Skip to main content

தமஸ் - பிரிவினைக் காலத் துயரத்தைச் சித்தரிக்கும் நாவல் - பிஷம் சஹனி

 

தமஸ்: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் காலக் கொடூரங்கள், மதவெறியைச் சித்தரிக்கும் பிஷம் சஹனியின் வரலாற்று நாவல்.

பெ.விஜயகுமார்

‘மிக உயர்வான மிருகம்” (Paragon of animals) என ஷேக்ஸ்பியர் மனிதனைச் சித்தரிக்கிறார். அந்தப் பெருமைக்கு உரியவனாக மனிதன் எப்போதும் இருக்கிறானா என்ற கேள்வி நம்முள் எழுந்தவண்ணம் இருக்கிறது. இனம், மதம், சாதி, போன்ற அடையாளங்களுக்குள் சிக்கித் தவிக்கும் மனிதன், அவற்றிலிருந்து விடுபட்டு ஒன்றிணைவதற்குச் சாத்தியமே கிடையாதோ என்ற பரிதவிப்பும், ஏக்கமும் நமக்குள் உழன்று கொண்டே இருக்கிறது. வரலாற்றின் பக்கங்கள்- மதத்தின் பேரால் மனித இனம் மேற்கொண்ட போர்களை, சிந்திய இரத்தத்தைச் சித்தரிப்பதாகவே இருக்கின்றன. நாடுகளைப் பிடித்தாளும் வெறியில் மூண்ட இரண்டு உலகப் போர்களில் மடிந்து போனோர் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இனம், மதம், சாதி வெறியின் அடிப்படையில் நிகழும் மோதல்களால், இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டினுள் இரத்த ஆறு ஓடியவாறே இருக்கிறது.

பிரிவினைக் காலக் கொடுமைகளைச் சித்தரித்து ஏராளமான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் படைக்கப்பட்டுள்ளன. குஷ்வந்த்சிங் எழுதியட்ரெயின் டு பாகிஸ்தான்’, பப்சி சித்வா எழுதியஐஸ் கேண்டி மேன்’, ஊர்வசி புட்டாலியாவின்தி அதர் சைடு ஆஃப் சைலன்ஸ்’, அனிதா தேசாய் எழுதியகிளியர் லைட் ஆஃப் டே’, பாகிஸ்தான் எழுத்தாளர் யாஷ்மின் கான் எழுதியதி கிரேட் பார்ட்டிசன்: தி மேகிங் ஆஃப் இந்தியா அன்ட் பாகிஸ்தான்’, சாமன் நஹல் எழுதியஆசாதி’, சல்மான் ருஷ்டியின்தி மிட்நைட்ஸ் சில்ரன்மன்ஜித் சச்தேவா எழுதியதி லாஸ்ட் ஜெனரேசன்’, போன்ற ஏராளமான படைப்புகள் இந்த வகையில் வெளிவந்துள்ளன. பிஷம் சஹனியின் தமஸ்நாவல் இவ்வரிசையில் வந்துள்ள மிகவும் காத்திரமான படைப்பாகும். ராவல்பிண்டி நகரில் வாழ்ந்த இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்களுக்கிடையே இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நடைபெற்ற கொடூரமான மதவெறித் தாக்குதலை தமஸ்’ (இருட்டு) நாவல் சித்தரிக்கிறது.

ராவல்பிண்டி நகரில் பிறந்த பிஷம் சஹனி (1915-2003), தேசப் பிரிவினைக்குப் பிறகு டில்லியில் வாழ்ந்தார். இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்தார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிஷம் சஹனி டில்லியில் அரசு கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். மாஸ்கோ நகரில் ஏழு ஆண்டுகள் தங்கி, ரஷ்ய மொழியின் புனைகதைகளை இந்தியில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். இந்திய மக்கள் நாடகஅரங்கின் சங்கத்தில் (IPTA) இணைந்து சிறந்த நாடகாசிரியராகவும், நடிகராகவும் திகழ்ந்தார். அந்தச் சமயத்தில் இடதுசாரி சிந்தனையால் ஈர்க்கப்பட்ட சஹனி, இந்திய பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார். இந்தி, உருது, பஞ்சாபி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற அவர், இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலராகப் பத்தாண்டு காலம் (1975-85) பணியாற்றினார். எழுத்தாளரும், சமூகச் செயல்பாட்டாளருமான சஃப்தர் ஹஷ்மி நினைவில் உருவாக்கப்பட்டசஹமத்நாடகக் குழுவை டில்லியில் தோற்றுவித்து, அதன் முதல் தலைவராக இயங்கினார். 1974இல் அவர் எழுதியதமஸ்நாவல் இந்தியாவின் பல மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. சாகித்திய அகாதமி விருதையும் பெற்றுள்ளது.

