Skip to main content

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - ஓர் அறிமுகம்

 

 

 

புதுமையான புரட்சிகரமான எழுத்தாளர் புதுமைப்பித்தன்

தாமிரபரணி ஆற்றங்கரையில் நடைபயின்ற பல இலக்கியச் செம்மல்களுள் புதுமைப்பித்தனும் ஒருவர். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாச்சலம். தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட புனைப்பெயருக்கு ஏற்ப தமிழ் எழுத்துலகில் புதுமையான புரட்சிகரமான எழுத்தாளராகத் திகழ்ந்தார். திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் படித்து பி.. பட்டம் பெற்ற பின் வாழ்வைத் தேடி சென்னை சென்றார். எழுத்தாளராக வேண்டும் என்ற புதுமைப்பித்தனின் ஆசையை மணிக்கொடிஇதழ் நிறைவு செய்தது. இருப்பினும் அவரின் பணத்தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. 1930களில் பாரதியாரின் நண்பர் .ரா. நடத்தியமணிக்கொடிஇதழில் புதுமைப்பித்தன் தன்னுடைய பெரும்பான்மைக் கதைகளை எழுதினார். உலக இலக்கியத்திலும், பழந்தமிழ் இலக்கியத்திலும் புதுமைப்பித்தனுக்கு நல்ல பயிற்சி இருந்தது. கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என்று பல இலக்கிய வகைமைகளிலும் புதுமைப்பித்தன் வெற்றி பெற்றார். உலகத்துச் சிறுகதைகள் பலவற்றையும், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் சிலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

சிறுகதைகளுக்கான இலக்கணங்களை எல்லாம் மீறி புதிய உத்திகளைக் கையாண்டார். கேலியும், கிண்டலும் கலந்த நடை அவரின் தனிச்சிறப்பு. கம்பனின் கவித்துவம், பாரதியின் கவிதை வளம், பாரதிதாசனின் கவிதைச் செறிவு குறித்தெல்லாம் கட்டுரைகள் எழுதியுள்ளார். மகாபாரத, ராமாயணக் கதாபாத்திரங்கள் பற்றியும் கட்டுரைகள் வடித்துள்ளார்.  எழுத்தையே தன் வாழ்நாள் பணியாக ஏற்றுக்கொண்ட புதுமைப்பித்தன் வாழ்நாள் முழுவதும் வறுமையிலேயே வாடி மறைந்தார்.

 

பொதுவாக எழுத்தாளர்களை, அறிஞர்களை, கலைஞர்களை தமிழர்கள் கொண்டாடுவதில்லை. பாரதியார், புதுமைப்பித்தன், கு..ராஜகோபாலன், போன்ற எழுத்தாளர்கள் எல்லாம் வறுமையில் உழன்றவர்களே. இருப்பினும் எழுத்திலும், வாழ்விலும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் வாழ்ந்துகாட்டிய ஆளுமைகள். புதுமைப்பித்தன் தமிழ்ச்சிறுகதையை அதன் உச்சத்திற்குக் கொண்டு சென்றவர். உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களான அண்டன் செக்காவ், .ஹென்றி, மாப்பசான், டி.ஹெச்.லாரன்ஸ் ஆகியோரோடு ஒப்பிடும் அளவிற்கு சிறுகதைகள் படைத்தவர்.

கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்புதுமைப்பித்தனின் முக்கியமான கதைகளில் ஒன்று. கடவுளையே ஒரு கதாபாத்திரமாகக் கொண்ட ஓர் அரிய கதை. கந்தசாமிப்பிள்ளை சித்த வைத்தியம் செய்தும், ’சித்த வைத்திய தீபிகைஎன்றொரு பத்திரிக்கை நடத்தியும் ஜீவிதம் பண்ணுகிறார். ஒரு மாலைப் பொழுதில், சென்னை வீதியில் இவர்கள் இருவரும் சந்தித்து சிநேகிதம் ஆகிறார்கள். இவர்களுக்கிடையில் நடைபெறும் சுவாரசியமான உரையாடலே கதையாக வெளிப்படுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை உரையாடல் உணர்த்துகிறது. ’தாகமாக இருக்கிறது என்று கடவுள் சொன்னதும், இருவரும் ஹோட்டலில் காபி குடிக்கப் போகிறார்கள். காபிக்கான பில்லை கந்தசாமிப்பிள்ளை நைசாக கடவுளிடம் நகர்த்தி விடுகிறார். மூன்று அணா காசைக் கொடுப்பதற்கு கடவுள் நூறு ரூபாய் நோட்டை நீட்டுகிறார். ஹோட்டல் முதலாளியும் வாங்கிக்கொண்டு மீதிப் பணத்தைக் கொடுக்கிறார். அதில் செல்லாத பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி. வெளியே வந்ததும் கடவுள் சிரித்தபடியே அந்த செல்லாத பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கிழித்துப்போடுகிறார். திருவல்லிக்கேணிக்குச் செல்லும் வழியைக் கேட்கிறார். கந்தசாமிப்பிள்ளை வீடும் திருவல்லிக்கேணி என்பதால் இருவரும் ஒரு ரிக்ஷாவில் ஏறிக்கொள்கிறார்கள். ரிக்ஷா வாடகையையும் கடவுளின் தலையில் கட்டிவிடலாம் என்று நிம்மதி அடைகிறார் கந்தசாமிப்பிள்ளை. பயணத்தின் போது கடவுள் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பூவுலகில் தன்னுடைய சிருஷ்டிகள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக வந்திருப்பதாக கடவுள் கூறுகிறார்.  கந்தசாமிப்பிள்ளையும் கடவுளை தன்னுடைய அதிதியாக ஏற்று வீட்டுக்குக் கூட்டிச்செல்கிறார். ஆனால் கடவுள் தன்னுடன் இருக்கும் வரை மனுசத் தன்மைகளுடனேயே நடந்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். கடவுளும் அதை ஏற்றுக்கொள்கிறார். வீட்டில் கந்தசாமிப்பிள்ளையின் குழந்தை கடவுளிடம் அன்புடன் பழகுகிறது. வட்டாட்டத்தில் குழந்தையிடம் கடவுள் தோற்றுவிடுகிறார். ஆட்டத்தின் உத்திகள் கடவுளுக்குத் தெரியவில்லை என்று குழந்தை கைகொட்டிச் சிரிக்கிறது. பூலோகத்தில் ஏதேனும் தொழில் செய்திட வேண்டும் என்று கடவுள் விழைகிறார். தனக்குக் கூத்து நன்றாக வரும் என்றும், தேவைப்பட்டால் பார்வதி தேவியையும் வரவழைத்து மயான ருத்திரானம் ஆடலாம் என்கிறார். அதிலும் கடவுளுக்குத் தோல்விதான். சென்னை மாநகரின் கலா மண்டலியக் கட்டுப்பாடுகள் அவருக்கு ஒத்துவரவில்லை. இறுதியில் விடைபெறும்போது உங்களிடம் எல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; ஆனால் உடன் இருந்து வாழ முடியாது என்கிறார் கடவுள். மேஜையின் மேல்சித்த தீபிகைபத்திரிக்கைக்கான சந்தா ரூபாய் இருபத்தைந்து நோட்டாகக் கிடப்பதைக் கண்டு கந்தசாமிப்பிள்ளைக்கு ஒரே மகிழ்ச்சி.

செல்லம்மாள்கதையில் வரும் பிரம்மநாயகம்-செல்லம்மாள் தம்பதிகளின் அன்பும், அரவணைப்பும் கவித்துவமானது. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வாழ்வைத் தேடி சென்னை வந்து அல்லல்படும் எண்ணற்ற குடும்பங்களில் இவர்களதும் ஒன்று. ஜவுளிக்கடை ஒன்றில் சொற்பச் சம்பளத்தில் பிரம்மநாயகம் வேலை பார்க்கிறார். வறுமையும், நோயும் செல்லம்மாளை வாட்டி வதைக்கிறது. நாளெல்லாம் நோயால் அவதிப்படும் செல்லம்மாளின் ஆசை ஒரு முறையேனும் நெல்லைக்குச் சென்று சொந்த பந்தங்களைப் பார்த்துவர வேண்டும் என்பது. இறுதிவரை செல்லம்மாளின் ஆசை நிறைவேறாமலேயே போய்விடுகிறது. வரவிருக்கும் தீபாவளிக்கு தன் அன்பு மனைவிக்கு சேலை வாங்கி வருகிறார் பிரம்மநாயகம். ஆனால் அன்றிரவே செல்லம்மாள் நோய் முற்றி மரணத்தைத் தழுவுகிறார். அதுவே அவரின் இறுதிப் பயணத்திற்கான சேலையுமாகிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது எவ்வளவு கொடுமையான உண்மை என்பதை புதுமைப்பித்தன் இக்கதையில் சொற்சித்திரமாக வடிக்கிறார். பிரம்மநாயகம்-செல்லம்மாள் தம்பதிகளுக்கு இடையே நிலவிடும் அன்னியோன்னியம் வறுமையின் கொடுமையைத் தணிக்கிறது. மனைவிக்கு வேண்டிய சிகிச்சை மற்றும் பிற வசதிகளைக் கொடுக்க முடியாவிட்டாலும் தன் மனைவியின் நோயை அன்பின் வழிக் குணப்படுத்த முயற்சிக்கும் பிரம்மநாயகம் புதுமைப்பித்தனின் ஒரு காத்திரமான படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.         

n  பெ.விஜயகுமார். (செல்: 9500740687)

--------------------------------------------------

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...