Skip to main content

நூல் அறிமுகம் - தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ் - தாமஸ் ஹார்டி

நூல் அறிமுகம்

தாமஸ் ஹார்டியின் ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ்’ - நிறைவேறாக் காதலின் வலியைச் சொல்லிடும் நாவல்

பெ.விஜயகுமார்      

                                             

ஆங்கில இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் கவிஞர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவலாசிரியர் என்று சற்று வினோதமாக  தாமஸ் ஹார்டி (1840-1925) கொண்டாடப்படுகிறார். ஏராளமான கவிதைகளும், ’ஜுட் தி அப்ஸ்கியூர்’, ’தி மேயர் ஆஃப் கேஸ்டர் பிரிட்ஜ்,’, ’டெஸ்’ ’உட்லாண்டர்ஸ்’, தி டரம்பட் மேஜர்’, ’ஃபார் ஃப்ரம் தி மேடிங்க் கிரவுடு’ போன்ற நாவல்களும் தாமஸ் ஹார்டி எழுதியுள்ளார். விக்டோரியா ராணி காலத்தில் அவர் பிறந்து வளர்ந்த இங்கிலாந்தின் வெசக்ஸ் (Wessex) பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளைச் சித்தரிப்பதால் ’வெசக்ஸ் நாவல்கள்’ என்று ஹார்டியின் நாவல்கள் அழைக்கப்படுகின்றன. ஹார்டி தொடக்கத்தில் தேவாலயங்களைக் கட்டும் கலையில் ஆர்வம் கொண்டு அதில் பயிற்சி பெற்றார். பின்னர் அத்தொழிலை விட்டுவிட்டு தான் பிறந்த ஊரான டார்செட்டில் குடியேறி சிறந்த எழுத்தாளராகப் பரிணமித்தார்.

ஹார்டியின் ’ஜூட் தி அப்ஸ்கியூர்’, ’டெஸ்’ நாவல்கள் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியவை. அவை கிறித்துவ மதத்துக்கு எதிரான நாவல்கள் என்ற விமர்சனத்துக்கு ஆளாயின. இவ்விரு நாவல்களையும் கத்தோலிக்கத் திருச்சபை சிறிது காலம் தடை செய்திருந்தது. ஆனாலும் ஹார்டியின் நாவல்களுக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ’தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ்’ ’பெல்கிரேவியா’ எனும் மாத இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.

வெசக்ஸ் பகுதியில் இருந்த ’எக்டன் ஹீத்’ என்ற வறண்ட மலைப் பகுதியே இந்நாவலின் கதைக் களமாகும். ஹார்டியின் நாவல்கள் கிரேக்க செவ்வியல் நாடகங்களைப் போல கால ஒழுங்கை, இட ஒழுங்கைச் செவ்வனே கடைப்பிடித்தன. இயற்கை மனித வாழ்வில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது என்பதில் ஹார்டி ஆழ்ந்த நம்பிக்கையுடன் இருந்தார். எனவே அவரது நாவல்களில் இயற்கை  முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறது.

விதியின் விளையாட்டிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கும் மாந்தர்களை ஹார்டியின் நாவல்களில் சந்திக்கிறோம். தாங்கள் விரும்பும் வாழ்வை வாழ முடியாமல் ஏங்கும் மனிதர்களின் ஏக்கங்களை ஹார்டி தன்னுடைய நாவல்களில் சித்தரித்துள்ளார். பசுமையற்ற வறட்சியான எட்கன் ஹீத்தில் புதர்கள் மட்டுமே நிறைந்திருந்தன. கல்வியறிவின்றி புதர்களை வெட்டிப் பிழைக்கின்ற  தொழிலில் (Furze cutters) அந்த மக்கள் ஈடுபட்டிருந்தனர். நாகரீகத்தின் அடையாளங்கள், கிறித்துவத்தின் தாக்கம் எதுவுமின்றி எட்கன் ஹீத் பழமையில் தோய்ந்திருந்தது. கல்வியறிவு இல்லாத அப்பாவி மக்கள் தங்களுக்கு விதிக்கப்பட வாழ்க்கையை அதன் ஏற்றத்தாழ்வுகளுடன் அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தனர். அன்பின் வழியது உயிர்நிலையென ஒருவருக்கொருவர் அன்புடன், வன்முறைகளற்று வாழ்ந்தனர்.

