Skip to main content

நூல் அறிமுகம் - சாதியின் பெயரால் - இளங்கோவன் ராஜசேகரன்

 

சாதியின் பெயரால் நடக்கும் ஆணவக் கொலைகள் பற்றிய இளங்கோவன் ராஜசேகரனின் ஆய்வு நூல்ஓர் அறிமுகம்.

                      

செங்கல் சுவர்போல், இரும்பு முள்வேலிபோல் சாதி என்பது வெளிப்படையாக மனிதர்களுக்கு இடையில் உருவாகி நின்று அவர்களைப் பிரிக்கும் ஒரு பொருளல்ல. அதை நாம் காணமுடியாது என்பதால் அகற்றவும் முடியாது. சாதி என்பது ஒரு கருத்தாக்கம். கருத்தளவில் ஏற்படும் மாற்றம் மூலமே சாதியை ஒழிக்க முடியும்என்கிறார் அம்பேத்கர். சாதியின் கோரப் பிடியிலிருந்தும், ஆணாதிக்க மனோபாவத்திலிருந்தும் ஒட்டுமொத்த சமூகமும் வெளிவந்தால் மட்டுமே சாதியின் பெயரால் நடக்கும் ஆணவக் கொலைகளை நிறுத்த முடியும் என்பதே நூலாசிரியர் மேற்கொண்ட ஆய்வின் முடிவாகும்.

நூலாசிரியர் இளங்கோவன் ராஜசேகரன் நாற்பதாண்டுகளுக்கும் மேல் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய அனுபவமிக்கவர். பத்திரிகை அறம் சிறிதும் பிறழாமல் நேர்மையான பத்திரிகையாளராகத் திகழ்ந்தவர். தி இண்டியன் எக்ஸ்பிரஸ், தி ஹிண்டு, ஃப்ரண்ட் லைன் போன்ற சிறந்த இதழ்களில் நீண்ட காலம் பணி செய்து கட்டுரைகள் படைத்தவர். காய்தலும் உவர்த்தலுமின்றி உள்ளதை உள்ளபடி எழுதிடும் மன தைரியமும், ஆற்றலும் கொண்டவர் நூலாசிரியர். எல்லாவற்றையும் நெருங்கிச் சென்று ஆராய வேண்டும், எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று எழுதவேண்டும் எனும் இதழியல் துறையின் தங்க விதியின் வழிநின்று இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ’வரலாற்றின் முதல் வரைவைப் பத்திரிகையாளர்களே எழுதுகின்றனர்’, என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் இளங்கோவன் சந்திரசேகரன். ஆணவக் கொலைகள் பற்றிய முழுப் பரிமாணங்களையும்  கொண்டுள்ளது இந்நூல்.

ஆணவக் கொலைதான் இந்நூலின் மையம் என்றாலும் இது மரணம் பற்றிய புத்தகமல்ல. வாழ்வின் மீதான நம்பிக்கையைச் சொல்லிச் செல்லும் புத்தகமே என்கிறார் நூலாசிரியர். சாதிவெறி கோலோச்சும் இக்காலத்தில் அவரின் இந்த நேர்மறை சிந்தனை வாசகர்களை விரக்தியிலிருந்து விலக்கி நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. பெரியார் பிறந்த மண்; சமூகநீதிக்கான மாநிலம் என்றெல்லாம் சொல்லி பெருமிதம் கொண்டாலும் சாதி எனும் அரக்கன் உயிர்த்திருப்பதேன்? இந்தக் கேள்விக்கான பதிலும் அம்பேத்கரிடம்தான் உள்ளது என்கிறார்.

சாதி இயல்பானதாக நிலைபெற்றுவிட்டதால் ஒவ்வொரு ஆணையும், ஒவ்வொரு பெண்ணையும் சாத்திரங்களின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். சாத்திரங்களின் மீதான நம்பிக்கையை ஒழிப்பதுதான் சாதி ஒழிப்புக்கு இட்டுச்செல்லும் எனும் அம்பேத்கரின் வாதம் முற்றிலும் சரியானது என்பதும் நூலாசிரியர் ஆய்வின் முடிவில் கண்டடையும் உண்மை.

