புத்தக விமர்சனம்
‘உம்மத்’ – முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்குப் பிறகும் தொடரும் ஈழத் தமிழர்களின் அவலங்களைச் சித்தரிக்கும் ஸர்மிளா ஸெய்யத்தின் நாவல்
பெ.விஜயகுமார்
ஈழ விடுதலைக்காக நடந்த நீண்ட நெடிய போர் சொல்லில் அடங்கா அழிவில் முடிந்தது. விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) சரணடைந்த பின்னரும் ஈவிரக்கமின்றி இயக்கத்தினரையும், அப்பாவி மக்களையும் முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்தது ஸ்ரீலங்கா இராணுவம். ’ஈழம் எங்கள் தாகம்’ என்று சொல்லி சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக நடந்த போரில் எண்ணற்ற ஆண்களும், பெண்களும் இன்னுயிர் ஈந்தனர். ‘இயக்கம்’ என்று பொதுவாக அழைக்கப்பட்ட எல்டிடிஇ விடுதலைப் போரில் எடுத்த நிலைபாடுகள் முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. இயக்கத்தையும், அதன் தலைமையையும் தியாகத்தின் வடிவமாக மட்டுமே கொண்டு போற்றிப் புகழும் அணி ஒருபுறம், இயக்கம் எடுத்த தவறான முடிவுகளை கடுமையாக அல்லது மென்மையாக விமர்சிக்கும் அணி மறுபுறம் இருப்பதைக் காண்கிறோம். இவ்விருதரப்பினரும் ஈழ விடுதலைப் போர் நிகழ்வுகளை இன்று வெவ்வேறு வடிவங்களில் பதிவு செய்கின்றனர். ஸர்மிளா ஸெய்யத்தின் ‘உம்மத்’ நாவல் இவ்வகையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
சிறந்த எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான ஸர்மிளா இலங்கையின் மட்டக்கிளப்பில் இருந்தபோது சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பொறுப்பில் இருந்தார். பிபிசி வானொலிக்கான நேர்காணலில் இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தாவுக்கு எதிராகவும், பாலியல் தொழிலை சட்டத்திற்குப்படுத்த வேண்டும் என்று பேசியதற்காகவும் மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளானர். எனவே தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் சமூகவியல் படித்துப் பட்டம்பெற்றார், இலங்கைக்குத் திரும்பியதும் மீண்டும் மதவெறி வன்முறையாளர்கள் தாக்குதல் தொடுக்க முயன்றதால் புலம் பெயர்ந்து அமெரிக்காவின் நெபரஸ்கா மாநிலத்தில் வாழ்கிறார். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாமல் வன்முறையால் எதிர்கொள்ளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பின்தொடரும் எழுத்தாளர்கள் தஸ்லீமா நஸரீன், சல்மான் ருஷ்டி போன்றோர் வரிசையில் ஸர்மிளா ஸெய்யத்தும் உள்ளார். சிறகுகள் முளைத்த பெண், ஒவ்வா, உம்மத், பணிக்கரின் பேத்தி, உயிர்த்த ஞாயிறு ஆகிய நூல்களை ஸர்மிளா எழுதியுள்ளார்.
’உம்மத்’ என்ற அரபுச் சொல் சமூகத்தைக் குறிப்பதாகும். உம்மத் நாவலில் தான் வாழும் சமூகத்தின் வாழ்வியல் சோகத்தை யோகா, தவக்குல், தெய்வானை எனும் மூன்று பெண்கள் வழி ஸர்மிளா சித்தரிக்கிறார். தமிழ் தேசியவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம், சிங்களப் பேரினவாதம் ஆகிய மூன்றும் இணைந்ததொரு சமூகம் தரும் அழுத்தம் வாட்டி வதைக்க இம்மூன்று பெண்களும் எதிர்நீச்சல் போடுகிறார்கள். யோகா, தெய்வானை இருவரும் இயக்கத்தில் பணியாற்றி ஊனத்தை மட்டுமே பரிசாகப் பெற்று சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகிறார்கள். போருக்குப் பின்னான மறுநிர்மாணப் பணிக்கு தன்னை முழுவதும் ஒப்படைத்து எதிர்கொள்ளும் தடைகளை எல்லாம் மீறி தவக்குல் சேவை புரிகிறார். பொதுவெளியில் பணியாற்றுவது என்பது பொதுவாக எல்லா பெண்களுக்குமே சவாலான செயலாகும். மேலும் கடுமையான சோதனைகளை இஸ்லாமியப் பெண்ணான தவக்குல் சந்திக்கிறார். ஈழப் போருக்கு முன் வெவ்வேறு வழிகளில் வாழத் தொடங்கி போருக்குப் பின்னான நெருக்கடி என்ற புள்ளியில் இந்த மூன்று பெண்களும் சந்திக்கின்றனர்.