ஹார்டி நாவல்கள் அனைத்திலும் சிறந்த தொடக்கமாக ’தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ்’ நாவலின் முதல் அத்தியாயம் போற்றப்படுகிறது. ஊரின் எளிய மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியலை மட்டுமே பேசிச் செல்வதைக் காண்கிறோம். நாட்டு நடப்பு தெரியாத அவர்கள், உலக அரசியலை அறியாதவர்கள். ஆன்மீகம் புரியாதவர்கள்.  அவர்களுக்கு வேண்டியதெல்லாம் வாய்க்கும் வயிற்றுக்குமான வாழ்வு மட்டுமே. அவர்களின் எளிய உரையாடல்களில் வெளிப்படும் கேலியும், கிண்டலும், கூத்தும், கும்மாளமும் அலாதியானவை!

ஊரின் நடுவில் ’சிகப்பு மனிதன்’ டிகரி தன் குதிரை வண்டியை ஓட்டிச் செல்வதில் நாவல் தொடங்குகிறது. செம்மறி ஆடுகளுக்கு சிகப்புச் சாயம் பூசுவது அவன் தொழில். உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை அவன் தன்னுடைய தொழில் நிமித்தமாக சிகப்பாகத் தோற்றமளிக்கிறான். ’சிகப்பு மனிதன்’ என்று ஊரில் உள்ளோர் அனைவரும் அழைக்கும் டிகரி வெள்ளை மனசுக்காரன். கள்ளங் கபடமற்றவன். டிகரியும், ராயல் நேவியிலிருந்து ஓய்வு பெற்ற ’கேப்டன் வை’ என்ற பெரியவரும் பேசிக் கொண்டே வருகின்றனர். டிகரி அடிக்கடி வண்டிக்குள் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே வருவதைக் கவனித்த பெரியவர் ”வண்டிக்குள் அப்படி என்ன முக்கியமானது இருக்கிறது’’ எனக் கேட்கிறார். ”வண்டிக்குள் தாமசின் யோபிரைட் படுத்திருக்கிறாள்” என்று டிகரி சொல்கிறான். கேப்டன் வை பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக நடக்கிறார். தன்னுடைய அத்தை திருமதி யோபிரைட்டின் ஆதரவில் வாழும் அப்பாவிப் பெண் தாமசின். தன் மகன் கிளிம் யோபிரைட் மற்றும் தன் பராமரிப்பில் வளரும் சகோதரி மகள் தாமசின் இருவருக்கும் நிறைவான வாழ்வு அமைய வேண்டும் என்பது மட்டுமே வயதான திருமதி யோபிரைட்டின் எண்ணமாக இருக்கிறது. ஆடம்பரங்கள் ஏதுமின்றி அமைதியுடன் ஒதுங்கி வாழும் திருமதி யோபிரைட், தான் எடுத்த முடிவில் எப்போதும் உறுதியாக நிற்பவர். அவர் மகன் கிளிம் யோபிரைட் பாரிசில் வியாபாரம் செய்கிறான்.  

அன்று வைல்டீவ் என்ற இளைஞனை தாமசின் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. திருமண ஒப்பந்தத்தில் ஏதோ பிழை நேர்ந்திட திருமணம் தடைபடுகிறது. அதனால் மிகுந்த சோகத்துடன் திரும்பும் தாமசினை தன்னுடைய வண்டியில் ஏற்றி அவள் வீட்டில் விட்டுவிடச் செல்கிறான் டிகரி. தாமசின் குடும்பம் அவனுக்கு மிகவும் பரிச்சயமான குடும்பம். அதுமட்டுமல்ல… தாமசினைத் திருமணம் செய்துகொள்ளும் ஆசையும் அவனுக்கு இருந்தது. திருமதி யோபிரைட் அதற்கு ஒத்துக் கொள்ளாததால் டிகரியின் திருமண ஆசை நிறைவேறவில்லை. வண்டிக்குள் தாமசினைப் பாதுகாப்பாக வைத்திருப்பதைப் போல  அவள் மீதான காதலையும் தன் மனதுக்குள் பாதுகாப்பாகப் பூட்டி வைத்திருக்கிறான் டிகரி.

