Skip to main content

ஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆன்டர்சன்

 

ஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் தேவதைக் கதைகளின் நாயகன்!

தேவதைக் கதைகள் சிறுவர்களுக்கு  மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடித்தமானவைகளே. குழந்தைகளை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும் கற்பனை வளமிக்க மாயா ஜாலக் காட்சிகள் நிறைந்திருக்கும் இக்கதைகளில் நீதி போதனைகளும் ஊடாடிச் செல்கின்றன.  பிரான்சின் சார்ல்ஸ் பெர்ரால்ட் (1628-1703), ஜெர்மனியின் கிரிம்ஸ் சகோதரர்கள் (1785-1863), டென்மார்க்கின் ஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் (1805-1875) போன்றோர் ஐரோப்பிய உலகின் மிகச் சிறந்த தேவதை எழுத்தாளர்களாக வலம் வந்தனர். சார்ல்ஸ் பெர்ரால்ட் எழுதிய சிண்டெரல்லா உலகப் புகழ் பெற்ற தேவதைக் கதையாகும். அதேபோல் ஜெர்மனியின் ஜேகப் கிரிம்ஸ் மற்றும் வில்ஹெல்ம் கிரிம்ஸ் என்ற கிரிம்ஸ் சகோதரர்கள் தி வுல்ஃப் அன் தி செவன் கூஸ், ஸ்னோ வுயிட் போன்ற இருநூறு கதைகள் எழுதினர். ஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் கிட்டதட்ட 160 தேவதைக் கதைகளை டேனிஷ் மொழியில் எழுதி என்றென்றும் குழந்தைகள் மனதில்  நிறைந்து நிற்கிறார்.

ஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் டென்மார்க் நாட்டின் ஒடென்ஸ் நகரில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையை இளம் வயதில் இழந்து குழந்தைத் தொழிலாளியாக பல்வேறு தொழில்களும் புரிந்தார். குழந்தை நடிகராக தலைநகர் கோபன்ஹேகனில் தஞ்சமடைந்தார். ஆண்டர்சனின் குரல்வளம் சிறந்ததாக இருந்ததால் ராயல் டேனிஷ் தியேட்டர் அவரை அரவணைத்துக் கொண்டது. சிறுவயதிலேயே கதைகள் எழுதுவதிலும் ஆர்வமாக இருந்தார். நாவல், கவிதை, நாடகம், என்றெல்லாம் எழுதியிருந்தாலும் அவரின் தேவதைக் கதைகளுக்காகவே கொண்டாடப்படுகிறார். தி எம்பரர்ஸ் நியூ குளோத்ஸ், தி லிட்டில் மெர்மெய்ட். தி நைட்டிக்கேல், தி ரெட் ஷூஸ், தி ஸ்நோ கியூன், தி அக்லி டக்லிங், தி லிட்டில் மேட்ச் கேர்ள் போன்ற கதைகளை எல்லோரும் படித்து மகிழ்கின்றனர். தமிழ் உட்பட  நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஆண்டர்சனின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தி எம்பரர்ஸ் நியூ குளோத்ஸ் (சக்கரவர்த்தியின் புதிய ஆடைகள்) எனப்படும் சிறுகதை ஆண்டர்சனின் ஆகச் சிறந்த கதையாகப் பாராட்டப்படுகிறது. தன் நாட்டு மக்களின் வாழ்நிலை குறித்து சிறிதும் கவலைப்படாமல் ஆடம்பரமான வாழ்க்கை வாழும் ஒரு சக்கரவர்த்தியின் கதையிது. விதவிதமான பகட்டான ஆடைகளை உடுத்துவது அவனது பொழுதுபோக்கு. சிறந்த சக்கரவர்த்திகள் ராஜ்யசபையில் தான் பெரும்பான்மை நேரத்தைக் கழிப்பார்கள். ஆனால் இச்சக்கரவர்த்தி எப்போதும் டிரஸ்ஸிங் அறையிலேயே தன்னுடைய நேரத்தைக் கழித்தான். ஆடம்பரமான ஆடைகளை அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னுடைய அழகைத் தானே கண்டுகளிப்பதுதான் அவனின் ஒரே விருப்பம். 

