’புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்’ எனும் நிலைப்பாட்டிலிருந்து விலகி ஆயுதங்கள் அற்ற, போர்கள் அற்ற மாற்றுப் போராட்டம் பற்றிய தேடுதல்தான் தீபச்செல்வனின் ’நடுகல்’ நாவல்.
--பெ.விஜயகுமார்.
”மக்களைத் துன்புறுத்தும் அதிகாரத்துக்கு எதிராக இயங்குவதுதான் கலை, இலக்கியங்களின் பணியாக இருக்க வேண்டும். விடுதலைப் புலிப் போராளிகளைக் குறைகாணும் விதமான கவிதைகள், நாவல்கள், கதைகள் எழுதுபவர்களுக்கு இருக்கும் ஊடகக் கவனம் அந்தப் போராளிகளின் ஆன்மாக்களை எழுதுபவர்களுக்கு இருப்பதில்லை” என்று தீபச்செல்வன் ஒரு நேர்காணலில் சொல்வதில் அர்த்தமுள்ளது. ஆம்; ஈழப் போரின் கொடுந்துயரங்கள் பற்றி எழுதப்படும் சில படைப்புகளில் விடுதலைப் புலிகளைக் குறைகூறும் போக்கு இருப்பதும், அதைச் சில ஊடகங்கள் உயர்த்திப் பிடிப்பதும் கவலைக்கு உரியதே. 1983இல் தொடங்கி 2009இல் முடிந்த ஈழ விடுதலைக்கான போர் குறித்து ஏராளமான நூல்கள் படைக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுநிலை என்றும் எதிர்நிலை என்றும் இருவேறு கோணங்களில் எழுபவைகளாகவே இருக்கின்றன. தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலும், பிற படைப்புகளும் புலிகளின் வீரஞ்செறிந்த போரின் தியாகத்தையும், தீரத்தையும் போற்றிப் பாடுகின்றன.
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரில் பிறந்த தீபச்செல்வன் யாழ்ப்பாணம், மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். ‘சயனைட்’, ‘பேரினவாதத் தீ,’ ‘தமிழர் பூமி,’ போன்ற நாவல்களும், நிறையக் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். ஈழத்து மக்கள் ‘இயக்கம்’ என்றழைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மீது தீவிரப் பற்று கொண்டிருந்தார். பல கட்டங்களில் நடந்த விடுதலைப் போரையும், முள்ளிவாய்க்காலில் வரலாறு கண்டிராத கொடூரமான முடிவைச் சந்தித்ததையும், அதற்குப் பின்னரும் இலங்கை இராணுவம் நிகழ்த்தும் கெடுபிடிகளையும் ’நடுகல்’ நாவல் சித்தரிக்கிறது.
பத்து வயதில் இயக்கத்தில் சேர்ந்து வீரத்துடனும், தீரத்துடனும் போராடும் பிரசன்னா என்ற இளைஞனின் குடும்பம் எதிர்கொள்ளும் சொல்லொண்ணா துயரங்களைச் சொல்லிச் செல்கிறது நாவல். பிரசன்னாவுக்கு இயக்கம் இட்ட பெயர் வெள்ளையன். அவன் தந்தை நடராசன் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தும் குடும்பத்தைவிட்டு விலகி வாழும் பொறுப்பற்ற தந்தையானார். குழந்தைகள் தந்தையை நிழற்படத்தில் மட்டுமே பார்த்து மகிழ்கின்றனர். வெள்ளையனின் அம்மா நாகபூசணி இயக்கத்தில் சேர்ந்த தன் மகனின் பாதுகாப்பு குறித்த பதட்டத்திலேயே தன் வாழ்நாளைக் கழிக்கிறார். பத்து வயதில் இயக்கத்தில் சேர்ந்த தன் மகனை விடுவிக்கும்படி இயக்கத் தலைவர்களை வேண்டுகிறார். அவர்களும் வெள்ளையனை தாயுடன் செல்லும்படி சொல்கிறார்கள். ஆனால் வெள்ளையன் பிடிவாதமாக இயக்கத்தில் தொடருகிறான். இயக்கம் எத்தகு கட்டுக்கோப்பானது என்பதை நாவல் பல வழிகளிலும் விளக்குகிறது. இயக்கம் தனது உறுப்பினர்களின் குடும்பங்களை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறது.
