இந்துத்துவா கட்டமைப்புப் பணியில் கீதா பிரஸ்.....
கோரக்பூர்! உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராப்தி நதிக்கரையில் உத்ராஞ்சல் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரம். இங்கு உலகின் மிகப் பெரிய பதிப்பகங்களில் ஒன்றான கீதா பிரஸ் இருப்பதை நம்மில் பலருக்குத் தெரியாது. 2014இல் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக் கட்டிலில் ஏறிய பின்னரே இந்துத்துவா சித்தாந்தம் பரப்புரை செய்யப்படுகிறது என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்னால் 1923இல் ஸ்ரீ ஜெயதயாள்ஜி கோயங்கா என்பவரால் நிறுவப்பட்ட கீதா பிரஸ் என்ற பதிப்பகம் இந்துத்துவ நஞ்சை மக்கள் மனதில் விதைப்பதில் வறிந்து கட்டிக்கொண்டு பணியாற்றுகிறது. கோடிக்கணக்கில் நூல்களை வெளியிட்டு பதிப்பகத்துறை வரலாற்றில் அளப்பரிய சாதனைகளைப் படைத்துள்ளது. மனிதர்களிடையே உண்மை, அமைதி, அன்பு ஆகியன வளர்த்திட வேண்டும் என்ற பிரகடனத்துடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் வெறுப்பு அரசியல் வளர்ச்சிக்கு உரமிடுகிறது. கல்கத்தா நகரில் 1860இல் நிறுவப்பட்ட ’கோவிந்த் பவான் காரியாலயா’வின் கிளை அமைப்பாக ’கீதா பிரஸ்’ நிறுவனம் தொடங்கப்பட்டது என்பது இது வரலாற்றில் எவ்வளவு தொன்மையான தொடர்பு கொண்டுள்ளது என்பதை அறியலாம்.
சனாதன தர்மத்தையும், ஹிந்து மதக் கோட்பாடுகளையும் பரப்புரை செய்திடுவதே கீதா பிரஸின் நோக்கம் என்று இதன் முதல் ஆசிரியர் ஹனுமன் பிரசாத் போத்தர் குறிப்பிட்டுள்ளார். ராமாயனம், பகவத் கீதை, புராணக் கதைகள், உபநிஷதங்கள், ஆன்மீக உரைகள் ஆகியனவற்றை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஆன்மீக உந்துதலால் உருவாக்கப்பட்டது என்றும் போத்தர் கூறியுள்ளார். கோடிக்கணக்கில் புத்தகங்களை மலிவான விலையில் நேர்த்தியாக வெளிக்கொணர்ந்து மதவெறி ஊட்டுவதில் கீதா பிரஸ் அதன் எதிர்பார்ப்பையும் மீறி வெற்றி பெற்றுள்ளது. ’கல்யாண்’ என்ற இந்தி பத்திரிக்கையும், ’கல்யாண் கல்பதரு’ என்று ஆங்கிலப் பத்திரிக்கையும் கீதா பிரஸ் மாதந்தோறும் வெளியிடுகிறது. ’கல்யாண்’ இரண்டு லட்சம் பிரதிகளுக்கு மேலாகவும், ’கல்யாண் கல்பதரு’ ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேலாகவும் வெளியாகின்றன. கீதா பிரஸ் லாப நோக்கு இல்லாமல், விளம்பரங்கள் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் மார்வாடிகளின் நிதியுதவி கொண்டு இயங்குகிறது.
