நூல் அறிமுகம்: ’அமரர் வைத்தியநாத அய்யர் வாழ்கை வரலாறு’- மதுரை மீனாட்சி கோயில் நுழைவுப் போராட்டத்தின் வெற்றி வரலாறு!.
--பேர.பெ.விஜயகுமார்.
இந்து சனாதன தர்மம் உயர்த்திப் பிடிக்கும் வர்ணாஸ்ரமம் இந்திய சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரிக்கிறது. பிராமனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று மேலிருந்து கீழாகப் பிரமிடு வடிவத்தில் சமூகத்தைக் கட்டமைக்கிறது, பிரம்மனின் தலையிலிருந்து பிராமனர், தோளிலிருந்து சத்திரியர், வயிற்றிலிருந்து வைசியர், காலிலிருந்து சூத்திரர் தோன்றினர் என்று கட்டுக் கதைகள் சொல்கிறது. இந்தப் பிரமிடு வடிவ சமூகக் கட்டுமானத்தின் அடியில் இருக்கும் சூத்திரர்கள் அவர்களுக்கு மேலிருக்கும் அனைத்துப் பிரிவினருக்கும் சேவகம் செய்யப் பிறந்தவர்கள் என்று கூறுகிறது. சனாதனம் மாற்ற முடியாதது, என்றென்றும் நிரந்தரமானது என்று சொல்லி ஏமாற்றுகிறது. சூத்திரர்களை ஊருக்கு வெளியே சேரியில் வாழவைத்து அவர்கள் தீண்டத்தகாதவர்கள், அவர்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது என்று சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கிறது.
’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். சிறப்பொவ்வா/ செய்தொழில் வேற்றுமை யான்.’ என்று வள்ளுவரும். ’சாதிகள் இல்லையடி பாப்பா! குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லலாகாது பாப்பா!’ என்று பாரதியாரும், சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால், நீதி வழுவா, இட்டார் பெரியோர். இடாதார் இழிகுலத்தோர்’ என்று ஒவ்வை மூதாட்டியும், இன்னும் பிறரும் இந்தியாவில் நிலவிடும் சாதியப் பாகுபாடுகளை ஒழித்து சமத்துவ சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, காலந்தோறும் போராடியும் வருகின்றனர். இவ்வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டவர் ’ஹரிஜனத் தந்தை’ அமரர் அ.வைத்தியநாத அய்யர் ஆவார்.
தஞ்சை மாவட்டத்தின் விஷ்ணம்பேட்டை எனும் சிற்றூரில் வாழ்ந்த ந.அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் தம்பதிகளின் எட்டு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக 1890இல் பிறந்தவர் வைத்தியநாத அய்யர். இவரின் தந்தை அருணாசலம் அய்யர் பள்ளி ஆசிரியராக புதுக்கோட்டை நகரில் பணியாற்றி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப் பின்னர் குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். இளமையிலேயே அறிவும், அன்பும் நிறையப்பெற்றவராய் வளர்ந்த வைத்தியநாத அய்யர், வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களின் சேவையில் ஈடுபட்டு எல்லோராலும் ’ஹரிஜனத் தந்தை’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவரின் வாழ்க்கை வரலாற்றை இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் வரலாற்றுத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் சந்திரபிரபு நேர்த்தியுடனும், நேர்மையுடனும் எழுதியுள்ளார்.
அய்யரின் இளமை வாழ்க்கை, சுதந்திரப் போரில் அய்யர், அய்யரும் ஆலாயப் பிரவேசமும், ஹரிஜனப் பணியில் அய்யர், சட்டசபையில் அய்யர், அய்யரின் இறுதி நாட்கள் என்று ஆறு பகுதிகளாக இந்நூல் அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் அய்யர் ஆற்றிய உரையையும், அவர் இறந்ததும் சட்டமன்றத்தில் அவருக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி உரைகளையும் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளார் நூலாசிரியர்.