சக்கரவர்த்தியின் பலவீனத்தை நன்கு தெரிந்த இரண்டு ஏமாற்றுப் பேர்வழிகள் சக்கரவர்த்தியை ஏமாற்றிப் பணத்தை அள்ள நினைத்தனர். தங்களால் மிக நேர்த்தியான ஆடையை நெய்ய முடியும் என்றும். அவர்கள் நெய்யும் ஆடை மிக மென்மையானதாகவும். அழகிய வேலைப்பாடுடனும். கண்ணைப் பறிக்கும் வண்ணத்துடனும் இருக்கும் என்றும் சொல்லி சக்கரவர்த்தியை எளிதில் ஏமாற்றினர். ஆடையைப் பிண்ணிட விலை உயர்ந்த இழைகளும், தங்கம், வெள்ளி ஜரிகைகளும் வாங்க வேண்டும் என்று சொல்லி நிறையப் பணம் வாங்கிக் கொண்டனர். அவர்கள் நெய்யும் ஆடை முட்டாள்களின் கண்களுக்குத் தெரியாது என்றும்; அதேபோல் எவனொருவன் கண்களுக்கு நாங்கள் நெய்யும் ஆடை தெரியவில்லையோ அவன் தான் வகிக்கும் வேலைக்குத் தகுதியற்றவன் ஆவான் என்றும் சொன்னார்கள். தில்லுமுல்லு செய்பவர்களை நம்பி பொன்னும், பொருளும் கொடுத்து சக்கரவர்த்தி ஆடையை நெய்யச் சொன்னான். இல்லாத இழையை தறியில் பூட்டி இல்லாத ஆடையை நெய்வது போல் பாசாங்கு செய்யத் தொடங்கினர். சக்கரவர்த்தி தன்னுடைய ஆகச் சிறந்த அமைச்சரை அனுப்பி ஆடை நெய்யும் வேலை எப்படி நடக்கிறது என்று பார்த்துவரச் சொன்னான். நெசவாளர்களைப் பார்வையிட அமைச்சர் வருகிறார். தறியில் நூல்களே ஏற்றப்படாமல் இருப்பது கண்டு திகைக்கிறார். ஆனால் இரு மோசடிக்காரர்களும் அமைச்சரிடம்என்ன, அமைச்சரே! சக்கரவர்த்தியின் ஆடை எவ்வளவு பளபளக்கிறது என்று பார்த்தீர்களா? வடிவம், வண்ணம் எல்லாம் கண்டு களித்தீர்களா?” என்று கேட்டதும்ஆமாம்! ஆமாம்! அருமை! அழகு! தொடர்ந்து வேலை செய்து முடியுங்கள்என்று சொல்லி நகர்கின்றார். சக்கரவர்த்தியிடம் வந்து ஆடை அற்புதம், அதிசயம் என்றெல்லாம் புகழ்கிறார்.

இறுதியில் ஆடையை நெய்து முடித்துவிட்டதாகச் சொல்லி சக்கரவர்த்திக்கு இல்லாத ஆடையை மாட்டிவிடுவது போல் நடிக்கிறார்கள். கண்ணாடி முன் சக்கரவர்த்தி ஆடை ஏதுமின்றி நிர்வானமாக நிற்கிறான். இருந்தாலும் ஆடை தன் கண்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னால் முட்டாளாகிவிடுவோம் என்பதை நினைத்துஆகா! ஆடை அருமையாக உள்ளதே!” என்கிறான் சக்கரவர்த்தி. ஊர்வலம் புறப்படுகிறது. அனைத்து அமைச்சர்களும்,  அதிகாரிகளும் வழியெங்கும் நின்று நிர்வானமாக நடந்து செல்லும் சக்கரவர்த்தி அணிந்திருக்கும் ஆடை அழகு! அருமை! என்று சொல்லி கைதட்டிப் பாராட்டுகிறார்கள், தெருவின் நடுவில் இருந்து சக்கரவர்த்தியைப் பார்க்கும் குழந்தை ஒன்று, “அய்யய்யோ! சக்கரவர்த்தி ஆடை ஏதுமின்றி வருகிறார் என்று சொல்லி கண்களை மூடிக்கொள்கிறது. சக்கரவர்த்தி திடுக்கிடுகிறார் என்று கதை முடிகிறது.

