Skip to main content

வண்ணநிலவன் சிறுகதைகள் - ஓர் அறிமுகம்

 

வண்ணநிலவன்

இலக்கியம் என்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பாகும். தாமிரபரணி பாயும் நெல்லைச் சீமையில் வாழும் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை வண்ணநிலவன் தன் புனைவு இலக்கியங்களில் அழகுறப் பதிவு செய்கிறார். அதிலும் குறிப்பாக பெண்களின் மனக் குமுறல்கள், வேதனைகள், சோதனைகள் எனச் சொல்லித்தீராத சோகங்களைச் சொல்லிச் செல்கிறார். நல்லதொரு கதை சொல்லி என்பதாலும், எளிமையான வார்த்தைகளில்,  யதார்த்த மொழியில் எழுதுவதாலும் வண்ணநிலவன் வாசகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார். நெல்லையில் பிறந்த வண்ணநிலவனின் இயற்பெயர் ராமச்சந்திரன். கம்பா நதி, கடல்புரத்தில், ரெயினீஸ் ஐயர் தெரு, உள்ளும் புறமும்,  ஆகிய நாவல்களையும் நிறைய சிறுகதைகளையும் படைத்துள்ளார். ’காலம்’, ’மெய்ப்பொருள்’, எனும் இரு கவிதைத் தொகுப்புகளையும் எழுதி இருக்கிறார், கடல்புரத்தில் நாவல் இலக்கியச் சிந்தனை விருதையும்தர்மம்சிறுகதைத் தொகுப்பு தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளன. 1978 ஆம் ஆண்டு வெளியான இயக்குர் ருத்ரையாவின்அவள் அப்படித்தான்திரைப்படம் தமிழ் சினிமாவின் புதிய அலை என்றழைக்கப்பட்டது. இப்படத்திற்கான வசனத்தை எழுதியது வண்ணநிலவனே. வண்ணநிலவனின்  கதையின் மொழி அற்புதமானது. நெல்லை வட்டார மொழி என்றாலும், கதையின் ஓட்டத்தில் அது வாசகர்களுக்கு உகந்த மொழியாகிவிடுகிறது.

மனித வாழ்வின் மிகப் பெருந்துயர் வறுமையின் காரணமாய் புலம்பெயர்வதாகும். போரின் காரணமாக சிரியா, இராக், நாட்டு மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான வழிகளில் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்தனர். இத்தகு ஆபத்தான பயணத்தின் போது கடலில் விழுந்து இறந்த அய்லான் என்ற சின்னஞ்சிறுவனின் உடல் கரை ஒதுங்கிய காட்சியைப் பத்திரிகைகள் வெளியிட்டதைப் பார்த்து மனங்கலங்கினோம். வண்ணநிலவனின்எஸ்தர்சிறுகதையில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் புலம்பெயரும் காட்சியைக் கண்டு கண்கலங்குகிறோம். எஸ்தர் சித்தியின் அன்பினால் பராமரிக்கப்படும் இந்தக் கூட்டுக் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஒரே கூரையின் கீழ் தங்கள் மனைவி மக்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திடும் சகோதரர்கள் அகஸ்டின், டேவிட் என்னசெய்வதென்று அறியாது தவிக்கின்றனர். நீண்ட பகலின் துயரத்தை வெயில் அதிகப்படுத்துகிறது. இருட்டு முன்பு எப்போதுமில்லாத பயத்தைக் கொடுக்கிறது. எஸ்தர் சித்திக்கு இருட்டின் முணுமுணுப்பு கேட்கிறது. அவர்கள் ஊரைவிட்டு போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிவிக்கிறது. இறுதியில் எஸ்தர் சித்தி முடிவெடுக்கிறார். சகோதரர்களின் மனைவிமார்கள் இருவரும் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அவரவர் தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவது, படுத்த படுக்கையில் கூரையை வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்கும் பாட்டியை ஊரிலேயே விட்டுவிட்டுச் செல்வது, பாட்டிக்குத் துணையாக இதுவரையில் அவர்களை அண்டிப் பிழைத்து வந்த ஈசாக்கை விட்டுச் செல்வது. எஸ்தர் சித்தி, அகஸ்டின், டேவிட் ஆகிய மூவரும் மதுரைக்குச் சென்று வேலை தேடிப் பிழைப்பது. இத்தகு கடுமையான முடிவுகளை எடுத்துவிட்டு அனைவரும் படுக்கச் செல்கின்றனர். எஸ்தர் சித்தி அன்றிரவு பாட்டியின் அருகில் படுத்துக்கொள்கிறார். காலையில் பாட்டியின் உயிர் பிரிகிறது. அவரை அடக்கம் செய்துவிட்டு அனைவரும் ஊரைவிட்டு வெளியேறுகின்றனர் என்று கதை முடிகிறது. பாட்டி எப்படி இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது.

