இந்தி புனைவிலக்கிய முன்னோடி – முன்ஷி பிரேம்சந்த்.
முன்ஷி பிரேம்சந்த் இந்தி புனைவிலக்கிய முன்னோடியாகத்
திகழ்ந்தார். தன்பத் ராய் என்ற
இயற்பெயர் கொண்ட பிரேம்சந்த் இந்தி, உருது இரு மொழிகளிலும் எழுதி
இந்தியா முழுவதும் அறியப்பட்ட எழுத்தாளராக வலம் வந்தார்.
காந்தியத்தில் தீவிர பற்றுக் கொண்டிருந்த பிரேம்சந்த், காந்தியின் வேண்டுகோளை ஏற்றுத் தன்னுடைய
அரசுப் பணியைத் துறந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஆழ்ந்த ஈடுபாடு
கொண்டிருந்ததால் காவல்துறையின் கண்காணிப்பிலேயே இருந்தார். காலனிய
ஆட்சியும், நிலப்பிரபுத்துவமும் ஏழை எளிய மக்களைச் சொல்லொண்ணா
துயரத்திற்கு ஆளாக்கியதை தன் சிறுகதைகளில் சித்தரித்தார். ஒரு
விதவையைத் திருமணம் செய்து தன்னுடைய கதைகளில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் சமூகச் சீர்திருத்தத்தை
உயர்த்திப்பிடித்தார்.
‘சேவா சதன்’, ’நிர்மலா’, ‘கர்மபூமி’, ’ரங்கபூமி’, ‘கோதான்’,
போன்ற பன்னிரண்டு சிறந்த நாவல்களை எழுதியதனால் ’உபன்யாஸ் சாம்ராட்’ (நாவல்களின் மாமன்னர்) என்றழைக்கப்பட்டார். ’சேவா சதன்’ நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டுப் பிரபல்யமடைந்தது. எம்.எஸ்.சுப்புலட்சுமி முக்கியக்
கதாபாத்திரம் ஏற்று நடித்தார். ஜமீன்தார்களுக்கு ஆசைநாயகியாக
வாழவிதிக்கப்பட்ட பெண் ஒருத்தி மனந்திருந்தி, குழந்தைகள் நல்வாழ்வுக்கான
நிலையத்தை நடத்தித் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறாள். 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், சில நாடகங்கள் எழுதியதுடன் ஏராளமான
ஆங்கில நூல்களை இந்தியில் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார்.
பிரேம்சந்தின் ’ஈத்கா’ சிறுகதை ஏழைச் சிறுவன் ஹமீது
தன் பாட்டியின் மீது காட்டும் பாசத்தை உணர்ச்சிப் பூர்வமாகச் சித்தரிக்கிறது.
தன் பெற்றோர்களை இழந்த ஹமீது பாட்டி அமீனாவின் அரவணைப்பில் வளர்கிறான்.
அன்று ஈத்கா பண்டிகை. வறுமையின் கோரப்பிடியில்
சிக்கித்தவிக்கும் அமீனா செய்வதறியாது திகைத்து நிற்கிறார். குழந்தை
ஹமீதுக்குப் புத்தாடை கொடுக்க முடியாவிட்டாலும் பாயசமாவது செய்து கொடுக்க நினைக்கிறார்.
அதுக்கும் வசதியின்றிக் கண்ணீர் மல்கப் புலம்புகிறார். ஹமீதின் நண்பர்கள் முகம்மது, ஷாமி, நூரி, மோஷின் எல்லோரும் புத்தாடை உடுத்தி வருகிறார்கள்.
ஊருக்கு வெளியே மைதானத்தில் தொழுகை; தொழுகைக்குப்பின்
கொண்டாட்டம். நண்பர்கள் எல்லாம் தந்தையுடன் வரும்போது ஹமீது மட்டும்
தனியே வருகிறான்.