அடையாள அரசியலும், சாதிகளும்:

நாடெங்கிலும் அடையாள அரசியல் மேலோங்கி இருப்பதைக் சுட்டிக் காட்டுகிறார். சாதி, மத, இன அடையாளங்கள் வழி அரசியல் நடப்பதைப் பார்க்கிறோம். அகில இந்திய அளவில் மத அரசியல் என்றால் தமிழ்நாட்டில் சாதி அரசியல் கோலோச்சுகிறது. வடக்கில் வன்னியர்கள், மேற்கில் வேளாளக் கவுண்டர்கள், தெற்கு-மத்திய தமிழகத்தில் முக்குலத்தோர் ஆகிய இடைநிலை சாதிகள் தமிழக அரசியலில் செல்வாக்குடன் விளங்குகின்றன. தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளான திமுக - அதிமுக இரண்டும் இந்த இடைநிலை சாதிகளின் பிடியில் உள்ளன. இச்சாதியினரை பகைத்துக் கொண்டு அரசியல் பண்ண முடியாது என்பதே யதார்த்தம். பிரமிடு வடிவ சாதியக் கட்டுமானத்தின் அடித்தளத்தில் உள்ள தலித்துகளுக்கு ஆதரவான நடவடிக்கை எடுப்பதை இடைநிலை சாதியினர் தடுத்துவிடுகின்றனர்.  சமூக நீதியையும், முற்போக்கு அரசியலையும் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்திய இயக்கம் என்று அழைத்துக்கொள்ளும் திராவிட இயக்கம் உண்மையில் ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ சிந்தனையோட்டம் கொண்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை ஒருங்கிணைப்பதில்தான் வெற்றி பெற்றுள்ளது. திராவிடக் கட்சிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஓபிசி பிரிவினர் சுலபமாகத் தேர்தல் களத்தைக் கைப்பற்றி செல்வாக்கும், பலமும் பெற்றவர்களாக வலம் வருகிறார்கள். எனவே இக்கட்சிகளால் தலித் நேய, தலித் ஆதரவு நடவடிக்கைகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே நூலாசிரியர் முடிவு. ”இன்றைய திராவிடக் கட்சிகளையும், அன்றைய திராவிட இயக்கத்தையும் நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். இரண்டும் வெவ்வேறானவை. மார்க்சிய அரசியலின் தோல்வியும், அடையாள அரசியலின் எழுச்சியும் ஒன்று சேர்ந்து சாதி அரசியலை தமிழகத்தில் நிலைநிறுத்தியுள்ளனஎனும் அ.மார்க்ஸ் கூற்றினை நூலாசிரியர் வழிமொழிகிறார்.

தலித்துகளும், அரசியல் கட்சிகளும்:

 தலித்துகளிடையே ஒற்றுமையின்றி பள்ளர், பறையர், அருந்ததியர் என்று பிரிந்து சாதிக்குள் சாதி அரசியல் நடத்துகின்றனர். கொசுவுக்கு ராஜபிளவு என்பதுபோல் வெறும் 20% எண்ணிக்கையில் இருக்கும் தலித்துகளுக்குள் மூன்று பிரிவினர் ஒருவருக்கொருவர் அரசியலில் எதிர்வினை ஆற்றுகின்றனர். இடைநிலை சாதியினர் திமுக, அதிமுக கட்சிகளுக்குள் ஆதிக்கம் செலுத்துகின்ற சூழலில் தலித்துகள் பின் தள்ளப்படுகின்றனர். டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் பள்ளர்களும், தொல் திருமாவளவன் தலைமையில் பறையர்களும் திரண்டுள்ளனர். அருந்ததியிர்களும் தங்களுக்கென இரண்டு அரசியல் கட்சிகளைக் கொண்டு பிரிந்துள்ளனர்.

சாதிக் கட்சிகள்:

திமுக, அதிமுக கட்சிகளில் செல்வாக்குடன் வலம் வரும் இடைநிலை சாதியினர் சமீப காலமாக தங்களுக்கென்று தனி சாதிக் கட்சிகளையே தோற்றுவித்துள்ளனர். இதுவரை சாதிச் சங்கமாகத் திரண்டவர்கள் இப்போது சாதிக் கட்சிகளாகவே திரண்டுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டாலும் பாமக ஒரு சாதியக் கட்சி என்பது யாவரும் அறிந்ததே. ”வன்னியர்கள் ஓட்டு அன்னியர்களுக்கு இல்லைஎன்று சொல்லியே அரசியலுக்கு வந்த பாமக ஒரு சாதியக் கட்சியே. திராவிடக் கட்சிகள் சாதிக்கட்சிகளையும் இணைத்துக் கொண்டே தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டியுள்ளது. ஆக அரசியல் முழுவதும் சாதிமயமாகியுள்ளது. இச்சூழலில் எப்படி ஆணவக் கொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது? சாதிவெறியில் நடக்கும் ஆணவக் கொலைகள் சாதித் தலைவர்களைப் பொறுத்தவரையில் கௌரவக் கொலைகள். சாதிப் பெருமிதம் காக்க, சாதித் தூய்மை காக்க நடக்கும் நியாயமான நடவடிக்கை. சாதி, மத, இன, அடையாளங்களுக்குப் பின் திரண்டுள்ள மக்களை இடதுசாரிக் கட்சிகளால் திரட்ட முடிவதில்லை. 1950,60களில்  தலித் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியும் இன்று அவர்களின் ஆதரவை இழந்துள்ளது.