மாணவப் பருவத்தில் படிப்பில் கண்ணும், கருத்துமாய் இருந்த அய்யர் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். மதுரை கல்லூரியில் ஃப்.ஏ படிப்பையும், சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ, படிப்பையும் முடித்துப் பட்டம் பெற்றார். சென்னையில் சொந்தக்காரர்கள் வீட்டில் தங்கி சட்டப்படிப்பும் முடித்து மதுரை திரும்பினார். படிக்கும்போதே அண்ணல் காந்தியடிகளின் சிந்தனைகளையேற்று காங்கிரஸ் கட்சியுடன் தன்னை முழுவதும் இணைத்துக் கொண்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது விடுதலைப் போரில் ஆழ்ந்த ஈடுபாடுடன் இருந்தார். அலிப்பூர், வேலூர் சிறைகளில் எல்லாம் அடைக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளானார். ஒரு போராட்டத்தின்போது காவல்துறையின் கடும் தாக்குதலினால் இவரின் ஒரு கை மிகவும் பாதிப்புக்குள்ளானது.
மகாத்மாவின் அழைப்பிற்கிணங்க கள்ளுக்கடை எதிர்ப்பு, அந்நிய துணிகள் துரப்பு, ஹரிஜன சேவை, கதராடைகளைப் பயன்படுத்தப் பிரச்சாரம், இந்து-முஸ்லீம் ஒற்றுமையைப் பேணுதல் ஆகிய பணிகளில் முழுமனதுடன் பங்கேற்றார். மதுரையில் நடேச அய்யர் எனும் மூத்த வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றார். தொழிலில் தேர்ச்சி பெற்று மதுரை நகரின் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். மாதம் ரூபாய் ஐந்தாயிரம் வருமானம் ஈட்டும் அளவிற்கு திறமை கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் ஐந்தாயிரம் என்பது மிகப் பெரிய தொகையாகும். தன்னுடைய வருமானம் முழுவதையும் பொதுநலப் பணிகளுக்கே செலவழித்தார். அய்யரின் பதினெட்டு வயதில் சுமார் ஒன்பது வயதைக் கொண்டிருந்த அகிலாண்டம்மாள் என்ற பெண்ணை பெற்றோர்கள் அவருக்கு மணம் முடித்துவைத்தனர். அகிலாண்டம்மாள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அய்யருக்கு உற்ற துணையாக இருந்து உதவினார். அய்யருடன் இணைந்து ஹரிஜன சேவையிலும் ஈடுபட்டார்.
அன்றைய இந்தியாவில் கோயில்களுக்குள் இந்துக்களே என்றாலும் ஹரிஜனங்கள் கோயில்களுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லாத அவலமிருந்தது. மகாத்மா காந்தி இந்நிலையை மாற்றிட எண்ணினார். இதற்காக ஹரிஜனங்களின் கோயில் நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்தார். 1936இல் காந்தி அடிகள் மதுரை வந்திருந்தபோது மீனாட்சி அம்மன் கோயிலில் ஹரிஜனங்கள் நுழைவதற்கு அனுமதியில்லை என்பதறிந்து மனம் பதறினார். ஹரிஜனங்கள் நுழைய முடியாத இக்கோயிலுக்கு தான் வரமுடியாது என்று உறுதிபடக் கூறினார். எனவே வைத்தியநாத அய்யர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஹரிஜனங்களை கூட்டிச் செல்வது என்ற சபதம் மேற்கொண்டார். இதற்காக இரண்டு ஆண்டுகள் கடும் முயற்சி எடுத்தார்.