1925இல் நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆர்எஸ்எஸ் இயக்கம் உருவான பிறகு கோரக்பூரின் கீதா பிரஸ் தன்னுடைய தேவையை மேலும் உணர்ந்தது. மதம், அரசியல் இவ்விரண்டிற்கும் இடையிலான மங்கலான வரையறை ஆகிய மூன்று புள்ளிகளாலான முக்கோணத்தின் மீது கீதா பிரஸின் வெற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. சனாதன ஹிந்து மதத்தை முன்னிறுத்துதல், ஹிந்து தேசியத்தை வலியுறுத்துதல் என்ற இரு குறிக்கோள்களையும் நிறைவேற்றும் எண்ணத்துடன் அன்றிலிருந்து இன்று வரை செயல்படுகிறது. கீதா பிரஸ் தனது வெளியீடான ’கல்யாண்’ இதழ் மூலம் வட மாநிலங்களில் நடுத்தர வர்க்க வீடுகளில் இந்துத்துவா கருத்துக்களை ஆழமாக விதைத்து வருவது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
ஹிந்து மகா சபை உருவாகக் காரணமாக இருந்த மதன் மோகன் மாளவியா உள்ளிட்டு காங்கிரஸ் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த சிலரும் கீதா பிரஸுடன் தொடர்பில் இருந்துள்ளனர். 1923இல் பனாரஸில் மாளவியா போன்ற சனாதன தர்மத் தலைவர்கள் ஆரிய சமாஜ் அமைப்புடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியானது பசுக்களைப் பாதுகாப்பது, ஹிந்து மதத்திலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஹிந்து மதத்திற்குத் திரும்பக் கொண்டுவருவது போன்ற பழமைவாத சிந்தனைகளை உயர்த்திபபிடித்தது. இதற்கு வலுவூட்டும் வகையில் கீதா பிரஸ் செயல்பட்டது. இந்திய தேசியவாதிகளான காந்தி, ராஜேந்திர பிரசாத், ராதாகிருஷ்ணன், ராஜாஜி, கோவிந்த் வல்லப பந்த் ஆகியோருடன் ஹிந்துத்துவத் தலைவர் எம்.கோல்வால்கர், ராம் ராஜ்ஜிய பரிஷத் அமைப்பின் நிறுவனர் சுவாமி கர்பத்ரி மகாராஜ் மற்றும் ஆன்மீகத் தலைவர் பிரபுதத் பிரம்மச்சாரி ஆகிய அனைவரின் கட்டுரைகளையும் பெற்று ஒரு சிறப்பு இதழைக் கொண்டுவரும் அளவிற்கு கீதா பிரஸ் வலிமையுடன் விளங்கியுள்ளது.
இந்திய விடுதலைக்கு முன்னரும், பின்னரும் ஹனுமன் பிரசாத் போத்தர் ’கல்யாண்’ இதழில் காங்கிரஸின் ஹிந்து விரோதக் கொள்கைகள் என்று அவரால் கருதப்பட்டவற்றை வெளிப்படையாக விமர்சித்து எழுதி பிற்போக்கு சிந்தனைகளை பரப்புரை செய்துள்ளார். ஹிந்து தேசியவாத குழுக்களுக்கும், ஜனசங்கம் கட்சிக்கும் ’கல்யாண்’ இதழ் ஒரு பிரச்சார வாகனமாகப் பயன்பட்டது. 1929இல் பிரிட்டிஷ் அரசாங்கம் சாரதா சட்டம் மூலம் பெண்களுக்கான திருமண வயதை 14 எனவும் ஆண்களுக்கு 18 எனவும் மாற்றியமைத்ததை கீதா பிரஸ் ஆசிரியர் ஹனுமன் பிரசாத் போத்தர் கடுமையாக எதிர்த்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்து அரசியல் போராட்டங்கள் நடத்த வேண்டும். வெறும் மத அடிப்படையிலான எதிர்ப்பு போதாது என்று கீதா பிரஸின் நிறுவனர் ஜெய்தாள் கோயந்த்காவிற்கு கடிதம் எழுதினார். “பெண்கள் திருமண வயது குறித்து மட்டுமல்லாமல், மத விவகாரங்களில் அரசு தலையிடுவதை நான் மிகவும் எதிர்க்கிறேன்” என்றும் வெளிப்படையாக எழுதினார்.
