Skip to main content

வண்ணதாசன் - சிறுகதைகள் - ஓர் அறிமுகம்

 

வண்ணதாசன்

 திருநெல்வேலியில் 21- சுடலைமாடன் தெரு தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு நன்கு அறிமுகமான முகவரி. தாமரை இதழின் தொடக்க கால ஆசிரியர் தி..சிவசங்கரனின் இந்த வீடு எப்போதும் எழுத்தாளர்கள் சங்கமிக்கும் இடமாகும். தான் வாழ்ந்த காலத்து அனைத்து எழுத்தாளர்களையும் அன்புடனும், ஆதரவுடனும் அரவணைத்தவர் தி..சி. தி..சி.யின் புதல்வரான கல்யாண சுந்தரம் தனது கதைகளை வண்ணதாசன் என்ற பெயரிலும், கவிதைகளை கல்யாண்ஜி என்ற பெயரிலும் எழுதுகிறார். நெல்லை மண்ணின் சமகால எழுத்தாளர்களாகவும், தோழமைக்கு இலக்கணமாகவும் வண்ணநிலவன், கலாப்ரியா, விக்ரமாதித்யன், வண்ணதாசன் ஆகியோர் திகழ்கிறார்கள். வண்ணதாசனின் 36 ஆண்டுகால வங்கிப் பணி அவரது இயல்பு வாழ்க்கையையோ, எழுத்துப் பணியையோ பாதித்ததில்லை. பணி இடமாற்றங்களின் பொருட்டு நகர்ந்து சென்ற இடங்களில் காணும் மனிதர்களே அவரது வாழ்க்கை சார்ந்த தேடலின் பாடமாக இருந்துள்ளனர். ஆரவாரமற்ற மென்மொழியினால் கட்டப்பட்டுள்ள அவரின் புனைகதைகள் வீரியமிக்கன. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவரும் வண்ணதாசன் மனிதர்களுக்கிடையே கசிந்திடும் அன்பையும், கருணையையும் மட்டுமே தன்னுடைய சிறுகதைகளில் காட்சிப்படுத்துகிறார். நிறைய கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று எழுதிக் குவித்துள்ள வண்ணதாசனின் கடிதங்களும் அலாதியானவை. ‘சில இறகுகள் சில பறவைகள்என்ற நூல் இவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பாகும்.