1932 காந்தி-அம்பேத்கர் பூனே ஒப்பந்தத்திற்குப் பிறகு காந்தி ஹரிஜன சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இன்று தலித்துகள், ஆதி திராவிர்கள், பட்டியலினத்தவர்கள் என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களை அன்று காந்தி ’கடவுளின் குழந்தைகள்’ என்ற அர்த்தப்படும்படி ஹரிஜனங்கள் என்றழைத்தார். இந்தியாவில் ஹரிஜன சேவா சங்கத்தை உருவாக்கினார். இதன் அகில இந்தியத் தலைவர்களாக ராஜேந்திர பிரசாத், இராமேஸ்வரி நேரு, தக்கர் பாபா போன்றோர் இருந்தனர். தமிழ்நாட்டில் இராஜாஜி, டி,எஸ்.எஸ்.ராஜன், ந.ம.ரா.சுப்பராமன், எல்.கிருஷ்ணசாமி பாரதி, ஜி.ராமச்சந்திரன் போன்றோர் தலைமை தாங்கினர். இவர்கள் நாடு முழுவதும் கோயில் நுழைவுப் போராட்டம் குறித்து பிரச்சாரம் செய்தார்கள். மதுரையிலும் தலைவர்களை அழைத்து வைத்தியநாத அய்யர் பொதுக்கூட்டம் நடத்தினார்.
ஹரிஜனங்கள் மத்தியில் கோயிலுக்குள் நுழைந்திடத் தயக்கமிருந்தது. இவர்களின் அச்சத்தைப் போக்கிட அய்யர் ஒரு திட்டமிட்டார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஹரிஜனங்கள் கோயில்களுக்குள் நுழையத் தடையேதும் இல்லை. எனவே மதுரையிலிருந்து இரண்டு பஸ்களில் ஹரிஜனங்களை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு பயணம் புறப்பட்டது. சேவா சங்கத் தலைவர்கள் சுப்பராமன், அய்யர் உட்பட அனைவரும் இதில் பயணித்தனர். அனைவருக்கும் திருநெல்வேலியில் ஹரிஜன சேவா சங்க ஊழியரும், தேச பக்தருமான சாவடிக்கூத்த நாயினார் பிள்ளை என்பவர் வீட்டில் காலைச் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் நாகர்கோயில் நாகராஜர் கோயிலிலும், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்தது.)
திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமியைத் தரிசிக்கச் சென்றபோது திருவிதாங்கூர் மன்னர் இந்த ஹரிஜனக் குழுவிற்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்து கொடுத்தார். கோயிலிக்கு முன் பயணக் குழுவினர் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இரண்டு வாரப் பயணத்தில் இன்னும் நிறையக் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இப்பயணத்திற்குப் பின்னர் கோயிலுக்குள் நுழைவதற்கான ஹரிஜனங்களின் அச்சம் நீங்கியது. 1939ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் கோயில் நுழைவுப் போராட்ட மாநாடு நடந்தது. அய்யருடன் சேர்ந்து இராஜாஜி, இராமேஸ்வரி நேரு (ஜவஹர்லால் நேருவின் உறவினர்), டி.எஸ்.எஸ்.இராஜன், என்.எம்.ஆர்.சுப்புராமன், எல்.என்.கோபால்சாமி சென்னை சட்டமன்றத் தலைவர் சிவசண்முகம் பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் இராஜாஜி பேசும்போது மதுரை மக்கள் மீனாட்சி அம்மன் கோயிலை ஹரிஜனங்களுக்குத் திறந்துவிட்டு இந்து மதத்தின் களங்கத்தை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மதுரை நகராட்சியின் தலைவராக இருந்த என்.எம்.ஆர்.