’கல்யாண்’ இதழ் சனாதன ஹிந்து மதத்தைப் பரப்புவதில் மட்டுமே குறியாக இருக்க வேண்டும்; தீவிர அரசியல் பேசக்கூடாது என்பதில் ஆரம்ப காலத்தில் கவனத்துடன் இருந்தது. ஆனால் 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் ’ஹிந்து திருமணம் மற்றும் வாரிசுரிமைச் சட்ட வரைவு’ கொண்டுவரப்பட்ட போது ‘கல்யாண்’ இதழ் மிகுந்த தீவிரத்துடன் அரசியல் விமர்சனத்தில் இறங்கியது. ”ஹிந்து சமூக அமைப்பில் பெண்களுக்கான சுதந்திரம் என்பது உறுதி அளிக்கப்படவில்லை. ஒரு பெண் திருமணம் வரை தந்தையுடனும், திருமணத்திற்குப் பின் கணவனுடனும், கணவனது மறைவிற்குப் பின் மகனுடனும் சேர்ந்து வாழ வேண்டும். எந்தவொரு நிலையிலும் தனித்து சுதந்திரமாக வாழ இயலாது” என்று ‘கல்யாண்’ இதழ் ஆணித்தரமாக வலியுறுத்தியது. சாஸ்திரங்களை மேற்கோள் காட்டிய ‘கல்யாண்’ இதழ் கட்டுரை ”ஹிந்து மத வாழ்க்கை முறையானது சாஸ்திரங்களால் கட்டப்பட்டிருப்பதால் எந்தவிதமான ஒட்டு வேலை செய்தும் அவற்றை மாற்ற முடியாது” என்று அறுதியிட்டுக் கூறியது.
அம்பேத்கர் கொண்டுவந்த ஹிந்து சட்ட முன்வரைவை ’கல்யாண்’ இதழ் எள்ளளவும் ஏற்றுக்கொள்ளவில்லை. ”மேற்கத்திய சமுதாயத்தில் நிலவிடும் பாலின சமத்துவம் மகிழ்ச்சியினைக் கொண்டுவரவில்லை. மாறாக நிறைந்த எண்ணிக்கையில் திருமணமாகாத பெண்கள், கருக்கலைப்புகள், விவாகரத்துகள், மரியாதை, கற்பு பற்றி எந்தவிதக் கவலையுமின்றி பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடுவது ஆகியனவே பெருகியுள்ளன” என்று ’கல்யாண்’ இதழ் கட்டுரை குறிப்பிட்டது. மேற்கத்திய நாகரிகம் பெண்கள் மீதான சாபம் என்றும்; இந்திய முனிவர்களும், ஞானிகளும் உருவாக்கியுள்ள சமூக அமைப்பு அறிவுமிக்கதாக இருப்பதாகவும் போத்தர் எழுதினார்.
மேலும் சட்டவரைவிலிருந்த அம்சங்கள் முஸ்லீம் சட்டத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டுள்ளதால் இயற்கையானதாக இருக்க முடியாது என்று வாதிட்டது. இந்தச் சட்ட முன்வரைவு குழுவிலிருந்த சுல்தான் அகமதுவின் சிந்தனையில் உருவானது என்றும் குறை கூறியது. பரம்பரை உரிமையினை மகள்கள் பெறுவது என்பது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற சித்திரத்தை ’கல்யாண்’ இதழ் வரைந்தது. பரம்பரைச் சொத்து குறித்து சகோதரர்கள் இடையே இருந்துவரும் சண்டை இனிமேல் சகோதரன் – சகோதரிகளிடையே நிலவிடும் என்று வாதிட்டது. வீடுகளில் நிலவிடும் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பங்கம் வந்திடும் என்றது.
