Skip to main content

கரிப்பு மணிகள் - நாவல் - ராஜம் கிருஷ்ணன் - ஓர் அறிமுகம்

 

நூல்அறிமுகம்:

கரிப்புமணிகள்: ஆழ்ந்த, நேர்மையான கள ஆய்வுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட ராஜம் கிருஷ்ணனின் நாவல்

இலக்கியம் வெறும் பொழுதுபோக்குக்கு கொறிக்கும் சிறு தீனியாகிவிடக் கூடாது. அது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாத ஆரோக்கியமான சத்துணவைப்போல் சமுதாய உணர்வை, மனிதாபிமானத்தை, மக்களிடையே ஊட்டுவதாக இருக்க வேண்டும் என்ற நோக்கமே என்னைப் புதிது புதிதான களங்களுக்கு இட்டுச் செல்கிறதுஎனும் ராஜம் கிருஷ்ணனின் வார்த்தைகளே அவரின் எழுத்துப் பணி குறித்த விளக்கத்தைத் தெள்ளத் தெளிவாக்குகிறது. 1925இல் முசிறி நகரில் பிறந்த ராஜம் பதினைந்து வயதில் திருமணம் ஆகி முறையான கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர். கிருஷ்ணன் என்ற பொறியாளருடனான திருமணத்துக்குப் பின்னர் அவர் நிறைய தமிழ் எழுத்தாளர்களையும், சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின் போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளையும் தானே தேடிப் படித்துத் தேர்ந்தவரானார்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், நிறைய சிறுகதைகள், நாடகங்கள், வாழ்க்கை வரலாற்று நூல்களை ராஜம் கிருஷ்ணன் எழுதிக் குவித்துள்ளார். ‘வேருக்கு நீர்என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற அவரிடம் சோவியத் லாண்டு நேரு விருது, நியூயார்க் ஹெரால்டு டிரபியூன் விருது போன்ற விருதுகளும் வந்தடைந்தன.

ராஜம் கிருஷ்ணனின் நாவல்கள் எளிய மக்களின் வாழ்வியல் துயரங்களைச் சித்தரிப்பவையாக இருக்கின்றன. தன்னுடைய படைப்புகளில் அவர் மீனவர்கள், சிறைக்கைதிகள், விவசாயக் கூலிகள், மலைவாழ் மக்கள், உப்பளத் தொழிலாளர்கள் போன்றோரின் சோகங்களைப் பதிவு செய்துள்ளார். மீனவர்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வதற்காக அவர் 1970களில் தூத்துக்குடி நகரை ஒட்டிய கடற்கரைப் பகுதிகள் அனைத்தையும் சுற்றி வந்துகொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் தற்செயலாக எழுத்தாளர் சிட்டி சுந்தரராஜனை அவர் சந்திக்கிறார். அவருடைய வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் வாழும் உப்பளத் தொழிலாளிகளின் சொல்லொண்ணாத் துயரங்களைகரிப்புமணிகள்நாவலில் சொற்சித்திரமாக்கினார்.

உப்பளத் தொழிலாளர்களுடன் இரண்டறக் கலந்து அவர்கள் பேசும் மொழியை, பழக்க வழக்கங்களை நன்கறிந்து அவர்கள் மொழியிலேயே கரிப்பு மணிகள்நாவலை ராஜம் கிருஷ்ணன் சொல்லிச் செல்கிறார். உப்பளத் தொழிலாளார்களை ஒன்றிணைத்து சங்கமாக்கி அவர்களுடைய குறைகளைத் தீர்ப்பதற்குத் திட்டமிடப்படாதிருந்த காலமது. கண்களுக்கெட்டிய தொலைவுக்கு பசுமையற்ற உயிர்ப்பின் வண்ணங்களற்ற பொசுக்கும் வெம்மை கொண்ட பரப்பாக உப்பளங்கள் விரிந்து கிடந்தன. காலையிலிருந்து மாலைவரையிலும் கந்தலும், கண்பீளையுமாக உப்புப் பெட்டிகளைச் சுமந்து அம்பாரம் குவிக்கும் சிறுவர் சிறுமியரும், பெண்களும்,  பாத்திகளில் உப்பின் மேல் நின்று அதை வாரும் ஆண்களும் அங்கே படும்பாடு கொடூரமானது.

