Skip to main content

அது ஒரு பிறைக்காலம் - ஜமீலா ராசிக் - ஓர் அறிமுககம்

 

நூல் அறிமுகம்

தமிழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் முறைகளை விளக்கிடும் ஜமீலா ராசிக் எழுதியுள்ளஅது ரு பிறைக்காலம்

– பெ.விஜயகுமார்

தமிழ்நாட்டில் இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் மதநல்லிக்கணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்வது தமிழ்ச் சமூகத்தின்  பெருமிதங்களில் ஒன்றாகும். நாம்/மற்றவர்கள் என்று வட இந்தியாவில் இன்று காணப்படும் பாகுபடுத்தும் மனப்பாங்கு இல்லாதிருப்பது பாராட்டுதலுக்குரியது. மதுரையிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் வழியில் ஏரல் எனும் மிகச் சிறிய ஊரைக் காணலாம். ஏரலில் பிறந்து சென்னையில் வாழும் ஜமீலா ராசிக், ஏரல் வாழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் மேன்மைகளைஅது ஒரு பிறைக்காலம்எனும் நூலில் அழகுடன் விவரித்துள்ளார்.

நான் மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும்போது ஏரல் நகரை பஸ்சில் அமர்ந்தவாறே பலமுறை கடந்துள்ளேன். ஆனால் அவ்வூரில்  இத்தகு சிறப்புடன் வாழும் மக்களைப் பற்றிய செய்திகளை அறியாமல் இருந்து பெரிதும் இழந்துள்ளேன் என்பதை இந்த நூலைப் படித்த பின்னரே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஜமீலா ராசிக்கின் முகநூல் நண்பன் என்ற முறையில் அவரின் பதிவுகளைப் படித்துப் பாராட்டுவதுண்டு. அழகு தமிழில், இயல்பான நடையில், தேர்ந்தெடுத்த எளிய  வார்த்தைகளில் அவரின் எழுத்து படிப்பவர் மனதைக் கவர்ந்திடும். “உங்கள் முகநூல் பதிவுகளை நூலாக வெளியிடுங்கள்என்று என்னுடைய கருத்தையும் நான் பதிவு செய்துள்ளேன். இன்று என் ஆசை நிறைவாகியுள்ளது. ’Her Stories’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ஜமீலா ராசிக்கின் முதல் நூலினை வாசித்து மகிழ்ச்சி அடைகிறேன். 

அது ஒரு பிறைக்காலம்’ - ஜமீலா ராசிக்கின் மலரும் நினைவுகளாகும். ஏரலில் தான் கழித்த இளமைக்கால வாழ்வின் இனிய தருணங்களை இருபது கட்டுரைகளின் வழி இந்நூலில் வாசகர்களுடன் பகிர்கிறார். தோப்பில் முகம்மது  மீரான், சல்மா, கீரனூர் ஜாகீர் ராஜா, .கரீம் போன்றோர் எழுதிய புனைகதைகளை வாசித்து இஸ்லாமியர்கள் வாழ்வியல் முறைகளை அறிந்துள்ளோம். தன் சமூகத்தின் மாண்புகளை ஒரு சமூகவியலாளர் போல ஜமீலா ராசிக் பதிவு செய்துள்ளது மற்றொரு பரிமாணம் பெறுகிறது. உலகில் வாழும் எண்ணூறு கோடி மக்களையும் மானுடம் என்ற ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்தினாலும், பல்வேறு நாடுகளில், பல மொழிகள் பேசி, பல மதங்களைப் பின்பற்றி தனித்துவம் மிக்க சமூகங்களாகவே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் உண்டு என்பதால், அந்தந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் வாழ்வியல் முறைகளைச் சித்தரிப்பது தேவையாகிறது. இவற்றில் நல்லவற்றை எடுத்துக் கொண்டும், அல்லவற்றைக் கழித்தும் மற்ற சமூகத்தினர் முன்னேறலாம் என்று மானுடவியலாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் தன் சமூகக் கடமையை ஜமீலா ராசிக் முழுமையுடன் நிறைவேற்றியுள்ளார்.

நூலாசிரியர் ஏரல் நகரில் வாழ்ந்த காலம் அவருக்கு மட்டும் பிறைக்காலம் அல்ல. வாசிப்பவருக்கும் அது பிறைக்காலமாகிறது. ஏரல் நகரின் ஏழு தெருக்களின் நான்கு ஜமாத்துகளைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் நாற்பது, ஐம்பதாண்டுகளுக்கு முன் வாழ்ந்த செழுமையான வாழ்வினைக் கண்டு மகிழ்கிறோம். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களைப் போல் ஏரல் ஊரிலும் இஸ்லாமியர்கள் பிற சமூகத்தினருடன் இணக்கத்துடன் வாழ்வதைக் காட்சிப்படுத்துகிறார் ஜமீலா ராசிக். இஸ்லாமியர்கள் ரமலான் பெருநாளின்போது தங்கள் வீடுகளில் செய்த பீர்னி இனிப்பை ஊரில் உள்ள இந்துக்களுக்கும், கிறித்துவர்களுக்கும் பகிர்ந்து கொள்கின்றனை. அதுபோல கிறித்துவர்களும், இந்துக்களும் தங்கள் மதவிழாக்களின்போது வீட்டுப் பலகாரங்களை இஸ்லாமியர்களுக்குக் கொடுத்து மகிழ்கிறார்கள்.

