Skip to main content

காடோடி - சூழலியல் குறித்த நாவல் - நக்கீரன்

 

நூல்அறிமுகம்

காடோடி: பன்னாட்டு வணிக அரசியல் காடுகளைச் சீரழிப்பதை வலி நிறைந்த குரலில் சொல்லிச் செல்லும் நாவல்.

பேரா.பெ.விஜயகுமார்

 

இதுவரை காட்டிற்குள்ளே நுழைந்திராத வாசகர்களை அடர்வனத்துக்குள் கூட்டிச் செல்லும் நக்கீரன், தன்னுடைய காடோடி நாவலில் அவர்கள் கண்முன் காட்டின் அழிவைக் காட்டி கலங்கச் செய்கிறார். தமிழில் எந்தவொரு நாவலுக்கும் கிட்டாத பெருமை காடோடி நாவலுக்குக் கிட்டியுள்ளது. தேவகி என்ற வாசகர் முழு நாவலையும் தன் இனிய குரலில் பதிவு செய்து ஆடியோவாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். நாவலைப் படித்த சில வாசகர்கள் பல்லுயிர் பாதுகாப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். காடோடி நாவல் வாசிப்பைச் செயலாக மாற்றிய பெருமையுடைத்ததாகத் திகழ்கிறது.

சூழலியல் குறித்து மழைக்காடுகளின் மரணம்’, ’நீர்எழுத்து’,  அலையாத்திக்காடு’, ’எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள்’, ’சூழலும் சாதியும்போன்ற பல நூல்களை நக்கீரன் எழுதியுள்ளார். தமிழ்ப் பசுமை இலக்கியச் சூழலில் செயல்படும் நக்கீரன் கவிஞரும்கூட. காடோடி நாவல் நக்கீரனின் ஐந்தாண்டு கால உழைப்பில் உருவாகியுள்ளது. தமிழ் இலக்கியவாதிகளும், சூழலியலாளர்களும் ஒன்றிணைந்து இந்நூல் உருவாக்கத்தில் அவருக்கு உதவியுள்ளனர். நாவலில் காணப்படும் இயற்கை குறித்த சொல்லாடலுக்கு சா.முகம்மதுஅலி, .தியோடர்பாஸ்கரன் ஆகியோர் நக்கீரனுக்கு உதவியுள்ளனர்.

காடு குறித்த பெரிய புரிதல்கள் ஏதுமில்லாமலே கதைசொல்லி காட்டுக்குள் நுழைகிறார். ஓர் உல்லாசப் பயணியைப்போலக் காட்டுக்குள் நுழையும் அவர் காட்டின் அழிவிற்குப் பின்னர் காட்டிலிருந்து வெளியேறுகையில் காட்டின் மீது மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இயற்கைச் சூழல் மீதும் காதல் கொள்பவராக மாறிவிடுகிறார். இத்தகு மாற்றத்தை நாவலைப் படித்து முடிக்கும் வாசகர்களும் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை. ’காடோடிநாவலைப் படிக்கும் வாசகர்கள் மலைக்காடு என்பது வெறுமனே மரங்களின் தொகுப்பல்ல என்பதையும், மண் முதல் மரம்வரை, பூச்சி முதல் பறவைவரை, ஓடை முதல் அருவிவரை, தேவாங்கு முதல் தொல்குடிவரை ஒன்றோடொன்று பிணைந்து வாழும் பல்லுயிர் உலகம் என்பதையும் அறிவார்கள். காட்டுக்கு உரிமை கொண்டாடமால் காட்டின் உயிரினங்களுள் ஒன்றாக வாழ்கின்ற, காட்டின் இரகசியங்கள் அனைத்தையும் அறிந்து வைத்துள்ள தொல்குடிகளின் வாழ்வியலையும் இந்த நாவல் காட்சிப்படுத்துகிறது.

தான் வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தின் உயரதிகாரியின் மனநிலையைக் கதைசொல்லி படம்பிடித்துக் காட்டுவதில் நாவல் தொடங்குகிறது. இந்தோனேசியாவின் போர்னியோ காட்டில் நன்கு பருத்து உயர்ந்த நெடுமரத்தை அண்ணாந்து பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரி திரு.குவான் தன் இரு கைகளையும் அகல விரிக்கிறார். காதலியை அணைப்பது போல மரத்தைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார். மர வணிகரான அந்த மனிதருக்குத்தான் அந்த மரத்தின் மீது என்னவொரு காதல்! ”என்னவொரு அருமையான மரம்!” என வியக்கும் அவர் அந்த மரத்தை மீண்டுமொருமுறை கண்களால் அளவிடுகிறார். எப்படியும் ஐயாயிரம் டாலருக்குப் போகும்”. என்கிறார் அப்படியானால் மரத்தின் மீதான அவரது காதல் வெறும் டாலர் காதல்தானா? நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குவானைப் பொறுத்தவரை மரம் என்றால் அது இலைகள் அல்ல; பூக்கள் அல்ல; காய்கள் அல்ல; கனிகளும் அல்ல; ஏன்; மரமே அல்ல. மரம் என்றால் அது டாலர், டாலர், டாலர் மட்டுமேஎன்பதை அறிய முடிகிறது. மூன்று பாகங்களில் முன்னூறு பக்கங்களாக விரியும் நாவலைப் படிக்கும்போது இயற்கையை அழித்து லாபம் தேடும் பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்களின் வெறியைக்கண்டு மனம் பதறுகிறது. காட்டின் அழிவைக்கண்டு கண் கலங்குகிறது.

அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் காட்டைப் பல தொகுதிகளாகக் கூறுபோட்டு மரங்களை வெட்டி எடுக்கின்றன. நாள்தோறும் மரங்களை அறுக்கும் சங்கிலி வாட்களின் ஓசை காட்டில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மரங்கள் முறிந்து வீழும்போது அதன் உச்சியில் கூடு கட்டிய பறவைகளும் அழிகின்றன. மரத்தின் மீது உயிர்வாழும் மற்ற விலங்கினங்களும் அழிகின்றன. அழிவின் ஓசை காடெங்கும் எதிரொலிக்கிறது. இந்தோனேசியா தீவுக் கூட்டங்களின் பல பகுதிகளிலிருந்து ஏழை உழைப்பாளிகள் அடிமைகளாக அங்கே அழைத்து வரப்படுகிறார்கள். அற்பக் கூலிக்கு மரங்களை வெட்டி, டிராக்டர்களில் இழுத்துச் சென்று துறைமுகங்களில் நிற்கும் கப்பலில் ஏற்றி அனுப்புகிறார்கள். அவர்களுக்குத் தெரியாது தாங்கள் வெட்டிச் சாய்க்கும் மரங்களின் விலை பல மில்லியன் டாலர்கள் என்று. ஆபத்தான இவ்வேலையில் ஈடுபடும் புர்கான் எனும் தொழிலாளி மரத்தின் அடியில் விழுந்து நசுங்கிச் சாய்கிறான். வேலை நிமித்தம் உயிரிழந்த உழைப்பாளிக்கு ஈவு இரக்கமற்ற நிறுவனம் இழப்பீடு ஏதும் வழங்க முன்வரவில்லை.

கவிகையின் அழிவுக்குச் சாட்சியமாக கதைசொல்லியுடன் ஒமர், ஜோஸ்னா, ரலா, பிலியவ், யொகன்னா போன்ற கதாபாத்திரங்களும் இந்த நாவலில் நடமாடுகிறார்கள். நெஞ்சைப் பிழியும் காடழிப்புக் காட்சிகளுக்கு இடையில், ரலா என்ற தொல்குடி பெண்ணிடம் கதைசொல்லி தன்னுடைய மனதைப் பறிகொடுப்பதாக நாவலில் இடம் பெறும் காதல் கதை வாசகர்களைச் சற்றே இளைப்பாறச் செய்கிறது.

பிலியவ் கதாபாத்திரம் இந்த நாவலின் உன்னதமான படைப்பு. காட்டின் தொல்குடி முதியவரான பிலியவ் பாத்திரத்தின் மூலம் இயற்கையை நேசிக்கின்ற, பிரதிபலன் பாராமல் மனிதர்களை நேசிக்கின்ற, தான்நேசிக்கும் காட்டை அழிப்பவர்களிடம்கூட அன்பு பாராட்டுகின்ற அற்புதமான மனிதரை நக்கீரன் படைத்துள்ளார். அந்தப் பாத்திரத்தின் மூலம் காடு பற்றிய பல்வேறு கமுக்கங்களை நமக்குக் காட்சிப்படுத்தி வைக்கிறார்.

தொல்குடிகளும், காடும் வெவ்வேறு அல்ல. மரமும் அதன் பட்டையும் போல் அவர்கள் இருவரும் ஒன்றோடு ஒன்றாய் இணைந்தவர்கள். ஒருவருக்கொருவர் அவர்கள் பேசிக் கொள்கின்றனர். கதைசொல்லியும், மரம்வெட்டு முகாமின் பத்தாம் தொகுதி அதிகாரி ஒமரும் வேலை பார்க்கும் இடத்தில்தான் அக்காட்டின் மூதாய் மரம் வானுயர்ந்து வளர்ந்து நிற்கிறது. தனக்கு வரவிருக்கும் அழிவைத் தடுக்கச் சொல்லி பிலியவ்விடம் மூதாய் மரம் கேட்டுக்கொள்கிறது. பிலியவ் மூதாய் மரத்தை வெட்ட வேண்டாம் என்று ஒமரிடம் சொல்கிறார். ஒமரும் நிர்வாகத்திடம் சொல்லிப் பார்க்கிறார். ஆனால் நிர்வாகத்தின் மேலிடம் அதைக் கேட்கத் தயாரில்லை. மரம் வெட்டப்படுகிறது. காட்டின் ஆன்மா உயிரிழக்கிறது.

