Skip to main content

பூமணி - சிறுகதைகள் - ஓர் அறிமுகம்

 

பூமணி

கரிசல் மண்ணின் ஏழை எளிய மக்களின் வாழ்வு துயரமானது. அது வறுமையும், வெக்கையும் பின்னிப்பிணைந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடாத அம்மக்களின் போராட்ட வாழ்வைப் பலரும் எழுத்தோவியமாகத் தீட்டியுள்ளனர். கரிசல் மண்ணின் வாசத்தையும், பாசத்தையும், நேசத்தையும் இயல்பாகச் சித்தரித்துச் சென்றுள்ள பூமணி இவர்களில் முக்கியமானவர். பூமணி கதைகளில் கரிசல் காட்டு மனிதர்கள் மட்டுமின்றி அங்கு நிலைபெற்றிருக்கும் கல், மண், மரம், செடி, கொடி, புழு, பூச்சி என்று அனைத்தும் இடம் பெறுகின்றன. தமிழ்ச் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் சாதியத்தையும் அதன் கோர வடிவத்தையும் பூமணி சொல்லிச் செல்லும் விதம் வித்தியாசமானது. சாதியம் நிகழ்த்திடும் வன்முறைகளை தன் புனைகதைகளில் நாசுக்காகவும், நுட்பமாகவும், அதேசமயம் அழுத்தமாகவும் பதிவு செய்கிறார்.

கூட்டுறவுத் துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றிய பூமணி இலக்கியத்திலும் பரிணமித்துள்ளது. தமிழ் எழுத்துலகிற்குக் கிடைத்த பேறு. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள இவரின்அஞ்ஞாடிநாவல் கரிசல் மண்ணின் இருநூறு ஆண்டுகால வரலாற்றைப் புனைகதையாக மாற்றியுள்ளது. ‘பிறகு’, ’வெக்கை’, ’நைவேத்தியம்ஆகியவை பூமணியின் பிற நாவல்களாகும். தலித் வாழ்வியலைச் சித்தரிக்கும்பிறகுதமிழின் உன்னதமான நாவல்களில் ஒன்றாகும். தீப்பெட்டித் தொழிலாளர்களின் அவலங்களை மையப்படுத்தியகருவேலம்பூக்கள்என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பூமணி திரைப்படத் துறையிலும் தடம் பதித்துள்ளார். இலக்கிய சிந்தனைப் பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க விருது போன்ற விருதுகள் பூமணிக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள்.

சிறுகதை இலக்கியத்தின் நுட்பங்கள் அனைத்தும் பூமணியிடம் இயல்பாகவே அமைத்துள்ளன. பூமணியின் கதைகளுக்கு அழகு சேர்ப்பது அவர் பயன்படுத்தும் மொழியாகும். உயிர்ப்பான கரிசல் வட்டார மொழியில் அந்த மண்ணின் கதை சொல்லப்படும்போது அது ஒரு வீரியமிக்க படைப்பாகிறது. ‘ரீதிஎனும் கதையில் கரிசல் காட்டில் குழந்தைகள் வறுமையோடு மல்லுக்கட்டி வாழும் வாழ்க்கையை பூமணி சொற்சித்திரமாக வரைந்துள்ளார். வறட்சி என்றால் அப்படியொரு வறட்சி! வயிற்றுப் பசியுடன் மூன்று சிறுவர்கள் அந்த கந்தகப் பூமியில் ஆடு மேய்க்கிறார்கள். ஆட்டுக்குத் தண்ணீர் காட்டக்கூட முடியாத அளவிற்கான பஞ்சம். பனைமரத்தில் ஏறி அணிலை வேட்டையாடி சூட்டான் போட்டு தின்று பசியாறுகிறன்றனர். அவர்களின் கவனம் சிதறவும் ஆடுகள் மிளகாய்ச் செடிகளை மேயச் செல்கின்றன. அதற்கான தண்டனையாக ஒரு சிறுவன் சாட்டையடி வாங்குகிறான். அவர்களின் பொழுதெல்லாம் வாழ்விற்கான கடும் போராட்டத்திலேயே கழிகின்றது.

கோலிவறுமையின் காரணமாக கிராமத்திலிருந்து நகரத்திற்கு புலம் பெயரும் சுப்பு எனும் சிறுவனின் கதையாகும். சிறுவயதில் தந்தையை இழந்த சுப்பு, வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரத்த நகரத்துக்கு வந்தடைகிறான். கிராமத்து நண்பர்களையும். விளையாட்டுகளையும் பிரிந்தது சுப்புவை மிகவும் வாட்டுகிறது. கட்டுப்பாடுகளற்ற சுதந்திரத்துடன் ஓடி விளையாடிக் கழித்த கிராமத்து நாட்களை நினைத்து ஏங்குகிறான். கால்சட்டைப் பையில் தயாராக வைத்திருக்கும் இரண்டு கோலி குண்டுகளையும் வைத்து விளையாட வழியின்றி தவிக்கிறான். அவன் அம்மாவும், அக்காவும் பகலெல்லாம் தீப்பெட்டி ஒட்டியும், இரவில் இட்லிக்கடை வைத்தும் வறுமையைப் போக்க அல்லாடுகிறார்கள். இவனும் அவர்களுக்கு ஒத்தாசையாக வேலைகள் செய்கிறான். ஓய்வு கிடைத்த ஒரு நேரத்தில் கோலி விளையாடச் சென்ற அந்தக் கணமே அவனுக்கு எமனுடனான சந்திப்பாய் முடிகிறது. கோலி குண்டுவை விரட்டிச் சென்ற சுப்பு லாரியில் அடிபட்டுச் சாகிறான். அவன் தலை மட்டும் பெரிய கோலியாக தெருவில் தனித்துக் கிடந்தது என்று கதை முடிவது சோகத்தின் உச்சம்.

