பிரபஞ்சன்
’மானுடம் வெல்லும்’ என்பது பிரபஞ்சனின் ஒரு நாவல் தலைப்பு மட்டுமல்ல அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையும்கூட, ஆம்; பிரபஞ்சன் எப்போதும் தன் எழுத்துக்களில் மனிதனின் மேன்மைகளைப் போற்றுகிறார். நல்லதும் கெட்டதுமான கூட்டுக் கலவைதானே மனித வாழ்வு. வில்லன்கள் என்றும் ஹீரோக்கள் என்றும் மனிதர்கள் தனித்தனியாகப் பிறப்பதில்லையே. ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் மிருகங்களில் உயர்வான மிருகம் மனிதன் (Paragon of Animals) என்றுரைப்பார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எந்தவொரு மனிதனும் பிரமிக்கத்தக்க காரியங்களைச் செய்து முடிக்கிறானே! அவனே சபலங்களுக்கு ஆட்படும்போது சிறுமைப்பட்டும் போகிறானே! தெய்வம் பாதி, மிருகம் பாதி என்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தீதும், நன்றும் குடிகொண்டு அவனை ஆட்டிவைக்கின்றன. பிரபஞ்சன் மனிதனின் உன்னத தருணங்களை மட்டுமே தன்னுடைய படைப்புகளில் காட்சிப்படுத்துகிறார்.
சாகித்திய விருது பெற்ற பிரபஞ்சன் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் பிரபஞ்சனுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன. பிரபஞ்சன் எழுதியுள்ள ’மகாபாரதம்’ இதிகாசத்தை மறுகுரலில் சொல்லிடும் அரிய படைப்பாகும் ‘மானுடம் வெல்லும்’ மிகச் சிறந்த வரலாற்று நாவல். பிரெஞ்சு ஆளுநருக்கு துபாஷியாக இருந்த ஆனந்தரங்கம் என்பவரின் டைரிக் குறிப்பிலிருந்து எழுதப்பட்ட முக்கியமான நாவல். வரலாற்றை சிதைக்காமல், புனைகதையாக்கலாம் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ‘மானுடம் வெல்லும்’ நாவல்.
பிரபஞ்சனின் கதைக்களம் பரந்துபட்டது. புதுவை மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் புனைகதைகளில் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் எழுதிச் சென்றுள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவை அப்படியொன்றும் தமிழகத்திலிருந்து வித்தியாசமான மாநிலம் இல்லை. காலனிய காலத்தில் தமிழகம் ஆங்கிலேயர் வசமும், புதுச்சேரி பிரெஞ்சுக்காரர் வசமும் அடிமையாக இருந்தன. தமிழகத்திலிருந்து அரசு, ஆட்சி முறைகளில் இருந்து மட்டுமே புதுச்சேரி மாறுபட்டிருக்கிறது. ஆனால் கலாச்சார அடிப்படையில் இரண்டும் ஒன்றுபட்ட பரப்புதான்.
’பாதுகை’ பிரபஞ்சனின் சிறுகதைகளில் தனித்துவமானது. ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளைக் காலனிகளாக்கி அவற்றின் இயற்கை வளங்களை எல்லாம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் கொள்ளையடித்துச் சென்றன. காலனிகளை நிர்வாகம் செய்திட தங்கள் நாட்டிலிருந்து அதிகாரிகளை அனுப்பினார்கள். பிரெஞ்சுக் காலனியான புதுச்சேரியை நிர்வகிக்க பிரான்சிலிருந்து அதிகாரிகள் வந்தனர். அவர்கள் இந்தியர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை. இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் என்றும், அவர்களை நாகரீகப்படுத்தவே தாங்கள் அவதரித்து உள்ளதாகவும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்தியர்களை அடிமைகளைப் போல் நடத்தினர். படித்துப் பதவியிலிருந்த இந்திய அதிகாரிகள் கூட பிரெஞ்சு அதிகாரிகளுக்குச் சரிசமமாக உட்கார முடியாது. பிரெஞ்சு அதிகாரிகள் சாதாரண இந்தியர்களை மட்டுமல்ல இந்திய அதிகாரிகளையும் கேவலமாகவே நடத்தினர்.
பிரபஞ்சனின் ‘பாதுகை’ கதையில், பிரெஞ்சு நீதிபதி ஒருவர் இந்திய வழக்கறிஞர் ஒருவரை இழிவுபடுத்துவதையும், அதை எதிர்த்து அந்த வழக்கறிஞர் வீரம் செறிந்த போராட்டம் நடத்துவதையும் காண்கிறோம். பாதுகை கதையின் நாயகன் தன்மானமிக்க பொன்னுத்தம்பி பிள்ளை என்ற வக்கீல். காலனிய காலத்தில் ராமன் ஆண்டால் என்ன; ராவணன் ஆண்டால் என்ன என்று அற்ப ஜீவிதம் நடத்தியவர்களே பெரும்பான்மை இந்தியர்கள். ஆனால் பொன்னுத்தம்பி போன்ற விடுதலை வேட்கையும், போர்க்குணமும் தன்மானமும் கொண்டிருந்தவர்களையே இன்று நாம் நினைவு கூர்கிறோம்.