போர்னியோவின் மழைக்காட்டில் கதைசொல்லி காணும் அதிசயங்கள் எண்ணில் அடங்காதவை. அவருக்கு மனித இனத்தின் மூதாதை விலங்குகளான பத்து பிரைமேட்டுகளையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டுகிறது. குபுங் எனப்படும் சறுக்கிகளைப் பார்க்கிறார். அது வௌவாலுக்கும் முந்தைய பறக்கும் பாலூட்டி. அழிவின் விளிம்பில் இருக்கும் இவ்வதிசய பிராணிக்கு சாவுமணி அடித்தாகிவிட்டது என்பதைக் கதைசொல்லி அறிகிறார். வெட்டப்பட்ட மூதாய் மரம் நின்றிருந்த இடத்துக்குச் செல்கிறார். வெட்டப்பட்டு எஞ்சி நிற்கும் அந்த மாபெரும் மரத்தின் அடிப்பரப்பின் குறுக்குவெட்டுத் தோற்றமே மிக அகன்று இருக்கிறது. இரும்பு வடக்கயிறு போட்டு இழுத்ததில் அதன் தோல் உரிந்து புண்ணாகியுள்ளது. ’வலிக்கிறதா’? என்று அவருக்கு அந்த மரத்திடம் கேட்கத் தோன்றுகிறது. அடுக்கடுக்கான அதன் உள் வளையங்களை எண்ணிப் பார்க்கிறார். எத்தனை ஆண்டுகள்? அதனை எண்ணிமாளவில்லை.” இத்தனை ஆண்டுகளையும் உன்னுள் அடுக்கி உன் ஆயுளாகக் கொண்டிருந்த நீ, இக்கடைசி வெளி வளையக் காலத்தில் எங்களிடம் வந்துசேர்ந்து இறுதியாக உன் ஆயுளை இழந்துவிட்டாய். உன் கடைசி வெளிர் நிற வளையத்தைத் தொடுகிறேன். குற்ற உணர்வில் கூசுகிறேன். மூதாய் மரமே! மன்னிப்புக் கோருகிறேன். உன்னுடைய இலைகளையும், கிளைகளையும் அறிந்தே வெட்டினோம். உன்னையும் அறிந்தே வீழ்த்தினோம். மன்னிப்புக் கோருகிறேன்! மூதாயே! மன்னிப்புக் கோருகிறேன்!” என்று கதறி அழுதவாறு வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பரப்பின் மீது படுக்கிறார். எங்கிருந்தோ வந்த பிலியவ்வும் அவரருகே படுத்துக் கொள்கிறார். மூதாய் மரத்தின் அழிவை காட்டின் அழிவின் முற்றுப்புள்ளியாகவே பிலியவ் கருதுகிறார்.

காடுகள் அழிவதும், செம்பனைத் தோட்டங்கள் அங்கே முளைப்பதும், இந்தியா போன்ற நாடுகளில் பாமாயில் இறக்குமதி அதிகரிப்பதும் தானாக நடப்பதில்லை. அவை அனைத்துக்கும் கார்ப்பரேட்டுகளின் வணிக ஈடுபாடுதான் அடிப்படை. துவே ஆசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்காவில் காடுகள் அழிய, சுற்றுச் சூழல் சீரழியக் காரணம் என்பதை காடோடி நாவல் நம் கண்முன் நிறுத்துகிறது. நிலம், மலை, காடு, கடல், நீர்நிலைகள் என்று அனைத்து இயற்கை வளங்களும் மனிதனின் பேராசையால் சீரழிகின்றன.

போர்னியோ காட்டின் அழிப்பை பேட்ரிக் ரூக்சல் இயக்கியுள்ள க்ரீன்ஆவணப்படம் உணர்ச்சி மிகு காட்சிகள் வழிச் சித்தரிக்கிறது. மரப்பாச்சி’, ’கழுதைப்புலி: ஒரு கானகத் தோட்டிபோன்ற படைப்புகளில் கோவை சதாசிவம் காடுகளை, கானுயிர்களைப் பண்பாட்டு விழுமியங்களுடன் உணரச் செய்கிறார். .ஜெகநாதனும், ஆர்.பானுமதியும் இணைந்து எழுதியுள்ளதட்டான்கள், ஊசித்தட்டான்கள்; ஓர் அறிமுகக் கையேடுஎனும் நூல் சிறந்த சூழலியல் குறித்த கையேடாகத் திகழ்கிறது. தமிழில் இது போன்ற நாவல்கள், ஆவணப்படங்கள், பிற படைப்புகள் இப்பிரச்சனையைப் பேசுவதன் மூலம் சூழல் குறித்த மனித குலத்தின் அக்கறை தென்படுகிறது. அந்த அக்கறை சற்று ஆறுதலையும் தருகிறது. காடோடி போன்ற சீரிய படைப்புகளின் வழி சூழலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நக்கீரனை வாழ்த்திடுவோம்.

                            ---------------------------

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...