சாதிய ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்விடங்களாக இந்தியக் கிராமங்கள் இருக்கின்றன. பூமணியின்மட்டம்சிறுகதையில் புளியம்பட்டி எனும் கிராமத்தில் அந்தந்த சாதியினர் அவர்களுக்குரிய இடத்தில் கோட்டைத் தாண்டாமல் வாழ்கிறார்கள். நாயக்கமார், நாடாக்கமார், கோனக்கமார் எல்லாம் ஊரின் மேற்கிலும், பள்ளக்குடியும் சக்கிலியக்குடியும் ஊரின் கிழக்கிலும் வாழ்கின்றனர். தெற்கு வடக்காக ஊரின் நடுவே செல்லும் சாலை இவர்களைப் பிரித்துவைக்கும் எல்லைக் கோடாகும். மேற்கில் வாழும் ஆதிக்க சாதியினரின் அக்கிரமங்களை விதிப்பயன் என்றெண்ணி பொறுத்துக் கொண்டு எல்லையை மீறாமல் வாழ்ந்த காலம் பழைய கதையாகிறது. பள்ளக்குடியைச் சேர்ந்த பெரியவர் சுப்பன் எல்லைக்கோடு மீறாமல் இருக்க படாதபாடு படுகிறார். ஆனால் புதிய தலைமுறை பள்ளக்குடி இளைஞர்கள் எழுச்சி பெற்று அத்துமீற நினைக்கிறார்கள். எல்லைக் கோட்டைக் கடக்க எத்தனிக்கிறார்கள். பிரச்சனை வெடிக்கிறது. குத்து, வெட்டு, கைகலப்பு, என்றாகி காவல்நிலையத்தை முற்றுகை இடுகின்றனர், காவல்நிலைய ஏட்டு கள யதார்த்த நிலைமைகளை விளக்கித்  தீர்ப்பு வழங்குகிறார். இரு தரப்பினரும் தீர்ப்பை ஏற்று அமைதியுடன் கலைகிறார்கள். கிராமங்களில் நிலவிடும் சாதியப் பாகுபாடுகளை பூமணி வன்மங்களற்ற மொழியில் சித்தரிக்கிறார். கிராமத்தின் மேற்கு. தெற்கு ஆகிய இரு வாழ்விடங்களின் மட்டமும் சமமாகும் போதுதான் கிராமத்தில் அமைதி நிலவிடும் என்பதைக் கதை உணர்த்துகிறது.

பூமணியின் அடி, தகனம், ஆத்திரம், மட்டம் குடை, நாதி ஆகிய கதைகளில் வரும் ட்டையாவும், காவலர் ஆத்தியப்பனும் கருணையுள்ளம் கொண்ட இரண்டு மனிதநேயம் மிக்க நேர்மையான காவலர்களாகத் திகழ்கின்றனர். ‘ஆத்திரம்சிறுகதை அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு என்ற பேரில் காவல்துறையினர் படும்பாட்டைச் சித்தரிக்கிறது. அதிலும் காவல்துறையின் கீழ்மட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் பணிநிலை படுமோசமாக இருப்பதைப் பார்க்கிறோம். அமைச்சருக்கு பாதுகாப்பாம்! சென்னை கடற்கரை ரோட்டில் ஏட்டையா மணிக்கணக்காக நிற்கிறார். காலை வெயிலில் கனத்த துப்பாக்கியுடன் கால்கடுக்க நிற்கிறார். போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் போது பொதுமக்களின் கோபத்திற்கும் ஆளாகிறார். வெறுமனே டீயை மட்டும் குடித்துவிட்டு பசியுடன் நிற்கிறார். பாவம், ஏட்டையா! சிறுநீர் கழிப்பதற்குக்கூட வாய்ப்பில்லை. அந்த நேரத்தில் நடக்கும் விபத்தைச் சரியாகக் கையாளவில்லை என்று மேலதிகாரியின் திட்டுக்கும் ஆளாகிறார். இவ்வளவு சிரமங்கள் அனுபவித்த பின்னர் அமைச்சர் மாற்று வழியில் சென்றுவிட்டார் என்பதால் காவலர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு என்ற பேரில் நடந்திடும் இக்கொடுமை என்று தீரும்? எட்டையா மட்டுமல்ல பொதுமக்களாகிய நாமும் கேட்கிறோம். பூமணியின் கதாபாத்திரங்கள் சதையும், ரத்தமுமான உயிரோட்டமுள்ள மனிதர்கள். தாங்கள் வாழும் கரிசல் மண்ணின் மொழியில் பேசுகிறார்கள். அவர்கள் பேசும் வார்த்தை மென்மையானவை மட்டுமல்ல ஆழமானவையுங்கூட. பூமணியின் கதைகள் அனைத்திலும் கரிசல் மண்ணின் சோசகம் ஊடாடிச் செல்கிறது.

                             பெ.விஜயகுமார்

                             செல்: 9500740687

                 -----------------------------------------------------------

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...