Skip to main content

கு.அழகிரிசாமி - கதைகளில் மண்வாசனையை மணக்கவைத்தவர்

 

 

 

கு.அழகிரிசாமி- படைப்பிலக்கியத்தில் மண்வாசனை மணக்கவைத்தவர்.

தமிழ்நாட்டின் வரைபடத்தில் கோவில்பட்டி நகருக்கு  அருகில் உள்ள இடைச்செவல் கிராமம் நட்சத்திர அடையாளமிட்டுக் குறிப்பிடப்பட வேண்டிய ஊராகும். ஆம். இடைச்செவல் கிராமம் கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி என்று தமிழகத்திற்கு இரண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களைத் தந்துள்ளது. இவர்கள் இருவரும் தமிழ்ப்புனைகதை இலக்கியத்திற்கு மாபெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். சிறுவயதிலேயே ஓவியம், இசை, பாடல் இயற்றுவது போன்ற கலைகளில் அழகிரிசாமி கைதேர்ந்து விளங்கினார், சற்குரு தியாகராஜரின் கீர்த்தனைகளில் அளவற்ற பிரியம் கொண்டிருந்தார். தியாகராஜர் கீர்த்தனைகளை நாள்தோறும் முணுமுணுத்தபடியே இருப்பார். அழகிரிசாமியின்திரிவேணிசிறுகதை திருவையாறு தியாகையருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும்.

அழகிரிசாமி சிறிது காலம் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகவும், சார்பதிவு அலுவலகத்தில் எழுத்தராகவும் பணியாற்றினார். இப்பணிகளிலிருந்து விலகி சென்னையில்ஆனந்த போதினிஇதழின் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். சென்னையில் பட்டினிகிடந்தாவது படைப்பாளியாக வாழ்வது என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்தார். 1952இல்தமிழ்நேசன்பத்திரிக்கையின் ஆசிரியராகப் பொறுப்பேற்று மலேசியா சென்றார். ஐந்தாண்டு காலம் மலேசியாவில் வாழ்ந்து மலேசிய தமிழ்ச்சூழல் மேம்பட உதவினார். கு..ராவும், புதுமைப்பித்தனும் மணிக்கொடி இதழ் எழுத்தாளர்கள் என்றால் வை.கோவிந்தன் வெளிக்கொணர்ந்தசக்திஇதழ் எழுத்தாளராக அழகிரிசாமி திகழ்ந்தார். புதுமைப்பித்தன், கு..ரா போன்று இவரும் (47 வயதில்) அற்ப ஆயுளில் மறைந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்றெழுதி முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தார். 1970இல் சாகித்திய அகாதமி விருது பெற்ற அழகிரிசாமியின் பல கதைகள் பிரசுரிக்கப்படாமலே போனது தமிழ்ச் சமூகத்தின் துரதிர்ஷ்டம் ஆகும்.

 

ரெயில் பயணம் என்றென்றும் இன்பம் பயக்கக்கூடிய அனுபவமாகும். அழகிரிசாமியின்குமாரபுரம் ஸ்டேஷன்ஒரு உணர்ச்சிப் பூர்வமான ரெயில் பயண அனுபவத்தைக் கூறிடும் கதை. கோவில்பட்டி- திருநெல்வேலி இடையில் இருக்கும் மிகச்சிறு ரெயில் நிலையம் குமாரபுரம். அதன் அரை மைல் சுற்றளவுக்கு எந்த ஊரும் கிடையாது. குமாரபுரம் ஸ்டேஷனின் ரம்மியமான சூழலைச் சொற்சித்திரமாகத் தீட்டியுள்ளார் அழகிரிசாமி. குமாரபுரம் ஸ்டேஷன் மாஸ்டரின் பால்ய நண்பரான சுப்புராம ஐயரின் வருகையே கதைக்கான வித்தாகும். சுப்புராம ஐயர் மூன்று நாள் நண்பரின் விருந்தோம்பலில் மகிழ்ந்திருந்துவிட்டு கோவில்பட்டி திரும்புகிறார். குமாரபுரத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் ஒரு பெரியவரின் துணையுடன் அதே பெட்டியில் ஏறுகிறார்கள். நெல்லையிலிருந்து மதுரை போகும் ஒரு தம்பதியினரும் அந்தப் பெட்டியிலேயே பயணிக்கிறார்கள். வெறும் இருபது நிமிட ரெயில் பயணம் இவர்களிடையே ஏற்படுத்தும் அன்னியோன்னியத்தை அழகாகச் சித்தரிக்கிறார் அழகிரிசாமி. சிறுவர்கள் தங்கள் ஊரில் ஆறாவது வகுப்புவரை படித்துவிட்டு கோவில்பட்டி நகரில் தங்களின் படிப்பைத் தொடரும் பொருட்டு அதற்கான பதற்றத்துடன் புறப்படுகிறார்கள். முதல் ரெயில் பயணம் என்பதால் மகிழ்ச்சியிலும் திளைக்கிறார்கள்.