ஒரு சாதாரண குடிமகனுக்கு, ஒரு சுதந்திர நாட்டில் நியாயமாகக் கிடைக்க வேண்டிய எந்தவொரு வசதியும் உப்பளத் தொழிலாளிக்கு கிடைக்கவே இல்லை. குடியிருக்க வீடு, குடிநீர்,  மருத்துவம் ஆகிய எந்த வசதிகளும் அவர்களுக்குக் கிடையாது. குழந்தைகளின் கல்வி, வார இறுதி நாள் விடுப்பு, உப்பளத் தொழில் இல்லாத நாட்களில் மாற்றுத் தொழில், முதுமைக் கால காப்பீட்டுப் பொருள் வசதி எதுவுமின்றி, அவற்றைக் கேட்டுப் பெறுவதற்கான தெம்பு, திராணியற்ற அப்பாவி மனிதர்களாக உழைத்து உழைத்தே அவர்கள் ஓடாகத் தேய்ந்து கிடந்தனர்.

உப்பளத்து வறட்சி ஒவ்வொரு தொழிலாளியின் உடல் நலத்தையும் பெரிதும் பாதித்தது. கை, கால்களில் கொப்புளங்கள் வெடித்து நீர் வடிந்து புண்ணாகின. கண்களைக் கூசச் செய்யும் வெண்மை, கண்பார்வையை மங்கச் செய்தது. தங்களுடைய உடலமைப்பு இயல்பிற்கேற்ப பெண்கள் வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகினர். தொழிலாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாய் இருப்பது தொழிற்சங்கங்களே. தங்கம் தராத பாதுகாப்பைச் சங்கம் தரும். நாவலின் தொடக்கத்தில் உப்பளத் தொழிலாளார்கள் தங்களின் நரக வாழ்கையிலிருந்து மீட்சி கிடையாது என்று ஏக்கப் பெருமூச்சு விடுவதையும் நாவலின் முடிவில் விடியலின் ஒளிக்கீற்றுகள் தென்படுவதையும் காண முடிகிறது.

கண்ணுசாமி-மருதாம்பா தம்பதிகளின் குடும்பம் அனுபவிக்கின்ற சொல்லித் தீராத துயரங்களே கதைக் கருவாக அமைந்துள்ளது. அவர்கள் இருவரும் வேலை பார்த்துவரும்பனஞ்சோலை அளம்தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்துக் கிடக்கிறது. உப்பளங்களில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் தங்கள் முதலாளிகளை நேரடியாக அறிய மாட்டார்கள். கங்காணிகள், கணக்குப்பிள்ளைகள் வழியாகவே கிஞ்சிற்றும் நியாயம் இல்லாமல் உப்பள நிர்வாகம் நடைபெறும். சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் தொழிலாளிகளின் சம்பளத்தைப் பிடித்தும், வேலையிலிருந்து அகற்றியும் அவர்கள் அராஜகம் புரிவார்கள். பெண்களுக்குப் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அன்றாட நிகழ்வுகளாக இருக்கும். பல்லாண்டுகளாக உப்பளத்தில் வேலை பார்த்துவந்த கண்ணுசாமியின் கண் பார்வை மங்குகிறது. அவரால் உப்பை வாரி எடுக்கும் வேலையைச் செய்ய முடியவில்லை என்றானதும், அளத்தில் உள்ள ஜிப்சத்தை வெட்டி எடுக்கும் வேலைக்கு அவரை கங்காணி மாற்றிவிடுகிறான். அதையும் செய்ய முடியாமல் தடுமாறி விழும் கண்ணுசாமிக்கு அரைச் சம்பளம் மட்டுமே கொடுக்கிறான்.