பதினாறு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் விருப்பப்படி யாரையும் மணக்கலாம் எனும் சுதந்திரம் முஸ்லீம்களுடான திருமணத்திற்கே வழிகோலும் என்றது. வீட்டின் ஒரு மூலையில் பகவானை ஆராதிக்கவும், மற்றொரு மூலையில் குர்ஆன் பாராயணம் செய்வதற்கும், வீடுகளில் மாட்டிறைச்சி சமைக்கவுமே பெண்களுக்கான சுதந்திரம் இட்டுச் செல்லும் என்று கட்டுரை அச்சுறுத்தியது. விவாக ரத்தினை அனுமதிப்பது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது. ”விவாக ரத்து அமெரிக்க சமூகத்தின் மீதான ஒரு கரும்புள்ளியாக இருக்கிறது” என்று மார்க் மேத்யூஸ் கூறியதை மேற்கோள் காட்டி ஹிந்து மதத்தில் விவாகரத்து என்ற சமூக வியாதியைத் திணிக்கக் கூடாது என்றது. பண்டிதர்கள் மற்றும் சாஸ்திர அறிஞர்கள் மட்டுமே ஹிந்து திருமண முறையினை நிர்னயிக்க முடியும்; சட்டவல்லுனர்கள் அல்ல என்று வாதிட்டது. ஹிந்து சட்ட முன்வரைவைக் கைவிடக் கோரி இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு ’கல்யாண்’ இதழ் வாசகர்கள் கடிதங்கள் அனுப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
ஹிந்து சட்ட முன்வரைவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கண்டறிய ஏற்படுத்தப்பட்ட குழுவின் உறுப்பினரும் ஹிந்து சட்டங்கள் குறித்த நிபுணருமான முன்னாள் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி துவராகநாத் மித்தர் மசோதாவை எதிர்ப்பவர்களின் கருத்துக்கள் முழுவதையும் பதிவு செய்திருந்தார். பொதுவிசாரணையின் போது ஹிந்து மகாசபை, அகில பாரதிய தர்ம சங்கம், பாரத் தர்ம மகாமண்டல், மற்றும் பல்வேறு ஜெயின் சங்கங்களின் எதிர்ப்புகளையும் நீதிபதி மித்தர் பதிவுசெய்திருந்தார். இவ்வறிக்கை கீதா பிரஸின் விவாதங்களுக்கு வலு சேர்த்தது. மதன் மோகன் மாளவியா, கைலாஷ்நாத் கட்ஜு போன்ற பழமைவாதிகளும், வங்காள நாவலாசிரியர் அனுரூபாதேவி போன்றவர்களும் முன்னிறுத்திய எதிர்ப்பினை கல்யாண் இதழ் பயன்படுத்திக்கொண்டது. அம்பேதகர் போன்ற சீர்திருத்தவாதிகளுக்கு மட்டுமே அறிவு இருக்கிறதா? சட்ட மசோதாவிற்கு எதிராகக் கருத்து சொன்ன மற்றவர்கள் எல்லாம் அறிவு இல்லாதவர்களா என்று வெறுப்பை உமிழ்ந்தது. கீதா பிரஸின் நண்பரும் சன்மார்க் நாளிதழின் நிறுவன ஆசிரியருமான சுவாமி கர்பத்ரி தனது நாளிதழில் ஹிந்து சட்ட மசோதாவிற்கு எதிராக விஷம் தோய்ந்த கருத்துக்களைத் வெளியிட்டிருந்தார். ஹனுமான் பிரசாத் போத்தரும், சுவாமி கர்பதிரியும் இணைந்து கொண்டார்கள். ஆகஸ்டு 1948இல் கூடிய அரசியல் நிர்ணய சபை அமர்வின் போது ஹிந்து சட்ட மசோதா எடுத்துக்கொள்ளப்படாது என்று தெரிந்த போதிலும் கல்யாண் இதழ் மூலம் போத்தர் எதிர்ப்புப் பிரச்சாரத்தை தொடர்ந்தார். பொதுமக்களும், அமைப்புகளும் எதிர்ப்புக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதையும், கடிதங்கள் மற்றும் தந்திகள் அனுப்புவதையும் தொடர வேண்டும் என்று போத்தர் அக்டோபர் மாத இதழின் தலையங்கத்தில் வாசகர்களுக்கு நினைவூட்டினார். குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத் ஆரம்பம் முதல் மசோதாவை எதிர்த்ததையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் போத்தர்.
