இங்கிலாந்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தாமஸ் ஹார்டியின் டெஸ் ஆஃப் தி டர்பர்வில் (Tess of the D’Urbervilles) எனும் துயர்மிகு நாவல்!
தாமஸ் ஹார்டி (1840-1928) ஆங்கில இலக்கியத்தின் பெருமைமிகு நாவலாசிரியராகவும், கவிஞராகவும் அறியப்படுகிறார். தன்னுடைய எழுத்துப் பணியின் முதல் பாதியில் நாவல் எழுதியும், இரண்டாம் பாதியில் கவிதைகள் எழுதியும் வெற்றி பெற்றார். தான் பிறந்து வளர்ந்த வெசக்ஸ் எனப்படும் இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலையே தன் கதைப் பொருளாக்கினார். ’வெசக்ஸ் நாவல்கள்’ என்றழைக்கப்பட்ட ஹார்டியின் தி ரிடர்ன் ஆஃப் தி நேட்டிவ், மேயர் ஆஃப் கேஸ்டர் பிரிட்ஜ், ஃபார் ஃப்ரம் தி மேடிங் கிரவ்டு, தி வுட்லாண்டர்ஸ், டெஸ் ஆஃப் தி டர்பர்வில், ஜூடு தி அப்ஸ்கியூர் போன்ற நாவல்கள் என்றென்றும் அழியாப் புகழ் பெற்றவை.
ஹார்டியின் கடைசி இரு நாவல்களான டெஸ் ஆஃப் தி டர்பர்வில் (1891) மற்றும் ஜூடு தி அப்ஸ்கியூர் (1895) மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. கத்தோலிக்கத் திருச்சபை இவ்விரு நாவல்களையும் கிறித்தவ எதிர்ப்பு நாவல்கள் என்றழைத்துத் தடை செய்தது. வேல்ஃபீல்டு சர்ச் பாதிரியார் வெக்ஸம் நாவல்களை எரித்துச் சாம்பாலக்கினார். ‘’நல்ல வேளை நான் அவரிடம் சிக்கவில்லை, இருந்திருந்தால் என்னையும் சேர்த்து எரித்திருப்பார் என்று ஹார்டி நகைச்சுவையாகக் கூறினார். நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னரே கத்தோலிக்கத் திருச்சபை இந்தத் தடையை நீக்கியது.
டெஸ் நாவலுக்கு (A Pure Woman, Faithfully Presented) ’நேர்மையுடன் சித்தரிக்கப்பட்ட ஒரு தூய்மையான பெண்மணி’ என்ற பெயரும் உண்டு. ஹார்டியின் மற்ற நாவல்கள் போல் டெஸ் ஆஃப் தி டர்பர்வில் நாவலும் வெசக்ஸ் பகுதியில் வாழ்ந்த ஏழை மக்களின் வாழ்வியல் சோகங்களைப் பதிவு செய்கிறது. ‘கன்னிப் பெண்,’ ’இனியும் கன்னிப் பெண் இல்லை,’ ’வேலை தேடிப் பயணம்,’ ’விளைவு,’ அந்தப் பெண் கொடுக்கும் விலை,’ ‘வேடம்,’ ‘நிறைவு’ என்று ஏழு பாகங்களாக நாவல் விரிந்து செல்கிறது. வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப டெஸ் செல்லுமிடம் எல்லாம் சோகம் நிழல்போல் தொடர்கிறது. பிளாக்மூர் பள்ளத்தாக்கில் இருக்கும் மர்லாட் கிராமத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறக்கும் டெஸ் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகிறார். டெஸ்ஸின் தந்தை ஜான் டர்பிஃபீல்டு காய்கறிகளை விற்றுப் பிழைக்கிறார். ஏழ்மை தரும் துயரை, குடித்து மறக்கிறார். அவர் மனைவி ஜோன் டர்பிஃபீல்டு ஓர் அப்பாவிப் பெண். தன் ஐந்து குழந்தைகளுடன் அல்லாடுகிறார். டெஸ் குடும்பத்தின் மூத்தவள் என்ற பொறுப்பை உணர்ந்து கடினமாக உழைக்கிறார். அவளின்றி அந்தக் குடும்பச் சக்கரம் சுழலாது. தன் தங்கை லிசா லூ மீது மிகுந்த அன்பு கொண்டவள்.
