Skip to main content

நூல் அறிமுகம் - ஜார்ஜ் எலியட் நாவல் - சைலஸ் மார்னர்

 

நூல் அறிமுகம்: சைலஸ் மார்னர் - ஜார்ஜ் எலியட் எழுதிய மானுடத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நாவல்.

ஆங்கில இலக்கிய வரலாற்றில் ’ராணி விக்டோரியாவின் காலம்’ என்றழைக்கப்பட்ட காலத்தில் பிறந்தவர் ஜார்ஜ் எலியட் (1819-1890). இவரின் இயற்பெயர் மேரி ஆன் இவான்ஸ். தான் வாழ்ந்த காலத்திய இங்கிலாந்தின் கிராமப்புர வாழ்வியலை எழுத்தோவியம் ஆக்கினார். மிகை உணர்ச்சிகளற்ற யதார்த்தவாத இலக்கியத்தைப் படைத்தார். ’தி மில் ஆன் தி ஃப்லாஸ்’, ’ஆடம் பீடு’, ’சைலஸ் மார்னர்’, ரொமொலா’, ’டேனியல் டிரொன்டா’, ’மிடில்மார்ச்’ ’ஃபெலிக்ஸ் ஹோல்ட்’ ஆகிய ஏழு  நாவல்களைப் படைத்து புனைவிலக்கிய உலகில் அழியாப் புகழ் பெற்று விளங்குகிறார். இளம் வயதிலேயே படிப்பில் ஆர்வம் கொண்டிருந்த ஜார்ஜ் எலியட் தந்தை கொடுத்த ஆதரவில் நன்கு படித்ததுடன் சிறந்த அறிஞர்களின் நட்பையும் பெற்றிருந்தார். ஹெர்பர்ட் ஸ்பென்சர், ராபர்ட் ஓவன், ரால்ஃப் வால்டோ எமர்சன், ஹாரியட் மார்ட்டினோ போன்ற அறிஞர்கள் குழாமில் வலம் வந்தார்.

அறிவியல் சிந்தனைகள் வளர்ச்சி பெற்றதால் பத்தொன்பதாம் நூற்றாண்டு பைபிள் கோட்பாடுகளைக் கேள்வி கேட்கத் தொடங்கியது. டேவிட் ஸ்டராஸ், லட்விக் ஃபியூர் பாக் போன்ற மதமறுப்பு தத்துவவியலாளர்களின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார் ஜார்ஜ் எலியட். இவரின் முதல் எழுத்து முயற்சியே டேவிட் ஸ்டாராஸின் ‘ஏசுவின் வாழ்க்கை – ஓர் ஆய்வு நோக்கு’ என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகும். பைபிளின் ’புதிய ஏற்பாடு’ குறிப்பிடும் ’அற்புதங்கள்’ அறிவியலுக்குப் புறம்பானவை என்று சொன்னார் ஸ்டராஸ் ஸ்டராஸின் புத்தகம் ஜெர்மனியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல் ஜார்ஜ் எலியட்டின் மொழிபெயர்ப்பு நூலும் இங்கிலாந்தில் எதிர்ப்புகளுக்கு உள்ளானது. தன் தந்தையின் நிந்தனைக்கும் ஆளானார். ’வெஸ்ட் மின்ஸ்டர் ரிவியூ’ என்ற இதழின் ஆசிரியர் பொறுப்பேற்று சில காலம் நடத்தினார். பின்னர் நாவல் எழுதும் ஆவல் மேலோங்கிட தொடர்ந்து ஏழு நாவல்கள் படைத்தார்.

யதார்த்தவாத நாவலான சைலஸ் மார்னர் (1861) பத்தொன்பதாம் நூற்றாண்டின் கிறித்துவ மதக் கோட்பாடுகளையும், தொழிற் புரட்சி ஏற்படுத்திய அச்சங்களையும் விவாதிக்கிறது. நாவலின் நாயகன் சைலஸ் மார்னர் என்ற ஏழை நெசவாளி இங்கிலாந்தின் வடக்குப் பகுதியிலிருந்த லாண்டன்யார்டு எனும் சேரிப் பகுதியில் அன்பும், அமைதியும் ததும்பிட வாழ்ந்தார். அவர் காதலித்த பெண் சாரா அவர் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினார். கிறித்துவ மதத்தின் ஒரு பிரிவான ’கால்வினிசம்’ லாண்டன் யார்டு பகுதியில் பரவியிருந்தது.  