கிளிநொச்சியில் இராணுவம் குண்டு மழை பொழிகிறது. ஊரைவிட்டு மக்கள் வெளியேறுகிறார்கள். இலங்கை இராணுவம் விரட்டிக் கொண்டே வருகிறது. போரினால் புலம்பெயரும் மக்களுக்கு இயக்கம் அனைத்து உதவிகளும் செய்கிறது. முகாம்களில் தங்கும் மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுகிறது. முகாமில் மருத்துவ வசதி, படிக்கும் வசதி, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடு என்று ஒவ்வொன்றையும் அக்கறையோடு கவனிக்கிறது. இயக்கம் அளிக்கும் விடுமுறையில் பிரசன்னா வீட்டுக்கு 15 நாட்கள் வருகிறான். தம்பி வினோதனும், தங்கை கார்த்திகாவும் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். வெள்ளையன் மீண்டும் இயக்கத்தில் சேர வேண்டாம் என்று குடும்பமே கெஞ்சுகிறது. அவன் பிடிவாதமாகக் கிளம்புகிறான். தன் தம்பி வினோதனை நன்கு படிக்கச் சொல்கிறான்.
’வீரச்சாவு’, ’மாவீரர் துயிலுமிடம்’, ’மாவீரர் தினம்’ எனும் முக்கோணமாக நாவல் நேர்கோட்டில் அல்லாமல் முன்னும் பின்னுமாக நகர்ந்து செல்கிறது. இயக்கம் தனித்து இயங்கவில்லை. ’ஈழம் எங்கள் தாகம்’ என்று சொல்லி அனைத்து மக்களும் ஒன்றிணைகிறார்கள். ’ஈழநாதம்’ இயக்கத்தின் பத்திரிகை. ’புலிகளின் குரல்’ அவர்களின் வானொலி. இவ்விரண்டை மட்டுமே மக்கள் நம்புகிறார்கள். இரவு ஒன்பது மணிக்கு புலிகளின் குரல் அறிவிப்பாளர் பிரபாளினி வீரச்சாவு எய்தியவர்கள் பட்டியலை வாசிக்கிறார். ’மரணத்துக்குள் வாழ்தல்’ என்பது அன்றாடம் ஆகிறது. ஈழப் போரில் இன்னுயிர் ஈந்த தியாகியின் உடலை இயக்கப் போராளிகள் வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். ஊரே கூடி அழுகிறது. மாவீரர் துயிலுமிடத்தில் புதைக்கிறார்கள்; இல்லை விதைக்கிறார்கள்.
ஓரு நாள் வெள்ளையன் பெயரும் வீரச்சாவு அடைந்தோர் பட்டியலில் இடம்பெறுகிறது. இயக்கத்தினர் அவனின் உடலைச் சுமந்து வருகின்றனர். கிளிநொச்சி ஊரே திரண்டு மாவீரர்கள் துயிலுமிடத்தில் அவனைப் புதைக்கின்றனர். வெள்ளையனின் தாய் மகனின் நிழற்படம் ஒன்றுகூட இல்லாமல் போனது குறித்து மிகுந்த வேதனை அடைகிறார். தன் அண்ணனின் நிழற்படத்தைத் தேடி வினோதன் அலைகிறான். உலகெங்கிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இமெயில் அனுப்புகிறான். தன் அண்ணன் வெள்ளையன் படத்தைக் கண்டெடுத்தால் அனுப்பச் சொல்லிக் கேட்கிறான். உலகின் பல நாடுகளிலிருந்தும் பதில் வருகிறது. ’’நிச்சயம் கோப்புகளைத் தேடுகிறோம். உங்கள் அண்ணனின் படம் கிடைத்ததும் அனுப்புகிறோம்’’ என்று பதில் அனுப்புகிறார்கள்.
