Skip to main content

சூடாமணி சிறுகதைகள் ஓர் அறிமுகம்

 

வற்றாத ஈரமும், அறச்செறிவும் நிறைந்துள்ளன சூடாமணியின் கதைகள்,

ஆரம்ப காலத்தில் மேற்கத்திய நாடுகளில் புனைகதை எழுதுவந்த பெண் எழுத்தாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளாமல் புனைபெயர்களில்தான் எழுதினர். எழுத்துலகம் பெண்களுக்கானதாக இல்லாததே காரணம். ஜேன் ஆஸ்டின், பிராண்டே சகோதரிகள், ஜார்ஜ் இலியட் போன்ற சிறந்த எழுத்தாளர்கள்கூட தங்கள் அடையாளத்தை  மறைத்துக்கொண்டுதான் படைப்புகளை வெளியிட்டார்கள். ஆனால் தமிழில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள சூடாமணி எந்த ஆரவாரமுமின்றி தனது இயற்பெயரிலேயே இலக்கிய வெளியில் பயணித்துள்ளார். ஆங்கில எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் போல் தானறிந்த குடும்பச் சூழலை மட்டுமே மையமாக வைத்து எழுதி வெற்றி பெற்றவர் ஆர்.சூடாமணி. குடும்ப வாழ்வில் ஆண்கள், பெண்கள் குழந்தைகளிடையே வெளிப்படும் அன்பு, பாசம் போன்ற நெருக்கமான உறவுகள், அதில் ஏற்படும் நெருக்கடிகள் ஆகியவை மட்டுமே சூடாமணி கதைகளில் காணக்கிடக்கின்றன.

சூடாமணி சிறு வயதில் அம்மை நோயின் பாதிப்பால் கை,கால்களின் வளர்ச்சியை இழந்தவர். இருப்பினும் ஊனம் அவர் உள்ளத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. 1950களில் தொடங்கி ஐம்பதாண்டு காலம் இடைவிடாது ஐநூறுக்கும் மேற்பட்ட கதைகள், நாவல்கள், என்று எழுதிக் குவித்துள்ளார். இவரின்மனதுக்கு இனியவள்நாவல் கலைமகள் நடத்திய நாவல் போட்டியில் முதற் பரிசு வென்றது. கலைமகள் வெள்ளி விழா சிறுகதைப் பரிசு, இலக்கிய சிந்தனைப் பரிசு, தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு ஆகியவற்றையும் வென்றுள்ளார். செல்வமும், செல்வாக்கும் பெருகி வந்தபோதும் அவற்றைப் பெரிதாக எண்ணாதவர். காந்தியக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்த சூடாமணி மிகவும் எளிமையாக வாழ்ந்தார். மரணத்திற்குப்பின் தன் சொத்துக்களை எல்லாம் இல்லாதவர்களுக்குக் கொடையாக விட்டுச் சென்றார். குழந்தைகள் மற்றும் பெண்களின் உளவியலை சூடாமணி மிகவும் நுட்பமாகச் சித்தரித்துள்ளார். பெண்ணியம் என்ற சொல்லாடல் பிரபலமாவதற்கு முன்பே பெண்நிலை நோக்கி முற்போக்கான சிந்தனையுடன் கதைகள் எழுதினார்.  சூடாமணியின் சிறுகதைகள் சிலவற்றை ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து ‘Seeing in the Dark’ என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு வெளியிட்டுள்ளார். சூடாமணியின் கதைகளில் வற்றாத ஈரமும், அறச்செறிவும் நிறைந்துள்ளன.

நாகலிங்க மரம்கதை திருமணச் சந்தையில் ஏழைப் பெண்கள் படும்பாட்டைச் சித்தரிக்கிறது. பிருந்தாவைப் பெண் பார்க்க ஒரு நொண்டி மாப்பிள்ளை தன் பெற்றோருடன் வருகிறான். பிருந்தாவின் எதிரிலேயே கல்யாணச் சீர் குறித்துப் பேரம் பேசுகிறார்கள். இவற்றை எல்லாம் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன பிருந்தா ஜன்னலுக்கு வெளியே தெரியும் நாகலிங்க மரத்திலிருக்கும் பூக்களை எண்ணிக் கொண்டு இருக்கிறாள். அதன் மூலம் பெண் பார்ப்பது என்ற அந்தச் சடங்கையே கேலிப் பொருளாக்குகிறாள். இறுதியில் மாப்பிள்ளை பையனின்கருணையினால்திருமணம் முடிவாகிறது. நாகலிங்க மரத்தின் பூக்கள் எல்லாம் நொண்டிக் கால்களாகவே பிருந்தாவுக்குக் காட்சி அளிக்கின்றன. தனக்கு ஏற்படும் இழிவினை பிருந்தா எதிர்கொள்ளும் விதம் அலாதியானது. மொத்தத்தில் பிருந்தா ஒரு காத்திரமான படைப்பு.. 

