதை என்று மூன்று இலக்கிய வகைமைகளிலும் எழுதிக் குவித்துள்ளார். ’மாம்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் சாமர்செட் மாம் மருத்துவப் பட்டம் பெற்றவர். இலக்கியத்தை தன் வாழ்வின் அர்த்தமாகத் தேர்ந்தெடுத்து எழுத்துப் பணிக்குத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவர். உலகெங்கும் பயணித்த மாம் இந்தியாவுக்கும் வந்திருந்து ரமண மகரிஷியைச் சந்தித்துள்ளார்.
வில்லியம் சாமர்செட் மாம் எழுதிய சிறுகதைகளில் ’வெர்ஜர்’ (Verger)
முக்கியமானதாகும். இங்கிலாந்து நாட்டில் சர்ச்சுகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் வெர்ஜர் என்றழைக்கப்படுகின்றனர். லண்டன் நகரின் மையமான பகுதியில் கம்பீரமாக நிற்கும் செயின்ட் பீட்டர்ஸ் சர்ச்சில் வெர்ஜராகப் பணிபுரியும் ஆல்பர்ட் என்பவரின் வாழ்வில் ஏற்படும் அதிசயமான மாற்றமே கதையின் கருப்பொருள். பெருமைமிகு பீட்டர்ஸ் சர்ச்சில் 16 ஆண்டுகளாகப் வேலை பார்க்கும் ஆல்பர்ட் எழுத, படிக்கத் தெரியாதவர். இருப்பினும் தன்னுடைய நேர்மையான உழைப்பினால் சர்ச்சில் பணியாற்றிய அனைத்துப் பாதிரியார்களிடமும் நல்ல பெயர் ஈட்டியவர். வெர்ஜராகப் பணியில் சேருவதற்கு முன் பல்வேறு வேலைகள் பார்த்துள்ளார். பனிரெண்டு வயதில் எடுபிடிப் பையனாக ஒரு பணக்கார வியாபாரியின் வீட்டில் வேலையில் சேர்ந்தார். பின்னர் காவலாளியாக ஒரு வீட்டிலும் அதன் பின்னர் ஒரு பணக்காரச் சீமாட்டியிடம் பட்லராகவும் வேலை பார்த்தார். பீட்டர்ஸ் சர்ச்சில் வெர்ஜர் வேலை கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தார். ரோம் நகரில் இருக்கும் போப்பாண்டவருக்கும் தனக்கும் பணி ஓய்வு என்பதில்லை என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்வார். ஆல்பர்ட்டுக்கு படிப்பின்மை ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை. அவர் மனைவி படித்தவர் என்பதால் கடிதம் எழுதுவது போன்ற காரியங்களை எல்லாம் அவர் பார்த்துக்கொண்டதால் சிரமங்கள் ஏதுமின்றி குடும்ப வாழ்வு நகர்ந்தது.
அன்று பீட்டர்ஸ் சர்ச்சில் ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா. ஆல்பர்ட் அனைத்து உதவிகளும் செய்திட சர்ச்சில் புதிதாகப் பொறுப்பேற்றிருந்த பாதிரியார் தலைமையில் விழா இனிதே முடிந்தது. வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு ஆல்பர்ட் வீட்டுக்குப் புறப்படப் போகும் நேரத்தில் பாதிரியார் ஆல்பர்ட்டை தன்னுடைய அறைக்கு வரச்சொன்னார். பாதிரியாரின் அறைக்குள் பீட்டர்ஸ் சர்ச்சின் வார்டன்கள் இருவர் உட்கார்ந்திருந்தனர். அவர்களைச் சற்றும் எதிர்பாராத ஆல்பர்ட் சற்றே திடுக்கிட்டார். இதற்கு முன்பு சர்ச் ஆர்கனிஸ்ட்டை வேலைநீக்கம் செய்தபோது இருவரும் விசாரணைக்கு வந்திருந்தது நினைவுக்கு வந்தது. பாதிரியார் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். ”ஆல்பர்ட்! நீங்கள் நீண்ட நாட்களாக எந்தவொரு குறையுமின்றி