கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை – ஓர் எளிய அறிமுகம்
கார்ல் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து 1848இல் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உலகின் அனைத்து மொழிகளிலும் படிக்கக் கிடைக்கும் மிக முக்கியமான ஆவணமாக அறியப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய வேலைத் திட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. கம்யூனிசத்தை நோக்கிய மனித குலத்தின் வரலாற்றுப் பயணத்தை மார்க்சியம் இந்த அறிக்கை மூலம் துவக்கி வைத்தது. ஜனநாயகத்துக்கும், சோசலிசத்துக்குமான புரட்சிகளின் சகாப்தம் இதிலிருந்தே துவங்கியது. பைபிள், குர்ஆன் ஆகிய மதநூல்களுக்கு அடுத்தபடியாக உலக மக்களின் கைகளில் அதிகம் தவழ்ந்திடும் அரசியல் ஆவணமாக இக்குறுநூல் திகழ்கிறது. ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் உழைப்பாளிகள் ’கம்யூனிஸ்ட் லீக்’ எனும் கட்சியை 1847இல் உருவாக்கினார்கள். வர்க்கப் பிரிவினைகளும், தனிச் சொத்துரிமையும் இல்லாத ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதே கட்சியின் நோக்கமாகும். லண்டனில் கூடிய கம்யூனிஸ்ட் லீக் செயல்பாட்டிற்கான ஒரு கையேடு தயாரிக்க வேண்டும் என்று 1847இல் முடிவெடுத்தது, இப்பணியை மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரிடமும் ஒப்படைத்தது. இருவரும் செவ்வனே பணியாற்றி பிப்ரவரி 1848இல் உலகம் போற்றும் இவ்வறிக்கையை ஜெர்மன் மொழியில் எழுதி உலகை பிரமிப்பில் ஆழ்த்தினர். மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தை எழுத்து வடிவில் வெளிக்கொணர்ந்த முதல் முயற்சியாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை திகழ்கிறது.
மார்க்சும், எங்கெல்சும் உலகக் கண்ணோட்டத்தை நோக்கி அறிக்கை எழுதுவதற்கு முன்பே தனித்தனியாக எழுத்துலகில் பயணிக்கத் தொடங்கியிருந்தனர். மார்க்சின் பயணம் 1843இல் “ஹெகலின் தத்துவத்தின் விதிகள் மீதான விமர்சனத்திற்கான பங்களிப்பு” என்ற புத்தகத்திலிருந்தும், எங்கெல்சின் பயணம் 1844இல் அவர் எழுதிய ”இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை” என்ற புத்தகத்திலிருந்தும் தொடங்கின. இருவரும் இணைந்து எழுதிய ‘ஜெர்மன் தத்துவஞானம்’ (German Ideology) புத்தகமும் கம்யூனிஸ்ட் அறிக்கைக்கான அடித்தளத்தை அமைத்தது. இதுவொரு அறிக்கை என்பதால் சுருக்கமாகவும், அதே சமயத்தில் வீரியத்துடனும் எழுதப்பட்டது. சமூக மாற்றத்திற்கான புரட்சிகர நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டியிருந்தது.
மார்க்ஸ்- எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து எழுதிய ஆவணம் என்றாலும் இதில் மார்க்சின் பங்கு அதிகம். இவ்வறிக்கையை தன்னுடைய முப்பது வயதில் மார்க்ஸ் உலகுக்கு அளித்துள்ளார் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இரட்டையர்களின் கடின உழைப்பில் உருவான இந்நூலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பை 1850இல் ஹெலன் மெக்ஃப்ர்லான் கொண்டு வந்தார். தமிழில் முதன் முதலாக சுய மரியாதை இயக்கத்தின் வார ஏடான ’குடி அரசு’ அறிக்கையின் முதல் பகுதியை மட்டும் ஐந்து பகுதிகள் கொண்ட தொடராக 1931இல் வெளியிட்டது. முழுமையாக வெளியிடப்படாத காரணம் தெரியவில்லை. தொடருக்கு பெரியார் எழுதியுள்ள முன்னுரையில் பொதுவுடைமை சிந்தனை இந்தியாவில் வளராமலிருப்பது குறித்த தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். மதத்தின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் அடிமைத்தனத்தை இழிவாகக் கருதாமல் விதிப்பயன் என்று கருதுவதே காரணம் என்று கூறியுள்ளார். இஸ்மத் பாட்சாவின் மொழிபெயர்ப்பில் முழுமையான, முறையான அறிக்கையை இந்திய பொதுவுடைமைக் கட்சியின் ஜனசக்தி பிரசுராலயம் 1948இல் வெளியிட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வரலாறு, தத்துவம், பொருளாதாரம் ஆகியவற்றின் சாராம்சமாகும். வரலாற்றைப் பொருள் முதல்வாதப் பார்வையிலிருந்து விளக்குகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றை கவனத்துடன் ஆய்வு செய்து சுருக்கமாகவும் அதே நேரத்தில் முழுமையாகவும் தொகுத்துத் தருகிறது. உலக வரலாறு வர்க்கங்களுக்கிடையிலான மோதல்களின் வரலாறு என்கிறது. ஆடம் ஸ்மித், மால்தூஸ், ரிக்கார்டோ, போன்றோரின் செவ்வியல் பொருளாதாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட சோசலிச பொருளாதாரத்தை அறிக்கை முன்வைக்கிறது. மார்க்ஸ் சுட்டிக் காட்டும் சோசலிசம் அன்று பிரான்சிலிருந்த செயிண்ட் சைமன், ஃபூரியர், இங்கிலாந்தில் இருந்த ராபர்ட் ஓவன் ஆகியோரின் கற்பனாவாத சோசலிசத்திடமிருந்து வேறுபட்டிருக்கிறது.