சுப்புராமன் நகராட்சியின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி கோயில் நுழைவுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றினார். சட்டமன்றத்திலும் விவாதம் நடந்து பெரும்பான்மை ஆதரவு பெற்றது. மதுரை நகரில் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்து கோயில் நுழைவுப் போராட்டத்திற்கு ஆதராவாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர். மதுரையில் இது தொடர்பாக வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. வாக்களித்த 5,720 பேரில் 4,746 பேர் ஆதரவாகவும், 6,72 பேர் எதிராகவும், 302 பேர் நடுநிலையாளர்களாகவும் வாக்களித்தனர். வைத்தியநாத அய்யர் அல்லும், பகலும் தெருத் தெருவாகச் சென்று தீவிரப் பிரச்சாரம் செய்தார். மேடை இல்லாமல், மைக் இல்லாமல் தெருவில் நின்று பிரச்சாரம் மேற்கொண்டார். வேதங்களிலும், புராணங்களிலும் இந்து மத சாஸ்திரங்களிலும் தீண்டாமைக்கு ஆதாரமில்லை என்பதை விளக்கினார். மற்ற இந்திய மாநிலங்களின் கவனமெல்லாம் தமிழ்நாட்டின் மீது திரும்பியது. அதிலும் குறிப்பாக மதுரையில்தான் கோயில் நுழைவுப் போராட்டம் முதலில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அதே சமயம் கோயில் நுழைவுப் போராட்டத்திற்கு எதிராகச் சனாதனிகள் என்றழைக்கப்பட்ட வைதீகர்கள் ராவ் பகதூர் நடேச அய்யர் தலைமையில் எதிர்ப்பிரச்சாரம் செய்தனர். நடேச அய்யரிடம்தான் வைத்தியநாதர் தன்னுடைய வழக்கறிஞர் பயிற்சியைப் பெற்றவர் என்பது ஒரு நகைமுரண். இந்த நேரத்தில் நீதிக் கட்சியும் கோயில் நுழைவுப் போராட்டத்தைக் கையில் எடுத்திருந்தது. மதுரையில் தந்தைப் பெரியார் கூட்டம் நடந்தது. பெரியார் வைதீகர்களை மிகக் கடுமையாகச் சாடினார். ஆத்திரமடைந்த வைதீகர்கள் பெரியார் பேசிக் கொண்டிருந்த மேடைக்குத் தீவைத்தனர். இதனை அறிந்த வைத்தையநாத அய்யர் விரைவில் அங்கு சென்று தன் காரில் பெரியாரை அழைத்துச் சென்று காப்பாற்றினார்.
மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டம் நடந்தபோது அதன் நிர்வாகக் குழு தலைவராக இருந்தவர் ஆர்.எஸ்.நாயுடு. கோயில் நிர்வாகக் குழுவின் பெரும்பான்மையோர் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தனர். 1939ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் நாள் அதிகாலையில் அய்யரும் இன்னும் சிலரும் நீராடிவிட்டு, திருநீரணிந்து பக்திப் பரவசத்துடன் காணப்பட்டனர். அய்யருடன் இருந்த அனைவருக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டது. அய்யரின் காரில் ஹரிஜன சேவா சங்கச் செயலாளர் கோபால்சாமியும், ஐந்து ஹரிஜனங்களும் ஒரு நாடாரும் இருந்தனர். அய்யரின் கார் கோயிலின் தெற்குக் கோபுரம் அருகில் நின்றது. காரில் இருந்து இறங்கியவர்களை கோயில் நிர்வாகி ஆர்.எஸ்.நாயுடு வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். அனைவரும் முதலில் பொற்றாமைக் குளத்தில் கைகால் அலம்பினர். பின்னர் அய்யர் தன்னுடன் வந்தவர்களை மீனாட்சி அம்மன் கர்ப்பக்கிரகம் வரை அழைத்துச் சென்றார். பட்டர் வழக்கம்போல் பூஜை செய்தார். பிரசாதம் வழங்கப்பட்டது. அனைவரும் மீனாட்சி அம்மனைக் கண் குளிரத் தரிசித்தனர். வந்திருந்த தம் குழந்தைகள் அனைவரையும் மகிழ்ச்சி பொங்க புன்னகையோடு அருள்வதுபோல் மீனாட்சி அம்மன் காட்சி அளித்தார். பின் கோயிலுக்குள் முக்கிய இடங்களுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு கிழக்குக் கோபுர வாசல் வழியாக வெளியே வந்தனர். உடனே கோயில் நுழைவு நடந்தேறியதாக அய்யர் பொதுமக்களுக்கு அறிவித்தார்.