தாமசின் – வைல்டீவ் திருமணம் நடக்காமல் நின்று போன செய்தி அன்று மாலை ஊர் மக்களின் பேசுபொருளாகிறது. திருமதி யோபிரைட் அத்திருமணத்தை விரும்பவில்லை என்பதையும் அவர்கள் அறிகிறார்கள். பாரிசில் வைர வியாபாரம் செய்து வரும் திருமதி யோபிரைட்டின் ஒரே மகன் கிளிம் யோபிரைட் வரவிருக்கும் கிறிஸ்துமஸ்க்கு எட்கன் ஹீத் வருகிறான் என்பதை அவர்கள்  மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தான் பிறந்த மண்ணுக்குத் திரும்பவிருக்கும் (தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ்) கிளிம் யோபிரைட்டை வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.

பொழுது சாய்ந்ததும் எட்கன் ஹீத்தைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் மக்கள் தீ மூட்டி குளிர்காய்கிறார்கள். மலையைச் சுற்றிலுமுள்ள கிராமங்கள் அனைத்திலும் நெருப்பு ஒன்றுபோல எரிவது விண்மீன்கள் மின்னுவதைப் போல அழகாகக் காட்சியளிக்கிறது. ஊரின் மூலையில் குடியிருக்கும் யூஸ்டேசியா என்ற அழகியின் வீட்டு வாசலிலும் அவளின் வேலைக்காரன் சார்லி நெருப்பு மூட்டுகிறான். யூஸ்டேசியா வீட்டு வாசலில் தீ எரிவதைப் பார்த்ததும் அவளைப் பார்க்க விரைகிறான் அவளின் காதலன் வைல்டீவ். அது அவர்கள் இருவருக்கும் இடையிலான ரகசியம். காலையில் தாமசினுடன் நடக்கவிருந்த திருமணம் தள்ளிப் போனது குறித்த சஞ்சலம் ஏதுமின்றி மாலையில் தன் காதலியைச் சந்திக்கச் செல்கிறான் வைல்டீவ்.

வைல்டீவ் ‘Quiet Woman’s Inn’ எனும் பெயரில் அந்த ஊரில் சத்திரம் ஒன்றை நடத்தி வருகிறான். பொறியாளனாகப் பணியாற்ற வேண்டிய அவன், அதில் தோற்றுப் போய் சத்திரம் நடத்திப் பொழுதைப் போக்குகிறான். மைனர் விளையாட்டில் கெட்டிக்காரனான அவன் பெண்களை எளிதில் மயக்கி விடுவான். அவனுக்கும், யூஸ்டேசியாவுக்கும் இடையிலான காதலை அறியாது தாமசின் அவனைத் திருமணம் செய்து கொள்ள நினைப்பது விதியின் விளையாட்டன்றி வேறென்ன?

கிளிம் யோபிரைட் பாரிசில் இருந்து வருகிறான் என்ற செய்தியை அறிந்ததுமே யூஸ்டேசியாவின் மனதில் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன. எந்தவிதப் பரபரப்பும், பொழுதுபோக்கு வசதிகளும் இல்லாத எட்கன் ஹீத் வாழ்க்கையை அவள் முற்றிலும் வெறுக்கிறாள். கவர்ச்சிகள் மிகுந்த நகரப்புற வாழ்க்கைக்காக ஏங்குகிறாள். அவள் தனது சிறுவயதில் பெல்மௌத் எனும் அழகிய கடற்கரை நகரில் பெற்றோர்களுடன் வாழ்ந்தவள். தற்போது தன் தாத்தாவுடன் எட்கன் ஹீத்தில் வாழ நேர்ந்ததை நினைத்து வருந்துகிறாள். ’கிளிம்’ பாரிசில் வாழும் வணிகன் என்றதும் அவள் மனம் மாறுகிறது. அவனைத் திருமணம் செய்து கொண்டு, பாரிசில் வாழ்வது எவ்வளவு பகட்டானதாக இருக்கும் என்ற கற்பனையில் அவள் சிறகடித்துப் பறக்கிறாள். ஆனால் விதியின் வழி வேறு என்பதை பேதை அவள் எப்படி அறிவாள்?