”கம்யூனிச பூதம் ஐரோப்பாவை ஆட்டுவிக்கிறது. போப்பாண்டவர், பிரான்சின் முதலாளித்துவ வரலாற்றாசிரியர் கிஸோ, ஆஸ்திரியாவின் சான்சிலரான மெட்டர்னிக் வழிவந்த பழமைவாதிகள், ரஷ்யாவின் ஜார் மன்னர், ஜெர்மனியின் காவல்துறை ஒற்றர்கள் என்று அனைவரையும் கம்யூனிச பூதம் பிடித்தாட்டுகிறது, பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்கு கூட்டு சேர்ந்துள்ளன. இதிலிருந்து கம்யூனிசமானது ஒரு தனிப்பெரும் சக்தியாகிவிட்டதை ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டன என்பது புலனாகிறது. எனவே உலகம் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும், நோக்கங்களையும் விளக்க வேண்டிய சரியான தருணமிது” என்ற முன்னுரையுடன் அறிக்கை தொடங்குகிறது.
”முதலாளிகளும், பாட்டாளிகளும்” என்ற தலைப்பிலான முதல் பாகம் இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும் என்று குறிப்பிடுகிறது. சீமான்கள்-அடிமைகள், நிலப்பிரபுக்கள்-பண்ணையடிமைகள், கைவினைச் சங்க ஆண்டான்கள்-கைவினைப் பணியாளர்கள், முதலாளிகள்- பாட்டாளிகள், மொத்தத்தில் ஒடுக்குபவர்-ஒடுக்கப்படுவோர் இவர்களுக்கு இடையிலான மோதல்களையே வரலாறு முழுவதும் காண்கிறோம் என்கிறது.
அடுத்து முதலாளித்துவத்தின் வரலாற்றைச் சுருங்கக் கூறுகிறது. ஐரோப்பிய மாலுமிகள் கண்டுபிடித்த உலகின் புதுப்புது நாடுகளைக் காலனிகளாக்கி முதலாளித்துவம் வளர்ந்த கதையை விளக்குகிறது. தொழிற்புரட்சி, கப்பல், ரயில் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களால் உலகளாவிய சந்தை உருவானதைக் காட்டுகிறது. இதனால் உற்பத்தியிலும், அதன் பரிவர்த்தனையிலும் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றங்களைக் குறிப்பிடுகிறது. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மதத்தலைவர்கள், கவிஞர்கள், அறிவியியலாளர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் முதலாளித்துவம் தனக்குச் சேவகர்களாக மாற்றிக் கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. குடும்ப உறவுகள் சீரழிந்து பண அடிப்படையிலான உறவுகளாக மாறுவதையும், மனித உறவுகள் பாழடைந்து தன்னலம் மேலெழுந்திருப்பதையும் காட்டுகிறது. நகரங்களின் வளர்ச்சியையும், கிராமங்களின் வீழ்ச்சியையும்; உற்பத்தி அளவுக்கு மீறி வளர்ந்து பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாவதையும் சுட்டிக் காட்டுகிறது. முதலாளித்துவம் சந்தையையும், லாபத்தையும் தேடி அலைகிறது. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவுகட்டி விடவில்லை. முதலாளித்துவம் தனக்கான அழிவைத் தானே தேடிக்கொண்டுள்ளது. முதலாளித்துவத்துடன் தவிர்க்க முடியாத வளர்ச்சியாக பாட்டாளி வர்க்கம் இணைந்து வளர்வதையும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இன்றைய நாடுகளின் அரசுகள் எல்லாம் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்குமான பொது விவகாரங்களை நிர்வகிக்கும் குழுவே அன்றி வேறல்ல. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு ஆகிய நாடுகளின் சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள எண்ணற்ற, அரிய சுதந்திரங்களை எல்லாம் விட்டுவிட்டு வெட்கங்கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஓரேயொரு சுதந்திரத்தை மட்டும் முதலாளித்துவம் சிம்மாசனம் ஏற்றியுள்ளது. திரையிடப்பட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாக முதலாளித்துவ வர்க்கம் அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலைநாட்டியிருக்கிறது.
