கு.ப.ராஜகோபாலன்
கு.ப.ரா என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கு.ப.ராஜகோபாலன் கும்பகோணத்தில் பிறந்தார். ந.பிச்சமூர்த்தியும், கு.ப.ராவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கும்பகோணம் இரட்டையர்கள் என்றே அழைக்கப்பட்டனர். கு.ப.ரா. தன்னுடைய முழுநேர உழைப்பையும் இலக்கியத்திற்காகவே செலவழித்தார். ஆனால் இலக்கியம் அவருக்கு வறுமையையே பரிசாக அளித்தது. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி கால எழுத்தாளர்களில் ஒருவர் கு.ப.ராஜகோபாலன். நாற்பத்திரெண்டே ஆண்டுகள் வாழ்ந்து, அதில் பத்தாண்டுகள் மட்டுமே தீவிர எழுத்துப் பணியில் ஈடுபட்ட கு.ப.ரா. புனைகதை இலக்கியத்தில் தனியொரு இடத்தைப் பிடித்துள்ளார். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை என்று அனைத்து இலக்கிய வகைமைகளிலும் தடம் பதித்துச் சென்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், வங்காளம் ஆகிய இலக்கியங்களில் அவர் கொண்டிருந்த புலமை அவரது அறிவை விசாலப்படுத்தியிருந்தது.
சிறுகதைகளில் ஆண்-பெண் உறவின் நுட்பத்தை கு.ப.ரா. அளவிற்கு தமிழில் வேறு எந்த எழுத்தாளரும் எழுதிடவில்லை. குடும்ப வாழ்வின் நெருக்கடிகளையும், பெண்களின் அவல வாழ்வினையும் தமிழ்ச் சிறுகதைகளில் ஆழமாகவும், கூர்மையாகவும் பதிவு செய்தார். ஆங்கிலம் மற்றும் வங்க மொழிகளின் அரிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கு.ப.ராவின் ‘கண்ணன் என் கவி” எனும் நூல் பாரதியார் பற்றிய முதல் திறனாய்வு நூல் என்று போற்றப்படுகிறது. தாகூர், காந்தி, ஜவஹர்லால் நேரு, எச்.ஜி.வெல்ஸ், பெர்னாட் ஷா, அரவிந்தர் ஆகிய அறுவர் பற்றி இவர் எழுதியுள்ள கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தாகும்.
1930களில் சிக்மண்ட் ஃப்ராய்டு உளவியல் துறையில் கண்டறிந்த உண்மைகள் இலக்கியம் உட்பட பல்வேறு துறைகளிலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தின. அதன் தாக்கத்தை கு.ப.ராவின் எழுத்துக்களிலும் காண்கிறோம். ஆண்-பெண் உறவின் நுட்பத்தை உளவியல் வழிநின்று கு.ப.ரா விளக்கி உள்ளார். கணவன்–மனைவி உறவில் ஏற்படும் சலனங்கள், சஞ்சலங்கள், சபலங்கள் எவ்வாறு தாம்பத்திய வாழ்வில் பாதிக்கின்றன என்பதை தன்னுடைய கதைகளில் நேர்மையுடன் காட்சிப்படுத்துகிறார். தாம்பத்திய வாழ்வின் ரகசியங்களே கதைக் களன்களாக அமைந்திருந்தாலும் விரசங்கள் ஏதுமின்றி கு.ப.ராவின் கதைகள் நேர்த்தியுடன் சொல்லப்பட்டுள்ளன.
கு.ப.ராவின் ’நூர் உன்னிசா’ சிறுகதை ஓர் அழகான காதல் ஓவியம் ஆகும். மானசீகமான இக்காதலை தன்னிலை மொழியில் ஓர் இளைஞன் சொல்லிச் செல்கிறான். நூருன்னிசாவின் சகோதரன் குலாம் காதரும், அவனும் வகுப்புத் தோழர்கள்; பால்ய சிநேகிதர்கள். குலாம் காதரின் தந்தை மிகப் பெரிய செல்வந்தராக இருந்தபோதிலும், நண்பர்கள் இருவரும் பேதங்களின்றி அன்புடன் கூடி விளையாடி மகிழ்ந்தனர். இவர்களோடு பேரழகும், அன்பும் ஒன்று கூடிப் பிறந்த தேவதை போன்ற குலாமின் தங்கை நூருன்னிசாவும் விளையாட்டில் கலந்து கொள்வாள். நண்பர்கள் இருவரும் பள்ளிப் படிப்புக்குப் பின் வெவ்வேறு வழிகளில் பிர்ந்து சென்றுவிடுகிறார்கள்.