யூஸ்டேசியா ஆவலுடன் எதிர்பார்க்கும் கிளிம் பாரிசிலிருந்து வருகிறான். கிறிஸ்துமஸ் பண்டிகையும் வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கிளிம் யோபிரைட் வீட்டில் நாடகம் நடத்த ஊர் இளைஞர்கள் திட்டமிடுகின்றனர். ‘செயிண்ட் ஜார்ஜ்’ வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாடகம் போடுவது என முடிவாகிறது. நாடகத்தில் ஆண் வேடத்தில் யூஸ்டேசியா நடிக்கிறாள். கிளிமை அருகில் கண்டு மனம் கிறங்குகிறாள். நாடகம் முடிந்ததும் கிளிம் அவளை அடையாளம் கண்டு கொள்கிறான். ஆண் வேடத்தில் இருப்பது ஊரின் பேரழகி யூஸ்டேசியா என அறிகிறான். தன் மனதைப் பறிகொடுக்கிறான். திருமதி யோபிரைட்டுக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் யூஸ்டேசியா-கிளிம் யோபிரைட் திருமணம் நடந்தேறுகிறது. அந்த திருமணத்தை திருமதி யோபிரைட் ஏற்றுக் கொள்ளாததால் புதுமணத் தம்பதிகள் ஊருக்கு வெளியே சிறிய வீட்டில் குடித்தனத்தைத் தொடங்குகிறார்கள்.

திருமண வாழ்வு யூஸ்டேசியாவுக்கு பேரதிர்ச்சியுடன் தொடங்குகிறது.  ’கிளிம்’ பாரிஸ் வாழ்க்கைத் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் ஊரில் பள்ளிக்கூடம் நடத்தி ஊர் மக்களுக்கு எழுத்தறிவு கொடுக்கப் போவதாகச் சொல்வதைக் கேட்டு யூஸ்டேசியா அதிர்ந்து போகிறாள். யூஸ்டேசியாவின் பாரிஸ் கனவு உடைந்து சிதறுகிறது. இதற்கிடையில் நின்று போயிருந்த தாமசின்-வைல்டீவ் திருமணம் தடைகள் நீங்கி நடைபெறுகிறது. தாமசினைக் கைப்பிடித்த வைல்டீவ் மனதில் யூஸ்டேசியா வீற்றிருக்கிறாள். கிளிமை பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் திருமணம் செய்த யூஸ்டேசியா மனதில் வைல்டீவ் இருக்கிறான். பொருந்தாத் தம்பதிகள் திருமணம் எனும் பந்தத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

வைல்டீவ் தன்னைச் சரியாக நடத்துவதில்லை என்றும், அன்றாடச் செலவுக்கான பணத்தைக்கூடத் தருவதில்லை எனறும் தன் அத்தையிடம் தாமசின் முறையிடுகிறாள். அவளுக்கு உதவிடும் பொருட்டு திருமதி யோபிரைட் நூறு கினி காசுகளை குடும்ப நண்பன் கிறிஸ்டியன் காண்டில் என்பவனிடம் கொடுத்து அனுப்புகிறார். (அன்று நூறு கினி காசுகள் என்பது மிகப் பெரிய பணம்). தாமசினுக்கு ஐம்பது கினி காசுகளையும், கிளிமுக்கு ஐம்பது கினி காசுகளையும் கொடுக்கச் சொல்லி அனுப்புகிறார். பணத்துடன் செல்பவன் வைல்டீவ் நடத்தும் ‘Quiet Woman’s Inn’ சத்திரத்தில் தங்குகிறான். வைல்டீவ்வுடன் சூதாடுகிறான். சூதாட்டத்தில் காண்டில் நூறு கினி காசுகளையும் வைல்டீவ்விடம் இழந்து விடுகிறான்.  

யோபிரைட் குடும்பத்தினர் மீது என்றென்றும் மரியாதையும், அன்பும் கொண்டிருக்கும் டிகரி பணத்தை எடுத்துச் செல்லும் காண்டிலைத் பின்தொடர்ந்து செல்கிறான். அவன் நினைத்தது போலவே காண்டில் பணம் முழுவதையும் வைல்டீவ்விடம் இழந்திருப்பதை அறிகிறான். திருமதி யோபிரைட்டுக்கு காண்டில் துரோகம் இழைத்திருக்கிறான். துரோகி காண்டில் இழந்த பணத்தை அன்றிரவு முழுவதும் வைல்டீவுடன் சூதாடி டிகரி மீட்டெடுக்கிறான். திருமதி யோபிரைட் கொடுத்த பணம் முழுவதும் தாமசினுக்கு என்று எண்ணிக் கொண்டு நூறு கினி காசுகளையும் தாமசினிடம் கொடுத்து விடுகிறான். கிளிமிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கான செய்தி எதுவும் வராததால் திருமதி யோபிரைட் அவன் மீது கோபம் கொள்கிறார். அவருக்குத் தெரியாது - கிளிமுக்கான ஐம்பது கினி காசுகள் அவனைச் சென்றடையவில்லை என்பது.

