இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தில் நடந்த துயர்மிகு நிகழ்வுகளைச் சித்தரிக்கும் சிறுகதைகள் ’டோபா டேக் சிங், மற்றும் ‘திற’.
சதத் ஹாசன் மண்டோ இந்தியாவில் பிறந்து பிரிவைக்குப்பின் பாகிஸ்தானில் வாழ்ந்து மறைந்த உருது எழுத்தாளர். இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தவர். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த உருது புனைவிலக்கிய எழுத்தாளராகக் கொண்டாடப்படும். மண்ட்டோ நிறையச் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதினார். பிரிவினைக்காலத்தில் நிகழ்ந்த கொடுமைகள், அவலங்கள், துரோகங்கள், மனித மாண்புகள் அழிந்த சோகங்கள் அனைத்தையும் தன்னுடைய படைப்புகளில் சொற்சித்திரமாகத் தீட்டினார். தேசப் பிரிவினையின் வரலாறு உண்மையில் இந்திய-பாகிஸ்தானியப் பெண்களின் உடம்பின் மீது எழுதப்பட்ட வரலாறு என்றார் மண்ட்டோ. இந்த வரலாறை இரத்தம் கசியும் மொழியில் எழுதியவர் மண்ட்டோ. மனசாட்சியோடு இயங்குபவர்களின் மற்றொரு பெயர்தான் படைப்பாளிகள். பேனாவில் மை இடுவதற்குப் பதிலாக மனசாட்சி இட்டு எழுதியவர் மண்ட்டோ.
’டோபா டேக் சிங்’ மண்ட்டோவின் காத்திரமான கதைகளில் ஒன்று. ககைத்த நகைச்சுவையுடன் (black humour) சொல்லிச் செல்லப்படும் இக்கதையின் முடிவு சோகமானதாகும். The Great Partition’ என்றழைக்கப்படும் இந்தியப் பிரிவினை சொல்லில் அடங்காத் துயரமாகும். ஒரு கோடிக்கும் மேலான மக்கள் புலம்பெயந்தனர். பத்து லட்சத்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் கடத்தப்பட்டனர், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். இரு நாட்டின் ஆட்சியாளர்களும் இக்கோரத்தாண்டவத்திற்குப் பிறகு மீட்டு நடவடிக்கையில் இறங்கினார்கள். இரு நாடுகளிலிருந்தும் கடத்தப்பட்ட பெண்கள் அவரவர் நாடுகளுக்குக் கொண்டுவரப்பட்டு மறுவாழ்வு கொடுக்கப்பட்டனர். இந்தியச் சிறைகளில் இருந்த இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் அரசிடமும், பாகிஸ்தான் சிறைகளில் இருந்த இந்து மற்றும் சீக்கியர்கள் இந்திய அரசிடமும் மாற்றி ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல் இருபுறமும் மனநலக் காப்பகங்களில் இருந்த மனநலம் குன்றியவர்களும் அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பாகிஸ்தானின் ஒரு மனநலக் காப்பகத்தில் தங்கியிருந்தவர்கள் பற்றிய சோகமே இக்கதையின் கருப்பொருளாகும். பொதுவாகவே மன நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்ததுமே மனித மனம் கழிவிரக்கம் கொள்கிறது. அதிலும் அந்நிய மண்ணில் அடைக்கப்பட்டு வாடுபவர்களைக் காட்சிப்படுத்தும் இக்கதை நம் நெஞ்சை நெகிழச் செய்கிறது. பிரிவினை அறிவிக்கப்பட்டதுமே பாகிஸ்தான் மண்ணில் வாழ்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் பெரும்பாலும் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர். ஆனால் நிறைய இஸ்லாமியர்கள் இந்தியாவிலேயே வாழ்ந்திடும் முடிவெடுத்தனர். அதற்குக் காரணம் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகத் திகழும் என்று சுதந்திர இந்தியா அறிவித்ததாகும். அத்துடன் அண்ணல் காந்தி, நேர்மையின் வடிவமான அன்றைய பிரதமர் நேரு, பட்டேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற தலைவர்கள் மீதான நம்பிக்கையும் ஆகும்.