பட்டாளி வர்க்கத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் அறிக்கை விவரிக்கிறது. தொழிலாளிகளின் உழைப்பு சந்தைப் பொருளாகிறது. சுரண்டப்படுகிறது. இயந்திரமயம் உழைப்பைச் சுவையற்றதாக மாற்றுகிறது. அதிவேக இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, வேலைப் பிரிவினை, வேலைநேர அதிகரிப்பு ஆகியன பாட்டாளிகளை மேலும் அடிமைகளாக்குகின்றன. முதலாளித்துவத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் பல படிநிலைகளை விளக்குகிறது. முதலில் தொழிலாளியின் தனித்த போராட்டமாகத் தொடங்குகிறது. அடுத்து தொழிற்சங்கப் போராட்டமாக வளர்ச்சி பெறுகிறது. பின்பு அரசியல் போராட்டமாக வலுப்பெறுகிறது. இறுதியில் முதலாளித்துவம் தூக்கி எறியப்பட்டு பாட்டாளி வர்க்க யதேச்சதிகாரமாகப் பரிணமிக்கிறது. முன்பிருந்த பொருள் உற்பத்தி உறவுகளுடன் வர்க்கப் பகைமைகளும் ஒழிந்திடுகின்றன.
“கம்யூனிஸ்டுகளும், பாட்டாளிகளும்” எனும் அறிக்கையின் இரண்டாம் பாகம் கம்யூனிஸ்டுகளுக்கு ஏனைய தொழிலாளிகளுடன் இருக்க வேண்டிய உறவு குறித்துப் பேசுகிறது. கம்யூனிஸ்டுகள் பட்டாளி வர்க்க நலன்கள் குறித்து மட்டுமே சிந்திப்பவர்கள் என்கிறது. பல்வேறு நாடுகளில் தேசிய அளவில் பாட்டாளிகள் நடத்தும் போராட்டங்களும். அவை ஈட்டிடும் வெற்றிகளும் தேசியங்களுக்கு அப்பால் நிலவிடும் உலகளாவிய பாட்டாளி வர்க்க நலங்களுக்கானது என்பதைச் சுட்டிகாட்டுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும் என்கிறது. கம்யூனிஸ்டுகள் உலகெங்கிலும் தொழிலாளி வர்க்க கட்சிகளை வழி நடத்தும் உறுதிமிக்கவர்களாக விளங்குகிறார்கள் என்கிறது. பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகத் திரட்டுவதும், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும், பாட்டாளி வர்க்க அதிகாரத்தை நிறுவுவதும் கம்யூனிஸ்டுகளின் கடமை என்கிறது.
சொத்துடைமையை பொதுப்பட ஒழிப்பதல்ல, முதலாளித்துவ சொத்துடைமையை ஒழிப்பதே கம்யூனிஸத்தின் நோக்கமாகும். முதலாளித்துவ சமுதாயத்தில் கடந்த காலம் நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் புரிகிறது. கம்யூனிச சமுதாயத்தில் நிகழ்காலம் கடந்த காலத்தின் மீது ஆதிக்கம் புரிகிறது என்பதை அறிக்கை குறிப்பிடுகிறது. பாட்டாளி வர்க்கம் அரசியல் மேலான்மை பெற்ற வர்க்கமாக வளர்ந்திட வேண்டிய தேவையை அறிக்கை வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு சகாப்’தத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் அந்தத் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துகளாகத்தான் எப்போதும் இருந்துவந்துள்ளன. கம்யூனிஸப் புரட்சியானது மரபார்ந்த சொத்துடைமை உறவுகளிலிருந்து மிகவும் தீவிரமாகத் துண்டித்துக்கொண்டுவிடுகின்ற புரட்சி என்பதால் இந்தப் புரட்சியின் வளர்ச்சியின் போது மரபார்ந்த கருத்துகளிடமிருந்தும் மிகவும் தீவிரமாகத் துண்டித்துக்கொள்ளும் என்று அறிக்கை அறுதியிட்டுக் கூறுகிறது. தனி மனிதச் சுரண்டலும், நாடுகளுக்கிடையிலான சுரண்டலும் முடிவுக்கு வருகிறது. வர்க்கப் பிரிவுகள் மறைந்து வர்க்க மோதல்கள் இல்லாத உலகம் உருவாகிறது என்பதுடன் இரண்டாம் பாகம் முடிகிறது.