கிளிம்-யூஸ்டேசியா திருமணத்தை ஏற்றுக் கொண்டிராத திருமதி யோபிரைட் ஏற்கனவே யூஸ்டேசியா மீது கோபத்துடன் இருந்தார்.  கிளிமுக்குக் கொடுத்த பணத்தை யூஸ்டேசியா எடுத்துக் கொண்டிருப்பாள் என்று தவறாக எண்ணி அவளைத் திட்டுகிறார். அதனால் திருமதி யோபிரைட்டுக்கும், யூஸ்டேசியாக்கும் இடையில்  கடுமையான மோதல் ஏற்படுகிறது. நிறைய எதிர்பார்ப்புகளுடன் கிளிம்மைத் திருமணம் செய்து கொண்ட யூஸ்டேசியா மிகுந்த  ஏமாற்றம் அடைகிறாள். ஒருநாள் காலை கிளிம் தொழிலாளிகளுடன் சேர்ந்து புதர்களை வெட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியும், கோபமும் கொள்கிறாள். ஆனால் கிளிம் எந்தவொரு விகல்பமும் இல்லாமல் வேலையில் மூழ்கிக் கிடக்கிறான்.

யூஸ்டேசியாவைச் சந்திக்க ஒரு நாள் மதியம் வைல்டீவ் அவள் வீட்டிற்கு வருகிறான். கிளிம் வேலை செய்த களைப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிருப்பதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் தன் அன்பு மகன் கிளிம் மீது கோபங்கொண்டு நீண்ட நாட்களாகப் பார்க்காமல் இருக்கும் அவனைப் பார்க்க கிளிமின் வீட்டிற்கு முதன் முறையாக திருமதி யோபிரைட் வருகிறார். தன் மாமியாரைப் பார்த்தும் கதவைத் திறக்காமல் வீட்டின் பின்புறம் வழியாக வைல்டீவ்வுடன் யூஸ்டேசியா வெளியேறி விடுகிறாள். அந்த நேரத்தில் கிளிம் ‘அம்மா’ என்று அழைக்கும் சத்தமும் கேட்கிறது. கிளிம் கதவைத் திறந்து தன் அம்மாவை அழைத்துக் கொள்வான் என்று யூஸ்டேசியா நினைத்தது தவறாகிறது. கிளிம் ‘அம்மா’ என்றழைத்தது அவனுடைய தூக்கத்தில்தான். தன் ஆழ்மனதில் இருக்கும் அம்மாவின் மீதான அன்பு அவனை தூக்கத்திலும் ‘அம்மா’ என்றழைக்க வைக்கிறது.

வாசலில் நீண்ட நேரம் காத்திருந்த திருமதி யோபிரைட் மகனும், மருமகளும் வீட்டுக்குள் இருந்தும் தன்னை வரவேற்கவில்லை என்ற கோபத்தில் மனமுடைந்து திரும்புகிறார். அந்த மதிய வேலையில் வெயிலில் நடந்து வந்த களைப்பு, மகனின் புறக்கணிப்பினால் ஏற்பட்ட கவலை எல்லாம் சேர்ந்து உந்தித் தள்ள கீழே மயங்கி விழுகிறார். காட்டுவெளியில் விழுந்து கிடக்கும் அவரை பாம்பு தீண்டி விடுகிறது. ஊர் மக்கள் கூடி அவரைக் காப்பாற்ற முயன்றும் திருமதி யோபிரைட் மரணத்தைத் தழுவுகிறார். விஷயத்தை அறிந்த கிளிம் மனம் பதறுகிறான். தன் தாயின் மரணத்துக்குத் தான் காரணமாகி விட்டோம் என்ற குற்ற உணர்வினால் மனவேதனை அடைகிறான். தன் தாயை வரவேற்கத் தவறிய யூஸ்டேசியா மீதும் கோபம் கொள்கிறான்.

