Skip to main content

கோமகட்டா மாரு - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் சோகமானதொரு பயணம்

 

நூல் அறிமுகம்

’கோமகட்டா மாரு’ - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் கனடாவுக்கு மேற்கொண்ட சோகமானதொரு பயணத்தின் வரலாறு

பெ.விஜயகுமார்

 

‘கோமகட்டா மாரு’ எனும் ஜப்பானியக் கப்பலில் குடிபெயர்ந்து வாழ்வதற்காக கனடாவிற்குச் சென்ற இந்தியர்கள் சிலரின் தோல்விப் பயணத்தை மல்விந்தர்ஜித் சிங்கும், குருதேவ் சிங் சித்தும் இணைந்து எழுதியுள்ள இந்நூல் விவரித்துச் சொல்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடத்திய மிகக் கொடூரமான வன்முறை அமிர்தசரஸ் நகரில் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பதறிவோம். நானூறுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றிக் கொல்லும் வகையில், ஜெனரல் டையர் என்ற வெள்ளைக்கார இராணுவ அதிகாரி நிகழ்த்திய கோரத் தாண்டவத்தை வரலாறு என்றென்றும் மறக்காது.

அதற்குச் சற்றும் குறையாத வன்முறை கனடாவிற்கு இந்தியர்கள் மேற்கொண்ட பயணத்தின்போதும் நிகழ்ந்துள்ளது. ஹாங்காங் நகரிலிருந்து 376 இந்தியர்கள் குர்தித் சிங் தலைமையில் கனடாவின் வான்கூவர் சென்றடைந்தனர். அப்போது அவர்கள் பயணித்துச் சென்ற ‘கோமகட்டா மாரு’ கப்பலை நங்கூரமிட கனடா அரசு அனுமதிக்கவில்லை. அன்றைய பிரிட்டிஷ் காலனியான கனடா அரசு தனது புதிய குடியுரிமைக் கொள்கையின் அடிப்படையில், கப்பலைவிட்டுக் கீழே இறங்கவிடாமல் அந்தப் பயணிகளை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பியது. அந்தச் சோக வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது.    

ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் கனடாவில் வெள்ளையர்கள் குடியேறினர். சீனா, ஜப்பான், இந்தியா போன்ற ஆசிய நாட்டு மக்களும் அவர்களைப் போலவே தங்களுக்கான வாழ்வைத் தேடி கனடா நோக்கிப் பயணித்தனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான சீக்கியர்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து சென்றனர். இந்தியர்களின் வருகையைத் தடுக்க விரும்பிய கனடா அரசு, எந்தவொரு நாட்டிலிருந்தும் நேரடியாக வரும் பயணிகள் மட்டுமே கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்பதாக தனது குடியேற்றச் சட்டத்தைத் திருத்தியமைத்தது. இந்தியாவிலிருந்து நேரடியாக எந்தவொரு கப்பலும் அப்போது கனடாவுக்குச் செல்லவில்லை என்பதை அறிந்தே அதுபோன்றதொரு மாற்றத்தை கனடா அரசு கொண்டு வந்தது.  

இந்தியாவிலிருந்து புறப்படாமல் ஹாங்காங் நகரத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற காரணத்தால், குர்தித் சிங் தலைமையில் புறப்பட்டுச் சென்ற ’கோமகட்டா மாரு’ கப்பலுக்கு, கனடாவின் வான்கூவர் நகரில் நங்கூரமிட அனுமதி தரப்படவில்லை. கப்பலில் இருந்த சீக்கியர்களைக் கண்டு கனடா அரசு அஞ்சியது. அது இந்திய விடுதலைப் போராட்டத்தில் சீக்கியர்கள் மிகுந்த எழுச்சியுடன் போராடிய காலமாகும். கடார் என்ற விடுதலை இயக்கத்தை சீக்கியர்கள் தீரத்துடன் நடத்தி வந்தனர்.  பெருவணிகராக இருந்த குர்தித் சிங் தீவிரமான தேச பக்தராகவும் இருந்தார். கடார் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த அவருக்கு, கனடாவில் இருந்த கடார் இயக்கத்துடனும் தொடர்பு இருந்தது. அவருடன் பயணித்துச் சென்ற  376 பேரும் விடுதலைப் போராளிகள் அல்ல. கனடாவுக்குப் புலம் பெயர்ந்து வாழ விரும்பியவர்களே அவர்களில் அதிகம் இருந்தனர். பஞ்சாபில் கடும் நில வரியை ஆங்கிலேய அரசு விதித்தது. அதன் காரணமாக விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். தங்ளை வாட்டிய வறுமையிலிருந்து தப்பிக்க, இத்தகு நீண்ட பயணத்தை மேற்கொண்டு தொலைதூர நாட்டிலே புது வாழ்வைத் தொடங்கிட அவர்கள் தயாராயினர்.