’சோசலிச, கம்யூனிச இலக்கியம்’ என்ற தலைப்பிலான அறிக்கையின் மூன்றாம் பாகத்தில் மற்றைய சோசலிச சித்தாந்தங்களிலிருந்து கம்யூனிசம் எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதை விளக்குகிறது. ’பிற்போக்கு, பிரபுத்துவ சோசலிசம்’ நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி முதலாளித்துவம் வளர்ச்சி பெறத் தொடங்கிய காலத்தில் புதிதாக உதித்த முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தனது குற்றச்சாட்டை முன்வைத்தது. நிலப்பிரபுக்கள் முதலாளித்துவத்தின் மீது வசைபாடினார்கள். தங்களின் சமூக அமைப்பு தவிர்க்க முடியாதபடி பெற்றெடுத்ததே நவீன முதலாளித்துவம் என்பதையே மறந்து புலம்பினார்கள். முதலாளித்துவம் பழைய சமுதாய அமைப்பு முறையினை முற்றாக வேரோடு வெட்டி விழ்த்திவிட்டதற்காக வசைபாடுகிறார்கள். மீண்டும் எழுந்து முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது என்பதறிந்து வஞ்சம் தீர்த்துக்கொண்டார்கள். அரசியல் போராட்டத்துக்குச் சாத்தியம் இல்லாமல் போனதால் இலக்கியப் போர் மட்டுமே புரிந்தனர். இதுவே பிற்போக்கு பிரபுத்துவ சோசலிசமாகும் என்கிறது அறிக்கை.
’கற்பனாவாத சோசலிசம்’ முன்வைக்கும் கருத்துகளின் போதாமையையும் அறிக்கை விளக்குகிறது. இது செயிண்ட் சைமன், ஃபூரியர், ராபர்ட் ஓவன் போன்றோர் உயர்த்திப் பிடித்த சோசலிசமாகும். தொழிலாளிகளுக்கு நல்ல உணவு, உடை, உறைவிடம், ஆகியவற்றினை உறுதிப்படுத்தினால் போதும் என்ற சிந்தனையைக் கொண்டது. பாட்டாளி வர்க்கம் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை என்றும்; முதலாளிகளின் நல்லெண்ணத்தால் முரண்பாடுகளைத் தவிர்த்துவிடலாம் என்றும் தவறான சிந்தனைகளை முன்வைக்கிறது.
’கிறித்துவ சோசலிசம்’ குறித்த எச்சரிக்கையையும் அறிக்கை கொடுக்கிறது. ’கிறித்துவ சோசலிசம்’ நிலப்பிரபுத்துவத்துடன் கைகோர்த்துக் கொண்டதுபோல் முதலாளித்துவத்துடனும் கைகோர்த்துக்கொள்ளும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
’சிறு முதலாளிகளின் சோசலிசம்’ (Petty Bourgeois Socialism) எவ்வாறு நம்பத்தகாதது என்பதையும் விளக்குகிறது. சிறு முதலாளிகள் எப்போதும் பட்டாளி வர்க்கத்திற்கும், முதலாளி வர்க்கத்திற்கும் இடையில் ஊசலாடுபவர்கள். தடுமாறுபவர்கள். மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் ’சிறு முதலாளிகளின் சோசலிச’ கோட்பாட்டிற்கு ஸ்விஸ் பொருளாதார வல்லுனர் சிஸ்மாண்டி தலைமை தாங்கினார்.
’ஜெர்மன் அல்லது மெய்யியல் சோசலிசம்’ எவ்வாறு ஜெர்மனியின் நிலைமைகளுக்குப் பொருந்தாதது என்பதையும் அறிக்கை விளக்கத் தவறவில்லை. முதலாளித்துவக் கொடூரத்தையும், பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் ஒரு சேரத் தாக்கியது மெய்யியல் சோசலிசம். ஜெர்மானிய குட்டி முதலாளிகளைத் திருப்திபடுத்துவதாக இருந்தது. இது சீர்திருத்தவாதம் பேசும் புரட்சிக்கு எதிரான தத்துவமாகும். பாட்டாளிகளுக்கு சில வசதிகளைச் செய்து கொடுத்து முதலாளித்துவத்தைக் காப்பாற்றும் முயற்சியாகும்.