 கல்லூரியில் படிக்கும் காலத்தில் கவலைகளும், பொறுப்புகளும் ஏதுமின்றி நண்பர்களுடன் ஆடிப்பாடிக் கொண்டாடுவதைக் கவிஞர் கண்ணதாசன்பசுமை நிறைந்த நினைவுகளே/ பாடித்திரிந்த பறவைகளே/ பறந்து செல்கிறோம்என்றொரு திரைப்படப் பாடலில் அழகாகச் சித்தரித்திருப்பார். ஆம்; கல்லூரிக் கால நினைவுகள் எல்லோருக்குமே இனிமையானவை, பசுமையானவை. வண்ணதாசனின்உயரப்பறத்தல்கதையில் கல்லூரி வாழ்வின் இனிய நினைவுகளில் திளைக்கும் இருவரைக் காண்கிறோம். இவ்விரு கதாபாத்திரங்களும் இருவேறு தலைமுறையினர் என்பது இன்னும் சிறப்பானது. கதையின் நாயகி தினகரி நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகி கணவனுடன் குடித்தனம் தொடங்கியுள்ளாள். திருமணத்துக்கு வந்திராத அவளின் கல்லூரி நண்பர்கள் இன்னும் வாழ்த்துச் செய்தி அனுப்பிய வண்ணமே இருக்கிறார்கள். அவளின் கல்லூரித் தோழன் ஜோ எனப்படும் ஜோசப் அனுப்பிய வாழ்த்துச் செய்தியைப் பார்த்து மனம் மகிழ்கிறாள். ஜோ அவன் விருப்பப்படியே மெர்ச்சண்ட்ஸ் நேவியில் சேர்ந்துள்ள செய்தியையும் பகிர்ந்துள்ளான். வாழ்த்துச் செய்தியுடன் இணைக்கப்பட்ட படத்தில் நீலக்கடலில் நீந்திச் செல்லும் பாய்மரக் கப்பலின் படம் முப்பரிமாண வடிவில் அழகுடன் வரையப்பட்டுள்ளது. கடல் அலையின் சீற்றம், தனித்துப் பறக்கும் ஓர் ஆலாப் பறவை, இழுத்துக் கட்டப்பட்ட பாய்மரம் என அனைத்தும் பாங்குடன் தீட்டப்பட்டுள்ளன. கடிதத்தின் இறுதியில்பருத்திப் புடவை ராணிக்குஎன்றெழுதி அனுப்பியுள்ளான். கல்லூரியில் தினகரியின் பட்டப் பெயர் பருத்திப் புடவை ராணி என்பதாகும். இதுவரை வந்திருந்த வாழ்த்துச் செய்திகளை எல்லாம் கணவன் சுரேஷிடம் காட்டியுள்ளாள். அவனும் அவைகளை ரசித்துப் படிப்பது வழக்கம். ஏனோ இந்தக் கடிதத்தைக் காட்டலாமா; வேண்டாமா என்ற தயக்கம் ஏற்பட்டது. இந்தச் சிந்தனையில் மூழ்கியிருந்த தினகரிக்கு இன்ப அதிர்ச்சியாக அவளின் மாமா திடீரென்று விருந்தாளியாக வீட்டுக்கு வருகிறார். நேற்றே அந்த ஊருக்கு வந்திருந்து அவரின் கல்லூரித் தோழி ஒருத்தியின் வீட்டில் தங்கியிருந்ததையும், தோழியுடன் அவர்கள் படித்திருந்த கல்லூரிக்குச் சென்று பழைய இனிய நினைவுகளில் பொழுதைக் கழித்த போது அவளின் கணவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டதை தினகரியிடம் விளக்குகிறார். இரவெல்லாம் தங்களின் கல்லூரிக் கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்ததையும் சொல்லிச் சிலாகிக்கிறார். “உன் அத்தையும் உடன் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்என்ற ஏக்கத்தையும் தினகரியிடம் வெளிப்படுத்துகிறார். புறப்படுவதற்குத் தயாரான தன் மாமாவிடம்இதோ! இந்தக் கடிதமும், பரிசும் என் கல்லூரி நண்பன் அனுப்பியதுதான்என்று தினகரி பெருமையுடன் காட்டுகிறாள் என்று கதை முடிகிறது. மாமாவிடம் காட்டிய நண்பனின் கடிதத்தை கணவன் சுரேஷிடம் பருத்திப் புடவை ராணிகாட்டியிருப்பாளா; இல்லையா என்பதை வாசகர்களாகிய நம்மிடம் விட்டுவிடுகிறார் வண்ணதாசன்.      