கடார் இயக்கத்தினர் தீவிரத்துடன் போராடிய அதே அளவிலே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய இந்திய அதிகாரிகளின் தீவிரக் கண்காணிப்பும்  இருந்தது. இந்தியாவிலிருந்து கனடாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பியவர்கள் விடுதலை வேட்கையுடன் போராளிகளாகத் திரும்பி வந்ததைக் கவனித்த பிரிட்டிஷ் அதிகாரிகள்  பதற்றமடைந்தனர். அரசு உளவாளிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் குர்தித் சிங் இருந்தார். கோமகட்டா மாரு கப்பலை ஜப்பானிய உரிமையாளர்களிடமிருந்து வாடகைக்கு அமர்த்தும்போது,  ஹாங்காங்கிலேயே போதிய ஆட்கள் வந்து சேருவார்கள் என்று குர்தித் சிங் கருதினார். ஆனால் புறப்படத் தயாராக இருந்தவர்களை, ‘இது ஆபத்தான பயணம்’ என்று ஒருசிலர் எச்சரித்து அச்சமடையச் செய்ததால், பயணத்திற்காக வந்து சேர்ந்த ஆட்களின் எண்ணிக்கை குறைந்தது. ஷாங்காய், யோகோகஹாமா ஆகிய இடங்களில் நின்று, மேலும் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு கனடாவின் வான்கூவர் நோக்கி அந்தக் கப்பல் புறப்பட்டது. சீக்கியர் 337 பேர், இஸ்லாமியர்கள் 27 பேர், இந்துக்கள் 12 பேர் என்று மொத்தம் 376 பேர் கப்பலில் இருந்தனர். குர்தித் சிங்கின் பனிரெண்டு வயது மகன் பல்வான் சிங்கும் அவருடன் பயணித்தான். பயணத்தின்போது அந்தக் கப்பலில், சில தலைவர்கள் இந்திய விடுதலை குறித்த வீர உரைகளை ஆற்றினர். கடார் இயக்கத்தின் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 

1914 ஏப்ரல் பதினான்காம் நாள் ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட கப்பல் மே மாதம் 23ஆம் நாள் வான்கூவர் சென்றடைந்தது. கப்பலிலிருந்து இறங்கி கனாடாவில் புது வாழ்வு தொடங்கலாம் என்று மகிழ்ச்சியுடன் இருந்த பயணிகளுக்கு கனடா அதிகாரிகளின் தடை உத்தரவு இடியென இறங்கியது. பயணிகள் யாரும் கீழிறங்கக் கூடாது என்றனர். கப்பலிருந்து யாரும் இறங்கிடாதிருக்கும் வகையில் கனடா இராணுவத்தினர் காவலில் இருந்தனர். இந்தியர்களை வரவேற்க கனடா வாழ் இந்தியர்கள் துறைமுகத்தில் திரண்டனர். கனடாவில் இருந்த  கடார் இயக்கத் தலைவர்களான பகவான் சிங், பர்கத்துல்லா மற்றும் வான்கூவர் நகர் குர்துவாராவின் தலைவர் கியானி ஆகியோர் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். துறைமுகத்தில் கூட்டம் அலைமோதியது. செய்தி அறிந்து கனடாவிலும், பல அமெரிக்க நகரங்களிலும் இந்தியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டாங்கள் நடந்தன.  

கப்பலுக்கான இரண்டாவது தவணை வாடகையைச் செலுத்தவும், கப்பலில் இருக்கும் பயணிகளுக்குச் சாப்பாடு கொடுக்கவும் பணம் தேவைப்பட்டது. வான்கூவர் நகரில் நிவாரணக்குழு அமைக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது. அமைதியை இழந்த பயணிகள் ஆத்திரத்தில் இராணுவத்துடன் மோதினர். இராணுவத்தினர் கப்பலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். உடனே வான்கூவர் நகரத்தில் கலகம் வெடித்தது.  ஹாப்கின்சன் என்ற கனடா அதிகாரி கொல்லப்பட்டார். போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் இருபது பேரைக் கலகக்காரர்கள் கொன்றனர். வழக்குரைஞரை நியமித்து வழக்குத் தொடுக்கப்பட்டது. கப்பல் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படும் என்றும், கப்பலில் இருந்த இருபது பயணிகளுக்கு மட்டும் அடைக்கலம் அளிக்கப்படும் என்றும், கப்பலில் இந்தியா திரும்பும் பயணிகளுக்கான உணவினை கனடா அரசே வழங்கிடும் என்றும் இறுதியில் முடிவானது. அடைக்கலம் அளிக்கப்பட்ட இருபது பேர் ஏற்கனவே கனடாவில் வாழ்ந்து வந்தவர்கள். தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து தாயகம் திரும்பியவர்கள். அவர்களை மட்டும் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து கொள்ள கனடா அரசு அனுமதி அளித்தது. கோமகட்டா மாரு கப்பல் போதுமான அளவு உணவை ஏற்றிக் கொண்டு இந்தியாவை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கியது.   