ஆணாதிக்கச் சமூகத்தில் பிள்ளைகள் பெறுவது குறித்துக்கூட மனைவியைக் கலந்தாலோசிக்காத கணவர்களையே காண்கிறோம். பத்து மாதம் சிசுவைச் சுமந்து பெறப்போவது பெண்ணாக இருந்தாலும் அந்த முடிவை எடுப்பது ஆண்தான். இத்தகு சிக்கலான சூழலைச் சந்திக்கிறாள் தேவகி. ‘டாக்டரின் அறைஎனும் கதையில் ஏழாவது முறையாக கர்ப்பமாகியுள்ள தன் மனைவி தேவகியை அவள் கணவன் லேடி டாக்டரிடம் கூட்டிச் செல்கிறான். தேவகியின் உடலைச் சோதிக்கும் டாக்டர் பதட்டமடைகிறார். முப்பத்திரண்டு வயதில் ஏழாவது பிரசவமா என்று அதிர்ந்து போகிறார். தேவகியின்  உடல்நிலையில் இன்னொரு பிள்ளை பெறுவது நல்லதல்ல என்று அறிவுறுத்துகிறார். கருக்கலைப்பு செய்வதுதான் உசிதம் என்று ஆலோசனை வழங்குகிறார். அதை அவன் ஏற்றுக்கொள்ள மறுத்ததும் இந்தப் பிரசவத்துடனாவது தேவகிக்குக் குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்துவிட்டால் நல்லது என்கிறார் டாக்டர். அதற்கும் தேவகியின் கணவன் ஒத்துக்கொள்ளவில்லை என்றதும் டாக்டர் கோபப்படுகிறார். “உங்கள் மனைவியின் உடல்நலத்தில் உங்களுக்கு அக்கறை இல்லையா? ஆணும் பெண்ணுமாக ஏழு குழந்தைகள் போதாதா? நீங்கள் படித்தவர்; இப்படி இருக்கலாமா? என்று மிகவும் ஆதங்கப்படுகிறார். இதற்கெல்லாம் தேவகியின் கணவன் சிறிதும் மசியவில்லை. எனக்கிருக்கும் வசதிக்கு எத்தனை பிள்ளைகளையும் என்னால் வளர்க்க முடியும் டாக்டர்! என்று விதண்டாவாதம் பேசுகிறான். இந்த வாதங்களை எல்லாம் கேட்டுகொண்டிருந்த தேவகி தன் கணவனை டாக்டர் வாதத்தில் வெற்றிகொண்டுவிடமாட்டாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறாள். ஆனால் இறுதியில் அவள் கணவன் டாக்டரிடம் எனக்கு இஷ்டமில்லேன்னா விட்டுவிடுங்கள் என்று அழுத்தமாகக் கூறி வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறான். கணவனும், மனைவியும் வீட்டுக்குத் திரும்பும் வழியில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வருகிறார்கள். வீட்டுக்கு வந்ததும் தான் சுமந்துவந்த பையைக் கீழே வைத்துவிட்டுஅப்பாடா! என்ன கனம் கனத்துச்சு! இது! இப்பத்தான் நிம்மதிஎன்கிறான். அப்போதுஅவனைப் பார்த்து தேவகி ஒரு சிரிப்புச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு ஒரு காவியம் என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார் சூடாமணி.

சூடாமணியின்நான்காம் ஆசிரமம்கதை மிகுந்த சர்ச்சையை எழுப்பிய சற்று வித்தியாசமான கதை. கதையின் நாயகி சங்கரியின் ஈமக்கிரியை முடித்த பின் அவளின் முன்னாள், இந்நாள் கணவர்கள் இருவரிடையே நடக்கும் உரையாடல் மூலம் கதையை நகர்த்திச் செல்கிறார். இருவரும் சங்கரிக்கு அர்த்தமுள்ள வாழ்வைக் கொடுத்தவர்கள்தான். இருப்பினும் இவர்கள் இருவரிடமிருந்தும் சங்கரி வெவ்வேறு காரணங்களுக்காக விவாகரத்து கோரியிருந்தார். சங்கரி தன்னுடைய பேராசிரியருடன் அறிவார்ந்த காதல் வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்பதற்காக மூர்த்தியிடம் விவாகரத்து பெற்றார். இறுதியில் பேராசிரியருடனான வாழ்க்கையையும் முடித்துக் கொண்டு தானாக மட்டும் வாழ ஆசைப்பட்டு விவாகரத்து கோரினார். இது கிடைக்கவில்லை என்றதும் தன் வாழ்வை முடித்துக்கொண்டு மரணத்தைத் தழுவுகிறார். ஆண்களுக்கு விதிக்கப்பட்ட நான்கு விதமான ஆசிரமங்களைப் போல, சங்கரியும் பல கட்டங்களைத் தன் வாழ்வில் கடந்தவள்தான். அறியாப் பருவம், தாம்பத்யப் பருவம், அறிவுத் தேடல் பருவம், இறுதியில் இல்லறத்தைத் துறந்து ஆசிரமத்தைச் சேரும் பருவம் என்று நான்கு நிலைகளையும் கடந்து வாழ்வை முழுமையாக்க நினைத்தாள். ஒரு பெண்ணின் மனதை நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்திடும் இரு நல்ல ஆண்களை இக்கதையில் காண்கிறோம். ஆண்களைப் பழிப்பதல்ல பெண்ணியம். ஆணும், பெண்ணும் சரிநிகராக வாழ்வதுதான் பெண்ணியத்தின் நோக்கம் என்பதை அழகாக வடிவமைத்துக் காட்டுகிறார் சூடாமணி. சூடாமணியின் கதைகளில் அன்பும், அறமும் நிறைந்த சூழல் மட்டுமே வெளிப்படுகிறது. அங்கு குரோதம், துரோகம் போன்ற வன்முறைகளுக்கு இடமில்லை.

பேரா.பெ.விஜயகுமார்.                                

செல்: 9500740687

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...