கோர்ட்டில் பிரெஞ்சு நீதிபதி முன்னால் பளபளக்கும் பாதுகைகளை கால்களில் அணிந்து காட்சியளிக்கிறார். வக்கீல் பொன்னுத்தம்பி. பிரெஞ்சுத் துரைக்கு கோபம் கொப்பளிக்கிறது. பாதுகை அணிந்து ”நீதிமன்ற வளாகத்தில் வருவதற்கு இந்தியர்களுக்கு உரிமை இல்லை” என்று ஆணவத்துடன் பிரெஞ்சு நீதிபதி கத்துகிறார். ”இந்த நீதிமன்றத்தில் நீதி பரிபாலனம் செய்யவே நாம் அனைவரும் கூடியுள்ளோம். இதில் நமக்குள் நிறம், மதம், இனமாச்சரியங்களுக்கு இடமில்லை” என்று பொன்னுத்தம்பி வாதாடுகிறார். பிரெஞ்சுதுரை சினத்தின் உச்சியில் ”காலனிய அடிமைகளுக்கு பாதுகை அணியும் உரிமையில்லை. மீறினால் பொன்னுத்தம்பியின் வழக்காடும் உரிமை பறிக்கப்படும்” என்று தீர்ப்பளிக்கிறார். தீர்ப்பிற்கு அடிபணிய மறுக்கிறார் பொன்னுத்தம்பி. பாரிஸ் நகரில் இருக்கும் உச்சநீதி மன்றத்திற்கு மேல்மனு செய்கிறார். மாதங்கள் ஓடுகின்றன. ஆனால் உச்சநீதி மன்றத்திலிருந்து பதிலேதும் வரவில்லை. பொன்னுத்தம்பியின் தந்தையும் பிறரும் நெருக்கடி கொடுக்கின்றனர். பொன்னுத்தம்பி மன உறுதியுடன் பொறுமை காக்கிறார். பதின்மூன்று மாதங்கள் கழிந்து தீர்ப்பு வருகிறது. ”சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ள பிரெஞ்சுப் பேரரசு, காலனிய நாட்டினரும் பிரெஞ்சு மக்களுக்குச் சமமாக உடை அணிவதில் தடையேதும் இல்லை என்று உச்சநீதி மன்றம் கருதுகிறது. எனவே புதுவை நீதிபதி அளித்த தீர்ப்பு. செல்லாது” என்று ஆணித்தரமான உத்தரவைப் பிறப்பிக்கிறது. வெற்றியுடன் பாதுகை அணிந்து நெஞ்சை நிமிர்த்தி நீதிமன்றம் மீண்டும் வருகிறார் பொன்னுத்தம்பி.
’சிக்கன் பிரியாணியும், ஸ்ரீதேவி படமும்’ பிரபஞ்சனின் மற்றுமொரு சிறந்த கதை. அப்பாவி மக்களிடம் பணத்தைச் சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல்வாதிகளைப் பகடி செய்யும் கதை. தன் விதவைத் தங்கைக்கு அரசு வேலை கிடைத்திட சிபாரிசு வேண்டி தொகுதி எம்.எல்.ஏ.வைச் சந்திக்க கிராமத்திலிருந்து வருகிறான் மண்ணாங்கட்டி என்ற அப்பாவி இளைஞன். எம்.எல்.ஏ.வும் அவனின் உதவியாளனும் பணத்துடன் வந்தால் உதவுவதாகக் கூறுகிறார்கள். சொத்துக்களை விற்றுப் பணம் சேர்த்து மீண்டும் நம்பிக்கையுடன் வருகிறான் மண்ணாங்கட்டி. அவன் கொடுக்கும் பணத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டும், ஸ்ரீதேவி படம் பார்த்தும் கும்மாளம் அடிக்கிறான் எம்.எல்.ஏ. உதவியாளன். பணக்கட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு “உன் தங்கைக்கு வேலை கிடைத்துவிடும். நீ போகலாம்” என்கிறான். அவன் சற்றும் எதிர்பாராமல் மண்ணாங்கட்டி அவன் கால்களில் விழுந்து “அண்ணே! உங்களைத்தான் நம்பியுள்ளேன், என் தங்கையின் வாழ்வில் நீங்கள் தான் ஒளியேற்ற வேண்டும்” என்று கண்ணீர் மல்கச் சொல்லி விடைபெறுகிறான், உதவியாளனின் கல் மனமும் கரைகிறது. இனியாவது மண்ணாங்கட்டியின் தங்கைக்கு உதவி செய்வது என்ற நல்லெண்ணம் அவன் மனதில் துளிர்க்கிறது என்று பிரபஞ்சன் கதையை முத்தாய்ப்பாய் முடிக்கிறார்.
பேரா.பெ.விஜயகுமார்.
செல்: 9500740687
--------------------------------------------------------------
Comments
Post a Comment