குலாம் உயர்ந்த அதிகாரியாகி சென்னையில் தங்கிவிடுகிறான். கதை சொல்லியான அவன் நண்பன் சுதந்திரப் போராட்ட வீரனாகி சிறை செல்லும் பாக்கியத்தைப் பெற்று தியாகி ஆகிறான். திடீரென்று நண்பன் குலாமிடமிருந்து திருமணப் பத்திரிக்கையும், அதனுடன் இணைந்த கடிதமும் வருகிறது. தன்னுடைய திருமணத்திற்குக் கட்டாயம் வரவேண்டும் என்று கடிதத்தில் அன்புடன் வேண்டுகிறான். தன் தங்கை நூருன்னிசா பத்திரிக்கையில் படித்து நண்பன் திருச்சியில் பழைய விலாசத்திலேயே தொடர்ந்து வாழ்வைத் தெரிந்து கொண்டதாகவும் எழுதுகிறான். கடிதத்தைக் கண்டதும் நுருன்னிசாவின் அழகிய பிம்பம் மின்னல்போல் கண்களில் பளிச்சிட திருமணத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறான். குலாமின் பெற்றோர் அவனை அன்புடன் உபசரித்து அவன் தங்குவதற்கு அவர்கள் வீட்டிலேயே ஓர் அறையை ஒதுக்குகின்றனர். அன்றிரவு முழுவதும் நூருன்னிசாவின் நினைவில் தூக்கமின்றி படுத்திருக்கிறான். நூருன்னிசா தன்னைக் காண வருவாள் என்று அவனுடைய உள்மனம் சொல்கிறது.
அவன் எதிர்பார்த்ததுபோல் ஜன்னலுக்கு வெளியே வெண்ணிலவினும் அழகிய நூருன்னிசாவைக் கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறான். பூரணச் சந்திரனை ஒத்த அந்த அழகுக் கன்னி ஒரு கடிதத்தைக் கையில் கொடுத்து அதை ஊரில் போய் படிக்குமாறு வேண்டுகிறாள். பதட்டத்தில் அவள் முகம் வியர்க்கிறது. அங்கிருந்து உடனே ஓடிட முயலும் அவள் கையைப் பற்றி இழுக்கிறான். இருவரும் தங்களை மறந்து சில நொடிகள் நிற்கின்றனர். அடுத்த நொடியில் அவள் கைகளை விடுவித்துக்கொண்டு ஓடிவிடுகிறாள்.
இந்த இன்ப அதிர்ச்சியுடன் வீடு திரும்பியதும் அவள் கடிதத்தை ஆவலுடன் பிரித்துப் படிக்கிறான். “நான் என்றென்றும் உன் நினைவாகவே வாழ்ந்துகொண்டிக்கிறேன். நம்முடைய திருமணம் சாத்தியமில்லை. எனவே நாம் இருவரும் நினைவுகளில் ஒன்றாகவே வாழ்ந்திட வேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளை நீ ஏற்பாய் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது”. என்று எழுதி கடிதத்தை முடித்துள்ளாள். கடிதத்தைப் படித்து முடித்ததும், அவன் கண் முன் காட்சியளித்த அவளின் மாய உருவம் அவனிடமிருந்து வாக்கைப் பெறுவதுபோல் இருந்தது. “என் மன மோகினியின் கட்டளைப்படி நானும் அவளின் நினைவிலேயே என் காலத்தைக் கழித்திருக்கிறேன்” என்று அமரத்துவமான தன் காதல் கதையைச் சொல்லி முடிக்கிறான் இளைஞன்.
-பெ.விஜயகுமார்.
செல்: 9500740687
----------------------------------------------------------------------------
Comments
Post a Comment