நல்லதொரு குடும்பம் இனிய பல்கலைக்கழகம் எனும் பாரதிதாசனின் வருணனைக்கு ஒப்பானதொரு அன்பும், அமைதியும் ததும்பும் குடும்பத்தின் மூத்த பெண்ணாவாள் தவக்குல் .ஹபீப் – நிஸா தம்பதிகள் தவக்குல், குல்பர், ஜானா, சனோ ஆகிய நான்கு புதல்விகளின் பெற்றோர்கள். தங்கள் குழந்தைகளுக்கு அன்பையும், பண்பையும் ஊட்டி அவர்கள் வளர்க்கிறார்கள். சமூகவியல் பட்டம் பெற்றுப் போருக்குப் பின்னான இலங்கையின் மறுநிர்மாணப் பணியில் மூழ்கி தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்கிறார் தவக்குல். இதனால் கணக்கிலடங்கா பிரச்சனைகளைக்கு ஆளாகிறார். அவரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் துரத்துகிறார்கள். வீரத்துடனும், தீரத்துடனும் அவர் போராடுகிறார். யோகாவும், தெய்வானையும் இயக்கத்தில் இணைந்து தங்கள் உயிரைத் துச்சமென நினைத்துப் போராடியவர்கள். போரில் தங்களின் ஒற்றைக் காலை இழந்து மறுவாழ்வுக்காகக் காத்திருக்கிறார்கள்.
2009இல் முள்ளிவாய்க்காலில் ஸ்ரீலங்கா இராணுவம் விடுதலைப் புலிகளையும், அப்பாவி மக்களையும் சித்தரவதை செய்து கொன்று குவித்தது. தப்பிப்பிழைத்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். சிலர் இராணுவ முகாமில் அடைக்கப்பட்டனர். முகாமில் இருந்தவர்களை அவர்களின் பெற்றோர் தேடிவந்து பொறுப்பேற்றுக் கொள்ளும் பட்சத்தில் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இயக்கத்தில் சேர்ந்து, சாவின் விளிம்பில் வாழ்ந்து, உயிர் பிழைத்த பெண்கள் எல்லோரும் தியாகிகள், போராளிகள் என்று கொண்டாடப்படவில்லை. பலரும் புறக்கணிக்கப்படுகின்றனர். யோகா, தெய்வானை இருவரும் போருக்குப்பின் மறுவாழ்வுக்காக ஏங்கும் பல அபலைப் பெண்களின் பட்டியலில் சேருகிறார்கள்.
தன்னார்வக் குழுக்கள் போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் தந்து ஆதரிக்கின்றன. தவக்குல் இத்தகு தன்னார்வக் குழு ஒன்றில் ஓய்வு ஒழிவின்றிப் பணியாற்றுகிறார். பணி நிமித்தம் கொழும்பு, அநுராதபுரம் என்று அவர் தொடர்ந்து பயணிக்கிறார். தன்னார்வக் குழுவில் பணியாற்றும் ஆண்களிடம் விகல்பங்களின்றிப் பழகுகிறார். அவரின் பணி அங்கீகரிக்கப்படுகிறது. பாராட்டப்படுகிறது. மேலும் பொறுப்புகள் வந்தடைகின்றன. இதனால் சகபணியாளர்களின் பொறாமையை எதிர்கொள்கிறார். பணியில் தோற்றவர்கள் தவக்குலைத் தூற்றுகிறார்கள். சேற்றைவாரியிறைக்கிறார்கள். ஊருக்குள்ளும் மதஅடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் தவக்குலைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அச்சுறுத்துகின்றனர். எச்சரிக்கின்றனர்.
