மேலாண்மை பொன்னுச்சாமி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் கலை இலக்கியம் குறித்த அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தி வருகிறது. இந்த சங்கத்தைச் சார்ந்த அருணன், தமிழ்ச்செல்வன், கந்தர்வன், ஆதவன் தீட்சன்யா, வேல ராமமூர்த்தி, லெட்சுமணப் பெருமாள் போன்றவர்கள் தமிழ் இலக்கிய வெளியில் பெரும் பங்காற்றி வருகிறார்கள். இவர்களில் ஒருவரான மேலாண்மைப் பொன்னுச்சாமி புனைகதை இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் இருக்கும் மேலாண்மறை நாடு எனும் சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த பொன்னுச்சாமி நிறைய சிறுகதைகளையும், முற்றுகை, இனி, ஆகாயச் சிறகுகள் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார். இவரின் ’முற்றுகை’ நாவல் கல்கி இதழின் சிறந்த நாவலுக்கான பரிசை வென்றது. சாகித்ய அகாதமி விருது மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மாட்சிமை விருது என்று பல விருதுகளையும் பெற்றுள்ளார். த.மு.எ.க.சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்து அதை வழிநடத்திய பெருமையும் இவருக்குண்டு. ’செம்மலர்’ இலக்கிய இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து அதன் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியுள்ளார்.
தொழில் வளர்ச்சியும் போதிய மழையுமின்றி வானம் பார்த்த பூமியாக இருக்கின்ற விருதுநகர் மாவட்டம் வறட்சிக்கும், வறுமைக்கும் உட்பட்ட பகுதியாகவே காட்சியளிக்கிறது. இருப்பினும் இக்கரிசல் மண்ணின் மைந்தர்கள் வாழ்வின் மீதான நம்பிக்கையை இழக்காதவர்கள். மண்ணில் ஈரம் இல்லாவிட்டாலும் இங்கு வாழும் மக்களின் நெஞ்சம் முழுவதும் ஈரம் நிறைந்ததாகவே இருக்கிறது. கிராமங்கள் தோறும் நிலைபெற்றுள்ள சீலைக்காரியம்மன், மாரியம்மன், வெயிலுகந்தம்மன், காளியம்மன் போன்ற சிறு தெய்வங்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் ஒளியேற்றுவார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே இவர்களின் வாழ்வாதாரமாகும். வறுமையுடன் மல்லுக்கட்டி வாழும் இம்மக்களின் வாழ்வியல் சோகங்களை தன் படைப்புகளில் சொற்சித்திரமாகத் தீட்டியுள்ளார் மேலாண்மைப் பொன்னுச்சாமி.
’மானுடப் பிரவாகம்’ சிறுகதை உணர்ச்சிப் பிரவாகம் எடுத்து ஓடும் தனி மனித சோகத்தைக் காட்சிப்படுத்துகிறது. குடும்ப உறவுகளில் அவ்வப்போது ஏற்படும் உரசல்களும், கோபாதாபங்களும் தவிர்க்க முடியாத அவலங்களே. இந்த விரிசல்கள் விரிந்து ஜென்மப் பகையாகி விடுவதும் உண்டு, ஆனால் குடும்பத்தில் சற்றும் எதிர்பாராமல் நிகழும் ஒரு மரணம் பிரிந்தவர்களை ஒன்று சேர்த்துவிடுகிறது. இக்கதையில் சாமிநாதன் – ராசாத்தி எனும் பாசமிகு அண்ணன் தங்கை உறவில் திடீரென்று பகைமை குடிபுகுந்து விடுகிறது. சாமிநாதனும் அவன் தங்கச்சி புருஷன் மூக்கையாவும் ஒரு அற்ப விஷயத்திற்கு அடித்துக் கொள்கிறார்கள். இதனால் பெரும் பாதிப்புக்குள்ளான சாமிநாதன் தன் தங்கையையும் அவள் புருஷனையும் வெறுத்து ஒதுங்கி வாழ்கிறான். ஆனால் தங்கையின் ஒரே மகன் பாண்டி பகை அறியா இளங்கன்று. சாமிநாதனும் தன் மருமகன் பாண்டியுடன் அன்பு மழை பொழிந்து கொஞ்சிக் குழாவுவதை நிறுத்தவேயில்லை.