மர்லாட் கிராமத்தில் திருவிழா! அந்தி மயங்கும் நேரத்தில் பெண்கள் வெள்ளை கவுன் அணிந்து கொண்டு, ஒரு கையில் வில்லோ மரக் குச்சியுடனும் இன்னொரு கையில் பூச் செண்டுடனும் கூடுகின்றனர். ஊர் இளைஞர்கள் இன்னும் வந்து சேரவில்லை. இதனால் இணையின்றி அவர்கள் மட்டுமே நடனத்தைத் தொடங்குகிறார்கள். அவ்வழி செல்லும் மூன்று இளைஞர்கள் பெண்கள் நடனம் ஆடுவதைக் கவனிக்கின்றனர். இவர்கள் மூவரும் சகோதரர்கள் என்பதும், பக்கத்து ஊரில் இருக்கும் பாதிரியார் ஜேம்ஸ் கிலேர் அவர்களின் புதல்வர்கள் என்பதும் பின்னர் தெரிய வருகிறது. மூவரில் இளையவன் ஏஞ்சல் கிலேர் மட்டும் நடனம் ஆடும் பெண்களைப் பார்த்து தன்னை மறந்து நிற்கிறான். யாரேனும் ஒரு பெண்ணுடன் நடனம் ஆட விரும்புகிறான். மற்ற சகோதரர்கள் அந்த கிராமப்புர ஏழைப் பெண்களுடன் நடனமாட மனமின்றி நகர்கின்றனர். மற்ற இருவரும் அவனை விட்டுவிட்டு பயணத்தைத் தொடர அவன் மட்டும் அருகில் நிற்கும் ஒரு பெண்ணுடன் சிறிது நேரம் நடனம் ஆடிவிட்டுப் புறப்படுகிறான். புறப்படும்போது கூட்டத்தில் இருந்த ஓர் அழகியைக் கண்டு வியப்பில் ஆழ்கிறான். அவளுடன் ஆடாமல் விட்டுவிட்டோமே என்ற ஏக்கத்துடன் அவர்களிடம் விடைபெற்றுச் செல்கிறான். இளைஞனின் மனதில் ஏக்கத்தை ஏற்படுத்திய அழகி யார்? டெஸ்!
அன்றிரவு ஜான் டர்பிஃபீல்டு தன் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வேளையில் ஊரின் பாதிரியாரைச் சந்திக்கிறார். ’’ஜான்! உங்கள் மூதாதையர்கள் இங்கிலாந்தின் தொன்மையான ’தி டர்பர்வில்ஸ்’ எனும் பிரபுக்கள் குடும்பத்தினர் என்பது உங்களுக்குத் தெரியுமா?’’ என்று சொல்லி அவர் மனதில் ஒரு கிலேசத்தை உருவாக்கிவிடுகிறார். அதோடு மட்டுமின்றி ’தி டர்பர்வில்ஸ்’ குடும்பத்தின் வழிவந்த ஒருவர் மர்லாட் ஊருக்கு அருகில் உள்ள டேண்ட்ரிட்ஜ் என்ற இடத்தில் வசிப்பதாகவும் கூறுகிறார். ஜான் டர்பிஃபீல்டு இக்குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள நினைக்கிறார். மகள் டெஸ் உடனே டேண்ட்ரிட்ஜ் சென்று அவர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் உண்மையில் அந்த வீடுதான் டர்பர்வில்ஸ் குடும்பத்துக்குச் சொந்தமானது. அதில் இருப்பவர்கள் டர்பர்வில்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. டர்பர்வில்ஸ் குடும்பம் வாழ்ந்த வீட்டை வாங்கி அதன் மூலம் அந்தக் குடும்பத்தின் பெயரைப் பெற்று போலிப் பெருமிதம் அடைய நினைப்பவர்கள். தற்போது அந்த வீட்டில் அலெக் டர்பர்வில் என்ற இளைஞனும் அவனின் வயதான, பார்வையை இழந்த தாயும் வாழ்கிறார்கள்.
தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற டெஸ் ஒரு முறை டர்பர்வில்ஸ் வீட்டுக்குச் செல்கிறாள். அதில் தொடங்குகிறது அவளின் துயரம். டெஸ்ஸைப் பார்த்ததும் அலெக் டர்பர்வில்ஸ் அவளைத் துய்க்க விரும்புகிறான். அதற்கானத் திட்டமிடுதலை உடனே தொடங்குகிறான். வீட்டில் இருக்கும் பறவைகள் பூங்காவைப் பராமரிக்க ஓர் ஆள் தேவைப்படுகிறது என்றும், டெஸ் அந்த வேலையை ஏற்றுக்கொண்டால் தானும் தன் அம்மாவும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் சொல்கிறான் அந்தக் காமுகன். குடும்பத்தினரைக் கலந்தாலோசித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி டெஸ் வீடு திரும்புகிறாள்.
அடுத்த நாளே டெஸ்ஸைக் கூட்டிச் செல்ல குதிரையில் வருகிறான் அலெக். குடும்பநிலை கருதி டெஸ் இந்த வேலையை ஒப்புக்கொள்கிறாள். தன் பெற்றோரையும், உடன் பிறந்தவர்க்ளையும் பிரிய மனமின்றி டெஸ் குதிரையில் அவனுடன் செல்கிறாள். குதிரையில் செல்லும்போதே அவளின் விருப்பத்தைக் கேட்காமலேயே அவளுக்கு முத்தம் கொடுக்கிறான். அலெக்கின் காமவெறியைப் புரிந்து கொண்ட டெஸ் அவனை வெறுக்கிறாள். அந்த வீட்டில் பெரிதாக வேலை எதுவும் இல்லை. பார்வையிழந்த அலெக்கின் தாய் அவளுக்குத் தொந்திரவு ஏதும் தருவதில்லை. ஆனால் அலெக் எனும் கழுகின் கோரப் பிடிகளில் சிக்கித் தவிக்கும் புறாவாகிறாள் டெஸ்.
ஊரில் சந்தை கூடுகிறது. அலெக் வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் டெஸ் சந்தைக்குச் செல்ல விரும்புகிறாள். சந்தையில் சுதந்திரமாகச் சுற்றிப் பொருட்களை வாங்குகிறாள். சந்தை முடிந்ததும் ஆட்டம், பாட்டம் என்று இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். டெஸ் மகிழ்ச்சியில் திளைக்கிறாள். பொழுது சாய்கிறது. வீட்டுக்குத் திரும்ப நீண்ட தூரம் நடக்க வேண்டும். சரியான நேரத்தில் கழுகு வந்திறங்குகிறது. அலெக் அவளைக் குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறான். காரிருள் சூழ்கிறது. பாதை தவறிவிட்டதாகப் பொய் சொல்கிறான். டெஸ்ஸை ஓரிடத்தில் படுத்திருக்கச் சொல்லிவிட்டு அவன் பாதையைக் கண்டுபிடித்து வருவதாகச் சொல்லிச் செல்கிறான். காட்டுக்குள் நீண்ட நேரம் டெஸ் காத்திருக்கிறாள். இருளும், தனிமையும் பயமுறத்துகிறது. பயணக் களைப்பில் அசந்து தூங்கிவிடுகிறாள். நீண்ட நேரம் கழித்துத் திரும்பும் அலெக் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கும்மிருட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் அவளைக் கெடுத்துவிடுகிறான்.