தமஸ்மூலம் பிஷம் சஹனி உண்மைச் சம்பவங்களும், கற்பனையும் கலந்த வரலாற்று நாவலைப் படைத்துள்ளார். இதில் புனைவு எது; வரலாறு எது என்று தெரியாமல் இருப்பதே நாவலாசிரியரின் வெற்றியாகும். முப்பதாண்டுகள் கடந்து 1970இல் தனது நினைவுகளின் இடுக்குகளிலிருந்து தான் நேரில் கண்ட மதவெறியாட்டத்தைத் தேடி எடுத்து இந்த நாவலை சஹனி படைத்துள்ளார். இதனால் காய்தலும், உவர்த்தலுமின்றி நேர்மையுடன் நாவலில் அவரால் வரலாற்று உண்மைகளைச் சொல்லிச் செல்ல முடிகிறது. நேரில் பார்த்த கொடூரச் சம்பவங்கள் என்பதால், அவரால் உணர்வுப் பூர்வமாகவும் காட்சிகளைச் சித்தரிக்க முடிகிறது. சஹனி எழுதிய ‘அமிர்தசரஸ் வந்து விட்டது’, பாலிஎன்ற சிறுகதைகளும் பிரிவினைக் காலத் துயரங்களையே படம் பிடித்துக் காட்டுபவையாகும்.

1987இல் கோவிந்த் நிஹாலனியின் இயக்கத்தில், தூர்தர்ஷனில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்த ‘தமஸ்’ நாவல் மாபெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த மதக்கலவரத்தை, பழமையைத் தோண்டி எடுத்து இன்றைய சமூகத்தினருக்கு காட்சிப்படுத்துவது சரியா, மீண்டுமொரு மதக்கலவரத்துக்கு அது இட்டுச் செல்லாதா என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. திரையிடலை எதிர்த்து பம்பாய் உயர்நீதி மன்றத்திலும், பின்னர் உச்சநீதி மன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இரண்டிலும் சரியான தீர்ப்பைப் பெற்று திரையிடல் தொடர்ந்தது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் - சார்புகள், சாய்மானங்கள் இல்லாமல் நேர்மையுடன் வரலாற்றைச் சித்தரிக்கின்ற அந்தப் படம் எதிர்மறை விளைவுகளை உருவாக்காது என்று உறுதியாகக் கருதினர்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய விடுதலைக்காக, அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துப் போராட விழைந்த வேளையில், மக்களிடையே இந்து மகாசபை, முஸ்லீம் லீக் இரண்டு மதவாத அமைப்புகளும் பிரிவினைவாதச் சிந்தனைகளை வளர்த்தன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அந்த மோதலை ஊதிவளர்த்து குளிர் காய்ந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் மென்மையான இந்துமதவாதிகள் இருந்தனர். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் மத ஒற்றுமையை வலியுறுத்திவந்தபோதிலும், மதமோதல்கள் தவிர்க்க முடியாதவையாகவே இருந்தன. 1947இல் நடத்தப்பட்ட இத்தகைய மதக்கலவரங்களையே பிஷம் சஹனி ‘தமஸ்’ நாவலில் சித்தரித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் பல ஊர்களிலும் நிகழ்த்தப்பட்ட கலவரங்களின் தொகுப்பாக (Episodic) அவரது நாவல் விரிந்து செல்கிறது. மதவெறிக்கு ஆட்பட்ட மனிதன் கொடூரமான மிருகமாக மாறி, கொலைவெறித் தாக்குதல் நடத்துவதைக் காண முடிகிறது. மதவெறி தலைக்கேறியதும் – அதுவரையிலும் ஒரே ஊரில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்கள் எந்த அளவிற்கு வன்முறையாளர்களாக மாறிவிடுகிறார்கள்!