எல்லா மதங்களிலும் மதஅடிப்படைவாதம் காணப்படுகிறது. மதக்கோட்பாடுகளைச் சரிவரத் தெரிந்து கொள்ளாதது அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே தவறான விளக்கம் அளிப்பது இவ்விரண்டும் அடிப்படைவாதிகளின் வாடிக்கையாகும். இஸ்லாமிய மதஅடிப்படைவாதிகள் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் சொல்லித் தீராதது. பாலியல் ரீதியான வன்முறைகளை நிகழ்த்துவது, முகத்தில் ஆசிட் வீசுவது, கொலை செய்வது போன்ற வன்முறைகளை நடத்தி பெண்களைச் சமூகப் பணிகளில் ஈடுபடவிடாமல் தடுக்க நினைக்கின்றனர். பெண்களைப் பர்தா அணியவைத்து வீட்டுக்குள் பூட்டி வைப்பதே இவர்களின் நோக்கம். இவர்களுக்குச் சில மௌலவிகள் துணைபோவது வேதனையானதாகும். தவக்குல் இக்கும்பலின் எச்சரிக்கையையும் மீறி தன்னுடைய தொண்டைத் தொடருகிறார். அவருக்கு அஸீம் என்ற ஆட்டோ ஓட்டுநரும், தவக்குலின் பெற்றோரும், சகோதரிகள் மூவரும் துணைநிற்கின்றனர். யோகா, தெய்வானை போன்ற பல அபலைப் பெண்களுக்கு தவக்குலின் வீடு இளைப்பாறுதலைத் தருகிறது. தங்கள் வீட்டுப் பெண்களாக இவர்களை அரவணைத்துப் பாதுகாக்கிறார்கள். நாவல் மூவரின் வாழ்கையையும் ஒரே நேரத்தில் முன்னும் பின்னுமாகச் சொல்லிச் செல்கிறது.
தவக்குல் தன்னுடைய கடுமையான பணிகளுக்கிடையில் காதல் வலையிலும் விழுகிறார். கொழும்பில் வாழும் சபியா என்ற இளைஞனை அவர் காதலிக்கிறார். சபியா நன்கு படித்தவனாக இருந்தபோதிலும் அவனால் பொதுவாழ்வில் தவக்குல் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருமணம் தொடர்பாகப் பேசவரும் அவனும், அவன் பெற்றோரும் தவக்குல் பொதுவாழ்வில் இருந்து விலகிட வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கின்றனர். தான் முழுமனதுடன் ஈடுபடும் பணியிலிருந்து விடுபட தவக்குல் விரும்பவில்லை. திருமணம் தடைபடுகிறது.
’ஈழ விடுதலை’ என்ற இலட்சியத்துக்காக இயக்கத்தில் சேர்ந்தவர்களைவிட வறுமையின் காரணமாகச் சேர்ந்தவர்களே அதிகமானவர்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டவர்களும் உண்டு. யோகா வறுமையின் காரணமாக இயக்கத்தில் சேர்ந்தவர். சுப்பிரமணியன் – பத்மா தம்பதிகளின் ஏழு குழந்தைகளில் ஒருவர் யோகா. மூத்தவள் வத்சலா திருமணமாகி வசதியாக வாழ்கிறார். அவரின் சகோதரர்கள் வியாபாரம் செய்யும் அவர் கணவனின் கடைகளில் உழைக்கின்றனர். குடும்ப வறுமையின் காரணமாக யோகா வீட்டுவேலை செய்ய அனுப்பி வைக்கப்படுகிறார். வேலை பார்த்த வீட்டில் திருடி என்று வீண்பழி சுமர்த்தி அடித்துத் துன்புறுத்தப்படுகிறார். திரும்ப வீட்டுக்குச் செல்ல விரும்பாமல் வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரத்த இயக்கத்தில் அடைக்கலம் ஆகிறார். நல்ல உணவு, ஆடை என்று அனைத்து வசதிகளும் இயக்கத்தில் கிடைப்பது கண்டு வியப்படைகிறார்.