மறுநாள் கவலையுடன் டெஸ் வீடு திரும்புகிறாள். வீட்டில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. பெற்றோர் நோயில் வாடுகிறார்கள். அடுத்த இடி இறங்குகிறது. டெஸ் கர்ப்பமாகிறாள். குழந்தை நோயுடனே பிறக்கிறான். திருமணம் செய்துகொள்ளாமல் பிறந்த குழந்தைக்கு புனித ஸ்நானம் செய்து பெயர் சூட்டு விழா நடத்த சர்ச் மறுக்கிறது. வீட்டில் தன் தம்பி, தங்கைகள் முன்னால் தானே பெயர் சூட்டு விழா நடத்தி ’சாரோ’ (sorrow) என்று பெயரிடுகிறாள். குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்துவிடுகிறது. முறையான நல்லடக்கமும் செய்ய முடியாமல் அவளே குழி வெட்டிப் புதைத்துவிடுகிறாள். இனியும் மர்லாட் கிராமத்தில் வாழப் பிடிக்கவில்லை.
வேலை தேடி அலைகிறாள். அவள் தாய் ஜோன் டர்பிஃபீல்டு பால் பண்ணை வேலையில் அனுபவம் வாய்ந்தவள் என்பதால் டெஸ்ஸும் அதில் சிறிது அனுபவம் பெற்றிருந்தாள். பால் பண்ணையில் வேலை செய்திடவே விரும்பினாள். நீண்ட பயணத்தின் முடிவில் ’டால்போத்தே பால் பண்ணை’ வந்து சேருகிறாள். அதன் உரிமையாளர்கள் கிரிக் தம்பதிகள் அவளை உடனே வேலையில் அமர்த்திக்கொள்கிறார்கள். அவள் வேலையில் காட்டும் ஆர்வம், திறமை, நேர்மை கண்டு மெச்சுகிறார்கள். அதிகாலை மாடுகளுக்கு பால் கறப்பதில் தொடங்கும் வேலை மதியம் சிறிது இடைவேளையைத் தவிர இரவுவரை தொடரும்.
டெஸ் வயதை ஒத்த மேலும் மூன்று ஏழைப் பெண்கள் அங்கிருந்தனர். ஆனால் சற்றும் பொருந்தாமல் ஏஞ்சல் கிலேர் என்ற பணக்கார இளைஞனும் அங்கிருந்தது கண்டு டெஸ் ஆச்சரியம் அடைகிறாள். ஏஞ்சல் கிலேர் பக்கத்திலிருக்கும் சர்ச்சின் பாதிரியார் ஜேம்ஸ் கிலேரின் மகன். அவனின் இரண்டு மூத்த சகோதரர்களும் தந்தையைப் போலவே பாதிரியாராகப் பணி செய்ய விரும்பி அதற்கான பயிற்சியில், படிப்பில் இருந்தனர். ஆனால் ஏஞ்சல் கிலேர் மட்டும் குடும்பத்தினர் விருப்பத்துக்கு மாறாக, பால் பண்ணை நடத்த வேண்டும் என்று விரும்பினான். அதற்கான பயிற்சி பெறவே டால்போத்தே பால் பண்ணையில் சேர்ந்திருந்தான். ஏஞ்சல் கிலேர் மூன்றாண்டுகளுக்கு முன்னரே மர்லாட் கிராமத் திருவிழாவின்போது டெஸ்ஸின் அழகில் மயங்கியவன் என்பதும், அவளுடன் நடனமாட முடியாமல் போன ஏக்கத்துடன் திரும்பியவன் என்பதும் டெஸ்ஸுக்குத் தெரியாது.