சாதியும், அரசு நிர்வாகமும்:

தலித்துகளுக்கு மேலும் பாதுகாப்புத் தருவதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளைத் திருத்த வேண்டும் என்று குரல் எழுந்தாலே போதும் இடைநிலை சாதியினர் கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றனர். காவல்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை என்று அனைத்து அரசுத்துறைகளிலும் மேல்நிலை, இடைநிலை சாதியினரின் கையோங்கியுள்ளது. அரசு ஊழியர்களும் சாதியத்தில் தோய்ந்துள்ளனர். காவல்நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நேர்மையுடன் வழக்கைப் பதிவு செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கு மனமில்லை. சாதியுனர்வு தடுத்து நிறுத்துகிறது. இதனைப் பல ஆதரங்களுடன் நிரூபிக்கிறார்.

சுவாதி-கோகுல்ராஜ் வழக்கை நேர்மையுடன் விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு மேலதிகாரி எஸ்.பி.செந்தில்குமார் அவரை நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறார். கொலைக்குச் சம்பந்தமில்லாத சிலரைக் குண்டர் சட்டத்தில் பிடித்துத் தள்ளு என்று சொல்லியுள்ளார். அவர்கள் அப்பாவிகள் என்று தெரிந்த விஷ்ணுபிரியா மறுத்திருக்கிறார். கோபங்கொண்ட எஸ்.பி. “நீ இந்த வேலைக்கே பொருத்தமானவள் இல்லை. எதற்கும் உதவாத நபர்என்று திட்டியுள்ளார். முடிவில் வழக்கை நேர்மையாக நடத்த நினைத்த விஷ்ணுபிரியா தூக்கில் தொங்கியுள்ளார். ”ஒரு பெண்ணாகவும், தலித்தாகவும் இருந்ததால் இரட்டை அவமானத்தை என் சிநேகிதி சந்திக்க வேண்டியிருந்ததுஎன்று விஷ்ணுபிரியாவின் நண்பர் காவல்துறை அதிகாரி மகேஸ்வரி கூறியுள்ளார்.  எஸ்.பி.செந்தில்குமார் போன்ற காவல்துறை அதிகாரிகள் மத்தியில் வழக்குகள் எவ்வாறு நியாயமாக பதிவு செய்யப்படும்? என்பதைத் தெளிவாக்குகிறார் நூலாசிரியர். காவல்துறை முழுவதும் சாதியத்தில் தோய்ந்துள்ளதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

சாதியும், குடும்பமும்:

இந்தியாவில் மூவாயிரத்துக்கும் அதிகமான சாதிகளும் 25,000 ஆயிரத்துக்கும் அதிகமான உட்பிரிவுகளும் உள்ளன என்பது ஒரு தோராயாமான கணக்கு. சாதிய சமுதாயத்தின் மிகச் சிறிய அலகு குடும்பம் ஆகும். சாதியக் கோட்பாடுகளை மீறி குடும்பங்கள் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது என்பதே யதார்த்தம். சாதிய சமூகம் போற்றிப் பாதுகாக்கும் முக்கியமான கோட்பாடு அகமண முறை. இதுவொன்றே சாதியக் கட்டுமானத்தைப் பாதுகாக்கும் நியதி என்று நம்பப்படுகிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்யும் ஆணும், பெண்ணும் சாதிக்குத் துரோகம் செய்தவர்களாகின்றனர். அதிலும் பெண்ணுக்கு சாதிப் பெருமிதத்தைக் காப்பதில் பெரும் பொறுப்பு இருக்கிறது என்று நம்பப்படுகிறது.

இந்திய சாதியக் கட்டுமானம் விநோதமானது. ஒவ்வொரு சாதிக்கும் மேலாக ஒரு சாதியும், கீழாக ஒரு சாதியும் இருக்கிறது. இந்து சாதிப் படிநிலை என்பது என்பது மிகக் கவனமாகக் கட்டமைக்ப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பின்படி ஒரே நேரத்தில் நீங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்டவராகவும், ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருக்க முடியும்என்கிறார் அம்பேத்கர். நிலப்பிரபுத்துவச் சிந்தனை ஆதிக்கத்திலிருந்து விடுபடாதவரை இந்தியக் குடும்பங்கள் சாதியப் பிடிப்பிலிருந்து வெளிவர முடியாது என்பதை நூலாசிரியர் உறுதியாகச் சொல்கிறார்.