தமஸ் நாவல் எந்தவொரு தனி கதாபாத்திரத்தையும் மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல. ஏராளமான கதாபாத்திரங்கள் அந்த நாவலுக்குள் நடமாடுகிறார்கள். ராவல்பிண்டி நகர், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தப்படும் வன்முறைகளின் தொகுப்பாக அமைந்துள்ள நாவலின் தலைப்பிற்கிணங்க சம்பவங்கள் அனைத்தும் இருட்டில் நடக்கின்றன.

கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் பன்றி ஒன்றைக் கொன்று மசூதியின் வாயிலில் வீசிவிட்டுச் செல்வதில் நாவல் தொடங்குகிறது. நாது என்ற ஏழைத் தொழிலாளி ஐந்து ரூபாய் பணத்துக்காக, பன்றியைக் கொன்று முராடு அலி என்பவனிடம் தருகிறான். தான் எதற்காக அந்தப் பன்றியைப் பெறுகிறேன் என்பதற்கான உண்மைக் காரணத்தைச்  சொல்லாமல் நாதுவை முராடு அலி ஏமாற்றிவிடுகிறான். உண்மையில் பொய்க் காரணத்தை நம்பி நாது செய்த பிழையது. எதிர்வினையாக மறுநாள் பசு ஒன்றைக் கொன்று கோயில் வாயிலில் வீசுகிறார்கள். ஊரே கொந்தளிக்கிறது.

காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சனைக்குத் தீர்வுகாண விழைகிறார்கள். இந்து, இஸ்லாம், சீக்கிய மதத்தலைவர்களை அழைத்து அமைதிக் குழு அமைக்கத் திட்டமிடுகிறார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது. 103 கிராமங்கள் தீக்கிரையாகின்றன. அந்த மூன்று மதங்களைச் சார்ந்தவர்களும் வன்முறையில் இறங்குகின்றனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்று அனைத்துக் கொடூரங்களும் நடைபெறுகின்றன. தேவ்தத் என்ற கம்யூனிஸ்ட் இளைஞர் மதநல்லிணக்கத்தை உருவாக்க அல்லும் பகலும் உழைக்கிறார். அவரது உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை எண்ணி, அவரது பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். இருப்பினும் உயிரைத் துச்சமென நினைத்து களத்தில் இறங்கி அவர் வேலை செய்கிறார்.

ராவல்பிண்டி நகரிலும் அதனைச் சுற்றியிருந்த ஊர்களிலும் நிறையக் குடும்பங்கள் சீரழிகின்றன. அந்த அழிவிற்கு அடையாளமாக ஹர்நாம் சிங் குடும்பம் எடுத்துக்காட்டப்படுகிறது. ஊரிலிருக்கும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன. ஹர்நாம் சிங்கும், அவருடைய மனைவி பண்டோ மட்டும் தங்களுடைய டீ கடையை மூடவில்லை. ஊரில் இருக்கும் ஒரே சீக்கிய குடும்பம் அவர்களுடையது. அவர்களின் மூன்று பிள்ளைகளும் வெளியூர்களில் வாழ்கிறார்கள். ஹர்நாம் சிங் கடையின் வாடிக்கையாளர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே. அதன் காரணமாகத் தங்களுக்கு எந்தவொரு ஆபத்தும் நேராது என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவரின் இஸ்லாமிய நண்பர் கரீம் கான் –நிலைமை சரியில்லை என்பதால் கடையை மூடிவிட்டு ஓடிவிடுமாறு சொல்கிறார். கும்பல் மனநிலையில் வன்முறையைக் கையில் எடுக்கும் மனிதர்கள் தனிமையில் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளும் உளவியல் வினோதத்தை அங்கே பார்க்கிறோம். தன்னுடைய சீக்கிய நண்பர் ஹர்நாம் சிங் குடும்பத்தைக் காப்பாற்றுவதில் கரீம் கான் மிகுந்த அக்கறை கொள்கிறார். அவர்களுக்கிடையிலான உறவில் அன்பு மட்டுமே மேலோங்கியுள்ளது.

