Skip to main content

தி,ஜானகிராமன் - சிறுகதைகள் ஓர் அறிமுகம்

 

தி.ஜானகிராமன்

தி.ஜா. என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட தி.ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தார். பத்தாண்டு காலம் ஆசிரியராகவும், அகில இந்திய வானொலி நிலையத்தின் கல்வி ஒலிபரப்புப் பிரிவில் இருபதாண்டுகள் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். வடமொழிப் புலமையும், கர்நாடக இசையில் ஆழ்ந்த அறிவும் கொண்டிருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, உயிர்த்தேன், நளபாகம் போன்ற அற்புதமான நாவல்களையும் எழுதியுள்ளார். ஜானகிராமனும், சிட்டியும் இணைந்து எழுதியநடந்தாய் வாழி காவேரிதமிழின் மிகச் சிறந்த பயண நூலாகப் பாராட்டப்படுகிறது, 1979இல்சக்தி வைத்தியம்என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார். கல்கி, கணையாழி, மணிக்கொடி, கலைமகள், ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் தி.ஜாவின் கதைகள் வெளிவந்தன.

தி.ஜா என்றதும் கும்பகோணம், காவிரியாற்றங்கரை, மோகமுள் நாவல், அதன் கதாநாயகி யமுனா ஆகியன வாசகர்களின் மனதில் உடனே பளிச்சிடும். தமிழ் இலக்கியப் பெரு வெளியின் காவியப் பெண்களில் ஒருவராக யமுனா மின்னுகிறார். ”ஜானகிராமனின் மகோன்னதமான பாத்திரங்கள் பெண்கள்தான்என்று அசோகமித்திரன் கூறுகிறார். தன் படைப்புகளில் ஜானகிராமன் பெண்களை வியந்து போற்றிக் கொண்டாடுகிறார். அவரால் படைக்கப்பட்ட பெண்கள் கதாபாத்திரங்கள் என்ற எல்லையையும் தாண்டி பெண் தெய்வங்களாகவும், வழிபாட்டுக்கு உரியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். காமத்தை அதிகம் எழுதியவர் என்ற தவறான குற்றச்சாட்டு தி.ஜா மீது

 

சுமத்தப்படுவது உண்டு. ஆனால், தி.ஜாவின் பெண் பாத்திரங்கள் எல்லையை மீறுவது இல்லை. உரையாடல்கள் மூலம் பாத்திரங்களின் குணாம்சங்களை வெளிப்படுத்துவதில் கைதேர்ந்து விளங்குகிறார். மனிதர்களின் வெற்றியையும், தோல்வியையும்; பலத்தையும், பலவீனத்தையும்; மகிழ்ச்சியையும், சோகத்தையும்; பெருமையையும், சிறுமையையும் சமமாகப் பார்க்கும் பக்குவம் பெற்றவர். சுந்தர ராமசாமி எழுதியுள்ளநினைவோடைஎனும் நூல் ஜானகிராமனுக்குச் செய்யப்பட்டுள்ள மிகப் பெரிய மரியாதையாகும்.

குழந்தை உழைப்பின் கொடூரத்தை உணர்ச்சிப் பூர்வமாக சித்தரிக்கும் சிறுகதைசிலிர்ப்பு’. பத்து வயது குழந்தை காமாட்சி தஞ்சையிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் கல்கத்தா நகருக்கு வீட்டு வேலை செய்வதற்காக ரயிலில் அழைத்துச் செல்லப்படுகிறாள். எங்கேயோ இருக்கும் குழந்தையைப் பார்த்துக்கொள்ள எங்கிருந்தோ ஒரு குழந்தை போகிறது. அதே ரயிலில் பயணிக்கும் ஒரு தந்தையும் அவரது ஐந்து வயது மகனும் அந்தக் குழந்தையின்பால் காட்டும் கரிசனம் நெஞ்சை நெகிழ வைப்பதாகும். பத்து வயதுக்குள்ளேயே வீட்டு வேலை செய்து மூன்றாண்டு அனுபவத்தை காமாட்சி பெற்று விடுகிறாள். ஏற்கனவே ஜட்ஜ் வீட்டில் வேலை செய்து தன் குழந்தைப் பருவத்தைத் தொலைத்துவிட்டவள். அந்தப் பிஞ்சு வயதில் தன் வாழ்வின் துயரங்களை அமைதியுடன் சுமந்து செல்கிறாள். பயணத்தின் இறுதியில் சிறுமி காமாட்சியின் துயரத்தைப் புரிந்துகொள்ளும் அந்த ஐந்து வயதுச் சிறுவன் தன்னிடம் இருக்கும் ஒரே ஆரஞ்சுப் பழத்தை அவளுக்குக் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்துகிறான். தம் மகனின் ஈரமிக்க மனதைக் கண்டு தந்தை மெய் சிலிர்க்கிறார். ஒரு சில மணி நேர ரயில் பயணத்திற்குள் நடக்கும் சாதாரண நிகழ்வுகள் மூலம் அசாதாரண உணர்ச்சிகளைக் காட்சிப்படுத்தி ஜானகிராமன் வாசகர்களையும் மெய்சிலிர்க்க வைக்கிறார்.