நாடெங்கிலும் வியாபித்திருக்கும் ஆணவக் கொலைகள்:  

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆணவக் கொலைகள் நடப்பதைக் கண்டு நம் மனம் பதறுகிறது. ஆனால் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சிகள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பது கொடூரமானதாகும். எடுத்துக்காட்டாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆணவக் கொலைகளைத் தடுத்திட தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் இடதுசாரிக் கட்சிகள் கேட்டுக் கொண்டபோது அன்றிருந்த மாநிலத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளே நடக்கவில்லை என்று சொல்லி முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்தார். ஆணவக் கொலைகளே நடக்காதபோது தனிச்சட்டம் எதற்கென்ற அவரின் விவாதத்தை என்னென்பது?

 ஆணவக் கொலைகளும் அதன் வழக்கு விசாரணைகளும்: இந்நூலில் இளங்கோவன் ராஜசேகரன் தமிழ்நாட்டில் நடந்துள்ள ஆணவக் கொலைகளில் ஏழு ஆணவக் கொலைகள் பற்றியும், அந்த வழக்குகளின் முழு விசாரணைகள் பற்றியும் நூற்றுக்கும் அதிகமான பக்கங்களில் விளக்கியுள்ளார். கௌசல்யா-சங்கர், திவ்யா-இளவரசன், கண்ணகி-முருகேசன், சுவாதி-கோகுல்ராஜ், மீனா-ஹரிஹரன், ஸ்வாதி-நந்தீஷ், ஜோதி-சோலைராஜ் ஆகிய காதல் பறவைகளின் சோகமான முடிவுகள் பற்றி எழுதியுள்ளார். பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் இக்கொலைகள் குறித்த விவரங்களை களத்தில்  நேரடியாக இறங்கி தகவல்களைத் திரட்டியுள்ளார். உணர்ச்சிப் பூர்வமாக பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தாலும் அவற்றினை நேர்மையுடன் வெளியிட வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்துள்ளார்.  பெற்றோர்கள் நேரடியாகப் பங்கேற்றோ அல்லது அவர்களின் சம்மதத்துடனோ நடந்த நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொலைகள் சாதியம் செய்யும் கொடுவினைகளாகும் என்கிறார்.

ஆணவப் படுகொலைக்கு எதிராக கௌசல்யா நடத்திய உறுதிமிக்க போராட்டம் நூலில் பதிவாகியுள்ளது. கௌசல்யா இன்று ஒடுக்கபட்டோர் மத்தியில் ஒரு ஆளுமையாக, நம்பிக்கையூட்டும் போராளியாக வளர்ந்து நிற்கிறார், ”சாதி கடந்து காதலியுங்கள்; சாதியை எதிர்த்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள்என்று கௌசல்யா பெண்களிடம் உரக்கக் கூறிவருகிறார். எவிடென்ஸ் இயக்கத்தைச் சேர்ந்த கதிர் கௌசல்யாவுக்கு உற்ற துணையாக இருந்துள்ளார்.

இளவரசனின் படுகொலையோடு திருப்தி அடையாமல் ஆதிக்க சாதியினர் மூன்று தலித் குடியிருப்புகளைக் கொடூரமாகத் தாக்கி தீயிலிட்டதை நூலாசிரியர்  பதிவு செய்கிறார். தலித்துகளின் மீதான வன்முறைகளுக்கென்று தனித்த வரலாறு இருப்பதையும் நூலாசிரியர் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறார். திருச்செந்தூர் நடுநாலுமூலைக் கிணறு, கொடியங்குளம், திண்டுக்கல் குண்டுப்பட்டி, தூத்துக்குடி சங்கரலிங்காபுரம் ஆகிய பகுதிகளிலும்  இதுபோன்ற கலவரங்கள் நடந்துள்ளன. ”தலித்துகளின் வாழ்க்கைத் தரம் எங்களுடையதைவிட உயர்வதை அனுமதிக்க மாட்டோம். எங்களிடம் இல்லாத வசதிகள் அவர்கள் அனுபவிப்பதைச் சகித்துக்கொள்ள மாட்டோம்”. இந்த மனோபாவம் எல்லா இடங்களிலும் ஒன்று போல் நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர். இளவரசன்-திவ்யா வழக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் டாக்டர் ராம்தஸும், அவரின் பாமகவும் பின்னணியில் இருந்திருப்பதையும் குறிப்பிடுகிறார்.