சைலஸ் மார்னர் தன் ஆருயிர் நண்பன் வில்லியம் டேன் என்பவனுடன் சேர்ந்து ’கல்வினிஸ்ட் சர்ச்’ காரியங்களில் உற்சாகத்துடன் பணியாற்றினார். இவர்களுக்கு இடையிலான நட்பு பைபிளில் போற்றப்படும் டேவிட் – ஜோனத்தான் நட்பிற்கு இணையானது என்று ஊர் மக்கள் மெச்சினர். ஆனால் நண்பன் வில்லியம் டேன் சற்றும் எதிர்பாராத துரோகத்தைச் செய்கிறான். சர்ச் பணத்தைக் கையாடல் செய்துவிட்டு, பழியை சைலஸ் மார்னர் மேல் போடுகிறான். சர்ச் நிர்வாகம் விசாரணை நடத்துகிறது. சாட்சியங்கள் சைலஸ் மார்னருக்கு எதிராகத் திரும்புகின்றன. இறுதியில் சர்ச் நிர்வாகம் திருடனைக் கண்டுபிடிக்க திருவுளச் சீட்டு முறையைக் கடைப்பிடிக்கிறது. திருவுளச் சீட்டு மூலம் சைலஸ் மார்னர் குற்றவாளி எனத் தீர்ப்பாகிறது. சைலஸ் மார்னர் மனமுடைந்து போகிறார். திருவுளச் சீட்டு முறை தீர்ப்புக்கு பைபிளில் இடமுள்ளதா என்ற கேள்வி அவர் மனதில் எழுகிறது. இடியென இறங்குகிறது அடுத்தசோகம். அவர் நேசித்த சாரா அவரை வஞ்சிக்கிறாள். வில்லியம் டேனை திருமணம் செய்து சைலஸ் மார்னருக்கு துரோகம் செய்கிறாள்.

தான் போற்றிய சர்ச் நிர்வாகம், நண்பன் வில்லியம் டேன், ஆருயிர் காதலி சாரா அனைவரும் அவனுக்கு எதிராகத் திரும்பியதும் மனிதர்கள் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கையிழந்து லாண்டன்யார்டு ஊரைவிட்டு வெளியேறி வெகுதூரம் நகர்ந்து ரேவலோ எனும் கிராமம் வந்தடைகிறார் சைலஸ் மார்னர். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் குடிசை அமைத்து   வாழ்வைத் தொடங்குகிறார். அப்போதுதான் தொழிற் புரட்சி தொடங்கியிருந்த அக்காலத்தில் கைத்தறி இன்னும் புழக்கத்தில் இருந்தது. சைலஸ் மார்னர் போன்ற நெசவாளர்கள் இன்னும் நெசவுத் தொழில் செய்து வாழ்க்கைப் பயணத்தை நடத்தினர்.

சைலஸ் மார்னர் நன்கறிந்த நெசவுத் தொழிலைச் செய்வதற்கு ஏதுவான ஊராக ரேவலோ இருந்தது. பண்ணைகள் நிறைந்த இவ்வூரில் விவசாயமும், ஆடு வளர்ப்பும் செழித்திருந்த தொழில்கள். சைலஸ் மார்னர் ஊரில் வசிக்கும் யாருடனும் நெருங்கிய தொடர்புகள் வைத்துக் கொள்ளாமல் தனித்து வாழ்கிறார். எளிமையாக வாழ்ந்து நெசவுத் தொழில் மூலம் தான் ஈட்டும் பணத்தைச் சேமித்துவைக்கிறார். ஓர் அகன்ற அண்டாவில் நாணயங்கள் குவிகின்றன. இரவில் ஊரடங்கியதும் பொற்காசுகளையும், வெள்ளிக் காசுகளையும் எண்ணி மகிழ்வார். நாணயங்களை எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தரையில் குழி பறித்து அண்டாவை அதற்குள் வைத்து மண் மூடிப் புதைத்திருந்தார். சைலஸ் மார்னர் சர்ச்சுக்கும் செல்வதில்லை.