தன் அன்பு மகனின் படம் கிடைக்காததனால் மகன் நினைவாக ஒரு கல்லை வீட்டில்வைத்து விளக்கேற்றி வணங்குகிறார் நாகபூசணி அம்மாள். தீப ஒளியில் தன் மகனின் முகத்தைக் காண்கிறார். இலங்கை ராணுவத் தளபதி சிங்க பண்டார ஈவிரக்கமற்ற ஒரு மிருகம். இயக்கத்தினரின் நினைவிடங்களை எல்லாம் அழிக்கிறான். ’மாவீரர் தினம்’ கொண்டாடப்படுவதை அனுமதிக்க மறுக்கிறான். இராணுவத்தினர் வீட்டுக்குள் புகுந்து வெள்ளையன் நினைவாக இருக்கும் ’நடுகல்’லைத் தூக்கியெறிகிறார்கள். நாகபூசணி அம்மாள் பதறித் துடிக்கிறார்.
அன்ரனி-ருக்குமணி தம்பதிகளின் சோகம் சொல்லில் அடங்காது. இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியதால் யாரையும் ஊருக்குள் விடாமல் காவல் காக்கிறது. கிளிநொச்சியிலிருந்து புலம்பெயர்ந்து முகாம்களில் வாழும் குடும்பத்தின் ஆண்கள் சிலர் கிளிநொச்சியில் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த பொருட்களை எடுத்துவரச் செல்கிறார்கள். தங்கள் வீட்டுக்கே திருடனைப்போல் நுழைய வேண்டிய துயரம்! அன்ரனி உயிரைப் பணயம் வைத்து கிளிநொச்சி சென்று தன் வீட்டில் விளைந்த பொருட்களை எடுத்துவருகிறார். அன்ரனி குடும்பம் பசியாறுவதோடு பக்கத்தில் இருப்பவர்களின் பசியையும் தீர்க்கிறார்கள்.
ஒருமுறை அன்ரனி தன் மகன் பிரயதர்சனையும் கிளிநொச்சிக்குக் கூட்டிச் செல்கிறார். இருவரும் வீட்டுத் தென்னையில் விளைந்துள்ள தேங்காய்களைப் பறிக்கும்போது இராணுவத்தினரிடம் மாட்டிக் கொள்கிறார்கள். சிறுவன் பிரியதர்சன் உடல் முழுவதும் சிகரெட் தீயினால் சூடு வைக்கிறார்கள் இராணுவத்தினர். வன்மமும், வக்கிரமும் தலைக்கேற அவன் உடலில் ’எல்.டி.டி.இ.’ என்று எழுதுகிறார்கள். வலியில் துடிக்கும் அவன் தலையில் ஒரு பொதியை ஏற்றி அனுப்புகிறார்கள். வீடுவந்ததும், தான் தலையில் சுமந்து வந்த பொதி தன் தந்தையின் வெட்டப்பட்ட தலை என்பதறிந்த பிரியதர்னின் அழுகையை நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். தன் தந்தையின் உயிரைப் பறித்த ராணுவத்தைப் பலி தீர்க்க பிரியதர்சன் இயக்கத்தில் சேர்கிறான். அன்ரனியின் நான்கு புதல்வர்களும் இயக்கத்தில் சேர்ந்து ஒவ்வொருவராக வீரச்சாவு அடைகிறார்கள்.
இந்தியாவிலிருந்து இராணுவம் வருகிறது. இலங்கையில் ‘அமைதி காக்கவந்த இந்தியப் படை’ (IPKF – Indian Peace Keeping Force) என்று அதற்குப் பெயர். தமிழர்கள் அதனை ’Indian People Killing Force’ என்றழைத்தனர். இயக்கத்தினரிடம் இருந்த ஆயுதங்களைப் பிடுங்கி இலங்கை இராணுவத்தினரிடம் கொடுத்தது IPKF. முழுவதும் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது IPKF.