வேலையின்மை என்பது இளைஞர்களின் மனதை அரிக்கும் துயர். உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் வேதனைப்படுகின்றனர். ‘கரையும் உருவங்கள்கதையில் சங்கரன் என்ற இளைஞனின் மனத்துயரத்தை வண்ணநிலவன் சித்தரிக்கிறார். சங்கரனுக்கு ஆதரவாக திருமணம் ஆகாமல் வீட்டிலிருக்கும் அவனின் அக்காள் நிற்கிறாள். பகலெல்லாம் வேலை தேடி அலைந்துவிட்டு பசியும், சோர்வும் வாட்டிட இரவு வெகுநேரத்திற்குப்பின் வீட்டுக்கு வருகிறான். கதவைத் தட்டி வீட்டில் உள்ளவர்களை எழுப்ப மனமின்றி வாசலிலேயே நிற்கிறான். தன் தம்பியின் வருகைக்காக காத்திருக்கும் அக்காவின் உள்ளுணர்வு அவளைக் கதவைத் திறக்கச்செய்கிறது. கதவு திறந்ததும் அக்காவின் முகம் பார்த்து பேசக்கூடத் தயங்கி அப்படியே படுக்கச் செல்கிறான். அவனை அடுப்படிக்கு இழுத்துச் சென்று சாப்பாடு போடுகிறாள். உண்ண மறுக்கும் அவனுக்கு சோற்றைக் கவளமாக்கி கையில் கொடுக்கிறாள். சாப்பிட்டபின் அவனின் மறுநாள் திட்டத்தைக் கேட்கிறாள். அவன் வேலை நிமித்தம் தாளையூத்தில் இருக்கும் மாமாவைப் பார்க்கப் போவதாகச் சொல்கிறான். தாளையூத்து போவதற்கு அவனிடம் காசு இருக்காது என்பதை அறிந்து பீரோவைத் திறந்து தன் சேமிப்பிலிருந்து ஐந்து ரூபாய் நோட்டை அவனி சட்டைப் பையில் வைக்கிறாள். வேலையின்றி இருப்பது சங்கரை மிகவும் பாதித்துள்ளது எனபதை அவள் கூர்ந்து கவனித்து வருகிறாள். சங்கர் சாப்பிடாமலும், குளிக்காமலும், துவைக்காமலும் எதிலும் நாட்டம் இல்லாமலும் இருப்பது குறித்து வருந்துகிறாள். “வேலை இல்லாமே இருக்கதுக்காக இவ்வளவு ரோஷத்தோட இருக்கணுமாடா? அக்காவைப் பாரு; வீட்டுல உட்கார்ந்து பத்து வருஷம் முடியப்போகுது. எந்த சௌகரியத்தையாவது குறைச்சிருக்கேனா? ஆனாலும் நீ ரோஷக்காரப் பையடாஎன்று சொல்லி முடித்ததும் விசும்பி அழுகிறாள். சங்கர் சட்டென்று முகத்தை அவள் மடியில் குப்புற வைத்துக்கொண்டு படுக்கிறான். அவள் அவனுடைய விம்மித் தாழும் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று கதை முடிகிறது.

ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை வண்ணநிலவன் தன் கதைகளில் தொட்டுச் செல்கிறார். ‘மல்லிகா’ கதையின் நாயகிக்கு அவள் தாய்மாமனின் சில்மிஷங்களைச் சகித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்; ‘சாரதா’ கதையில் வெகுளிப் பெண் சாரதா போலீசில் சிக்கிக் கொள்கிறாள். போலீஸ் அவளைத் தவறாக விபச்சாரக் கேசில் கைது செய்து கோர்ட்டில் நிறுத்துகிறது. பிடிபட்ட விபச்சாரப் பெண்களில் ஒருத்தியின் கருணையினால் தப்பித்து வீடு வருகிறாள். ’மெஹ்ருன்னிஸா’ கதையில் அப்பாவிப் பெண் மெஹ்ருன்னிஸா தன்னால் பிள்ளை பெற முடியவில்லை என்பதால் தன்னுடைய கணவனுக்கு தானே முன்னின்று மற்றொரு திருமணத்தை முடித்து வைத்துவிட்டு தனிமையில் தவிக்கிறாள்.   அன்பும், அறமும் மட்டுமே மனிதவாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன என்பதை வண்ணநிலவனின் கதைகள் சித்தரிக்கின்றன.

                                 -பெ.விஜயகுமார்

                                  செல்: 9500740687

                   -----------------------------------------------


Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...