ஒரு முறை ஊரில் இருக்கும் பெண் ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறார். சைலஸ் மார்னர் தான் அறிந்திருந்த மருத்துவம் மூலம் அவரைக் குணப்படுத்துகிறார். இதனால் ஊர் மக்கள் அவரை மருத்துவர் என்றும், அதிசயங்களை நிகழ்த்துபவர் என்றும் முத்திரை குத்த முயல்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளாமல் முற்றிலும் ஒதுங்கி அந்நியராகவே வாழ்கிறார்.

ஊரில் இருக்கும் மிகப் பெரிய பண்ணைக்கும், நிறைய நிலங்களுக்கும் சொந்தக்காரராக காஸ் எனும் நிலக்கிழார் விளங்குகிறார். நான்கு மகன்களுடன் ஊரில் மிகுந்த செல்வாக்குடனும், மரியாதையுடனும் வாழ்கிறார். அவரின் மூத்த மகன் காட்ஃப்ரெ யாருக்கும் தெரியாமல் அருகில் இருக்கும் ஊரில் மோலி என்ற பெண்ணைத் திருமணம் செய்து அவளுடனான உறவில் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுக்கிறான். போதைக்கு அடிமையான அவளுடன் வாழப் பிடிக்காமல் அவளை விட்டுவிலகி வாழ்கிறான். தன்னுடைய திருமணத்தை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறான்.

காட்ஃப்ரெ இப்போது ஊரில் வாழும் ’காஸ்’ குடும்பத்துக்கு இணையான மற்றொரு பண்ணையாரின் மகள் நான்சி லாம்மீட்டரைக் காதலிக்கிறான். லாம்மீட்டர் குடும்பத்தைச் சேர்ந்த நான்சியின் காதல் நேர்மையானது. தந்தை லாம்மீட்டருடனும், தங்கை பிரிசில்லாவுடனும் அன்புடன் வாழ்கிறாள். காட்ஃப்ரெ தன்னுடைய தம்பி டன்ஸ்டன்காஸிடம் தன் குதிரையைச் சந்தையில் விற்றுவருவதற்கு அனுப்புகிறான். டன்ஸ்டன்காஸ் பொறுப்பும், ஒழுக்கமும் இல்லாதவன். சந்தைக்குச் செல்லும்போது குதிரையை விரைவாக ஓட்டிச் சென்றதால் விபத்துக்கு உள்ளாகி குதிரை இறந்துவிடுகிறது. குடித்துவிட்டு போதையில் ஊருக்குத் திரும்பும்போது சைலஸ் மார்னர் வீட்டுக்குள் புகுந்து அவர் புதைத்து வைத்திருந்த நாணயங்கள் அனைத்தையும் இரு பைகளில் கட்டி எடுத்துக்கொண்டு ஓடுகிறான். வழியில் கல்குவாரியில் இருக்கும் பள்ளத்தில் விழுந்து சாகிறான். பள்ளத்துக்குள் கிடந்த டன்ஸ்டன்காஸின் பிணமும், பொற்காசுகள் இருந்த பைகளும் யார் கண்களிலும் படாமால் கற்குவியலுக்குள் புதைந்து கிடக்கின்றன.  பல்லாண்டுகள் சேர்த்துவைத்த பொற்காசுகளை இழந்த சைலஸ் மார்னர் தனக்கு நேர்ந்த இந்த இரண்டாவது இழப்பையும் பொறுத்துக் கொண்டு வாழ்வைத் தொடருகிறார்.  

