Skip to main content

நூல் அறிமுகம் - ஐஸ் கேண்டி மேன் - பாப்சி சித்வா

 

ஐஸ் கேண்டி மேன்: பாப்சி சித்வா எழுதிய இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் காலக் கொடூரங்களைச் சித்தரிக்கும் நாவல்.

பெ.விஜயகுமார்

பாகிஸ்தானில் பார்சி பெற்றோர்களுக்குப் பிறந்து அமெரிக்காவில் வாழும் பாப்சி சித்வா மிகச் சிறந்த ஆங்கில எழுத்தாளராகப் பரிணமிக்கிறார். ’The Pakistani Bride’, ’The Crow Eaters’, ’Ice-Candy- Man’, ’An American Brat’ ஆகிய நான்கு நாவல்களும், நிறையச் சிறுகதைகளும் எழுதி விருதுகள் பலவும் பெற்றுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மூன்று மதப் பிரிவினர்களும் சொல்லொண்ணாத் துயரத்துக்குள்ளானார்கள். இந்த மூன்று மதங்களைச் சார்ந்தவர்களும் அத்துயரங்களைச் சித்தரித்து ஏராளமாக எழுதி ஆவணப்படுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் இந்தியாவில் வாழ்ந்து வந்த பார்சிகள்  (ஜொராஸ்டாரினிசம் மதத்தைச் சார்ந்தவர்கள்) இக்கொடுமையிலிருந்து முற்றிலும் தப்பித்தும், விலகியும் இருந்தனர். வரலாற்றின் மிகக் கொடூரமான இந்நிகழ்வுகளுக்கு வெறுமனே மௌனச் சாட்சியமாக அவர்கள் வாழ்ந்தனர். பாப்சி சித்வா எழுதிய ஐஸ் கேண்டி மேன்’ நாவல், பிரிவினைக் காலத்துக் கொடுமைகளை பார்சி ஒருவரின் பார்வையிலிருந்து ஆவணப்படுத்துகிறது. திரைப்பட இயக்குநர் தீபா மேத்தா இந்நாவலை1947:Earth’ என்ற பெயரில் திரைப்படமாக்கி வெற்றி பெற்றார்.

ஐஸ் கேண்டி மேன்’ 1988இல் இங்கிலாந்திலும், 1991இல் அமெரிக்காவிலும் நாவலாக வெளிவந்தது. அமெரிக்க வெளியீட்டாளர்கள் கிராக்கிங் இந்தியா” (Cracking India) என்று நாவலின் தலைப்பை மட்டும் மாற்றி வெளியிட்டனர். லென்னி எனும் குழந்தை தன்னிலை மொழியில் சொல்லிச் செல்வதாக நாவல் அமைகிறது. அந்தக் குழந்தையின் நான்கு வயதில் தொடங்கும் நாவல், பத்து வயதில் முடிவடைந்து ஆறாண்டு காலச் சம்பவங்களை விளக்குகிறது. பாகிஸ்தானின் லாகூர் நகரில் 1942-47 ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளே நாவலின் களமாகும். பிரிவினைக் காலத் துயரத்தினை மட்டுமல்லாமல், போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற குழந்தையின் உள்ளத்திலும், உடலிலும் ஏற்படும் வளர்ச்சியையும் நாவல் விவரிக்கிறது. நாவலின் கதை சொல்லி லென்னியின் வாழ்க்கை நாவலாசிரியர் பாப்சி சித்வாவின் குழந்தைக்கால வாழ்க்கையை ஒத்ததாக இருக்கிறது. தன்னுடைய குழந்தைப் பருவத்தில் பாப்சி சித்வா 1940களில் லாகூர் நகரில் நேரில் கண்ட காட்சிகளே குழந்தை லென்னி காணும் காட்சிகளாக நாவலில் இடம்பெறுகின்றன.

பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமும், அழகிய பழமையான நகருமான லாகூர் பாகிஸ்தானின் பாரிஸ் என்றழக்கப்படுகிறது. ரவி நதிக்கரையில் அமைந்துள்ள லாகூர் நகரம் ஷாலிமார் கார்டன், லாகூர் கோட்டை, வாசீர்கான் மசூதி, லாகூர் கோபுரம் என்று புகழ்பெற்ற அடையாளங்களைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத் தலைநகரமாகவும், கவாலி இசை போன்ற கலைகளின் மையமாகவும் விளங்கும் இந்நகரில் பிரிவினைக் காலத்தில் நடந்தேறிய கொடூரங்கள் சொல்லித் தீராதது.