வாழ்வில் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நட்பு சில சமயங்களில் நெருங்கிய நட்பாகிவிடுகிறது. ’யாளிகள்கதையில் கதைசொல்லியின்   நண்பன் சேதுவின் தாயார் இறக்கிறார். சென்னை மாநகரின் மாடிக் குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருக்கும் அந்த வீட்டில் பெருத்த மௌனம் நிலவுகிறது. மாநகரங்கள் மரணத்தை எதிர்கொள்வதிலும் வித்தியாசமாகவே இருக்கின்றன. கிராமங்களில் இருப்பது போல் ஒப்பாரி பாடுவதையோ, மாரில் அடித்துக் கொண்டு பெண்கள் ஓவென்று அழுவதையோ மாநகரத்து இழவு வீடுகளில் பார்க்க முடியாது. மாடிப் படிகளின் வளைவுகளில் சுழற்றிச் சுழற்றி திருப்பப்பட்ட நிலையில் இறந்தவரின் உடலை கீழே எடுத்துச்சென்று வேனில் ஏற்றினார்கள். பெசண்ட் நகர் மின் மயானத்தில் உடலை எரியூட்டி முடிந்ததும், அஸ்தியைக் கலசத்தில் வாங்கிக் கொண்டு  ஈமக்கிரியைகளை முடித்திட அந்தக் கூட்டம் முழுவதும் அப்படியே கடற்கரையை அடைகிறது. நண்பன் சேதுவும், அவன் சகோதரர்களும் ஈமக்கிரியை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது கதை சொல்லியிடம் ஒரு பெரியவர் தன்னை இறந்தவரின் மூத்த சகோதரர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். என்னுடையஅக்காஎன்று சொல்வதில் வெளிப்படும் பாசமும், அன்பும் மூத்த சகோதரி என்று சொல்வதில் இல்லையே என்று அவரே தன்னைத் திருத்திக் கொள்கிறார். பேச்சின் இடையில் தான் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ் நாளைக் கழித்துவிட்டு தற்போதுநிழல்எனப்படும் முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பதாகச் சொல்கிறார். திருவாரிய முத்து என்ற அந்தப் பெரியவர் பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறார். ஈமச் சடங்கில் பயன்படுத்தப்பட்ட பித்தளைக் குடங்களைப் பார்த்ததும் பித்தளைக் குடங்களில் பெயர் வெட்டுகிற ஆசாரிகளின் இன்றைய பரிதாபநிலை குறித்துப் பேசுகிறார். தன்னுடன் அப்படிப்பட்ட ஆசாரி ஒருவர் தங்குவதையும் அவர் ஒரு நல்ல ஓவியரும்கூட என்கிறார். ஓவியம் வரைவதில் மிகவும் சிரமமானது யாளிகளை வரைவதுதான் என்று அந்த ஆசாரி கூறியதையும் குறிப்பிடுகிறார். யாளிகளை வரைந்து பழகிவிட்டால் ஒருவன் கைதேர்ந்த ஓவியன் ஆகிவிடுவான் என்பது அந்த ஓவியரின் கருத்து.  ஈமச் சடங்குகள் முடிந்ததும் எல்லோரும் கலைந்து செல்கிறார்கள்.முதியோர் இல்லம் வந்து உங்களையும், உங்களின் ஓவியர் நண்பரையும் பார்க்க வருகிறேன்என்று கூறி கதைசொல்லி விடை பெறுகிறார். நான்கு மாதங்கள் கழிந்தே அதற்கான நேரம் வர ஒரு மாலைப் பொழுதில் கதைசொல்லி நிழல்எனப்படும் அந்த முதியோர் இல்லம் வருகிறார். பெரியவர்பெரு மூச்சுகளின் பாலம்எனும் ஆங்கிலக் கவிதையை வாசித்துக் கொண்டிருக்கிறார். ”நான்கு மாதங்களுக்கு முன்பு என் சகோதரியின் மரணத்தின் போது சந்தித்தோம் இப்போது என்னுடன் நாலரை ஆண்டுகள் இந்த அறையில் உடனிருந்த நண்பன் குருமூர்த்தியின் மரணத்தின் போது சந்திக்கிறோம். இதுதான் பெரு மூச்சுகளின் பாலம் என்பதோஎன்று ஆச்சரியப்படுகிறார். ”நேற்று அதிகாலை என் நண்பனும், நீங்கள் பார்க்க விரும்பிய ஓவியனுமான குருமூர்த்தி மரணமடைந்தான். இன்று அவனுடைய உடைமைகளை எல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார்கள். என்னுடைய அறைக்கு வேறொருவர் எந்த நேரமும் வரலாம்என்று சொல்லி வருத்தப்பட்டார். பேசிக் கொண்டிருந்த போது இருள் சூழ்ந்துவிடுகிறது, அருகிலிருந்த டார்ச் லைட்டை கதைசொல்லியிடம் கொடுக்கிறார். எதிரில் இருக்கும் சுவற்றின் மீது டார்ச் லைட்டின் வெளிச்சம் பாய்ந்ததும் யாளி ஒன்றின் அழகிய ஓவியம் தெரிகிறது. யாளிகள் பெருமூச்சு விடுமா? தெரியவில்லை, என்று கதை முடிகிறது.            

மரணத்தில் தான் எத்தனை எத்தனை புதிர்கள்! எப்போது, எங்கு, என்று நடக்கும் என்பதறியோம். வண்ணதாசனின்அடங்குதல்கதையில் ஒரு மூதாட்டி தன்னுடைய மரணத்திற்குப் பின் தன்னுடைய கணவனின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார். ஏழை எளியவர்கள் வாழ்வைத் தேடி புலம் பெயர்ந்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது. மூதாட்டியின் மகனும் தன் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றே நினைக்கிறான். மூதாட்டி நோய்வாய்ப்படுகிறார். டாக்டரின் ஆலோசனையைக் கேட்கிறார்கள். மூதாட்டியின் உடல்நிலையைச் சோதித்த டாக்டர் பதினைந்து நாட்கள்தான் தாங்கும் என்கிறார். உயிருடன் இருக்கும் போது ஏதேனும் ஒரு வாடகைக் காரில் கூட்டிச் செல்வது எளியது; அதிகச் செலவும் ஆகாது; இறந்த பின் பூதவுடலை எடுத்துச் செல்ல அதிகம் செலவாகும் என்பதையெல்லாம் விவாதிக்கிறார்கள். மூதாட்டி உயிருடன் இருக்கும்போதே சொந்த ஊர் சென்றுவிடுவோம் என்று சரியான ஆலோசனை சொல்கிறார் மருமகள். ஆனால் மனைவியின் பேச்சைக் கேட்க கணவன் தயாரில்லை.  மூதாட்டி இறந்துவிடுகிறார். உள்ளூரில் அடக்கம் செய்வதற்கான செலவுக்கே திண்டாட்டம். ”முன்னப் பின்ன தெரியாத அசலூர்காரன் கொடுக்கிற கடன் பணத்தில்தானே காரியத்தை முடிக்கிறோம். அசலூரில் அடக்கம் பண்ணினால் என்ன”, என்று சொல்லி ஆறுதல் அடைகிறான் மகன்.