புத்தாண்டு கொண்டாட்டம் வருகிறது! ஊரில் இருக்கும் ’ரெயின்போ’ உல்லாச விடுதியில் கொண்டாட்டம் நடக்கிறது. காட்ஃப்ரெயின் மனைவி மோலி தன்னுடைய இரண்டு வயது மகளையும் கூட்டிக்கொண்டு புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கும் ரெயின்போ விடுதி நோக்கி வருகிறாள். தான் காட்ஃப்ரெயின் மனைவி என்பதை ஊருக்குத் தெரிவிக்க வருகிறாள். போதையில் தள்ளாடி வரும் மோலி குழந்தையுடன் கீழே விழுந்து இறக்கிறாள். கீழே விழுந்த குழந்தை, தாய்க்கு நேர்ந்த மரணத்தை அறியாது மெல்ல நகர்ந்து சைலஸ் மார்னர் குடிசைக்குள் நுழைகிறது. குழந்தையைக் கண்ட சைலஸ் மார்னர் மகிழ்ச்சியில் துள்ளுகிறார். குழந்தையை அரவணைத்துக் கொள்கிறார். இறந்துகிடக்கும் மோலியைப் பற்றிச் சொல்வதற்கு ரெயின்போ விடுதிக்கு ஓடுகிறார். இறந்து கிடக்கும் மோலியைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் காட்ஃப்ரெ நிம்மதி அடைகிறான். நான்சியைத் திருமணம் செய்துகொள்ளத் தடை ஏதும் இனி இல்லை என்று நிம்மதி.

பொன்னை இழந்த தனக்கு குழந்தை கிடைத்த சந்தோஷத்தில் திளைக்கிறார் சைலஸ் மார்னர். குழந்தையும் அவருடன் உடனே ஒட்டிக்கொள்கிறது. குழந்தைக்கு ஹெப்சிபா என்ற தன் தாயின் பெயரை வைக்கிறார். அவளைச் செல்லமாக ’எப்பி’ என்றழைக்கிறார். எப்பியின் மீது கொண்ட அளவற்ற பாசத்தில் தான் இழந்த பொற்காசுகளை மறந்துவிடுகிறார். அன்று பொழுதெல்லாம் காசுகளை எண்ணி மகிழ்ந்த சைலஸ் மார்னர் இன்று மகள் எப்பியின் அன்பு மழையில் நனைந்து கிடக்கிறார்.  

சைலஸ் மார்னர் குழந்தை எப்பியை வளர்ப்பதற்கு டாலி என்ற ஏழைப் பெண் அவ்வப்போது உதவுகிறார். காலச் சக்கரத்தின் சுழற்சியில் நிறைய மாற்றங்கள் நடக்கின்றன. எப்பி வளர்ந்து பெரிய பெண்ணாகிறாள். டாலியின் மகன் ஆரன் அவளின் அன்புக் காதலன் ஆகிறான். காதல் பறவைகளை இணைத்துவைக்க சைலஸ் மார்னரும், டாலியும் முடிவு செய்கின்றனர்.

நான்சியைத் திருமணம் செய்துகொண்ட காட்ஃப்ரெ மீண்டும் ஏக்கத்தில் தவிக்கிறான். தம்பதிகளுக்கு குழந்தைப் பேறில்லை என்ற குறை. காட்ஃப்ரெ ஏதேனும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகிறான். ஆனால் குழந்தையைத் தத்தெடுப்பதில் நான்சிக்கு விருப்பம் இல்லை.

சைலஸ் மார்னர் வீட்டுக்கருகில் இருந்த கல்குவாரியில் நீர் வற்றுகிறது. அதனால் அதற்குள் புதைந்த கிடந்த டன்ஸ்டன்காஸின் எலும்புக் கூடும், அவன் திருடிச் சென்ற சைலஸ் மார்னர் பொற்காசுகளின் பைகளும் தென்படுகின்றன. இழந்த பணத்தை மீண்டும் பெற்றதில் சைலஸ் மார்னருக்கு மகிழ்ச்சி.  