’டோபா டேக் சிங்’ கதை மனநலம் குன்றியவர்களை இவ்வாறு நாடுவிட்டு நாடு மாற்றிக் கொண்டுபோக எடுத்த முடிவு சரியான முடிவா? இல்லையா? என்ற விவாதத்துடன் தொடங்குகிறது. தாங்கள் எங்கு வாழ்கிறோம் என்பதை அறியாதவர்கள் எங்கிருந்தால் என்ன என்ற வாதம் அர்த்தமுள்ளதுதானே. இருப்பினும் அதிகார வர்க்கம் எடுக்கும் முடிவுகளுக்கு மறுப்பேது? இரு நாட்டு அதிகாரிகளும் முனைப்புடன் செயல்பட்டனர். முதலில் கணக்கெடுப்பும்; அடுத்து அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பிவைக்க ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தன. பாகிஸ்தானின் மனநலக் காப்பகம் ஒன்றின் நிகழ்வுகளே கதைக்களமாகிறது. இச்செய்தி லாகூரில் இருக்கும் ஒரு மனநலக் காப்பகத்தை எட்டியதும் அனைவரும் பதற்றம் அடைகின்றனர். காப்பகத்தில் இருப்பவர்கள் பாகிஸ்தான் என்றொரு புதிய நாடு உருவாகி இருப்பதையே அறியாமல் இருக்கின்றனர். ’’பாகிஸ்தானா? அது எங்கிருக்கிறது,’’ என்கின்றனர்.
கதை முழுவதும் மனநோயாளிகளின் அர்த்தமற்ற உரையாடல்களால் நிரம்பியுள்ளது. லாகூர் நகரில் இருக்கும் இக்காப்பகத்தில் மூன்று மதத்தினரும் உள்ளனர். ஆனல் இந்துக்களும், சீக்கியர்களும் மட்டுமே மாற்றப்பட உள்ளனர். காப்பகத்தில் இருக்கும் ஒரு சீக்கியர் மற்றொரு சீக்கியரிடம்.’’நாம் ஏன் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும்? நமக்கு அவர்கள் பேசும் மொழி தெரியாதே’’என்கிறார். உடனே,’’எனக்கு இந்தியர்கள் பேசும் பாஷை புரியும். அவர்கள் எப்போதும் தங்களைப் பற்றி உயர்வாக நினைத்துக்கொள்பவர்கள்’’என்கிறார் மற்றொரு சர்தார்ஜி. காப்பகத்தில் இருப்பவர்கள் அனைவரும் மனநோயாளிகள் இல்லை. சிலர் கொலைக் குற்றவாளிகள். தண்டனையிலிருந்து தப்பிக்க மனநோயாளிகளாக நடிப்பவர்கள். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பொய்ச் சான்று பெற்று காப்பகத்தில் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் பாகிஸ்தான் உருவாகியிருந்ததை அறிந்திருந்தும் அறியாதவர்கள் போல் நடிக்கிறார்கள்.
ஒரு நோயாளி காப்பகத்தில் இருக்கும் மரத்தின் மீது ஏறிக்கொண்டு ’’நான் இந்த மரத்தில்தான் இருக்கப்போகிறேன். இந்தியாவுக்கும் போகமாட்டேன், பாகிஸ்தானுக்கும் போகமாட்டேன்’’என்கிறான். ஒரு முஸ்லீம் மனநோயாளி ‘’நான் முகம்மது அலி ஜின்னா’’என்றதும் ஒரு சீக்கியன்,’’நான் தான் மாஸ்டர் தாரா சிங்’’ என்கிறான். உடனே காப்பக அதிகாரிகள் மதக்கலவரம் வந்துவிடும் என்றஞ்சி இருவரையும் அறையில் வைத்துப் பூட்டுகின்றனர்.