லாகூர் நகரின் மையப் பகுதியில் வாழும் வசதியான பார்சி இணையர்களுக்குப் பிறந்த லென்னியின் பொழுதெல்லாம் அவளைப் போற்றிப் பாதுகாக்கும் ஆயாவுடனேயே கழிகிறது. லென்னியின் ஆயா பதினெட்டு வயதான சாந்தா என்ற இந்துப் பெண். நாவல் முழுவதும் ஆயாஎன்றே அழைக்கப்படுகிறாள். நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் நடமாடினாலும், லென்னிக்கும், ஆயாவுக்கும் இடையிலான உறவே முக்கியத்துவம் பெறுகிறது. லென்னியின் செயல் இழந்த காலைக் குணப்படுத்த அவர்களின் குடும்ப டாக்டரும், லாகூர் பார்சி சமூகத்தின் தலைவருமான டாக்டர் பரூச்சா அன்றாடம் வந்து செல்கிறார். அவர் லென்னியைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறார். வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் அனைவருடனும் லென்னி விகல்பம் ஏதுமின்றிப் பழகுகிறாள். லென்னியின் நண்பர்கள் அனைவரும் அவளைவிட வயதில் மூத்தவர்களாகவே இருக்கின்றனர். லென்னிக்கும், அவளுடைய அத்தை மகனுக்கும் இடையில் நிலவும்குழந்தைக் காதல்நாவலின் மற்றுமொரு விநோதமான உறவாகும். இவர்களின் பாலியல் விளையாட்டு சற்று எல்லை மீறிச் செல்வது வாசகர்களை அதிர்ச்சி அடையச் செய்வதாக இருக்கிறது. இந்நாவல் அமெரிக்காவின் ஃப்ளாரிடா மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டபோது, பெற்றோர்கள் நாவலில் சிறுவர்கள் பாலியல் விளையாட்டில் ஈடுபடும் காட்சிகளைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

லென்னியின் ஆயாஓர் பேரழகி. எந்தவொரு ஆணையும் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகினைக் கொண்டிருந்தாள். அவர்களின் வீட்டைச் சுற்றியுள்ள ஆண்கள் பலரும் அவளின் கவர்ச்சியில் மயங்கினர். பெப்சிக்கல்ஸ் எனும் இனிப்பு விற்கும் ஐஸ் கேண்டி மேன் ஆயா மீது மிகுந்த மோகம் கொண்டான். அதேபோல் மெஸ்ஸர் என்ற மசாஜ் செய்து பிழைப்பவனும் ஆயாவின் மீது அலாதியான பிரியம் கொண்டிருந்தான். இருவருக்குமிடையே மிகப் பெரிய போட்டியே இருந்தது. குழந்தை லென்னி பக்கத்தில் இருக்கும்போதே இருவரும் ஆயாவிடம் சில்மிஷம் செய்கிறார்கள். இதில் இன்பம் கொள்ளும் ஆயா இவர்கள் எல்லையை மீறும்போது மட்டுமே அவர்களைக் கண்டிக்கிறாள். ஐஸ் கேண்டி மேன் பல திறமைகளையும் கொண்டவன். சிறந்த கதை சொல்லி. மல்யுத்த வீரனும்கூட. கவிதை இயற்றும் அளவிற்கு உருது மொழியில் பாண்டித்தியம் கொண்டவன். இக்பால், கலீல் ஜிப்ரான் கவிதைகளை மனப்பாடமாகச் சொல்கிறான். நாவலின் தொடக்கத்தில் நல்லவனாகத் தென்படும் ஐஸ் கேண்டி மேன் இறுதியில் வில்லனாக மாறி ஆயாவைக் கொடுமைப்படுத்துகிறான்.

லென்னி, அவள் தம்பி அதி இருவரையும் ஆயாவின் பராமரிப்பில் விட்டுவிட்டு, லென்னியின் அம்மா தன் சிநேகிதிகளுடன் பொழுதைக் கழிக்க ஆஸ்டின் காரை ஓட்டிக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறார். வீடு திரும்பும்போது கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு வருகிறார். வீட்டின் ஓர் அறை முழுவதும் பெட்ரோல் கேன்கள் நிறைந்துள்ளன. இதனை வியந்து கவனிக்கும் லென்னி நாவலின் இறுதியில் அதற்கான காரணத்தை அறிந்து மகிழ்கிறாள்.

லென்னி வீட்டில் உள்ள இமாம் தீன் எனும் வயதான சமையற்காரர், அமிர்தசரஸ் அருகில் இருக்கும் அவரது கிராமத்துக்கு லென்னியைக் கூட்டிச்செல்கிறார். லாகூர் நகரில் தன்னுடைய வசதியான வீட்டில் வாழும் லென்னிக்கு, அந்தக் கிராமச் சூழல் மிகவும் பிடித்துப் போகிறது. அவர்களின் எளிய வாழ்க்கைமுறை கண்டு அவள் வியக்கிறாள். இமாம் தீனின் கொள்ளுப் பேரன் ரன்னாவுடன் நட்புடன் பழகுகிறாள். அவ்வூரில் வாழும் இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். நகரங்களில் மதக்கலவரங்கள் நடக்கும் செய்தி அவர்களை எட்டுகிறது. இருப்பினும் ஊர்க் கூட்டத்தைக் கூட்டி, நாமெல்லாம் எப்போதும்போல் ஒற்றுமையாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்கின்றனர்.