தொழுகை முடிந்ததும் சிறுவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்
திளைக்கிறார்கள். தங்களிடம்
இருக்கும் பணத்தில் தங்களுக்கு வேண்டிய பொம்மைகளை, இனிப்புகளை
வாங்குகிறார்கள். ராட்டினத்தில் சுற்றுகிறார்கள். ஆனால் ஹமீதுவிடம் இருந்தது மூன்று பைசாக்கள் மட்டுமே இந்தக் குறைந்த காசுக்கு
எதையும் வாங்கமுடியவில்லை. எனவே மற்றவர்களை வேடிக்கை பார்த்ததோடு
சரி. அங்கு வீட்டு உபயோகப் பொருட்களும் விற்பனையாகிக் கொண்டிருந்தன.
ஹமீதின் நண்பர்கள் எல்லாம் உடனே கடந்து சென்று விடுகிறார்கள்.
இரும்பில் வார்த்த இடுக்கி ஹமீதின் கண்களில்படுகிறது. இடுக்கி இல்லாமல் சப்பாத்தி சுடும்போது பாட்டி கைவிரல்களைச் சுட்டுக்கொள்வது
ஹமீதின் மனதில் நிழலாடுகிறது. கடைக்காரர் இடுக்கியின் விலை ஐந்து
காசுகள் என்கிறார். விலையைக் குறைத்துக் கேட்கப்
பயந்து ஹமீது மெல்ல நகர்கிறான். கடைக்காரர் நல்ல மனதுடன் ஹமீதிடம் இருக்கும் மூன்று காசுகளைப் பெற்றுக்கொண்டு
இடுக்கியை அவனிடம் கொடுக்கிறார். ஹமீது மன நிறைவுடன் வீட்டுக்குப்
புறப்படுகிறான். வழியில் நண்பர்கள் எல்லாம் அவரவர் வாங்கிய பொருட்கள் குறித்துப் பெருமைப்படுகிறார்கள். அனைவரும் ஹமீத் வாங்கிய இடுக்கியைப்
பார்த்து கேலி செய்கிறார்கள்.
இடுக்கியைப் பாட்டியிடம் கொடுக்கிறான் ஹமீது. பாட்டிக்கு ஆச்சரியம். ஏதேனும் பலகாரம் வாங்கித் தின்றிருக்கலாமே” என்கிறார். பாட்டியின் கை விரல்களில்
காணப்படும் வடுக்களைத் தடவிக்கொடுத்து. “பாட்டி இனிமேல் நீங்கள்
சப்பாத்தி சுடும்போது கை விரல்களைச் சுட்டுக்கொள்ள வேண்டியதில்லை என்றதும்
அமீனா பாட்டி அவனை உச்சிமுகர்ந்து கட்டித் தழுவிக்கொள்கிறார். இளமையில் வறுமை எவ்வளவு கொடியது என்பதுடன்
சிறுவன் ஹமீதின் பாசத்தையும், அறிவையும் ஒரு சேரக் காட்டி வாசகர்களை
நெகிழச் செய்கிறார் பிரேம்சந்த்.
’உப்பு வரி வசூல் ஆய்வாளர்’ சிறுகதை மற்றுமொரு பிரேம்சந்த்தின்
காத்திரமான படைப்பாகும். சமூகத்தில் புரையோடிப் போயுள்ள ஊழல்
குறித்தும் பிரேம்சந்த் இக்கதையில் பகடி செய்கிறார். இக்கதையில்
உப்பு வரி ஆய்வாளராக வரும் வன்சிதர் ஒரு நேர்மையான அதிகாரி. உப்பு
உற்பத்தி, வணிகம், விநியோகம் என்று அனைத்திலும்
காலனிய அரசு தலையிட்டுச் சமையலுக்கு அன்றாடம் தேவைப்படும் உப்பை அரிய
பொருளாக்கி ஏழை மக்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்கியது. ஆங்கிலேய அரசின் எண்ணற்ற சுரண்டல்களில்
உப்பு வரியும் ஒன்றாகும். நாட்டின் குறுக்கிலும், நெடுக்கிலும் உப்புவேலி அமைத்து அதன் வணிகத்தில் பெருமளவில் தலையிட்டது பிரிட்டிஷ்
அரசு. உப்பு வேலியைக் கண்காணிக்க அதிகாரிகள் பணியிலமர்த்தப்பட்டனர்.