நெல்லையிலிருந்து வரும் தம்பதியினர் தாங்கள் கொண்டுவந்த பலகாரங்களை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கின்றனர். நெல்லை ஜங்ஷனில் இருக்கும் பங்கஜ விலாஸ் ஹோட்டல் சொந்தக்கராரன அவர் தனக்குப் பிள்ளைகள் இல்லாவிட்டாலும், பிறர் குழந்தைகளுக்கு உதவுவதை கடமையாகப் பாவிக்கிறார். அவரின் சுவாரசியமான பேச்சை அனைவரும் கேட்டு மகிழ்கின்றனர். ரெயில் கோவில்பட்டி வந்து சேருகிறது. சிறுவர்களைக் கூட்டிச்செல்ல அவர்கள் ஊரைச் சேர்ந்த ஸ்டேஷன் போர்ட்டர் ஒருவர் தயாராக இருக்கிறார். கருணையுள்ளம் கொண்ட ஹோட்டல் முதலாளி சிறுவர்கள் அனைவரையும் தன் பிள்ளைகள் போல் போற்றிப் பராமரிக்கும் பெரியவர், சிறுவர்களை மேற்படிப்புக்குத் தயார் செய்த அவர்கள் பள்ளி ஆசிரியர், சிறுவர்களை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று உதவிடும் போர்ட்டர் என்று இத்தனை நல்ல உள்ளங்களின் பெருந்தன்மைகளைப் பற்றி எண்ணியவாறே சுப்புராம ஐயர் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்படுகிறார். பள்ளிக்குச் சென்றதும் சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்கள் ரெயிலில் சந்தித்த ஐயர்தான் அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பதறிந்து மகிழ்ச்சி அடைகிறார்கள். சிறுவர்கள் அனைவரும் பள்ளியில் சேர்வதற்கான தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். தலைமை ஆசிரியர் சுப்புராம ஐயர் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்புகிறார். குமாரபுரம் ஸ்டேஷன் தனக்கு நல்ல பாடங்களைக் கற்றுக் கொடுத்த பள்ளிக்கூடன் என்றெண்ணி நெகிழ்ச்சியடைகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நேர்ந்த தாது வருடப் பஞ்சத்தின் கொடுந்துயரத்தை அழகிரிசாமியின் ’திரிபுரம்’ சிறுகதை சித்தரிக்கிறது. ஆந்திராவிலிருந்து நரசம்மாவும், அவள் மகள் வெங்கட்டம்மாவும் சென்னை மாநகருக்கு வருகிறார்கள். சென்னையில் தோட்டி வேலை பார்க்க மனம் ஒப்பாமல் மேலும் தெற்கே பயணித்து சாத்தூர் வந்தடைகிறார்கள். பசியில் மயங்கி கிடக்கும் அவர்களுக்கு ஹோட்டல் தொழிலாளர்கள் சாப்பாடு போடுகிறார்கள். அதற்கு விலையாக வெங்கட்டம்மாவின் கற்பு பறிபோகிறது. ”வெங்கட்டம்மா புத்தி பேதலித்து சிரிக்கிறாள். மனிதன் கட்டிய ஒழுக்கத்தை நோக்கிச் சிரிக்கிறாள். நாகரிகத்தையும் அநாகரிகத்தையும் பார்த்துச் சிரிக்கிறாள். சிவன் சிரிப்பில் திரிபுரம் எரிந்தது. இவள் சிரிப்பு என்ன செய்யப் போகிறதோ? அந்தக் காலத்து புத்திமான்கள் ஏழை அழுத கண்ணீர் வாளுக்கு ஒப்பானது என்றார்கள். ஆனால் ஏழை சிரித்த சிரிப்பைப் பற்றி பிரஸ்தாபிக்கவில்லையே” என்று கதையை முடிக்கிறார் அழகிரிசாமி.

அழகிரிசாமியின் கதைகள் அனைத்தும் மண்வாசமிக்கவை. கரிசல்காட்டில் வாழும் ஏழை எளிய மக்களின் அன்பு பொங்கிடும் வாழ்வினை எழுத்தோவியமாக வடிக்கிறார். கவித்துமான அவரின் உரைநடை கதைகளுக்கு மெருகூட்டுவதாய் அமைகிறது. ஆழ்ந்த உள்ளடக்கத்தையும், அழகிய வடிவத்தையும் கொண்ட அழகிரிசாமியின் கதைகள் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நமக்கு புதுப்புது அர்த்தங்களை வழங்குகின்றன.

                                  -பெ.விஜயகுமார்.

                  ------------------------------------------------------------------  

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...