வீட்டையும், கடையையும் பூட்டிவிட்டு, அந்த தம்பதிகள் இருட்டில் நடக்கிறார்கள். நகைகள் உட்பட அனைத்துப் பொருட்களையும் வீட்டில் விட்டுவிட்டு வெறும் கைகளுடன் அவர்கள் வெளியேறுகிறார்கள். மறுநாள் காலை களைத்துப் போய் இளைப்பாறுவதற்கு, ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறார்கள். அதுவொரு இஸ்லாமியர் வீடு. மருமகளின் எதிர்ப்பையும் மீறி வீட்டின் முதிய பெண்மணி அடைக்கலம் தருகிறார். அவர் மகன் இஸ்லாமியர் இளைஞர் அணியின் தீவிர உறுப்பினர். எனவே கஃபீர்களுக்கு தன்னுடைய வீட்டில் அடைக்கலம் தரமாட்டான் என்பதனால், அன்றிரவு மட்டும் தங்கிவிட்டுச் சென்று விடுமாறு சொல்கிறார். இரவில் வீடு திரும்பும் அவர் மகன் சீக்கியர் ஒருவர் வீட்டில் கொள்ளையடித்த ஒரு பெரிய டிரங்க் பெட்டியுடன் வருகிறான். அந்த டிரங்க் பெட்டி தன்னுடையது என்று ஹர்நாம்சிங் சொல்கிறார். தன்னிடமிருந்த பெட்டியின் சாவியையும் கொடுக்கிறார். உண்மையப் புரிந்து கொண்ட அந்த மூதாட்டி பெட்டியில் இருந்த நகைகளை ஹர்நாம் சிங் தம்பதிகளிடம் கொடுத்துவிட்டு அவர்களை அனுப்பி வைக்கிறார். மதமாச்சாரியங்களை எல்லாம் தாண்டி மீண்டும் மனிதம் மிளிர்வதைப் பார்க்கிறோம்.

ஊரின் மற்றொரு பகுதியில் இஸ்லாமியர்களைக் கொல்வதற்கான பயிற்சிகளை இந்து தீவிரவாதிகள் மேற்கொள்ளும் காட்சியைக் காண்கிறோம். தேவ்பிரட் என்ற இந்து மதவெறியன் ரன்விர், மனோகர், இன்தெர், சாம்பு என்ற நான்கு இளைஞர்களுக்கு வன்முறைக்கான பயிற்சிகளைத் தருகிறான். அந்த வீடு முழுவதும் கொலைக் கருவிகள் நிறைந்துள்ளன. வன்முறைக்கான பயிற்சி, கோழிகளின் கழுத்தை அறுத்துக் கொல்வதில் தொடங்குகிறது. பயிற்சி முடிந்ததும் இஸ்லாமியர்களைக் கொல்ல வெளிவருகிறார்கள். தெருவில் தனியாக நடந்து வரும் இஸ்லாமியரின் வருகைக்காக, அவர்கள் வீட்டுக்குள் ஒளிந்து நின்று கொண்டு காத்திருக்கிறார்கள். வாசனைத் திரவியங்களை விற்கும் பெரியவர் ஒருவர் மூடைகளை முதுகில் சுமந்து கொண்டு மெதுவாக நடந்து வருகிறார். அவரைக் கொல்வதற்கு இன்தெர் அவருடன் சேர்ந்து தெருவில் நடக்கிறான். அந்த நல்ல மனிதர் தன்னைக் கொல்ல வருபவனிடம் கருணையுடன் பேசுகிறார்.  ஊரில் பதற்றம் நிலவுகிறது. நீ கவனமாக இருக்க வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறார். அடுத்த நொடியில் அவருடைய இடுப்பில் இன்தெர் கத்தியைச் செருகுகிறான். பெரியவர் சாய்ந்து விழுந்ததும் அங்கிருந்து ஓடிவிடுகிறான்.

பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்என்பதுபோல் ஹர்நாம் சிங்கின் மகனான இக்பால் சிங், இஸ்லாமிய வன்முறையாளர்களிடம் சிக்கிக் கொள்கிறான். இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்லி அவனைத் துன்புறுத்துகிறார்கள். வேறுவழியின்றி ஒத்துக்கொள்ளும் அவனுக்கு, இக்பால் கான் எனப் பெயரிட்டு முஸ்லீமாக மாற்றுகிறார்கள் தலைமுடியை மழித்து விடுவதோடு, அவனுக்கு சுன்னத்தும் செய்துவிடுகிறார்கள். கண்ணீர் மல்க நிற்கும் அவனைக் கேலிசெய்து மகிழ்ச்சி அடைகிறார்கள் வன்முறையாளர்கள்.