அய்யருடன் கோயிலுக்குள் சென்றவர்கள் கக்கன் (அய்யரின் அன்புக்குரிய சீடர், மற்றும் பின்னாளில் காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றவர்), முத்து, விராட்டிபட்டி பூவலிங்கம், மதிச்சியம் சின்னையா, ஆலம்பட்டி முருகானந்தம் ஆகிய ஐந்து ஹரிஜனங்களும் விருதுநகரைச் சேர்ந்த எஸ்.எஸ்.சண்முக நாடாரும் ஆவர். இவர்களுடன் ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளர் எல்.என்.கோபால்சாமியும் உடனிருந்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு மிக அமைதியாக நடந்தேறியது. இச்செய்தியை அய்யர் தந்தி மூலம் அண்ணல் காந்திக்கும், முதலமைச்சர் இராஜாஜிக்கும் அனுப்பினார். செய்தி மதுரை நகரெங்கும் காட்டுத் தீபோல் பரவியது. மக்கள் கூட்டம் கோயில்முன் திரண்டது. சனாதனிகள் அதிர்ச்சி அடைந்தனர். நடேச அய்யர் கொதித்தெழுந்தார். தமிழ்ச்சங்கம் தெருவிலிருந்த நடேச அய்யர் வீட்டில் சனாதனிகள் கூடினர். வைத்தியநாத அய்யரையும், அவர் வீட்டினரையும் சாதி விலக்கம் செய்துள்ளதாக நடேச அய்யர் அறிவித்தார். இதற்கிடையில் கோயிலில் வழக்கம்போல் பூஜைகள் நடந்தன.
வைத்தியநாத அய்யரின் வெற்றியைப் பொறுக்காத சனாதனிகள் கோயிலிக்குள் ஒரு பொற்குடத்தைக் கொண்டு வந்தி நிறைய சடங்குகளைச் செய்து நடேச அய்யர் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். கோயில் தீட்டுப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் நடேச அய்யர் வீட்டில் குடிகொண்டுள்ளாள் என்று சொல்லி மக்களை ஏமாற்ற நினைத்தனர். கோயில் பட்டர்கள் பூஜை செய்வதைத் தடுத்து நிறுத்தினர். வைத்தியநாத அய்யர் உடனே வெளி ஊர்களிலிருந்து பட்டர்களைக் கொண்டுவந்து பூஜை நடக்க ஏற்பாடு செய்தார். நடேச அய்யர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அய்யர் மீது வழக்குத் தொடுத்தார். மீனாட்சி அம்மன் கோயிலின் புனிதத்துக்கு அய்யர் செயலால் களங்கம் ஏற்படுட்டுவிட்டது என்று வாதாடினார். அய்யர் துணிச்சலுடன் அனைத்துச் சவால்களையும் சந்தித்தார். தன் வீட்டு நகைகளை விற்று வழக்கை நடத்தினார். காந்தியடிகள் அய்யரின் நடவடிக்கைகளைப் பாராட்டியும், தொடர்ந்து விவேகத்துடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளச் சொல்லியும் அய்யரை வாழ்த்தி கடிதம் எழுதினார். விரைவில் மேலும் பல கோயில்களிலும் நுழைவு நிகழ்ச்சிகள் நடத்திடவும் கேட்டுக்கொண்டார். மீனாட்சி அம்மன் கோயிலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மற்ற கோயில்களிலும் ஹரிஜனங்கள் நுழைய ஏற்பாடுகள் செய்தார் அய்யர்.
பழனி தண்டாயுதபாணி கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் என ஒவ்வொன்றாக மற்ற கோயில்களையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்துவிட நடவடிக்கைகள் எடுத்தார். இதனை அடுத்து ஹரிஜனங்களின் வாழ்வில் ஒளியேற்றும் வழிகளை ஆராய்ந்தார். மதுரை நகரில் வாழும் அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களும் அய்யரை தெய்வமெனப் போற்றினார்கள். அவர்களின் வழக்குகளை இலவசமாக நடத்தினார். அவருடைய வீடு எப்போதும் ஹரிஜனங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. அகிலாண்டம்மாள் ஹரிஜனங்களின் பசியாற்றுவதைத் தன்னுடைய கடமையாகக் கருதினார். எந்த நேரமும் அய்யர் வீட்டுக்கு ஹரிஜனங்கள் உதவி கேட்டு வந்தவண்ணம் இருந்தனர்.
