திலீப்குமார்
தமிழகத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஏழு கோடியாகும். இதில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் சுமார் ஒரு கோடிப்பேர். இதேபோல் மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி, இந்தி, பெங்காலி, பஞ்சாபி என்று பல மொழி பேசுபவர்களும் வாழ்கின்றனர். இவர்களில் சிலர் தமிழில் நன்கு தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்களாகவும் இருப்பது நமக்குப் பெருமை சேர்ப்பதாகும். எழுத்தாளர் சுகுமாறனின் தாய்மொழி மலையாளம்; நஞ்சுண்டனின் தாய்மொழி கன்னடம் இதுபோல் திலீப்குமாரின் தாய்மொழி குஜராத்தி. தமிழின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளரான திலீப்குமார் சிறுகதைகள் மட்டுமின்றி மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்குகிறார். தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக திலீப்குமாரின் 88 சிறுகதைகளின் தொகுப்பினை சுபஸ்ரீ கிருஷ்ணசாமி ஆங்கிலத்தில் கொண்டுவந்துள்ளார்.
திலீப்குமாரின் மூன்று சிறுகதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. கணையாழி இதழில் வெளிவந்த ’தீர்வு’ சிறுகதை இலக்கிய சிந்தனையின் பரிசு பெற்றது. அமெரிக்காவாழ் தமிழர்களின் விளக்கு விருது, ஒன்றிய அரசின் பாஷா விருது, ஆரோக்கியம் அறக்கட்டளையின் சாரல் விருது ஆகியன பெற்றுள்ளார். தமிழ் இலக்கியம் குறித்து கலிபோர்னியா, யேல், சிகாகோ பல்கலைக்கழகங்களில் உரையாற்றி உள்ளார். ‘மௌனியுடன் கொஞ்ச நேரம்’, ‘வெங்கட்சாமிநாதன் – வாதங்களும் விவாதங்களும்’ போன்ற விமர்சன நூல்களையும் எழுதியுள்ளார். திலீப்குமாரின் ‘ரமாவும் உமாவும்’ என்ற குறுநாவல் தமிழில் ஓரினக் காதலைப் பேசிய தமிழின் முதல் புனைவிலக்கியமாகும்.
வணிகத்தில் சிறந்து விளங்கும் குஜராத்தியர்கள் உலகெங்கிலும் பரந்து விரிந்து வாழ்கின்றனர். சென்னை மாநகரின் தங்கச்சாலை, பாரிமுனை ஆகிய பகுதிகளில் குஜராத்தியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் சிலர் பெருவணிகர்களாக மிகுந்த வசதிகளுடன் வாழ்ந்த போதிலும், பெரும்பான்மையோர் நடுத்தர வர்க்கத்தினரே. இவர்களது வாழ்வின் நெருக்கடிகளையும், அதனை அவர்கள் எதிர்கொள்ளும் விவேகத்தையும் திலீப்குமார் தன் சிறுகதைகளில் காட்சிப்படுத்துகிறார். இவரது கதைகளின் ஊடே வெளிப்படும் நகைச்சுவை அலாதியானது.
‘கடவு’ கதையில் வரும் கங்குப் பாட்டி திலீப்குமாரின் காத்திரமான கதாபாத்திரங்களில் ஒருவர். எழுத்தாளர்களின் கதாபாத்திரங்களில் ஒரு சிலர் மிகை வளர்ச்சி பெற்று வாசகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெறுகின்றனர். அத்தகைய அற்புதமான படைப்புகளில் ஒருவர்தான் இந்த கங்குப் பாட்டி. இளம் வயதில் விதவையாகி வாழ்வின் அனைத்து அவலங்களையும் அனுபவித்தவர். கங்குப் பாட்டி தன்னுடைய சோகங்களை எல்லாம் மனதுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு எந்நேரமும் நகைச்சுவை உணர்வு மிளிர்ந்திட வாழ்கிறார். திலீப்குமாரின் பல சிறுகதைகளின் களமாக சென்னையின் மின்ட் பகுதிலிருக்கும் ஏகாம்பரேஸ்வர் அக்ராகரமும் அதிலிருக்கும் இருபத்து நான்கு ஒண்டிக் குடித்தனங்களும் இருக்கின்றன. அக்ராகரத்தில் வாழும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரின் அன்புடனும், ஆதரவுடனும் கங்குப் பாட்டி தன் இறுதிக் காலத்தைக் கழிக்கிறார். சாவின் விளிம்பிற்கு அடிக்கடி சென்றாலும், அதிலிருந்து தப்பித்து வந்துவிடுவார். தூரத்து உறவினர் ஒருவரின் அரவணைப்பில் வாழ்ந்திடும் கங்குப் பாட்டியின் காமரசம் பொங்கிடும் பேச்சு அக்ராகரத்தில் உள்ள அனைவரையும் ஈர்த்தது. திருமணமான இளம் பெண்கள் அனைவரும் கங்குப் பாட்டியிடம்தான் தாம்பத்யம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றனர். திருமணம் ஆகாத வாலிபப் பெண்களும் தாம்பத்ய வாழ்வின் ரகசியங்களை கங்குப் பாட்டி சுவைபடச் சொல்வதைக் கேட்டு மகிழ்வர். ஏகாம்பரேஸ்வர் அக்ராகரத்தில் இருப்பவர் யார் இறந்தாலும் ரஜ்னிகாந்த் என்பவர்தான் குஜராத்தி முறைப்படி பாடைகட்டி அவர்களின் இறுதிப் பயணத்தை நடத்தி வைப்பார். கங்குப் பாட்டிக்கும் தானே பாடைகட்டி வழியனுப்ப வேண்டும் என்பதே அவரின் விருப்பம். ஆனால் அவர் ஊரில் இல்லாத ஒரு நாள் அவருக்கு இந்த வாய்ப்பைக் கொடுக்காமலே கங்குப் பாட்டி இறந்துவிடுகிறார். மரணம் சொல்லிக்கொண்டா வருகிறது!