காப்பகத்தில் இருக்கும் ஓர் இந்து வழக்கறிஞர் காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்டவர். அம்ரிஸ்தர் நகரம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றறிந்ததும் கோபமடைகிறார். அம்ரிஸ்தர் நகரில் இருக்கும் தன் காதலியை இனிமேல் பார்க்க முடியாதென்பதால் பிரிவினைக்குக் காரணமான அரசியல் தலைவர்கள் அனைவரையும் திட்டுகிறார். காப்பகத்தில் உள்ள இரண்டு ஆங்கிலோ இந்தியர்களும் பதறுகின்றனர். ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டால் நம் கதி என்னாவது என்று பயப்படுகிறார்கள்.
கதையின் மிக முக்கியமான பாத்திரம் பிஷன் சிங் எனும் சீக்கியர். பதினைந்து ஆண்டுகளாக காப்பகத்தில் இருப்பவர். எந்நேரமும் உளறிக்கொண்டே இருப்பார். அவர் சொல்வது யாருக்கும் புரியாது. பிஷன் சிங் ஒன்றுபட்ட பஞ்சாபில் இருந்த ’டோபா டேக் சிங்’ எனும் ஊரைச் சேர்ந்த பெரிய நிலக்கிழார் என்று காப்பகத்தில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் சொல்வர். பிஷன் சிங்கின் உறவினர்கள் மாதம் ஒரு முறை இவரைப் பார்க்க வருவார்கள். சொந்தங்கள் வரும் நாளை தன் உள்ளுணர்வினால் அறிந்துவிடுவார். அன்று அதிகாலையிலேயே குளித்து, நல்ல ஆடை அணிந்து அவர்களை வரவேற்கத் தயாராகிவிடுவார். பிஷன் சிங் காப்பகத்தில் சேர்ந்தபோது குழந்தையாக இருந்த இவரின் மகள் இப்போது பதினைந்து வயதுப் பெண்; கண்ணீர் மல்க தன் தந்தையின் அருகில் அமர்ந்திருந்துவிட்டுச் செல்வாள்.
ஒரு நாள் பிஷன் சிங்கின் நண்பர் ஃபாசல் தின் அவரைப் பார்க்க வருகிறார். பிஷன் சிங்கின் குடும்பத்தினர் அனைவரும் பத்திரமாக இந்தியா சென்றுவிட்டனர் என்பதைத் தெரிவிக்கிறார். தன் நண்பரிடம் டோபா டேங் சிங் எங்கே இருக்கிறது என்று பிஷன் சிங் கேட்கிறார். அவருக்கும் இப்போது டோபா டேங் சிங் இருப்பது இந்தியாவிலா, பாகிஸ்தானிலா என்பது தெரியவில்லை.
ஒரு நாள் லாகூர் காப்பகத்தில் இருக்கும் இந்துக்களையும், சீக்கியர்களையும் பஸ்ஸில் ஏற்றி, தகுந்த பாதுகாப்புடன் இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு கொண்டு வருகின்றனர். அவர்களைக் கீழே இறக்கி இந்தியாவுக்குள் அனுப்புவது அல்லது தள்ளிவிடுவது அவ்வளவு எளிதான வேலையாக இல்லை. ஆண்களும், பெண்களும் அங்குமிங்கும் சிதறி ஓடுகின்றனர். சிலர் ஆடைகளைக் கழற்றி எறிந்து நிர்வாணமாக நிற்கின்றனர். காவல்துறையினர் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி அழைத்து இந்தியாவுக்குள் அனுப்புகின்றனர். கடைசியாக பிஷம் சிங் முறை வருகிறது. ‘’நான் டோபா டேக் சிங் ஊருக்குத்தான் செல்வேன்’’ என்று பிடிவாதம் பிடிக்கிறார். பாகிஸ்தான் காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாகத் தள்ளுகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் இரண்டுக்கும் இடையிலான இடத்தில் மல்லாந்து கீழே விழுகிறார். அவர் உயிர் பிரிகிறது. டோபா டேங் சிங் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் இறுதிவரை தெரியவில்லை. ஆனால் பிஷம் சிங் தெரிந்து கொண்டார்; அவர் மரணித்த இடம்தான் டோபா டேக் சிங்!