ஜானகிராமனின் கதைகள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் தன்னிலை மொழியிலேயே சொல்லப்படுகின்றன. அப்படியொரு மனித நேயமிக்க கதை சொல்லியைபோபுர விளக்குகதையில் காண்கிறோம். கதை சொல்லியின் மனிதநேயத்தைப் புரிந்துகொள்ளாத அவரின் மனைவி கௌரி அவரைக் கேலி செய்கிறார். தருமு எனும் பெண்ணின் மரணச் செய்தியுடன் கதை தொடங்குகிறது. இறந்துபோன தருமு ஒரு விலைமாது என்பதால் ஊரில் யாருக்கும் வருத்தம் இல்லை. ஊராரின் கவலை எல்லாம் மாலைப் பொழுதில் கோயில் பூட்டிக்கிடக்கிறது என்பதும், போபுர விளக்கு ஏற்றப்படவில்லை என்பதும்தான்.

தருமுவும் அவள் தாயும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் பாவப்பட்ட ஜீவன்கள். குடும்ப வறுமையின் காரணமாகவே தருமு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறாள். ஒட்டுமொத்த ஊரும் அவர்களைப் புறக்கணிக்கிறது. இன்று தருமுவின் பூதவுடலும் அநாதையாகக் கிடக்கிறது. அவளுக்கான இறுதிச் சடங்கைச் செய்ய யாரும் முன்வரவில்லை. அற உணர்வு கொண்ட கோயில் மேனேஜர் முதலடி எடுத்துவைக்கிறார். பிணத்தைத் தூக்கிச்செல்ல அவர் தயார். ஆனால் இன்னொருவரும் தோள் கொடுத்தால்தானே காரியம் நிறைவேறும். ஆளைத் தேடுகிறார். தன் மனைவி கௌரியின் கேலிப் பேச்சையும் பொருட்படுத்தாது, கோயில் மேனேஜருடன் இணைந்து தருமுவின் உடலை அடக்கம் செய்யத் தயாராகிறார் கதைசொல்லி. மனிதநேயம் மேலிடும் போது ஆச்சாரங்கள் அர்த்தமற்றவையாகின்றன என்பதாக எதிர்பாராத முடிவுடன் கதையை முடிக்கிறார் தி.ஜா.

 

 

’கங்கா ஸ்நானம்’ ஜானகிராமனின் மற்றுமொரு காத்திரமான கதைகளில் ஒன்று. தன்னை வஞ்சித்த துரையப்பா என்ற பாவியை மன்னித்தது போதாமல் அவனுடைய பாவத்தைத் தொலைக்கவும் கங்கா ஸ்நானம் செய்யும் சின்னச்சாமியின் கதையைச் சொல்கிறது இக்கதை. சின்னச்சாமியின் சகோதரி சுந்தராம்பாள் சாவைத் தழுவும் நேரத்தில் தன் கணவன் பட்ட கடனைத் தீர்க்கவும், அவளின் நெடுநாளைய ஆசையான கங்கா ஸ்நானத்தை நிறைவேற்றிடவும் தம் தம்பி சின்னச்சாமியை வேண்டுகிறார். துரையப்பாவின் கடனை அடைக்க மூவாயிரத்துச் சொச்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அவன் வீடு வந்தடைகிறான் சின்னச்சாமி. இரவில் பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு, காலையில் பணம் வாங்கவில்லை என்று அலிச்சாட்டியம் பண்ணுகிறான் துரையப்பா. விஷயம் கோர்ட்டு வரை செல்கிறது. பணம் கொடுத்ததற்கு சாட்சியங்கள் இல்லை என்பதால் சின்னச்சாமியின் வாதம் தோற்கிறது. இரண்டாவது முறையாக வஞ்சகன் துரையப்பாவிற்கு பணத்தைக் கொடுத்துக் கடனைத் தீர்க்கிறான் சின்னச்சாமி. அக்காவின் இரண்டாவது ஆசையை நிறைவேற்ற கங்கா ஸ்நானம் வந்த இடத்தில் ஏமாற்றுப் பேர்வழி துரையப்பாவும் வந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறான். “அவனைப் பார்த்தால் பழசையெல்லாம் கிளற வேண்டாம்; உன் பாவத்துக்கும் சேர்த்து முழுக்குப் போட்டேன்னு நினைச்சுண்டு சாதாரணமாகப் பேசுங்கள்” என்று அவன் மனைவி காழ்ப்புணர்ச்சிகள் ஏதுமின்றி சொல்கிறாள். மனித மனங்களில் நிலவும் இத்தகு வித்தியாசமான குணாதிசயங்களை எழுதி வாசகர்களைப் பரவசப்படுத்துகிறார் ஜானகிராமன். மனித மாண்புகளில் ஜானகிராமன் கொண்டிருந்த நம்பிக்கை அவரது கதைகளில் பிரதிபலிக்கின்றன.                                                 -----பெ.விஜயகுமார். (செல்: 9500740687)

                                  

                 

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...