முள்ளிவாய்க்கால் கொடுமையின் நேரடி சாட்சியாக நின்ற யோகா போரில் ஒரு காலை இழக்கிறார். போர் முடிந்ததும் கைதியாக இராணுவ முகாமில் அடைக்கப்படுகிறார். குடும்பத்தினர் இவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் ஒத்துழைக்கிறது. யோகாவின் பாசமிகு தந்தை வலியுறுத்தியதால், யோகாவை அவர் தாய் பத்மா வீட்டுக்கு அழைத்து வருகிறார். வீட்டில் வத்சலா கோலோச்சுகிறார். அம்மா பத்மா வத்சாலவுக்குக் கட்டுப்பட்டவர். அன்புடன் அரவணைத்த தந்தையும் மரணிக்க யோகா வீட்டிலேயே அனாதையாகிறார். தங்கை கலா மற்றும் பால்ய சிநேகிதி செண்பகம் இருவரும் அன்பு பாராட்டுகின்றனர். கலாவின் திருமணம் நிச்சயம் ஆனதும் யோகாவை வீட்டிலிருந்து விலக்கிவைக்க முடிவு செய்கின்றனர். அவர்களின் உறவினர் சித்தாண்டி மாமா வீட்டுக்கு யோகாவை அனுப்புகிறார்கள். தன்னுடைய மாமா நல்ல முறையில் பராமரிப்பார் என்றே யோகா நினைக்கிறாள். செல்கிறாள்.
தோழி செண்பகம் மூலம் போரில் பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு மறுவாழ்வு தரும் பணியில் இருக்கும் தவக்குல் பற்றி யோகா அறிகிறார். தெய்வானைக்கு ஏற்பாடு செய்ததுபோல் யோகாவிற்கும் செயற்கைக் கால் செய்திட ஏற்பாடுகள் செய்வதோடு யோகாவை போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு மையத்தில் சேர்த்திடவும் முயற்சி எடுக்கிறார் தவக்குல்.
போர்க் காலத்தில் யோகா காதல் வயப்பட்டு சாதுரியன் என்ற போராளியின் அன்பைப் பெற்றிருந்தாள். யோகாவின் ஊனத்தையும் பொருட்படுத்தாது சாதுரியன் அவளை நேசித்தான். ஆனால் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப்பின் இருவரும் பிரிந்தனர். சாதுரியன் மீண்டும் கிடைத்தால் மட்டுமே தன் வாழ்வு அர்த்தமடையும் என்று யோகா நினைக்கிறாள். யோகாவின் காதல் கதையை அறிந்த தவக்குல் யோகாவின் காதலனைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பை தெய்வானையிடம் கொடுக்கிறார். தவக்குல் இட்ட பணி என்பதாலும், யோகாவின் வாழ்வியல் பிரச்சனை என்பதாலும் தெய்வானை தீவிரத் தேடுதலில் ஈடுபடுகிறார். முடிவில் யோகாவின் காதலன் சாதுரியன் உயிரோடு இல்லை என்ற செய்தியை யோகாவிடம் எப்படித் தெரிவிப்பது எனத் தவிக்கிறார்.