மண்ட்டோவின் ‘திற’ சிறுகதையை மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் படிக்க வேண்டும். படிப்பவர் நெஞ்சை உறையச் செய்யும் இக்கதை குறும்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. உலகில் மதத்தின் பெயரால் நடந்த வன்முறைகள் வரலாறு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து மதங்களும் அன்பைப் போதிக்கின்றன. ஆனால் நடப்பது வெறுப்பின் அடிப்படையிலான மோதல்கள்தான். ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக மதத்தின் அடிப்படையிலான பிரிவினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். இந்திய விடுதலையுடன் வரும் பிரிவினை இவ்வளவு கொடூரமாக மாறிடும் என்று யாரும் எதிர்பார்த்திராதது.
நாடு துண்டாடப்பட்ட செய்தி வானொலி மூலம் அறிவிக்கப்பட்டதும் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதி அல்லோலப்படுகிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுதல் என்று வன்முறை தாண்டவமாடுகிறது. மதவெறி தலைக்கேறியதும் மனிதம் மாண்டுபோகிறது. நேற்றுவரை அன்புடன் பழகி நட்பு பாராட்டியவர்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொன்றனர், இக்கொடூரக் காட்சிகள் பல வடிவங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மண்ட்டோ சிறுகதைகள் வழி பதிவு செய்துள்ளார். அவரின் ‘திற’ சிறுகதை படிப்பவர் நெஞ்சைப் பதற வைக்கும் படைப்பாகும்.
சிராஜூதின் குடும்பம் சுற்றிலும் நடக்கும் நரவேட்டையிலிருந்து தப்பித்துச் செல்ல முயலுகிறது. சிராஜுதின் கண் முன்னாலேயே அவர் மனைவி வெட்டப்படுகிறார். குடல் சரிந்து வெளியே விழுந்துள்ளது. ’’என்னை விட்டுவிட்டு நீங்கள் குழந்தை ஷகீனாவைக் கூட்டிக்கொண்டு தப்பித்து ஓடுங்கள்’’ என்ற அவர் மனைவியின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு ஷகீனாவைக் கையில் பிடித்துக்கொண்டு சிராஜுதின் ஓடுகிறார். கலவரம் சூழ்ந்த அந்நிலையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அவர் கைப் பிடியிலிருந்து நழுவிவிடுகிறாள் ஷகீனா. உயிரைக் காக்க அங்குமிங்கும் அலைபாயும் மக்கள் திரளில் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆறு நாட்கள் கழிகின்றன. அகதிகள் முகாம் அனைத்திலும் தேடி அலைகிறார். ஷகீனா! ஷகீனா! என்று கதறி அலைகிறார். எங்கும் கூக்குரல். மகள், மனைவி அல்லது சகோதரிகளைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது ஆண்கள் கூட்டம்.
ஒரு டிரக்கில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள சமூக சேவகர்கள் எட்டுப்பேரை சிராஜுதின் பார்க்கிறார். இவர்கள் நிறைய பெண்கள், குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார்கள். இவர்களிடம் தன்னுடைய மகளைக் கண்டுபிடித்துத் தரச் சொல்லிக் கெஞ்சுகிறார். பதினேழு வயதான என் மகள் நல்ல நிறம், நீண்ட கூந்தல், வலது கன்னத்தில் பெரிய மச்சத்துடனும் இருப்பாள் என்று அடையாளத்தையும் சொல்கிறார். நாங்கள் நிச்சயம் கண்டுபிடிப்போம் என்று அவர்கள் சொல்வது சிராஜுதினுக்கு ஆறுதலாக உள்ளது.