அதிக அதிகாரங்கள் படைத்த இவ்வதிகாரிகள் வணிகர்களிடமிருந்து லஞ்சம் பெற்று
குபேரர் ஆனார்கள்.
நேர்மையான அதிகாரியான வம்சிதர் செக்போஸ்ட்டில் வரி
கட்டாமல் வரும் ஊரின் மிகப் பெரிய வணிகரான பண்டிட் அலோப்பிடினுக்குச் சொந்தமான வண்டிகளைத்
தடுத்து நிறுத்தி விடுகிறார். பண்டிட் நேரில் வந்து வம்சிதரிடம் பேசுகிறார். மிரட்டுகிறார்.
லஞ்சம் தருவதாக ஆசை காட்டுகிறார். எதற்கும் வம்சிதர்
மசியவில்லை. வழக்கு நீதிமன்றம் செல்கிறது. வழக்கில் வணிகரின் செல்வாக்குப் புலப்படுகிறது. அனைவரும்
பண்டிட்டுக்கு ஆதரவாகவே சாட்சி சொல்கிறார்கள். வழக்கில் பண்டிட்
வெற்றி பெறுகிறார். நேர்மையுடன் பணிபுரிந்த வம்சிதர் தண்டிக்கப்படுகிறார்.
வேலையை இழக்கிறார். வழக்கில் தோற்றுப்போனாலும்
நியாயத்தின்பால் இறுதிவரை நின்ற பெருமிதத்துடன் வம்சிதர் வீடு திரும்புகிறார்.
ஆனால் வீட்டில் யாரும் அவரைப் பாராட்டவில்லை. அப்பா,
அம்மா மனைவி என அனைவரும் அவரை நிந்திக்கிறார்கள். அவரவருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போன ஆத்திரம் அவர்களுக்கு.
திடீரென்று ஒரு நாள் வம்சிதரைப் பார்க்க பண்டிட் அலோப்பிடின்
வருகிறார். “நான் என் வாழ்நாளில்
எத்தனையோ அதிகாரிகளைப் பார்த்துள்ளேன். ஆனால் உங்களைப் போன்ற
இப்படியரு நேர்மையான அதிகாரியைக் கண்டதில்லை. எனது வேண்டுகோளை
நீங்கள் நிறைவேற்ற வேண்டும். என்னுடைய சொத்து, தோட்டம், வீடு, வணிகம் அனைத்தையும்
பராமரிக்க ஒரு நேர்மையான நபரைத் தேடி அலைகிறேன். அந்த நேர்மையான
நபர் நீங்கள் தான். தயவுசெய்து என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்களுக்கு நிறையச் சம்பளத்துடன், தங்குவதற்குப் பங்களா,
போக்குவரத்திற்கு வாகனங்கள், வேலைக்கு ஆட்கள் என்று
அனைத்து வசதிகளையும் செய்து தருகிறேன்”
என்று சொல்லிக் கெஞ்சுகிறார். பண்டிட் அன்புடன் வேண்டிக் கேட்பதை வம்சிதரால்
மறுக்க முடியவில்லை. நேர்மையே
வெற்றிக்கான மிகச் சிறந்த பாதை எனும் ஆங்கிலப் பழமொழி (Honesty is the best
policy) என்பது வெறும் முழக்கம் அல்ல என்பதை இக்கதை மூலம் பிரேம்சந்த்
உறுதிப்படுத்துகிறார்.
-----------------------------------------
Comments
Post a Comment