ஏரலில் வசிக்கும் இஸ்லாமியர்கள் ஏழை - பணக்காரர்கள் என்ற  வித்தியாசங்களின்றி வாழ்ந்துள்ளதைப் பார்க்கிறோம். ரமலான் விழாவில் குமரிப் பெண்கள் அனைவரும் யாரேனும் ஒருவர் வீட்டில் கூடிகூட்டாஞ்சோறுஆக்குவது அவர்களின் ஒற்றுமையின் வெளிப்பாடாகும். இஸ்லாமியர் உறவுகளைக் குறிப்பிடும் சொற்களான வாப்புமா, மூமா, ம்மா, வாப்பா, காக்கா, லாத்தா போன்றவை பிற தமிழ்ச் சமூகத்தினர் பயன்படுத்தும் சொற்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தாலும், உறவுகளின் நெருக்கம் என்னவோ ஒன்றாகவே இருக்கிறது.

ஓதப் பள்ளிகளில் ஆலிம்ஸா சொல்லிக் கொடுக்கும் பாடல்களையும், நாகூர் ஹனிபாவின் பாடல்களையும் பெருநாள் கொண்டாட்ட காலத்தில் சிறுமிகள் வீடுவீடாகச் சென்று பாடி மகிழ்வார்கள். “மண்ணுக்கு மரம் பாரமா/ மரத்துக்கு கிளை பாரமாஎன்ற தமிழ் சினிமா பாடல் மெட்டில்தொழுகை உனக்கு பாரமா/ தொழுதால் என்ன பாவமா/ முஸ்லீம் என்றால் போதுமா/ முறையாகப் பேணி நடக்க வேணும் தெரியுமாஎன்று சிறுமிகள் பாடுவதைக் கேட்டு பெரியவர்கள் பெருமிதம் அடைவார்கள். சிறுமிகளைப் பாராட்டி பெரியவர்கள் கொடுக்கும் சர்பத்தை மடக்மடக்கென்று குடித்து சிறுமிகள் சந்தோசப்படுவார்கள். ஏரல் தெருக்களில் இரண்டு, மூன்று வீடுகளைத் தவிர மற்ற வீடுகள் எல்லாம் ஓலைக் கூரையும், மண் தரைகளையும் கொண்ட எளிய வீடுகள்தான். அந்த எளிமையான வாழ்விலும் பெருநாளும், நோன்பும் கொண்டுவரும் இன்பம் அவர்களுக்கு அலாதியானவை என்கிறார் ஜமீலா.

கலியா முதல் சீனிக்கிழங்கு பதநீர் பாகு வரைஎனும் மூன்றாம் அத்தியாயம் முழுவதும் சமையற் குறிப்புகளால் நிறைந்துள்ளது. ஓவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு வகையான உணவுப் பழக்கம் உண்டுதானே. ஏரலின் தமிழ் முஸ்லீம் வீடுகளில் சமைக்கப்படும் நெய்ச்சோறு, களக்கறி, பருப்புக் கத்திரிக்காய், தயிர்ச் சம்பல், கலியா, வட்டலப்பம், கறியாணம் என்று நீண்டதொரு உணவு வகைகளைப் பட்டியலிடுகிறார். ஜமீலாவின் பிறைக்காலத்தில் பிரியாணி சற்றும் அறிமுகமாகவில்லை என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஏரல் எழுத்தறிவு பெற்றிராத ஊராகவே இருந்துள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்கே எழுதவும், படிக்கவும் தெரிந்துள்ளது. ஜமீலாவின் தாய்மாமன்மார்கள் படிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்களாக இருந்தது அவருக்கு வசதியாக இருந்துள்ளது. வார, மாத இதழ்களுடன் குறிஞ்சி மலர், சில நேரங்களில் சில மனிதகள், பாரிஸுக்குப் போ. சிவகாமியின் சபதம் போன்ற சிறந்த நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பை அவர்  பெற்றிருந்தார். இன்றைய தலைமுறை ஏரல் முஸ்லீம் பெண்கள் அவசியம் என்பதறிந்து கல்வி பெறுவது, வேலைகளுக்குச் செல்வது நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதைப் பெருமையுடன் பார்க்கிறார்.