ஒரு கொடிய இரவில் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் யோகா யாரை மலைபோல் நம்பியிருந்தாளோ அந்த மனிதனே; ஆம்; அவள் மாமாவே அவளைப் பாலியல் வன்முறை செய்கிறான். அக்கொடியவனை உதறித் தள்ளிவிட்டு அடுப்படியில் இருந்த மண்ணெண்ணையைத் தலையில் ஊற்றி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். சோகத்தில் தோய்ந்த அவளின் வாழ்வு மிகக் கொடூரமான சோகத்தில் முடிந்து விடுகிறது.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப்பின் தவக்குல் பணி தீவிரமடைகிறது. திருமணமும் தடைப்பட்டு விட்டதால் கவனச் சிதறல் ஏதுமின்றி முழுமூச்சுடன் உழைக்கிறார். அடிப்படைவாதிகளின் கண்காணிப்பும் கூடுகிறது. வீட்டுக்குள் புகுந்து செத்த ஆட்டை தொங்கவிட்டுச் செல்கிறார்கள். இது எங்களின் கடைசி எச்சரிக்கை என்கிறார்கள். தவக்குல்லின் பெற்றோர் நான்கு பிள்ளைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டு தனியே தங்குகிறார்கள். ஒரு நள்ளிரவில் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து பெரியவர் ஹபீபாவைக் கொன்றுவிடுகிறார்கள். ஆபத்தானது என்று தெரிந்தும் தான் செய்த அத்தனை வேலைகளையும் ஆதரித்து துணைநின்ற தந்தையின் மரணம் தவக்குல்லை நிலைகுலையச் செய்கிறது. தன்னார்வக் குழுவினரின் ஆலோசனையின் பேரில் நேபாளம் செல்ல முடிவெடுக்கிறார். அம்மா நிஸாவும், சகோதரிகளும் விமானநிலையம் வந்து வழியனுப்புகிறார்கள். தவக்குல்லின் பயணம் தொடர்கிறது.
ஸர்மிளா ஸெய்யத்தின் வாழ்வை ஒத்ததாகவே தவக்குல்லின் வாழ்வு நகர்வதைப் பார்க்கிறோம். இருப்பினும் ’உம்மத்’ நாவல் ஸர்மிளாவின் சுயசரிதை அல்ல. ஈழப் போராட்ட நிகழ்வுகளே நாவலின் கதைக்களம். எது வரலாறு எது புனைவு என்று அறியமுடியாத வண்ணம் இரண்டும் கலந்திருப்பது நாவலின் வெற்றியாகும்.
ஈழ விடுதலைப் போர் குறித்து இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விமர்சனங்கள் ஏதுமற்ற ஆதரவு ஒருபுறமும், கடுமையான அல்லது மென்மையான விமர்சனங்கள் மறுபுறமும் உள்ளன. சகபோராட்ட இயக்கங்களைச் சகோதரப் பகையில் முற்றிலும் அழித்ததைத் தவறான முடிவெனக் கருதும் நிலைபாடும் உள்ளது. நார்வே நாட்டின் தலையீட்டைப் பயன்படுத்தி நல்லதொரு உடன்பாட்டிற்கு வந்து சற்று முன்னேறி இருக்கலாம் என்ற பார்வையும் உள்ளது. போரை நன்கு நடத்தத் தெரிந்த பிரபாகரன் தலைமையிலிருந்த போராட்டக் குழுவிற்குச் சரியான நேரத்தில் போரை முடிக்கத் தெரிந்திருக்கவில்லை என்ற வாதமும் பரவலாக உள்ளது. சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான போரில் கிழக்கில் வாழ்ந்த தமிழ் முஸ்லீம்களையும் இணைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை ஈழ எதிர்ப்பாளர்களாகக் கருதி அவர்களை அழித்த செயலும் நல்லதல்ல என்ற கருத்தும் ஓங்கி நிற்கிறது. இவ்விவாதங்களுக்கெல்லாம் விடை அளிக்கும் நாவலாக உம்மத் நாவல் பரிணமிக்கிறது. ஸர்மிளா ஸெய்யதுவின் செயலில் புலப்படும் தெளிவும், துணிச்சலும் அவரது நாவலிலும் வெளிப்படுகிறது. தொடர்ந்து ஈழம் குறித்து ஸர்மிளா எழுதிட விரும்பும் வாசகர்கள் அவரின் கருத்துரிமைக்காகவும் குரல் கொடுப்பார்கள் என்று நம்புவோம்.
- பேரா.பெ.விஜயகுமார்.
Comments
Post a Comment