முள்ளிவாய்க்கால் கொடூரம் சொல்லி மாளாது. இந்தியா உட்பட உலக நாடுகள் எல்லாம் அமைதி காத்தன. ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக நிறைவேற்றிய இன அழிப்புக்கு நிகரான இன அழிப்பு (Genocide) இலங்கையில் நடந்தேறியது. முள்ளிவாய்க்காலுக்குப் பின் நிலவும் அமைதி மயான அமைதியே. இயக்கத்தைக் காட்டிக் கொடுத்த எட்டப்பர்களும் ஈழ மண்ணில் வாழ்ந்தனர் என்பதறிகிறோம். நேசராஜ் என்பவன் இலங்கை இராணுவத்தின் எடுபிடியாக இருந்து சொந்த இனத்திற்கே துரோகம் இழைக்கிறான். மேடைகளில் இராணுவம் போர்க் குற்றம் செய்யவில்லை என்றெல்லாம் பேசி அவர்களுக்கு வால் பிடித்து இராணுவத்தின் பாதுகாவலன் என்று பெயரெடுத்ததுடன், அது குறித்துப் பெருமிதமும் அடைகிறான் நேசராஜ். இதுபோன்ற இழி பிறவிகள் வாழ்வதை வரலாறுதோறும் பார்க்கத்தானே செய்கிறோம்!
முள்ளிவாய்க்கால் கொடூரத்துக்குப் பின்னரும் இலங்கை அரசின் இனவெறி தீரவில்லை. ‘’அவன் எஞ்சியிருக்கிற எங்கடைய இனத்தை அழிக்கிறான். நிலத்தைப் பிடிக்கிறான். இப்பிடிப் போனால் நாங்கள் முழுமையாய் அழிஞ்சிடுவோம். எங்களைச் சுத்தி ஆமி; ஆமிக்குள்ளதான் வாழுறம். இப்படியே வாழலாமா? இதுக்கெல்லாம் ஒரு முடிவு வேண்டும்” என்று வினோதன் ஆதங்கத்துடன் கூறுவது இன்று இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழரின் குரலாக ஒலிக்கிறது.
இயக்கத்தினரின் தியாகங்களையும், சாதாரண மக்கள் அனுபவித்த துயரங்களையும் சித்தரிக்கும் தீபச்செல்வன் நாவலில் ஈழ மண்ணின் இயற்கை அழகையும் விவரிக்கிறார். ’’கிளிநொச்சிக் குளத்தடி பேரழகு! குளத்தடி எங்கும் மருதமரங்கள். அணைக்கட்டுகளின் வழியில் போகும்போது தாமரைப் பூக்கள் ஓரழகு! அணைக்கட்டுக்களுக்கு கீழால் இறங்கிப் போகும்போது செல்வரத்தம் பூக்களாலான வேறோர் அழகு!” என்று ஈழத்தின் அழகைச் சொற்சித்திரமாகத் தீட்டுகிறார் தீபச்செல்வன். ”கிளிநொச்சியின் குளத்தையும், இயற்கையான காட்டையும் அப்படியே பாதுகாக்கோணும் என்று தமிழீழ அரசு அன்று திட்டமிட்டது. இன்று ஆமி குளத்தைச் சுற்றியிருந்த மரங்களை எல்லாம் வெட்டிப்போட்டு கேம்ப் போட்டிருக்கிறான்,” என்று கோபக்கனல் தெறிக்கச் சொல்கிறார். நாவலில் கணக்கில் அடங்காத எண்ணிக்கையில் பூக்களும், மரங்களும் குறிப்பிடப்படுகின்றன.