லென்னி, ஆயா, ஆயாவின் காதலர்கள் எல்லோரும் லாகூர் நகர் முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் சுற்றி வருகிறார்கள். இடியென இறங்குகிறது இந்தியாவின் பிரிவினைச் செய்தி. அவர்களின் உல்லாச வாழ்வு முடிவுக்கு வருகிறது. லாகூர் நகரம் பாகிஸ்தானுக்கு என்றாகிறது. அமிர்தசரஸிலிருந்து லாகூர் வரும் இஸ்லாமியர்கள் அனைவரும் கொல்லப்பட்டு பிணங்களாகவே வந்தடைகின்றனர். இஸ்லாமியர்கள் கொந்தளிக்கின்றனர். நகரம் பற்றி எரிகிறது. சீக்கியர்களும், இந்துக்களும் தாக்கப்படுகிறார்கள். பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்குகிறார்கள்.

இந்த வெறிபிடித்த கும்பலில் ஐஸ் கேண்டி மேனும் சேர்ந்து கொள்கிறான். வீடு வீடாகச் சென்று இந்துப் பெண்களையும், சீக்கியப் பெண்களையும் இழுத்து வருகிறார்கள். பாலியல் வன்முறை செய்து, அவர்களைக் கொல்கிறார்கள். அல்லது சிறைப்படுத்தி பாலியல் தொழிலாளார்களாக மாற்றுகிறார்கள். ஐஸ் கேண்டி மேன் தலைமையில் ஒரு கும்பல் லென்னி வீட்டுக்கு வருகிறது. சிறுமி லென்னி விவரம் தெரியாமல் ஆயா இருக்குமிடத்தை அந்தக் கும்பலிடம் சொல்லிவிடுகிறாள். அன்றைய தினம் இழுத்துச் செல்லப்பட்ட ஆயா என்ன ஆனாள் என்பது தெரியவே இல்லை.

லாகூர் முழுவதும் வன்முறையில் சிக்கித் தவிக்கும்போது நகரிலிருந்த பார்சி சமூகத்தினர் பாதிக்கப்பட்ட இந்துக்களையும், சீக்கியர்களையும் காப்பாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறார்கள். லென்னியின் அம்மா லாகூரிலிருந்து காரில் தப்பித்துச் செல்ல விரும்பும் குடும்பத்தினருக்குத் தேவைப்படும் பெட்ரோலை தாராளமாகக் கொடுத்து உதவுகிறார். அவர் பெட்ரோல் சேமித்துவைத்த ரகசியத்தை அறியும் லென்னி அது குறித்துப் பெருமிதம் கொள்கிறாள்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் அரசு நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. பார்சி சமூகத்தினர் களத்தில் இறங்கி நிவாரணப் பணி செய்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் கொடுக்க முகாம்களை அமைக்கின்றனர். லென்னி குடும்பத்தினர் அந்தப் பணியில் முன்னணியில் நிற்கின்றனர். லென்னியின் தாய், அத்தை, பாட்டி (லென்னியின் God Mother) மூவரும் அல்லும் பகலும் அயராது உழைத்து நிறையப் பெண்களுக்கு புனர்வாழ்வு அளிக்கின்றனர். சமூகச் செயற்பாட்டாளரான லென்னியின் பாட்டி எளிமையான வாழ்வு வாழ்கிறார். அவர் கதராடை மட்டுமே அணிகிறார்.

சமையற்கார முதியவர் இமாம் தீனின் கிராமத்தில் கலவரம் வெடிக்கிறது. உள்ளூர் மக்கள் ஒற்றுமையாக இருந்தாலும், வெளியிலிருந்து வரும் சீக்கியர்கள் இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்கிறார்கள். ஊரில் இருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லா இஸ்லாமியர்களும் கொல்லப்படுகிறார்கள். இமாம் தீனின் கொள்ளுப் பேரனும், லென்னியின் நண்பனுமான ரன்னா மட்டும் மதவெறியர்களின் கொலைவெறித் தாக்குதலில் இருந்து தப்புகிறான். குற்றுயிராகக் கிடந்த அவனை விட்டுவிட்டுச் சென்று விடுகிறார்கள். பசியிலும், வேதனையிலும் நடந்தே அவன் லாகூர் நகர் வந்தடைகிறான். லாகூர் நகரின் வீதிகளில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் ரன்னாவை கிறித்துவர்கள் நடத்தும் அனாதைக் குழந்தைகளுக்கான விடுதியில் சேர்த்து லென்னியின் பாட்டி அவனைக் காப்பாற்றுகிறார். 