கண்ணகி-முருகேசன் வழக்கு நெஞ்சை உறையவைப்பதாகும்.  பட்டவர்த்தனமாக ஊர் மக்கள் முன்பாக நடத்தப்பட்ட இரட்டைக் கொலைகள் என்பதால் முருகேசன்கண்ணகி வழக்கில் நீதி கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்காது என்பதற்கு மாறாக நிலைமை இருந்தது. குற்றம் நடந்தது 2003இல் இறுதித் தீர்ப்பு வந்தது 2022இல். இக்கொலையின் மூலம் முருகேசன் என்ற தனி மனிதன் மட்டுமல்ல ஒரு சமூகத்தின் கூட்டுக்கனவும் சேர்ந்தே அழிக்கப்பட்டது.

சுவாதி-கோகுல்ராஜ் வழக்கு விசாரணையில் இருக்கும்போது நிகழ்ந்த காவல்துறை அதிகாரி விஷ்ணுபிரியாவின் தற்கொலை குறித்த செய்தியை ஏற்கனவே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். தன்னைக் கலாச்சாரக் காவலராக எண்ணிகொண்டு வலம்வரும் சாதிவெறி பிடித்த யுவராஜ் போன்றோர் இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருப்பதைக் காண்கிறோம். சாதிப் பெருமையைக் காத்திட எந்தவொரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் இவன் போன்றவர்கள்  எல்லா சாதியிலும் இருப்பது அவலமே, கோகுல்ராஜ் வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கிய நீதிபதி சம்பத்குமார், “காதலுக்குச் சாதி, மதம், இனம் முக்கியமல்ல. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுவது இயல்பானது. இதைப் பல சரிதங்களும், இதிகாசங்களும் உணர்த்துகின்றன. கோகுல்ராஜின் கொலை ஆதிக்கச்சாதி வெறியின் மற்றொரு ரத்தச் சாட்சியம்”. என்றெழுதி நல்ல தீர்ப்பையும் வழங்கியுள்ளார்.

 சாதி அடையாளத்திலிருந்து தப்பிக்க விரும்பும் தலித் ஆணின் போராட்டமும், ஆணாதிக்கத்திலிருந்து தப்பிக்க விரும்பும் உயர்சாதிப் பெண்ணின் ஆசையும் கலப்புத் திருமணம் எனும் சித்தாந்தத்தில் ஒத்துப்போகின்றன. இந்த யதார்த்தத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது இந்நூல்.

ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்திட தனிச் சட்டம் இயற்றிட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகளும், தலித் கட்சிகளும்,  தொடர்ந்து வலியுறுத்துகின்றன. இருப்பினும் மாறிமாறி ஆட்சிக் கட்டிலில் ஏறும் திமுக, அதிமுக கட்சிகள் இதற்குத் தயாரில்லை. சாதி அடையாள அரசியல் தங்களுக்குச் சாதகமாக இருப்பதால் அவர்கள் சிறிதும் அசையாமல் இருக்கின்றன.

சாதியின் பெயரால் நடக்கும் ஆணவக் கொலைகள் குறித்து திமுக, அதிமுக கட்சிகளின் அக்கறையின்மை, நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் போதாமை, சாதி வெறிக்குப் பலியாகும் மக்களின் அறியாமை, ஆணவக் கொலைகளைப் பரபரப்புச் செய்திகளாக்கும் பத்திரிகைகளின் அறம் பிறழ்தல் இவற்றிலிருந்து விடுபட்டால் மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என்று இளங்கோவன் ராஜசேகரன் உறுதியிட்டுக் கூறுவதில் பிழையேதுமில்லை. பேராசிரியர்கள் வீ.அரசு, .மார்க்ஸ், எவிடென்ஸ் கதிர் போன்றோரின் கருத்துகளை பொருத்தமான இடங்களில் எடுத்தாள்கிறார். இளங்கோவன் ராஜசேகரன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலினை மருதன், நிவேதிதா லூயிஸ் இருவரும் இணைந்து மொழியாக்கம் செய்துள்ளனர். நூல் தமிழில் நேரடியாக எழுதியது போல் இருப்பது மொழியாக்கத்தின் சிறப்பு.

--பேரா.பெ.விஜயகுமார்,

முன்னாள் பொதுச்செயலாளர்,

மூட்டா.  

 

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...