ஹிந்து சட்ட மசோதாவை போத்தர் மத அடிப்படையில் மட்டுமே ஒரு கட்டம் வரை எதிர்த்து வந்தார். ’கல்யான்’ மார்ச் மாத (1949) இதழ் மூன்று காரணங்களின் அடிப்படையில் மசோதாவை எதிர்த்தது. “ஹிந்து சட்ட மசோதா கலாச்சாரம் மற்றும் மதத்தின் மீதான ஒரு ஆபத்து” என்ற தலைப்பில் நான்கு பக்க விமர்சனத்தை போத்தர் எழுதினார்.
1. அரசியல் நிர்ணய சபைக்கு மதம் குறித்த புரிதல் இல்லாததால் மதம் குறித்த விஷயங்களில் சட்டம் இயற்றுவதற்கு உரிமை கிடையாது.
2. மதம் குறித்த விஷயங்களில் அரசியல் நிர்ணய சபை தலையிடாது என்று கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்படியிருக்க இத்தகு மசோதாவை முன்மொழியும் உரிமை இல்லை. இச்செயல் வாக்குறுதியை மீறுவதாகும்.
3. மதச்சார்பற்ற நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதம் தொடர்பான சட்டங்களை அரசாங்கம் இயற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சிறுபான்மை மதங்களைத் தவிர்த்து பெரும்பான்மைச் சமூகத்தின் மத விஷயங்களில் தலையிடுவது என்பது சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லீம்களுக்கு ஆதரவான நேருவின் செயல் ஆகும் என்று குற்றம் சாட்டியது கல்யாண் இதழ். மசோதாவின் அம்சங்கள் கொடூரத்தன்மையுடன் இருப்பதாகவும் கல்யான் இதழ் சித்தரித்தது. ஹிந்துக்களில் எந்தவொரு சாதியினரும் மற்ற சாதியினரைத் திருமணம் செய்வதை மசோதா நியாயப்படுத்துகிறது. இதன் மூலம் ஒரு பிராமனர், அல்லது சத்திரியர், அல்லது வைசியர் அவரை விடக் குறைந்த சாதி அல்லது கிறித்துவர் அல்லது முஸ்லீம் வீட்டில் இருந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அழைத்து வர முடியும். வர்ணாஸ்ரமத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு இது மிகுந்த மனவலியை ஏற்படுத்தக்கூடும் என்றும் வாதிட்டது. ஹிந்து சட்ட மசோதா ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ள ஹிந்துக்களின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையைச் சிதைத்துவிடும் என்ற வாதத்தையும் முன்வைத்தது.
கடைசி முயற்சியாக ஹிந்து மதப்பற்று கொண்டவரான குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத், பிரதமர் பண்டிட் நேரு, அனுபவமிக்க உள்துறை அமைச்சர் சர்தார் படேல் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களை எல்லாம் நேரில் சந்தித்து அம்பேத்கரை சட்ட அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கும், மசோதாவைத் திரும்ப பெறுவதற்கும் வழிவகைகள் செய்ய வேண்டும் என்று கல்யாண் இதழ் கேட்டுக்கொண்டது. இதனால் மனம் உடைந்த அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்
ஆர்எஸ்எஸ். அமைப்பு ஆக்டோபஸ் போன்று பல கிளைகளைக் கொண்ட நிறுவனம் என்பதை அறிவோம். கீதா பிரஸும் இதன் ஒரு கிளையாகவே செயல்பட்டுவருகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பாஜக ஆட்சிக்குப் பின்னால் ஆர்எஸ்எஸ். அமைப்பு உள்ளது என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே வரவிருக்கும் ஆபத்தை நம்மால் உணர்ந்திட முடியும். அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் மாநிலக் கட்சிகள் தங்கள் கட்சி நலன்கள் தாண்டி சிந்திக்கவும், நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும் முன்வர வேண்டும். பரந்த ஜனநாயக மேடையைக் கட்டினால் மட்டுமே பாஜகவை வீழ்த்திட முடியும்.
--------------------------------------------------
Comments
Post a Comment