லென்னியின் வேண்டுகோளுக்கிணங்க ஆயாவைக் கண்டுபிடிக்க பாட்டி முயற்சி எடுக்கிறார். சினிமா நடிகைபோல் அலங்கரித்து, நகரின் பல பகுதிகளிலும் ஆயா காரில் அழைத்துச் செல்லப்படுவதைக் காண்கிறார்கள். அவள் ஐஸ் கேண்டி மேனின் பிடியில் சிக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகச் செய்தி கிடைக்கிறது. பாலியல் தொழில் நடக்கும் கோத்தாஎனுமிடத்தில் அவள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறாள் எனும் தகவலும் கிடைக்கிறது. ஆயாவுக்குமும்தாஜ்என்று பெயரிட்டு அவளைத் தவறாகப் பயன்படுத்துகிறான் என்பதும் தெரிய வருகிறது.

லென்னியின் பாட்டி களத்தில் இறங்குகிறார். லென்னியும் பாட்டியுடன் செல்கிறாள். ஐஸ் கேண்டி மேன் அவளை அடைத்துவைத்திருக்கும் வீட்டுக்குச் செல்கிறார்கள். ஆடம்பரமான உடையில் ஆயா அவர்கள் முன்நிறுத்தப்படுகிறாள். ஆயாவின் தோற்றம் லென்னியை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஆயாவைப் பார்த்ததும் கட்டித் தழுவ நினைத்திருந்தாள். ஆனால் ஆயாவின் இந்த புதிய கோலம் கண்டு செய்வதறியாது திகைத்து உட்காருகிறாள். கண்களில் கண்ணீர் மல்க ஆயா, ”இங்கிருந்து என்னைக் காப்பாற்றிச் செல்லுங்கள்என்று பாட்டியிடம் கெஞ்சிக் கேட்கிறாள். ஐஸ் கேண்டி மேன்நான் ஆயாவை ஒழுங்காகப் பாதுகாத்துக் கொள்கிறேன். நான் செய்த தவறுகளுக்கு வருந்துகிறேன். ஆயாவை என்னிடமே இருக்கச் சொல்லுங்கள்என்று சொல்கிறான். பாட்டி அவனை நம்பத் தயாரில்லை. ஆயாவைக் கூட்டிக்கொண்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுகிறார்.

லென்னி வீட்டுக்கு அருகில் இருக்கும் மறுவாழ்வு மையத்துக்கு தினமும் ஐஸ் கேண்டி மேன் வந்து தகராறு செய்கிறான். காவல்காரன் அவனை நையப்புடைத்து விரட்டி விடுகிறான். ஆயா யாரையும் பார்க்க விரும்பமால் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள். ஒரு நாள் அவள் அந்த மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பியோடி அமிர்தசரஸ் சென்று விடுகிறாள். ஐஸ் கேண்டி மேனும் தன்னுடைய மும்தாஜைத் தேடி, வாகா எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைகிறான் என்பதுடன் நாவல் முடிவடைகிறது.

பிரிவினைக் காலக் கொடுமைகளைச் சித்தரிக்கும் மற்ற நாவல்களிலிருந்து பாப்சி சித்வாவின் ஐஸ் கேண்டி மேன் நாவல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. பாப்சி சித்வாவின் நகைச்சுவை ததும்பும் மொழி நாவலுக்கு மெருகூட்டுகிறது. லென்னி, ஆயா மற்றும் அவர்கள் கூட்டாளிகளின் கேலிப் பேச்சுகள், ஆட்டங்களே நாவலின் முதற் பகுதி முழுவதும் நிறைந்துள்ளது. லென்னிக்கும் அவள் அத்தை மகனுக்கும் இடையிலானகுழந்தைக் காதல்சில நேரங்களில் அத்து மீறினாலும், அந்த உறவு வாசிப்பை இனிதாக்குகிறது. இந்த நாவல் வழி குரோ ஈட்டர்ஸ்’ (Crow Eaters) என்று கிண்டலாக அழைக்கப்படும் பார்சி மக்களின் வாழ்வியல் முறைகளை நாம் அறிகிறோம். அவர்கள் இறந்தவர்களின் உடலை எரிக்காமல், புதைக்காமல் கழுகுகளுக்கு இரையாக்கும் முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்தியப் பிரிவினைக் காலத்தில் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் அவர்கள் முழுமையாக ஒதுங்கி நின்ற தகவல் வியப்பை அளிக்கிறது. நிவாரணப் பணிகளில் அவர்கள் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தது, அவர்களின் மேன்மையைக் காட்டுகிறது.

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...