நகைச்சுவை மிளிரும் இக்கதை வழி ஆண்டர்சன் குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற மனதை உணர்த்துகிறார். உண்மை தெரிந்தும் சொல்லத் தைரியமில்லாத கோழைகளான அமைச்சர்களின் கபடத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்ற உலக நியதியையும், நாட்டு மக்களின் மீது அக்கறையில்லாமல் ஆடம்பர வாழ்க்கை வாழும் சக்கரவத்தியினால் நாட்டுக்கு எவ்வளவு கேடு என்ற உண்மையையும் உணர்த்தி வெற்றி அடைகிறார் ஆண்டர்சன்.

தீக்குச்சியுடன் ஒரு சிறுமி’ (தி லிட்டில் மாட்ச் கேர்ள்) எனும் கதையில் ஆண்டர்சன் ஓர் எழைச் சிறுமியின் கனவுகளையும், கனவின் இறுதியில் அவளின் மரணத்தையும் சித்தரிக்கிறார். ஏழ்மையும், குளிரும் அவளை வாட்டி வதைக்கிறது. புத்தாண்டு பிறக்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றன. கைகளில் தீப்பெட்டிகளை எடுத்துக் கொண்டு விற்பதற்காகத் தெருவில் அலைகிறாள் அச்சிறுமி. இதுவரை ஒரு தீப்பெட்டி கூட விற்கவில்லை. தீப்பெட்டிகளை விற்காமல் வீடு திரும்பினால் அவள் அப்பா அடிப்பார். ஊரெங்கும் ஒரே கொண்டாட்டம்! சிறுமியோ குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறாள். குளிரிலிருந்து தப்பிக்க ஒரு தீக்குச்சியை கொளுத்துகிறாள். கொழுந்துவிட்டு எரிகிறது. வெளிச்சத்தில் குளிர்காயும் அடுப்பு ஒன்று அவள் கண்களுக்குப் புலப்படுகிறது. அந்த சுகம் ஒரு சில வினாடிகளே. தீக்குச்சி அணைந்ததும் மீண்டும் உறையவைக்கும் குளிர் வாட்டுகிறது. இரண்டாவது தீக்குச்சியை கொளுத்துகிறாள். ஒரு மேஜை நிறைய புத்தாண்டு பலகாரங்கள் காட்சி அளிக்கின்றன. சாப்பிட முடியவில்லை. ஆனால் கண்டு களிக்கிறாள். அதுவும் ஒரு நொடிதான். தீக்குச்சி அணைந்து விடுகிறது. காட்சி மறைந்துவிடுகிறது. அடுத்த கூச்சியை கொளுத்துகிறாள். இந்த முறை ஒரு அழகிய வீடு; கிறிஸ்துமஸ் மரமும் அதனைச் சுற்றி அழகிய விளக்குகளும் ஏற்றப்பட்டு மிளிர்கின்றது. தீக்குச்சி அணையும் போது வானிலிருந்து ஒரு நட்சத்திரம் கீழே விழுவதைப் பார்க்கிறாள். வானில் நட்சத்திரம் ஒன்று கீழே விழுந்தால் ஏதோ ஒரு உயிர் பிரிந்து மேலே செல்லும் என்று அன்புக்கினிய அவள் பாட்டி சொன்னது நினைவுக்கு வருகிறது. அடுத்த குச்சியை எடுத்துக் கொளுத்துகிறாள். இம்முறை அவளின் பாசமிகு பாட்டியே கண்களில் தெரிகிறாள். பாட்டி தன் கண்களில் இருந்து மறைந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொன்றாக அனைத்துக் குச்சிகளையும் எரித்துவிடுகிறாள். பாட்டியின் அரவணைப்பில் அவள் மேலே மேலே செல்கிறாள். அந்த சொர்க்கத்தில் வலியில்லை, பசியில்லை, கொடிய குளிரில்லை. மறுநாள் காலையில்; புத்தாண்டு நாளில் ஒரு சிறுமி குளிரில் நடுங்கியபடி இறந்துகிடப்பதை ஊர் மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் அறிய மாட்டார்கள் சிறுமி கண்ட கனவுகளை. அவள் பாட்டியுடன் சொர்க்கத்துக்குப் பறந்து சென்றதை என்று கதையை உணர்ச்சிப் பொங்கிட முடிக்கிறார் ஆண்டர்சன்.

                     ----------------------------------

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...