காட்ஃப்ரெ குற்ற உணர்வில் தவிக்கிறான். ஒரு நாள் நான்சியிடம் தனக்கும் மோலிக்கும் நடந்த திருமணத்தையும், அதன் மூலம் அவன் பெற்ற குழந்தையை இப்போது சைலஸ் மார்னர் வளர்த்து வருவதையும் சொல்கிறான். ’’குழந்தை எப்பியை நம்முடன் சேர்த்துக் கொள்வது தத்தெடுப்பது ஆகாது. அது எனக்குப் பிறந்த குழந்தைதான். எனவே இப்போதாவது எப்பியை நாம் வளர்ப்பதற்கு நீ ஒத்துக்கொள்ள வேண்டும்’’ என்று அவளைக் கெஞ்சுகிறான். அவள் ஒப்புக்கொள்கிறாள். இருவரும் ஒரு நாள் இரவு சைலஸ் மார்னர் வீட்டுக்கு வருகிறார்கள். தந்தையும், மகளும் ஆச்சரியத்துடனும், அதிசயத்துடனும் அவர்களை வரவேற்கின்றனர். அவர்களின் திட்டத்தைக் கேட்ட எப்பியின் நெஞ்சம் பதறுகிறது. சைலஸ் மார்னர் அருகில் சென்று அவர் கையை இறுகப் பற்றிக்கொள்கிறாள்.

நான்சியும், காட்ஃப்ரெகாஸும் அடுத்த கட்டமாக எப்பியின் வாழ்க்கை ரகசியத்தைப் போட்டு உடைக்கின்றனர் ‘’உன் தாய் மோலிக்கும், காட்ஃப்ரெக்கும் பிறந்தவள்தான் நீ என்கிறார்கள். எனவே நீ எங்களுடன் மாளிகையில் வாழ வேண்டிய பெண். உன்னைப் பெற்ற தந்தையுடன், நீ செல்வச் செழிப்பில் மிதக்கலாம்; நீ எப்போது வேண்டுமானாலும் உன் வளர்ப்புத் தந்தையை இங்கு வந்து பார்த்துக் கொள்ளலாம்; உன் ஆசைகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுவோம்; எங்களுடன் வந்துவிடு’’, என்று சொல்லிக் கெஞ்சுகிறார்கள். ’’என் தந்தை சைலஸ் மார்னர்தான்! வேறு யாரையும் என் தந்தையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது,’’ என்று உறுதியாகச் சொல்லியதும் இருவரும் விடைபெற்றுச் செல்கிறார்கள்.

தன் மகள் எப்பி-ஆரன் திருமணத்துக்கு முன் சைலஸ் மார்னர் லாண்டன்யார்டு சென்று தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறார். எப்பியைக் கூட்டிக்கொண்டு லாண்டன்யார்டு செல்கிறார். ஆனால் தொழிற்புரட்சி கொண்டுவந்த மாற்றத்தில் அந்த ஊரே முற்றிலும் மாறிவிடுகிறது. அவர் வாழ்ந்த இடம், ’கால்வினிசம்’ போதித்த சர்ச் இருந்த இடமெல்லாம் காணமால் போய்விடுகின்றன. எல்லாம் தொழிற்சாலைகளாக மாறிப்போயுள்ளன.  இருவரும் ரேவலோ திரும்புகிறார்கள். ஊர் மக்களின் வாழ்ந்துகளுடன் எப்பி – ஆரன் திருமணம் இனிதே நடக்கிறது. புதுமணத் தம்பதிகள் சைலஸ் மார்னரை கண்ணின் இமைபோல்  காக்கின்றனர்.

சைலஸ் மார்னர் வாழ்வில் சந்திக்கும் துரோகங்கள் சொற்களில் அடங்காதவை. மானுடத்தின் மீதே நம்பிக்கை இழந்து சமூகத்தின் பார்வையிலிருந்து ஒதுங்கி வாழ்கிறார். குழந்தை எப்பி அவர் வீட்டுக்குள் நுழைந்து அவர் வாழ்வின் திசையை மாற்றுகிறாள். வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறாள். வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறாள். தொலைந்து போன மனிதத்தை, மானுடத்தின் அரிய குணங்களை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது ஜார்ஜ் எலியட்டின் ’சைலஸ் மார்னர்’ நாவல்.

                                    --------------------------------------

 

 

.

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...