சிறுகதையின் இலக்கணங்களில் ஒன்றான எதிர்பாராத முடிவைக் கொண்டதாக திலீப்குமாரின் ‘தீர்வு’ கதை இருக்கின்றது. இக்கதையின் களமும் ஏகாம்பரேஸ்வர் அக்ராகரம் தான். அக்ராகரத்தில் வாழும் குஜராத்தியர்களின் நடை, உடை, பழக்க வழக்கங்களை இக்கதையில் திலீப்குமார் அழகுறச் சித்தரிக்கிறார். ஒரு நாள் அக்ராகரத்தின் குடிநீர் வசதிக்கு ஆதாரமான கிணற்றில் எலி செத்து மிதக்கிறது. அக்ராகரமே அல்லோகலப்படுகிறது. பல மணி நேர முயற்சிக்குப் பிறகு எலியை ஒருவழியாக கிணற்றிலிருந்து எடுத்துவிடுகிறார்கள். இப்போது அடுத்த பிரச்சனை எழுகிறது. எலி செத்து மிதந்த கிணற்றுத் தண்ணீரை எப்படி பயன்படுத்தவது? பலரும் பல ஆலோசனைகளைச் சொல்கின்றனர். கிணற்றிலிருந்து பத்து இருபது வாளித் தண்ணீரை இறைத்து வெளியே விட்ட பின்னர் நீரைப் பயன்படுத்தலாம் என்கிறார் ஒருவர். உடனே சிலர் வாளி வாளியாகத் தண்ணீரை இறைத்து வெளியேற்றுகின்றனர். சிறிது குளோரின் தூவி விட்டால் போதும் தண்ணீர் சுத்தமாகிவிடும் என்கிறார் ஒருவர். அருகிலிருக்கும் ஹெல்த் ஆபிசுக்குச் சென்று முறையீடு செய்ய வேண்டும் என்ற ஆலோசனையும் வருகிறது. செய்வதறியாது அனைவரும் திகைத்து நின்ற அத்தருணத்தில் அக்ராகரத்தில் வாழும் கங்குப் பாட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் எளிய தீர்வை வழங்குகிறார். தன்னுடைய அலமாரியைத் திறந்து சிறு மண்குடத்தை எடுக்கிறார். ஒரு சிறு கிண்ணத்தைக் கொண்டுவரச் சொல்லி ஆணையிடுகிறார். குடத்திலிருந்த தண்ணீரில் கொஞ்சத்தைக் கிண்ணத்தில் ஊற்றுகிறார். இந்த கங்கா ஜலத்தை கிணற்றில் ஊற்றுங்கள் கிணறு சுத்தமாகிவிடும் என்கிறார். பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கிறது. சிறிது நேரத்தில் கிணறு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது.
‘கடிதம்’ கதையில் ஏகாம்பரேஸ்வர் அக்ராகரத்தில் மரணத்தை வேண்டி நாளும் எமதர்மனை வணங்கிய வண்ணம் மற்றுமொரு ஜீவன் காத்திருக்கிறது. மிட்டு மாமா எனும் பெரியவர் வறுமையும், நோயும் வாட்டி வதைக்க சாவு வந்திடாத என்று ஏங்கிக் கிடக்கிறார். அவருடைய இரு மகன்களும், அவர்களின் தர்மபத்தினிகளும் அவரை அக்கறையுடன் கவனிப்பதில்லை. அவ்வப்போது உடுமலையில் இருக்கும் தன் சட்டகர் கன்ஷியாம் என்பவருக்கு கடிதம் எழுதி பண உதவி பெறுவார். மிட்டு மாமா நூறு ரூபாய் பணம் கேட்டுக் காத்திருக்கும் போது உடுமலையிலிருந்து தந்தி வருகிறது கன்ஷியாம் இறந்துவிட்டார் என்று. மரணத்தின் வாசல் திறக்கும் வரை மனிதர்கள் காத்திருக்கத்தான் வேண்டும். யார் முந்துவார்; யார் பிந்துவார் என்பது விடை தெரியாத புதிர்தானே.
--பெ.விஜயகுமார்.
செல்: 9500740687
---------------------------------------------
Comments
Post a Comment