காங்கிரஸ் கட்சி 1946இல் சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்று பதவிக்கு வந்தது. பிரகாசம் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். சட்டத்துறையில் வல்லுனராக இருந்த அய்யரை சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்கச் சொன்னார். பதவி ஆசையேதும் இல்லாத அய்யர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டமன்ற நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்றார். அமைச்சரவைக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்கினார். சட்டங்கள் இயற்றப்படும்போது சரியான முறையில் வழிகாட்டினார். கல்வி தொடர்பான விவாதத்தின் போது கல்வி நிறுவனங்கள் சாதி, மத பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என அய்யர் வலியுறுத்தினார். 1952 தேர்தலில் அய்யர் போட்டியிட விரும்பவில்லை. அவர் உடல் நிலையும் அவரோடு ஒத்துழைக்கவில்லை. வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டார். ஆனால் அது குறித்த அக்கறையை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. இச்செய்தியைக் கேள்விப்பட்ட இராஜாஜி அவரைச் சென்னையில் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை பெறச் செய்தார். ஆனால் சிகிச்சை பயனளிக்காமல் அய்யர் 1955ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் இயற்கை எய்தினார். மதுரைக்கு அவர் உடல் கொண்டுவரப்பட்டது. மதுரையே திரண்டு நின்று அவருக்கு இறுதி மரியாதை செய்தது. மதுரை வாழ் ஹரிஜனங்கள் அவர்களின் உற்ற தோழனை இழந்து வாடினர். அய்யர் செய்த தியாகங்களை ஹரிஜன சமுதாயம் என்றென்றும் நினைவில் கொள்ளும்.
நூலாசிரியர் பிற்சேர்க்கையில் அய்யர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையையும், அவருக்கு சட்டமன்றத்தில் கொடுக்கப்பட்ட அஞ்சலி உரைகளையும் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார். பிழை திருத்தம் செய்யப்படாமல் நிறையப் பிழைகளுடன் காணப்படுகின்றன. அடுத்த முறை அச்சேறும்போது பிழைகள் நீக்கப்பட வேண்டும்.
வைத்தியநாத அய்யரின் கோயில் நுழைவுப் போராட்டத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்பு அளித்ததாகப் பேசப்படுகிறது. சனாதனிகள் கோயில் வாசலில் அய்யரைத் தடுத்து நிறுத்த ரௌடிகளைக் கொண்டுவந்தால்,’’நான் அவருக்குத் தக்க பாதுகாப்பு அளிப்பேன்” என்று தேவர் உறுதியளித்தாகச் சிலர் பதிவு செய்துள்ளனர். இது குறித்து நூலாசிரியர் ஏதும் சொல்லாமல் சென்றுள்ளார். வைத்தியநாத அய்யர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற காலத்தில் அன்றிருந்த கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, கே.பி.ஜானகியம்மாள் ஆகியோருடனும் நட்பு பாராட்டினார். அதிலும் குறிப்பாக தன்னுடைய கூட்டங்களில் கே.பி.ஜானகி அம்மாளை மேடையில் பாடச் சொல்வார். அவர் பாரதியாரின் உணர்ச்சிமிகு பாடல்களை இனிய குரலில் பாடுவதைக் கேட்டு மகிழ்வார். இதுவும் இந்நூலில் பதிவு செய்திருக்கலாம். வைத்தியநாத அய்யரின் வாழ்க்கை வரலாற்றை செம்மையாகப் படைத்த பேரா.சந்திரபிரபு, மற்ற விடுதலைப் போராளிகளின் தியாகங்களையும் எழுதி, வருங்காலச் சந்ததியினர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவிடுவார் என்று நம்புவோம். –
--------------------------------------------
Comments
Post a Comment