வெர்ஜராகப் பணிபுரிந்துள்ளீர்கள். பதினாறு ஆண்டுகளில் எந்தவொரு பாதிரியாரும் உங்கள் மீது குற்றம் சுமத்தியதில்லை. ஆனால், உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.. செயிண்ட் பீட்டர்ஸ் சர்ச் அறிவார்ந்த சமூகத்தினரைக் கொண்ட சர்ச். இங்கு பணியாற்றும் வெர்ஜர் படிப்பறிவு இல்லாதவர் என்பதால் பிரச்சனைகள் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன். சர்ச்சின் வார்டன்களான இவ்விரண்டு பெரியவர்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே உங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் தருகிறோம். அதற்குள் நீங்கள் எழுதப் படிக்க கற்றுக்கொள்ளுங்கள்; இல்லையேல் நீங்கள் வேலையைவிட்டு விலக வேண்டும்” என்று சொல்லி முடித்தார். ஆல்பர்ட் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். “இந்த வயதில் நான் படிப்பதற்குத் தயாரில்லை. நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொல்லி பதினாறு வருடம் எந்தக் குறைகளுமின்றி வேலை பார்த்த பீட்டர்ஸ் சர்ச்சிலிருந்து கௌரவமாக விலகினார்.
கனத்த மனத்துடன் சர்ச்சைவிட்டு வெளியேறிய. ஆல்பர்ட் என்னசெய்வதென்று தெரியாது திகைத்தார். வீட்டுக்குத் திரும்பாமல் கால்போன போக்கில் நடந்தார். விரக்தியிலும், வேதனையிலும் நீண்ட நேரம் நடந்த ஆல்பர்ட் புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றிட நினைத்தார். சிகரெட் விற்கும் கடைகள் ஏதும் தென்படவில்லை. லண்டன் நகரின் அந்த நெடுஞ்சாலையில் ஒரு சிகரெட் கடைகூட இல்லாமல் இருந்தது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இத்தெருவில் ஒரு பெட்டிக்கடை தொடங்கினால் என்ன என்று நினைத்தார். மறுநாள் தேடி அலைந்து ஒரு கடையை வாடகைக்குப் பிடித்து சிகரெட் மற்றும் நியூஸ் பேப்[பர் விற்கும் கடை திறந்தார். வியாபாரம் அமோகமாக நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் லண்டன் நகரின் முக்கியமான தெருக்களில் எல்லாம் கடைகள் தொடங்கினார். லண்டன் நகரின் பிரமுகர் ஆனார். ஒரு நாள் வங்கியின் மேலாளரிடமிருந்து அழைப்பு வந்தது.
“எங்கள் வங்கியில் அதிகப் பணம் வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருக்கிறீர்கள். உங்கள் பணத்தில் கொஞ்சத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நீங்கள் இன்னும் அதிக லாபம் அடையலாம். பங்குச்சந்தை வணிகம் குறித்த இந்த விளக்கத்தைப் படித்துப் பார்த்து முடிவெடுங்கள்”, என்றார். “மன்னிக்கணும் சார்! எனக்குப் படிக்கத் தெரியாது. நீங்களாகப் பார்த்து ஏதாவது ஆலோசனை வழங்குங்கள்” என்று ஆல்பர்ட் சொன்னதும் வங்கி மேலாளர் வியப்பின் விளிம்புக்கே சென்றார். “உங்களுக்குப் படிக்கத் தெரியாதா! படிப்பறிவே இல்லாமல் இவ்வளவு பெரிய கணவானாக வளர்ந்துள்ளீர்களே! நீங்கள் மட்டும் படித்திருந்தால்....” என்று வங்கியின் மேலாளர் கேட்டதும், “சர்ச்சில் வெர்ஜராக வேலை பார்த்து ஓய்ந்திருப்பேன்” என்கிறார் ஆல்பர்ட்.