பெற்ற குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்வது பெற்றோர்களின் அலாதியான பிரியமாகும். அன்றைய ஏரலில் பெண்களுக்கான பேர்பெற்ற பெயர் நபி அவர்களின் அருமை மகளான ஃப்த்திமாவின் பெயர்தான். ஃப்த்திமாவுடன் கனி, முத்து போன்ற தமிழ்ப் பெயர்களையும் சேர்த்துக் கொள்ளும் பழக்கமும் இருந்துள்ளது. ஆண்களுக்கு முகம்மது நபி அவர்களின் பெயரும், அவரின் குடும்பத்தினரான அலி, ஹசன், ஹுசைன் போன்ற பெயர்களே வழக்கமாகியிருந்தன.

தமிழ்நாட்டில் முஸ்லீம்களிடையே லப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற பிரிவுகள் உள்ளன. ஆனால் அவை தமிழ்நாட்டில் நிலவும் மற்ற  சாதிகளைப் போன்று திட்டவட்டமான வரையறை கொண்டவை அல்ல. அந்தக் காலங்களில் திருமணங்கள் மிகச் சாதாராணமாக எந்தப் பிரிவினருடனும் நடந்திருக்கின்றன. ஏரலின் தெருக்களில் இன்று பையன்கள் கிரிக்கெட் விளையாடும் காட்சி மட்டுமே தென்படுகிறது, பெண் பிள்ளைகளைத் தெருக்களில் விளையாட விடுவதில்லை. ”ஆனால் அன்றைய எங்கள் பொழுதுகள் எல்லாம் தெருவோடும், புழுதியோடும் கலந்தே பொலிந்தன. தெருக்களின் நீளத்தையும், அகலத்தையும் ஒரு இண்டு இணுக்கு விட்டுவிடாமல் சுற்றிச் சுழன்றபடி அளந்த வண்ணமே இருந்தன எங்கள் கால்கள்.” என்கிறார் ஜமீலா.

அண்ணல் நபி முகம்மது அவர்கள் கற்றுத் தந்ததையும், அவர்கள் வாழ்விலிருந்து மார்க்க அறிஞர்கள் எடுத்துரைத்ததையும், இம்மண்ணுக்கே உரிய சில பண்பாடுகளையும் வழிவழியாக தமிழ் முஸ்லீம்கள் பின்பற்றி வருகின்றனர். முன்னோர்கள் நினைவாக ஃப்த்திஹா ஓதுதல், ஆஷுராவுக்கு கொலுக்கட்டை அவித்தல். சபுர்குழிக்கு ஆற்றுக்குப் போய் வருதல் போன்ற பழக்கவழக்கங்கள்  இப்போது மங்கி வருகின்றன. இவற்றைக் கடைப்பிடிப்பவர்களை சுன்னத் ஜமாத்தினர் என்றழைப்போம். இஸ்லாமிய நெறிகளைக் கற்றுக் கொடுத்த இறைநேசர்களை மதித்துப் போற்றும் மரபும் தமிழக முஸ்லீம்களிடம் உண்டு,” என்பதை ஜமீலா பதிவு செய்கிறார்.

சவுதி அரேபியாவில் செல்வாக்குப் பெற்றிருக்கும் வஹாபியிசக் கொள்கையின்பால் ஈர்க்கப்படும் இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் அக்கொள்கையின் தாக்கத்தால் - இறைநேசர்களைப் போற்றும் தர்கா மரபு இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கைக்குஎதிரானது என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்கின்றனர். இப்படி இணைந்தவர்கள் தவ்ஹீதுவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றனர். சமீபகாலமாக தமிழக முஸ்லீம்களிடையே சுன்னத் ஜமாத், தவ்ஹீத் இயக்கம் என்று இரு பிரிவுகள் உருவாகி இருப்பதை வேதனை மேலிடக் கூறுகிறார் ஜமீலா. இதனால் பள்ளிவாசல்களில் நடைபெற்றுவந்த கொட்டு, கொடியேற்றம், கந்தூரி போன்ற கோலாகலங்கள் யாவும் நின்றே போயுள்ளன. உலகின் அனைத்து மதங்களிலும் அடிப்படைவாதிகளின் கையோங்கி இருப்பதன் அடையாளமே இது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவேஎனும் அத்தியாயத்தில்பசியாறுதல்’ ’உண்ணுதல்போன்ற சொற்கள் எல்லாம் வழக்கத்தில் இருந்து காணாமல் போனதையும் குறிப்பிடுகிறார். காலை உணவை ஆங்கிலத்தில் உள்ள ’breakfast’ என்ற சொல்லுக்கு இணையான இருந்த ‘பசியாறுதல்என்ற சொல் இப்போது இல்லாது போயுள்ளது. ”அதேபோல் அன்றெல்லாம் சோற்றை உண்டார்களேயன்றி சாப்பிடவுமில்லை, தின்னவுமில்லை” என்கிறார் ஜமீலா. இன்று தமிழ்நாடு எங்கும்சோறுஎன்ற சொல் மறைந்துசாதம்என்றானதை  என்னென்பது?   