யாரோ ஒரு தூரத்து உறவினர் மரணத்தின் போது எழுதிவைத்த உயில் மூலம் வைல்டீவ்வுக்குத் திடீரென்று பெரும் பணம் கிடைக்கிறது. கிளிமிடமிருந்து பிரிந்து தன் தாத்தாவுடன் வாழும் யூஸ்டேசியாவின் மனம் ஊசலாடுகிறது. கிளிமுடன் தன்னுடைய இல்லற வாழ்வைத் தொடர்வதா அல்லது வைல்டீவ்வுடன் பாரிசுக்குச் சென்று உல்லாச வாழ்வு வாழ்வதா; இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில், வைல்டீவ்வுடன் எங்கேனும் சென்று புதுவாழ்வை அமைத்துக் கொள்வது என்ற முடிவை எடுக்கிறாள். வழக்கம்போல் தன் வீட்டு வாசலில் தீயை மூட்டி வைல்டீவ்வுக்கு ரகசியமாகச் செய்தி அனுப்புகிறாள்.

தாயை இழந்த சோகத்திலிருந்து மெல்ல விடுபட்ட கிளிம் தன் மனைவி யூஸ்டேசியாவை மன்னித்து அவளை ஏற்றுக் கொள்ள நினைக்கிறான். தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்து அவளுக்குக் கடிதம் அனுப்புகிறான். அந்தக் கடிதம் அவளுடைய தாத்தா கேப்டன் வையிடம் கிடைக்கிறது. கடிதத்தை அவளிடம் கொடுப்பதற்காக அவர் காத்திருக்கிறார். ஆனால் அதற்குள் யூஸ்டேசியா வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள். தன் காதலன் வைல்டீவ்வைச் சந்திக்கச் செல்லும் அந்த இரவில் மீண்டும் மனம் மாறுகிறாள்.  புயலுடன் கூடிய கடும் மழை பெய்யும் அந்தக் கொடிய இரவில் வீட்டை விட்டு ஓடும் யூஸ்டேசியா ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அவளைக் காப்பற்ற வைல்டீவும்  ஆற்றில் குதிக்கிறான். தன் கடிதத்திற்குப் பதில் வராததால் யூஸ்டேசியாவைத் தேடி வரும் கிளிமும் அவ்விருவரையும் காப்பாற்றுவதற்காக  ஆற்றில் குதிக்கிறான். தற்செயலாக அங்கு வரும் டிகரி மூவரையும் காப்பாற்ற முயற்சிக்கிறான். ஆனால் அவனால் கிளிமை மட்டுமே காப்பாற்ற முடிகிறது. காதலர்கள் வைல்டீவ்வும், யூஸ்டேசியாவும் ஒன்றாக மரணத்தைத் தழுவுகிறார்கள்.

தன் தாயின் மரணம் தந்த துயரமும் அதனால் ஏற்பட்ட குற்ற உணர்வும் கிளிமை வாட்டி வதைக்க மனமுடைந்து அவன் வாழ்கிறான். அவனுக்கு தாமசின் ஆறுதல் கூறுகிறாள். கிளிம் தன்னுடைய நீண்டநாள் கனவுக்கு வடிவம் கொடுக்கிறான். எட்கன் ஹீத்தில் பள்ளிக்கூடம் கட்டுகிறான். காலையும், மாலையும் எழுத்தறிவற்ற மக்களுக்கு அறிவொளி ஏற்றி மனநிறைவு பெறுகிறான். வைல்டீவ் மரணத்துக்குப் பின் தனிமையில் வாடும் தாமசினிடம் தன்னுடைய காதலை மீண்டும் டிகரி வெளிப்படுத்துகிறான். டிகரி இப்போது பழைய ‘சிகப்பு மனிதன்’ இல்லை. சிகப்புச் சாயம் பூசும் தொழிலை விட்டுவிட்டு பால்பண்ணை வைத்திருக்கிறான். தாமசினும் அவன் காதலை ஏற்று தன் வாழ்வை இனிதாக்குகிறாள்.

தாமஸ் ஹார்டி இந்த நாவலை துன்பியல் காவியமாக முடிக்கவே முதலில் நினைத்திருந்தார். தாமசின் யோபிரைட் மறுமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்வதாகவே நாவல் முடிவடைந்தது. ஆனாலும் இதழின் வாசகர்கள் சோக முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் முடிவை மாற்றி எழுதுமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. எனவே டிகரியின் காதலை ஏற்று தாமசின்  அவனைத் திருமணம் செய்வதாக, மகிழ்ச்சிகரமானதாக கதையின் முடிவை ஹார்டி மாற்றி எழுதினார்.

 


Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...