சிறுகதைகளின் உத்திகளில் ஒன்று சற்றும் எதிர்பாராத முடிவினைக் கொண்டிருப்பதாகும். ‘தி லோட்டஸ் ஈட்டர்’ சாமர்செட் மாம் எழுதிய மற்றுமொரு எதிர்பாராத முடிவினைக் கொண்டுள்ள சிறுகதை. ’ஒடிசி’ எனும் கிரேக்க இதிகாசத்தின் நாயகன் யுலிசஸ் உலகைச் சுற்றிய நீண்ட பயணத்தின் போது ஒரு விநோதமான தீவில் தங்க நேரிடும். தீவில் லோட்டஸ் பூவினைச் சாப்பிட்டு மயங்கிக் கிடக்கும் அதிசயமான மனிதர்களைச் சந்திக்கிறார். வாழ்க்கையில் எந்தவொரு பிடிப்புமின்றி லோட்டஸ் பூ தரும் போதையில் உறங்குகிறார்கள். இக்கருத்தை மையப் பொருளாகக் கொண்டு ஆங்கிலக் கவிஞர் ஆல்ஃப்ரெட் டென்னிசன் ’லோட்டஸ் ஈட்டர்ஸ்’ என்ற தலைப்பில் கவிதை ஒன்று எழுதியுள்ளார். சாமர்செட் மாம் தன் பங்கிற்கு இதே கருப்பொருளில் சிறுகதை ஒன்றைப் படைத்துள்ளார்.
தாமஸ் வில்சன் லண்டன் மாநகரில் யார்க் அன் சிட்டி வங்கியின் மேலாளராகப் பணியாற்றியவர். மனைவியும், ஒரே மகளும் இறந்த சோகத்திலிருந்து விடுபட இத்தாலி அருகில் இருக்கும் கேப்ரி எனும் அழகிய தீவுக்கு உல்லாசப் பயணியாக வருகிறார். கேப்ரி தீவின் அழகில் மயங்குகிறார். இனியும் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி என்ன சாதிக்கப் போகிறோம் என்ற விரக்தியில் பணி ஓய்வு பெற்று கேப்ரி தீவில் மீதமுள்ள நாட்களைக் கழிப்பது என்று முடிவுக்கு வருகிறார். வங்கியில் 17 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றியதால் ஓய்வு ஊதியம் கிடைக்கவில்லை. கிராஜுயுட்டி மட்டுமே கிடைக்கிறது. லண்டனில் இருந்த வீட்டையும் விற்றுவிட்டு கிடைத்த பணத்துடன் 35ஆவது வயதில் கேப்ரி தீவில் நிரந்தரமாகக் குடியேறுகிறார். சிறு வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு எளிய வாழ்க்கையை வாழ்கிறார். கடலில் குளிப்பது; கடற்கரையில் நடைப் பயிற்சி செய்வது; இரவில் ரோமானிய வரலாறு படிப்பது என்று பொழுதினை இனிதே கழிக்கிறார். இப்படியே 25 ஆண்டுகள் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகிறார். அறுபது வயதில் மரணம் வந்து சேரும் என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக தீவைச் சுற்றி வருகிறார். தீவில் கத்தோலிக்க கிறித்துவர்கள் நடத்தும் திருவிழாக்களைக் கண்டு கழிக்கிறார். காலச் சக்கரம் வேகமாகச் சுழன்று 60 வயதைக் கடக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த மரணம் வந்துசேரவில்லை. கையிலிருந்த பணம் காலியாகிறது. தீவு மக்கள் சிறிது காலம் அவரைப் பராமரிக்கிறார்கள். அவர்கள் கைவிட்ட பின்னர் தற்கொலை செய்துகொள்ள முயலுகிறார். அதிலும் தோல்வி அடைகிறார். கடைசியில் கடற்கரையில் அனாதையாக இறந்துகிடக்கிறார். மனித உயிர் நூலிழையில் கட்டப்பட்டுள்ளதுதான். இருப்பினும் அது எப்போது முடிவுக்கு வரும் என்பதை யார் அறிவோம்? தாமஸ் வில்சன் தன்னுடைய உயிர் 60 வயதில் பிரியிம் என்ற நினைத்தது தவறுதானே? மனிதன் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. இதுவே இயற்கையின் நியதி.
-----------------
Comments
Post a Comment