சீக்கியர்களும், இஸ்லாமியர்களும் மட்டும் வாழும் ஒரு கிராமத்தில் வன்முறை வெடிக்கிறது. சீக்கியர்கள் வீடுகளிலிருந்து வெளியேறி குருதுவாராவில் குடிபுகுகிறார்கள். இஸ்லாமியர்கள் மசூதிக்குள் அடைக்கலம் ஆகிறார்கள். இருதரப்பினரும் ஆயுதங்களைக் குவித்துவைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். சீக்கியர்களின் ஆயுதங்கள் ஒரு கட்டத்தில் தீர்ந்து போகின்றன. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதும், சீக்கியப் பெண்கள் அருகிலிருக்கும் கிணற்றில் விழுந்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். இருட்டில் பெண்கள் தங்கள் குழந்தைகளை இடுப்பில் தூக்கிக்கொண்டு, கிணற்றில் விழுந்து கூட்டமாகத் தற்கொலை செய்துகொள்வது படிப்பவர் நெஞ்சைப் பிழியச்செய்கிறது.

இவ்வளவு வன்முறைகளும் நடந்துகொண்டிருந்தபோது பிரிட்டிஷ் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? ரிச்சர்டு என்ற ஆங்கிலேய இளைஞன், கலவரம் தலைவிரித்தாடிய ராவல்பிண்டியின் டெபுடி கமிஷனராகப் பொறுப்பில் இருந்தான். காலனிய காலத்தில் அதிகாரிகளாக இருந்த பெரும்பான்மை ஆங்கிலேயர்கள் ரிச்சர்டு போல பொறுப்பற்றே இருந்தனர். குடிமக்கள் குறைகளைத் தீர்க்க முயற்சிகள் எடுக்காமல் அவர்கள் குடித்துக் கும்மாளமிடுவது, மிருகங்களை வேட்டையாடுவது என்று உல்லாச வாழ்வு வாழ்ந்தனர். தன் இளம் மனைவி லிசாவுடன் ராவல்பிண்டி நகருக்கு டெபுடி கமிஷனராகப் பொறுப்பேற்றதிலிருந்து ரிச்சர்டு, எந்தவொரு நல்ல பணியையும் மேற்கொள்ளவில்லை.

வரலாற்று ஆராய்ச்சி ரிச்சர்டின் விருப்பமாகும். குறிப்பாக புத்த மதம் குறித்த வரலாற்றைத் தேடி அலைவதிலேயே, அவன் தன்னுடைய நேரத்தைக் கழித்து வந்தான். பங்களா முழுவதும் வெவ்வேறு நிறத்தில், வடிவத்தில் புத்தர் சிலைகளை அடுக்கிவைத்து அழகு பார்த்தான். இதில் அவன் மனைவி லிசாவிற்குக் கிஞ்சித்தும் விருப்பமில்லை. நிறைய கனவுகளுடன் இந்தியா வந்த அவளுக்கு ரிச்சர்டின் வாழ்க்கை முறை ஒத்துவரவில்லை. மொத்தத்தில் அவர்கள் பொருந்தாத் தம்பதிகளாகவே வாழ்ந்து வந்தனர். ரிச்சர்டு கலைப் பொருட்களைத் தேடி அலைந்து கொண்டிருக்க, அவன் மனைவி பொழுதெல்லாம் பீர் குடித்துக் கொண்டு போதையில் மயங்கிக் கிடந்தாள். ரோம் தீப்பிடித்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப்போல, ராவல்பிண்டி தீப்பிடித்தபோது ரிச்சர்டு கலைப் பொருட்களை அடுக்கி ரசித்துக் கொண்டிருந்தான்.