மனஉளைச்சலுக்கு ஆளாகும் கண்ணுசாமி நோய்வாய்ப்படுகிறார். தன் மகள் பொன்னாச்சி, மகன் பச்சைமுத்து இருவரையும் பார்க்க விரும்புகிறார். முதல் மனைவி செவந்திக்குப் பிறந்த இவ்விரு குழந்தைகளும் திருச்செந்தூரில் தாய்மாமன் அருணாசலம் வீட்டில் வளர்ந்து வருகிறார்கள். கண்னுசாமியின் இரண்டாவது மனைவி மருதாம்பா அவர்களைக் கூட்டிவந்து பேணிப் பாதுகாக்கிறார். மாற்றாந்தாய் என்றில்லாமல் மருதாம்பா அவர்கள் மீது அன்பைப் பொழிகிறார். வறுமையின் காரணமாக பொன்னாச்சியும், சிறுவன் பச்சைமுத்துவும் உப்பள வேலைக்குச் செல்கிறார்கள். அனைத்து விதிகளையும் மீறி உப்பளங்களில் குழந்தை உழைப்பு மிகச் சாதாரணமாக நடக்கிறது. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்தே அது நடக்கிறது. பொன்னாச்சியைத் தூய்க்க கங்காணி திட்டம் தீட்டுகிறான். உப்பளத்தின் ஹைட்ரா மீட்டர் பொறுப்பில் இருக்கும் ராமசாமி என்ற இளைஞன் மட்டுமே அவளுக்கிருந்த ஒரே பாதுகாப்பு. அவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்கிறது.

ராமசாமி உப்பளத் தொழிலாளர்களைத் திரட்டிச் சங்கம் அமைக்க முனைகிறான். உப்பின் வெண்மையைப் பார்த்துக் கூசி வெளிச்சமே இல்லாத உலகுக்குள் அழுந்திவிட்டவர்கள் உப்பளத் தொழிலாளர்கள். இருட்டுக்குள் இருப்பவன் இருட்டே பாதுகாப்பு என்று கருதி வெளிச்சத்துக்குவர அஞ்சுவதைப்போல நிர்வாகத்தை எதிர்த்து நிற்பதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள். போராட்டம் ஒன்றே தங்கள் துயர் துடைக்கும் என ராமசாமி அவர்களிடம் எடுத்துக் கூறுகிறான். ’பனஞ்சோலை அளம்நிர்வாகம் வேலையிலிருந்து அவனை நீக்குகிறது. அப்பகுதியில் இருக்கும் தொழிற்சங்க நிர்வாகி தனபாண்டியன் நிர்வாகத்தின் கைக்கூலியாகிறான். உப்பளத் தொழிலாளர்கள் அவனைப் புறக்கணித்துவிட்டு ராமசாமி தலைமையில் ஒன்றிணைகிறார்கள்.

நீண்டநாள் நோய்வாய்ப்பட்ட பொன்னாச்சியின் தந்தை கண்ணுசாமி உயிர்துறக்கிறார். உப்பளத்தில் நடக்கும் விபத்தொன்றில் கண்ணுசாமி மனைவி மருதாம்பாவும் இறந்து போகிறார். அவருடைய இறப்புக்கு இழப்பீடு கொடுப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நிர்வாகம் அவர் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டதாக கேசை ஜோடிக்கிறது. போலீஸும் அதற்குத் துணைபோகிறது. பொன்னாச்சி மீது உண்மையான பாசத்துடனிருந்த தாய்மாமன் அருணாசலம் அவளுடைய திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். ராமசாமி-பொன்னாச்சி திருமணம் பல எதிர்ப்புகளையும் மீறி நடக்கிறது. அதே நேரத்தில் உப்பள நிர்வாகங்களுக்கு எதிரான போராட்டமும் தீவிரமடைகிறது.

செங்கமலத்தாச்சி எனும் சற்று வசதி படைத்த மூதாட்டி அந்தப் போராட்டத்திற்கு பண உதவி அளிக்கிறார். ஒரு காலத்தில் நிர்வாகத்தின் அரவணைப்பில் இருந்த செங்கமலத்தாச்சி தன் தவறை உணர்ந்து திருந்துகிறார். போராடும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக நிற்கிறார். ஊர்வலம், ஆர்ப்பாட்டம் எனப் போராட்டம் வலுக்கிறது. உப்பளத் தொழிலாளர்கள் தங்களுக்கான விடியலை நோக்கி வெற்றிநடை போடுகின்றனர். ராமசாமியும், பொன்னாச்சியும் முன்னணி வீரர்களாக களத்தில் நிற்கிறார்கள். கையில் கொடியுடன் சிகப்புச் சேலை உடுத்தியிருந்த பொன்னாச்சி வீர முழக்கம் செய்கிறாள். தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டம் வெல்வது உறுதிதானே!

             பேரா.பெ.விஜயகுமார்

                      ------------------------------------------

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...