அன்றெல்லாம் ஹஜ் புனித யாத்திரைக்கு மக்கா நகரம் செல்ல மூன்று மாதங்கள் ஆகிவிடும். ஹஜ்ஜை முடித்துத் திரும்பும் ஹாஜிகள் தரும் பேரீத்தம் பழங்களைச் சுவைத்து விட்டு, ’ஜம்ஜம்எனும் வற்றாத நீரூற்றின் புனிதநீரை ஏரல் மக்கள் இதுபோன்ற வாய்ப்பு தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற  வேண்டுதலுடன் பருகுவார்கள்.. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் போன்று ஏரல் நகரில் கந்தூரி விழாவும் சீரும் சிறப்புமாக நடக்கும். அன்று ஏரல் பள்ளிவாசலில் இறைநேசர் ரிஃபாயி நாயகத்தின் நினைவுநாளைக் கொண்டாடுவார்கள்.   

ஏரலில்  இருக்கும் தூய தெரசாள் நடுநிலைப்பள்ளியில் அன்றிருந்த ஆசிரியைகள், அருட்சகோதரிகளின் பணிகளையும் நன்றியுடன் நினைவுகூர்கிறார். இப்பள்ளியில் நெடுங்காலம் தலைமை ஆசிரியராக இருந்த திரு.வில்சன் வெள்ளையா சாரின் தன்னலமற்ற பணியைப்  பாராட்டுகிறார். ஊரிலிருக்கும் சூசையப்பர் கோயிலில் வெள்ளைத் துணியைக் கட்டி காட்டப்பட்ட ‘ஞானசௌந்தரி’, ‘புனித அந்தோனியார்’ போன்ற படங்கள் இன்றும் மனதில் நிழலாடுகின்றன என்கிறார் ஜமீலா. ஏரலின் சவுக்கையம்மன் கோயில், சேர்மன் அருணாச்சல சுவாமி கோயில் திருவிழாக்களையும் குறிப்பிடுகிறார். திருவிழாவின் போது ஊர்வலம் வரும் சப்பரத்தின் அழகைப் பார்க்க இஸ்லாமியச் சிறுமிகளை சின்ன வாப்புமா கூட்டிச் சென்று காட்டியது இன்றும் கண்களில் நிறைந்திருக்கிறது என்கிறார் ஜமீலா. மதநல்லிணக்கத்தை என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திட வேண்டும் என்ற அவரின் ஆவல் வெளிப்படுவதைப் பார்க்கிறோம்.     

எடுத்ததெற்கலாம் ’தலாக்’ என்பது போலெல்லாம் ஊரில் தலாக் நடைபெறுவதில்லை. ஜமாத் அவ்வளவு சீக்கிரமாக விலக்கைக் கொடுத்து விடுவதில்லை. விசாரித்து, ஆறப்போட்டுத்தான் ஜமாத் முடிவெடுக்கும். ஏரல்வாழ் இஸ்லாமியர்களின் திருமண விழாக் காட்சிகளை ஜமீலா நம் கண்முன் நிறுத்துகிறார். ஊரிலிருக்கும்  ஏழைகளுக்கு உதவிட ’ஸகாத்’ எனும் கொடை வழங்கும் பழக்கம் உள்ளது. தொழுகையையும், நோன்பையும் இறையச்சத்துடன் செய்வதுபோல் ஸகாத் வழங்குவதையும் ஊர் மக்கள் நேர்மையுடன் வழங்கினர் என்கிறார். “அண்டை வீட்டான் பசித்திருக்கும் போது வயிறார உண்பவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்” எனும் நபியின் பொன்மொழியை அவர்கள் மறப்பதில்லை.

புத்தகத்தின் இறுதியில் ஆங்கில நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் எழுதிய ’எம்மா’ (Emma) நாவலை பல் மருத்துவராக இருக்கும் தன் மகள் படித்து மகிழ்ந்ததை ஜமீலா குறிப்பிடுகிறார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் நான் உவகையில் ஆழ்ந்தேன். ”ஜேன் ஆஸ்டின் எழுதியுள்ள நாவல்கள் அனைத்தையும் படித்து மகிழ் மகளே!” என்று அவரிடம் கேட்டுக் கொள்கிறேன். ஜமீலாவும் தொடர்ந்து எழுதி தமிழ்கூறும் நல்லுலகிற்கு சிறந்த படைப்புகளை அளித்திட வேண்டுகிறேன்.  

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...