இக்குழுவினர் அமிர்தசரஸ் செல்லும் வழியில் சிஹார்த்தா அருகில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்கள். டிரக்கில் இருந்தவர்கள் தன்னை நோக்கி வருவதைக் கண்டு ஓடுகிறாள். அவளைத் துரத்திச் சென்று பிடிக்கிறார்கள். அவள் வலது கன்னத்தில் பெரிய மச்சம் இருப்பதைப் பார்க்கிறார்கள். அவள் அச்சத்தில் நடுங்குகிறாள். ‘’பயப்படாதே! உன் பெயர் ஷகீனாதானே?’’ என்று கேட்பதுடன் அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்பதை அவளுக்கு உணர்த்துகிறார்கள். அவள் தான் சிராஜுதின் மகள் ஷகீனா என்று ஒத்துக்கொள்கிறாள். அவளுக்கு உணவு கொடுக்கிறார்கள். துப்பட்டா இல்லாமல் கூச்சப்படும் அவளுக்கு ஒருவன் தன் கோட்டைக் கழற்றிக் கொடுக்கிறான்.
சிராஜுதின் தொடர்ந்து ஷகீனாவைத் தேடிக்கொண்டிருக்கிறார். நாட்கள் கடந்தன. ஆனால் தன் அன்பு மகள் ஷகீனாவைக் காணாமல் வாடுகிறார். தன் மகளைத் தேடிச் செல்லும் சேவகர்கள் வெற்றி அடைய ஒவ்வொரு இரவும் கடவுளை வேண்டுகிறார். ஒரு நாள் ஒரு முகாமில் அந்தச் சேவகர்களைப் பார்க்கிறார். ‘’என் மகள் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்ததா?’’ என்று ஆவலுடன் கேட்கிறார். அவர்கள் அனைவரும் ஒத்த குரலில் ’’அவள் வருவாள்… வருவாள்’’ என்று சொல்லி நகர்கிறார்கள். சிராஜுதின் மீண்டும் அந்த வாலிபர்கள் வெற்றி பெறக் கடவுளைப் பிராத்திக்கிறார்.
ஒரு மாலை நேரத்தில் இரயில் தண்டவாளத்தில் மயங்கிக் கிடந்த ஒரு பெண்ணைச் சிலர் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்ப்பதை சிராஜுதின் பார்க்கிறார். மருத்துவமனைக்குள் யாரும் இல்லை. ஒரு ஸ்டிரெச்சரில் ஓர் உயிரற்ற உடல் கிடந்தது. அதை நோக்கி அவர் நகர்கிறார். தீடிரென்று அறையில் வெளிச்சம் வருகிறது. வெளிச்சத்தில் ஸ்டிரெச்சரில் கிடப்பது தன் மகள் ஷகீனா என்பதறிந்து கதறி அழுகிறார். உள்ளே நுழையும் ஒரு டாக்டர் அவள் நாடித்துடிப்பைப் பரிசோதித்துப் பார்க்கிறார். ’’இந்தப் பெண் யார்’’ என்று டாக்டர் கேட்டதும் அய்யா! நான் இவளைப் பெற்றவன்’’ என்கிறார். அவரிடம் டாக்டர் அங்கிருந்த ஜன்னலைக் காண்பித்து ‘’திற!’’ என்றதும் அந்தப் பெண்ணின் உடல் சில அசைவுகளைக் காட்டியது. செயலற்றுக் கிடந்த அதன் கைகள், இடுப்பில் கட்டியிருந்த நாடாவை அவிழ்த்தது. பிறகு சல்வாரைக் கீழே இறக்கிவிட்டது. ‘’உயிரோடு இருக்கிறாள்; என் மகள் உயிரோடு இருக்கிறாள்’’ என்று சிராஜுதின் சந்தோசத்தில் கத்துகிறார். அவளையே பார்த்து நின்று கொண்டிருந்த டாக்டருக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை வியர்த்துக் கொட்டியது; என்று கதை முடிகிறது.
அந்தப் பெண்ணுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை வாசகர்களின் ஊகங்களுக்கு விட்டுவிடுகிறார் மண்ட்டோ. வார்த்தைகளில் சொல்லிச் செல்லும் சோகங்களைவிட சொல்லாமல் உணர்த்தப்படும் சோகங்கள் அதிக வலி தரும்தானே!
Comments
Post a Comment