கலவரத்தில் ஏற்பட்ட இழப்புகளை மதிப்பீடு செய்ய அரசு ஒரு குழு அமைக்கிறது. இழந்த உயிர்கள், உடைமைகள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்கிறார்கள். கூட்டம் அலைமோதுகிறது. எழுத்தறிவில்லாத அப்பாவி மக்களுக்கு தங்களின் இழப்பைக்கூட சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அவர்கள் சொல்வதை அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் குத்துமதிப்பாக எழுதிக்கொள்கிறார்கள். கம்யூனிஸ்ட் இளைஞர் தேவ்தத் அங்கு வருகிறார். இறந்தவர்களில் பணக்காரர்கள் எத்தனை பேர், ஏழைகள் எத்தனை பேர் என்ற கணக்கும் இடம்பெற வேண்டும் என்று கணக்கெடுக்கும் அலுவலகர்களிடம் கேட்டுக் கொள்கிறார். ‘எதற்குஎன்ற அலுவலரின் கேள்விக்கு, கலவரத்தில் உயிரையும், உடைமைகளையும் இழந்தவர்கள் ஏழை எளிய மக்களே என்பதை யாவரும் அறிந்துகொள்ளட்டும் என்கிறார். ஆம் - எந்தவொரு கலவரத்திலும் இழப்பு ஏற்படுவது ஏழை எளிய மக்களுக்குத்தானே!

கலவரங்கள் ஓய்ந்து முடிந்த பின்னர் ரிச்சர்டு ஊரடங்கு ஆணை பிறப்பிக்கிறான். இராணுவத்தின் உதவியைக் கேட்டுப் பெறுகிறான். கலவரம் தொடங்கியவுடன் இதனைச் செய்திருந்தால் ஏராளமான உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம். ஊரில் இருந்த கிறித்தவக் கல்லூரியின் முதல்வர் தலைமையில் அமைதிக் குழுவை உருவாக்குகிறார்கள். அமைதியை வலியுறுத்தி ஊர் முழுவதும் பிரச்சாரம் செய்வது என்று முடிவெடுக்கின்றனர். ஒலிபெருக்கியை ஒரு பஸ்சில் கட்டிக் கொண்டு அந்த அமைதிப் பிரச்சாரம் தொடங்குகிறது. கலவரத்தின்போது ஓடிஒளிந்த கட்சிக்காரகள், மதத்தலைவர்கள் எல்லோரும் இப்போது ஓடிவந்து பஸ்சில் இடம்பிடித்துக் கொள்கிறார்கள். பஸ்சின் முன்வரிசையில் மைக்கைப் பிடித்துக் கொண்டு அமைதி குறித்த முழக்கத்தை முழங்குகிறான் முராடு அலி. யார் இந்த முராடு அலி -ஞாபகமிருக்கிறதா? ஏழைத் தொழிலாளி நாது கொன்ற பன்றியை, மசூதி வாயிலில் போட்டு கலவரத்துக்குக் காரணமாக இருந்த அதே முரடு அலி. இன்றைக்கு அவன் அமைதிக்கான பிரச்சாரம் செய்கிறான்! எந்தவொரு சமூகத்திலும் இத்தகு ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கத்தானே செய்கிறார்கள். தான் செய்த குற்ற உணர்வின் மிகுதியில் பித்துப் பிடித்து அலைந்த நாது, கலவரத்தில் இறந்து போனவர்களில் ஒருவனாகிறான். கலவரத்தைச் சரியாகக் கையாளவில்லை என்பதற்காக ரிச்சர்டு வேறு ஊருக்கு மாற்றலாகிறான். லிசாவிடம் இதை அவன் சொன்ன போது, அவள் ஓர் அலட்சியப் பார்வை பார்க்கிறாள் என்பதுடன் நாவல் முடிகிறது.

ஒரு கலவரத்தின் முழுப்பரிமாணத்தையும் பிஷம் சஹனி தன்னுடைய நாவலில் காட்டியுள்ளார். கலவரத்தின் தொடக்கம், அதன் வீச்சு, அதன் பாதிப்பு, அதிகாரிகளின் அலட்சியம், மதத் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மை, வெறியின் உக்கிரம், வன்முறைகளின் ஊடே மின்னலெனப் பளிச்சிடும் மனிதம் என்று அனைத்து உணர்ச்சிகளையும் தனது நாவலில் அவரால் காட்சிப்படுத்திவிட முடிந்துள்ளது. வெறுப்பரசியல் கோலோச்சும் இன்றைய சூழலில், தமஸ் படத்தையும், நாவலையும் மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது நன்மை பயக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

                              ----------------------------

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...