நினைவில் வாழும் அண்ணனின் கனவுகளை நனவாக்கும் உறுதியுடன் வினோதன் நன்கு படிக்கிறான். லண்டனிலிருந்து இயங்கும் ஓர் இணைய இதழுக்கு முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஈழத்தின் காட்சிகளைப் படமெடுத்து அனுப்புகிறான். ஒரு ஃபோட்டோ ஜெர்னலிஸ்டாக பரிணமிக்கிறான். இதனை அறிந்த ராணுவ அதிகாரி சிங்க பண்டார வினோதனை மிரட்டுகிறான்.
கார்த்திகை 27, 2012 மாவீரர் தினம்! பெற்றோர்களும், உறவினர்களும் கல்லறைகளுக்கு விளக்கேற்றுகின்றனர். இனிய குரலில் துயிலுமில்லப் பாடல் கேட்கிறது.
‘’தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா! உங்களைப் பெற்றவர்; உங்கள் தோழிகள்; உறவினர் வந்துள்ளோம்! எங்கே, எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடியும் உறங்குங்கள்,” என்று பாடுகிறார்கள். வினோதன் வீட்டிலும் வீரச்சாவு அடைந்த வெள்ளையனுக்குத் தீபம் ஏற்றுகிறார்கள். சிங்க பண்டார வீட்டுக்குள் நுழைகிறான். அனைத்தையும் உடைத்து நொறுக்குகிறான்.
”எங்கடை பிள்ளையளை உங்களாலை இல்லாமல் செய்யவும் ஏலாது. எங்கடை பிள்ளையனின்டை கனவை உங்களாலை அழிக்கவும் ஏலாது. நீங்கள் நாசமாய்ப் போவியள்,’’ என்று சொல்லி இராணுவத்தை நோக்கி மண்ணைவாரித் தூற்றித் திட்டுகிறார்,” அம்மா நாகபூசணி. அதே நேரத்தில் மேகங்கள் திரண்டன. வானம் இருட்டியது. ஆற்றங் கரையில் கார்த்திகைப் பூவொன்று அப்போதுதான் விரிந்து நிமிர மழை பெய்யத் தொடங்கியது என்று நாவல் முடிகிறது. கனவுகளும், நினைவுகளும் அழிவதில்லைதானே!
தீபச்செல்வன் எல்.டி.டி.இ. ஆதரவாளர் என்ற நிலையில் இயக்கத்தின் தவறுகளையும், தடுமாற்றங்களையும் கடந்து சென்றுவிடுகிறார். உலக மனித உரிமை அமைப்புகள் எல்.டி.டி.இ.யின் மிகப் பெரிய தவறாக குழந்தைகளைப் போரில் ஈடுபடுத்தியதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாவலின் நாயகன் வெள்ளையன் பத்து வயதில் இயக்கத்தில் சேருகிறான். ஜெயவர்தனெ, சந்திரிக்கா, ராஜபட்சே என்று யார் ஆட்சியில் இருந்தாலும் உலக நாடுகளின் ஆதரவுடன் இலங்கை அரசு தமிழினத்தைக் கொன்று குவித்தது. இதனை மிகுந்த பலத்துடன் எதிர்த்து போரினைத் துவக்கிய இயக்கம் அதனைச் சரியான நேரத்தில் முடிக்கத் தெரியாமல் தவித்தது. தன் பலத்தின் உச்சத்தில் இருந்தபோது நார்வே அரசின் தலையீட்டின் அடிப்படையில் போரைக் கௌரவமாக முடிக்க எல்.டி.டி.இ.க்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. எல்.டி.டி.இ.யின் தலைமை அதைத் தவறவிட்ட மிகப் பெரிய வரலாற்றுப் பிழையைச் செய்தது. இது குறித்தும் தீபச்செல்வன் ஏதும் குறிப்பிடாமல் நகர்வது அவருக்கு இயக்கத்தின் மீதான விமர்சனங்களற்ற பரிவும், பற்றுதலுமே காரணமாகிறது.
----------------------------------------
Comments
Post a Comment