இடியென இறங்குகிறது ஏழுவயதுச் சிறுவன் பாண்டியின் மரணச் செய்தி. சாமிநாதன் தாங்க முடியாத சோகத்தில் நொறுங்கிப் போகிறான். தாய்மாமன் என்ற முறையில் பாண்டியனின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல கடமைப்பட்டவனே சாமிநாதன் தான். ஆனால் பழைய பகைமை குறுக்கே நிற்கிறது. ஊர்சனங்கள் எல்லாம் இழவைத் தட்டக் கூடாது என்று சாமிநாதனிடம் சொல்கிறார்கள். ஊர்ப் பெரியவரான சாமிநாதனின் மாமா, “பகையைப் பத்திரப்படுத்தக் கூடாதப்பா; நீ கட்டாயம் போய் தாய் மாமன் சடங்கு செய்ய வேண்டுமப்ப்பா” என்று சொல்லி அவனைக் கெஞ்சிக் கேட்கிறார். சாமிநாதன் மனைவியும் வலியுறுத்தியதும், சாமிநாதன் கோடித்துணி வாங்கிக்கொண்டு இழவு வீடு நோக்கிச் செல்கிறான். சாமிநாதனைக் கண்டதும் அவன் தங்கை “அண்ணாச்சீ! என் பிள்ளை கிடக்கிற கோலத்தைப் பார்த்தீகளா?” என்ற கதறலுடன் தலைவிரி கோலமாய் சாமிநாதன் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிறாள். இதுவரை இறுகிக் கிடந்த மூக்கையாவும் சாமிநாதனைக் கட்டிப் பிடித்து குலுங்கி குலுங்கி அழுது அவன் தோளில் முகம் புதைகிறான். இவர்களுக்குள் ஊற்றெடுத்து ஓடும் மானுடப் பிரவாகம் பழைய பகைமைக் கழிசடைகளை எல்லாம் அடித்துக் கொண்டு கரை புரண்டு ஓடிவிடுகிறது. இதுவே மானுட உறவின் விந்தை!
‘உயிர்க்காற்று’ என்ற சிறுகதை மனிதனுக்கும். இயற்கைக்குமான உறவைச் சொல்லிச் செல்கிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைபார்க்கும் பழனிச்சாமி தன் ஓட்டு வீட்டை இடித்துப் பெரிதாகக் கட்டத் திட்டமிடுகிறான். வீட்டு வாசலில் இருபதாண்டுகளாக ஓங்கி வளர்ந்துள்ள வேப்ப மரம் நிற்கிறது. பழனிச்சாமி சிறுவயதில் நட்டுவைத்த வேப்பங்கன்று இன்று கோபுரக் கூடாரம் போல் உயர்ந்து படர்ந்து பிரமாண்டமாக நிற்கிறது. அவன் தங்கைக்கும், மனைவி தேவானைக்கும் அது வெறும் மரமல்ல. அதுதான் அவர்களின் மாரியாத்தா. அவன் மனைவிக்குப் பிள்ளை வரம் கொடுத்தவள். தங்கைக்கு நல்ல கணவனைப் பெற்றுத் தந்தவள். அந்த வேப்ப மரம்தான் அவர்கள் குடும்பத்திற்கே உயிர்க்காற்று. ஆனால் புதிதாகக் கட்டவிருக்கும் வீட்டுப் பிளானின்படி வேப்பமரத்தை வெட்டி எடுக்க வேண்டும். மரத்தை வெட்டுவதற்கான ஏற்பாடுகளை பழனிச்சாமியின் அப்பா செய்துகொண்டிருக்கிறார். பழனிச்சாமி செய்வதறியாது திகைக்கிறான். மனைவி பிரசவத்திற்குப் போயிருக்கும் இந்நேரத்தில் மனைவியும், தங்கையும் வழிபட்ட வேப்பமரத்தை; மாரியாத்தாவை வெட்டுவதற்கு மனமின்றி மருகுகிறான். தூக்கமின்றித் தவிக்கிறான். மரம் வெட்டப்பட்டுக் கிடக்கும் அலங்கோலத்தைக் கனவில் கண்டு பதறுகிறான். பதறி எழுந்து அருகில் படுத்திருக்கும் தந்தையை எழுப்பி “அப்பா! வேப்ப மரத்தை வெட்டாமலேயே வீட்டைக் கட்டுவோம்” என்று தெள்ளத்தெளிவான உறுதியோடு சொல்கிறான் என்று கதை முத்தாய்ப்பாய் முடிகிறது.
--பெ.விஜயகுமார்.
செல்: 9500740687
---------------------------------------
Comments
Post a Comment