அந்தக் கப்பல் 1914 செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் இந்தியாவிற்குத் திரும்பி வந்து சேர்ந்தது. கல்கத்தா துறைமுகத்தில் கப்பலை நிறுத்த பிரிட்டிஷ் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். கல்கத்தாவில் நிறுத்தினால் கலகம் பெரிதாகும் என அஞ்சினர். கல்கத்தா நகருக்கருகில் இருக்கும் பட்ஜ் பட்ஜ் எனும் சிறு துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டது. கப்பலுக்குள் நுழைந்து சுங்கத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், இராணுவத்தினர் என்று பலரும் சோதனைகளை மேற்கொண்டனர்.

பயணிகள் பஞ்சாப் செல்வதற்கான  ரயில் பட்ஜ் பட்ஜ் நகரிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. கப்பல் பயணிகள் ரயிலில் ஏற மறுக்கின்றனர். கலகம் வெடிக்கிறது. இருபது பயணிகள் கொல்லப்படுகிறார்கள். 201 பேர் கைது செய்யப்படுகின்றனர். குர்தித் சிங் உட்பட சில பயணிகள் தப்பிச் சென்று விடுகின்றனர். மற்றவர்கள் ரயிலில் ஏற்றப்பட்டு பஞ்சாபில் விடுவிக்கப்படுகின்றனர். குர்தித் சிங் எட்டாண்டு காலம் திரைமறைவில் வாழ்கிறார். அண்ணல் காந்தியைச் சந்திக்கிறார் அவரின் சொல்லுக்குப் பணிந்து சரணடைகிறார்.

இன்றைக்கு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற சுதந்திர நாடாக, ஜனநாயகம், மனித உரிமைகள் போன்ற விழுமியங்களை மதிக்கின்ற நாடாக கனடா திகழ்கிறது. கோமகட்டா மாரு கப்பலில் பயணித்து கனடாவில் வாழ்வதற்காக வந்த மக்களைத் திருப்பி அனுப்பிய குற்றத்தை அது ஏற்றுக் கொண்டுள்ளது. இழைத்த அநீதிக்காக முதலில் வான்கூவர் நகரக் கவுன்சிலும், பின்னர்  வான்கூவர் நகரை உள்ளடக்கிய பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலச் சட்டமன்றமும், பின்னர் கோமாகட்டா மாருவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின்போது கனடா அரசும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டன.

இந்நிகழ்வினைச் சித்தரித்து ’ஜீவன் சங்கராம்’ என்ற இந்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சேரான் போலாக் என்ற கனடா நாட்டின் நாடக இயக்குநர் இத்துயர நிகழ்வு குறித்த நாடகத்தை கனடாவின் பல நகரங்களிலும் அரங்கேற்றியுள்ளார். கோமகட்டா மாரு தியாகத்தைக் கருப்பொருளாக்கி  கனடாவின் எழுத்தாளர் ஜெஸ்ஸி திண்டு 2001இல் ‘Lions of the Sea’ என்ற நாவலை ஆங்கிலத்தில்  எழுதியுள்ளார். 2006இல்   ’Can you Hear the Night Bird Call?’ என்ற நாவலை அனிதா ராம் பதாமி எழுதியுள்ளார்.

பட்ஜ் பட்ஜ் துறைமுகத்தில் கோமகட்டா மாரு தியாகிகளுக்கான  நினைவுச் சின்னத்தை  1952ஆம் ஆண்டு இந்திய அரசு எழுப்பியது. சீக்கியர்களின் அடையாளமான கிர்பான் வடிவில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை பண்டிட் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். கனடாவின் வான்கூவர் நகரின் குர்துவாராவிலும், துறைமுகத்திலும் கோமகட்டா மாரு தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் எழுப்பட்டுள்ளது. கனடாவின் சர்ரி நகரத்தின் ஒரு தெருவுக்கு கோமகட்டா மாரு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் என்று அனைத்து மதத்தினரும் இந்திய விடுதலைப் போரில் அளப்பரிய தியாகங்களைச் செய்துள்ளனர். போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகள் பலரும் வரலாற்றின் பக்கங்களில் இடம் பெறாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வரலாற்றில் இடம் பெறச் செய்வோம்.

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...