’கம்யூனிஸ்டுகளும் பிற கட்சிகளும்’ என்ற நான்காம் பாகம் உடனடித் தேவைகளுக்காகப் போராடும் கம்யூனிஸ்டுகள் தங்களின் எதிர்காலக் கடமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. தேவைப்படும் போது கூட்டணித் தந்திரத்தைப் பயன்படுத்தும் கம்யூனிஸ்டுகள் அடிப்படை முரண்பாடுகளை என்றும் மறக்கமாட்டார்கள் என்பதை வலியுறுத்துகிறது. பிரான்சில் பழமைவாத, தீவிரவாத முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிராகச் சோசியல் ஜனநாயகவாதிகளுடனும்; ஜெர்மனியில் முடியாட்சியை வீழ்த்த வேண்டியதன் காரணமாக முதலாளிகளுடனும்; ஸ்விட்சர்லாந்தில் தீவிரவாதிகளுடனும்; நிலைமைகளுக்கு ஏற்றவாறு கூட்டணி அமைந்திடலாம் என்பதை அறிக்கை தெளிவாக்குகிறது. ஜெர்மனியில் நடந்துகொண்டிருந்த முதலாளித்துவப் புரட்சி வரவிருக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒத்திகையாகும் என்பது மார்க்ஸ்- எங்கெல்ஸ் இணையர்களின் கணிப்பாகும். பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும், பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சிலும் இருந்ததை விட ஜெர்மனியில் அதிக வளர்ச்சி பெற்றுள்ள பாட்டாளி வர்க்கம் ஜெர்மனியில் இருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கம்யூனிஸ்டுகள் அந்தந்த நாடுகளில் நிலவிடும் சமூக அரசியல் அமைப்பு முறையை எதிர்த்து நடைபெறும் புரட்சிகர இயக்கங்கள் அனைத்தையும் ஆதரிப்பார்கள் என்கிறது அறிக்கை.
கம்யூனிஸ்டுகள் தமது நோக்கங்களை மூடி மறைப்பதில்லை. இன்றுள்ள சமுதாயத்தை பலவந்தாமாய் வீழ்த்தி தமது லட்சியங்களை நிறைவேற்றுவோம் என்று ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள். அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள்! கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று! தொழிலாளி வர்க்கம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை! ஆனால் பெறுவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது என்ற முத்தாய்ப்புடனும் ’உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற அறைகூவலுடனும் அறிக்கை முடிவடைகிறது. அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் மார்க்சியத்தை கட்டுவதற்கானக் கோட்பாடாகத் திகழ்ந்தது. இன்று மார்க்சியத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கான உட்கருவைக் கொண்டதாக இருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது. மார்க்சிய உலகக் கண்ணோட்டம் முடிவடைந்துவிட்டது என்று முதலாளித்துவ முகாம்கள் கொக்கரித்தன. தற்போது இக்குதூகலம் அடங்கிவிட்டது. ஒட்டுமொத்த முதலாளித்துவ உலகமும் கடுமையான நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இத்தகு பொருளாதாரப் பின்னடைவுக் காலத்தில் மாற்றுத் திட்டங்கள் ஏதுமின்றி வெற்றிடம் உருவாகியுள்ளது. இச்சூழலில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவானது பிற்போக்கு சக்திகளும், மத அடிப்படைவாதப் போக்குகளும் வளர்ச்சியடைவதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது. முதலாளித்துவம் மிகக் கடுமையான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுவிட்டது என்ற உண்மையையும் அது பெரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கிறது என்ற உண்மையையும் வைத்து சோசலிசம் தானாகவே புத்துயிர் பெற்றுவிடும் என்று கூறிவிட முடியாது. புரட்சிகரமான மாற்றுச் செயல்திட்டத்தை முன்வைத்து ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சியத்தை மறுகட்டமைப்பு செய்து மார்க்சியத்தில் மற்றுமொரு சிகரத்தை எட்டுவதற்கான வாய்ப்பு புலப்படுகிறது. முதலாளித்துவத்திற்கு மாற்றில்லை என்ற மாயையை முறியடித்து முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்பதை நிரூபிக்க காலம் கனிந்து வருகிறது. நம்பிக்கையின் ஒளிக்கீற்று தென்படுகிறது. அதை நோக்கி நகர்ந்து பொன்னுலகைப் படைப்போம்.
--------
Comments
Post a Comment