ஆற்றில் வெள்ளம் வரும் போது ஆற்றுப் பாலத்தில் நின்று பிரவாகம் எடுத்து ஓடும் வெள்ளத்தைப் பார்ப்பது பரவசமானது. வைகை, தாமிரபரணி இவற்றில் எல்லாம் நீர்ப் பெருக்கெடுத்து வரும்போது ஊரே திரண்டு வந்து ஆற்றுப் பாலத்தில் நின்று சுழித்துக்கொண்டு ஓடும் வெள்ளத்தை கண்டு மகிழ்வர். வண்ணதாசனின்வெள்ளம்கதையில் தாமிரபரணியில் அப்படியொரு வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. கதைசொல்லி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஆபிஸ் கிளம்புகிறார். மகள் தினகரியை கல்லூரியில் விட்டுவிட்டு ஆபிஸ் செல்ல வேண்டும். பாலத்தைக் கடக்கும் போது வெள்ளத்தைப் பார்க்க இருபுறமும் ஒரே கூட்டம். அப்பாவும், மகளும் சற்று நேரம் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். தினகரி சிறு குழந்தையாக இருந்தபோது இப்படியொரு வெள்ளம் வந்தது. தினகரிக்கு அந்த நாள் ஞாபகத்தில் இல்லை. வீட்டில் அடைந்து கிடக்கும் தன்னுடைய தாய் இக்காட்சியைக் காண வேண்டும் என்று தினகரி நினைக்கிறாள். “அப்பா! அம்மாவை கூட்டிக் கொண்டு வந்து வெள்ளத்தைக் காண்பியுங்கள்”, என்று தினகரி அப்பாவை கேட்டுக் கொள்கிறாள். அவருக்கும் ஆசைதான். குடும்பத்துடன் வந்து இதுபோன்ற வெள்ளக் காட்சிகளை கண்டு கழிக்கவும், குடும்பத்தோடு கடற்கரையில் நின்று கடலின் சீற்றத்தைப் பார்க்கவும், மனைவி மக்களுடன் மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லவும் ஆசைதான். ஆனால் அதெல்லாம் அவரைப் போன்ற மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் கனவுதானே. ஆபிஸ் சென்றதும் வேலையின் சுமையில் மூழ்கிவிடுகிறார். மாலையில் மனைவியைக் கூட்டிக் கொண்டு வெள்ளத்தைக் காட்டுவதற்கான வாய்ப்பே ஏற்படவில்லை. இரவு வீடு திரும்பும் போது நல்ல மழை. மின்சாரம் இல்லாமல் ஒரே இருட்டு. வீட்டுக்குள் கால் வைக்க இடமில்லை. ஹால் முழுவதும் வேற்று ஜனங்கள் கூட்டம். குழந்தைகள் எல்லாம் தூங்கிக்கொண்டிருக்க பெரியவர்கள் எழுந்து நின்று கும்பிடுகிறார்கள். அவர் மனைவி விளக்குகிறார். ”பாவம்! இந்த நெசவாளர்கள்! மூன்று நாட்களாகத் தொடர்ந்து பெய்யும் மழையில் வீடுகளை இழந்து நிற்கதி ஆகியுள்ளனர். ஒதுங்க இடமின்றி தவித்தவர்களுக்கு நான் தான் அடைக்கலம் கொடுத்துள்ளேன்”, என்கிறார். கருணை உள்ளம் பொங்கும் தன் மனைவியை நினைத்துப் பெருமிதமடைகிறார். இதைவிட பெரிய சந்தோஷம் இவளுக்கு வேறெங்கே கிடைக்கப் போகிறது என்று பூரிப்படைகிறார்.

               -------------------------------------------------------------------     

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...