ஏஞ்சல் கிலேர் தங்குவதற்கு மட்டும் பண்ணையில் சற்று வசதியான இடம் கொடுக்கப்பட்டிருந்தது. டெஸ்ஸும் அவளுடன் தங்கிய மூன்று பெண்களும் நெருங்கிப் பழகி நல்ல சிநேகிதிகளானர். கிலேரின் அன்பு, அடக்கம், அறிவு அனைவராலும் பாராட்டப்படுகிறது. தொழிலைக் கற்றுக் கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கிறான். டெஸ்ஸின் அழகில் ஈர்க்கப்பட்டு அவளிடம் மனதைப் பறிகொடுக்கிறான். ஆனால் டெஸ் மிகுந்த கவனத்துடன் அவனைத் தவிர்க்கிறாள். தான் ஏற்கனவே ஒரு கயவனால் கெடுக்கப்பட்டவள், கிலேரின் காதலுக்குத் தகுதியற்றவள் என்ற எண்ணம் அவளிடம் ஆழப் பதிந்திருந்தது. கிலேரின் நல்ல பண்பு பண்ணை உரிமையாளர்கள் கிரிக் தம்பதிகள் உட்பட பண்ணையில் இருந்த அனைவரையும் கவர்ந்தது. டெஸ் அவனுடனான காதலைத் தவிர்க்க விரும்பிய அதே சமயத்தில் அவளின் மூன்று சிநேகிதிகளும் அவனைக் காதலித்தனர். அவனை அடைந்திட அவர்களிடையே ஒரு போட்டியே இருந்தது. விரும்பியவர்களுக்குக் கிடைக்காமலும், விரும்பாதவர்களுக்குக் கிடைப்பதும் வாழ்க்கையின் புதிர்களில் ஒன்றுதானே!
கிலேரின் தொடர்ந்த வற்புறுத்தல் டெஸ்ஸின் மனதை அசைக்கிறது. ஆனால் திருமணத்துக்கு முன்னர் தனக்கு அலெக் நிகழ்த்திய கொடூர வன்முறையை அவனிடம் சொல்லிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். பலமுறை டெஸ் அதைச் சொல்ல வரும்போதெல்லாம் கிலேர் அதைப் பெரிதாக எண்ணாமல் தட்டிவிடுகிறான். ஆனால் டெஸ்ஸின் மனது உறுத்திக்கொண்டே இருக்கிறது. கிலேர் தனது திருமணம் குறித்து பெற்றோரின் சம்மதம் பெறுவதற்கு ஊருக்குச் செல்கிறான். அவன் பெற்றோர் அரை மனதுடன் சம்மதம் தெரிவிக்கிறார்கள். ஒரு ஏழை பண்ணைத் தொழிலாளியை அவன் மணப்பதில் அவனுடைய சகோதர்களுக்கு முற்றிலும் ஒப்புதல் இல்லை. இருப்பினும் டெஸ்ஸுடனான திருமணத்துக்குத் தேவைப்படும் ஆடை அணிகலன்களுடன் பண்ணை வருகிறான்.
டெஸ் தன்னுடைய தாய் ஜோன் டர்பிஃபீல்டுக்கு கடிதம் மூலம் தனக்கும், கிலேருக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைத் தெரிவிக்கிறாள். ஜோன் உடனே தன் மகளுக்குப் பதில் கடிதம் அனுப்புகிறார். ‘’உன் கடந்த வாழ்க்கையை, உனக்கு நிகழ்ந்த வன்முறையை, நீ மணக்கவிருக்கும் இளைஞனிடம் சொல்லாதே,’’ என்று எச்சரிக்கிறார். டெஸ்ஸின் சிநேகிதிகள் ரெட்டி, இஸ் ஹுயெட், மரியான் மூவரும் தங்களுக்கு கிலேரின் மீதிருந்த காதலையும் மீறி டெஸ்ஸை வாழ்த்துகிறார்கள்.
திருமணம் அருகிலிருக்கும் சர்ச்சில் நடப்பது என்று முடிவாகிறது. .கிரிக் தம்பதிகள் முன்னின்று அனைத்து உதவிகளையும் செய்கின்றனர். கிலேரிடம் தன் மனதுக்குள் ஒளிந்து கிடக்கும் ரகசியத்தை எப்படியாவது சொல்லிவிடத் துடிக்கிறாள் டெஸ். ஆனால் அதற்கு கிலேர் இடம் தராததால், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அவமதிப்பை ஒரு காகிதத்தில் விளக்கமாக எழுதி அவனுடைய அறையின் கதவுக்கடியில் தள்ளிவிடுகிறாள். ஆனால் கிலேர் கடிதத்தைப் படிக்கவே இல்லை. இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய அறையின் தரை விரிப்புக்கு அடியில் சிக்கிக் கொண்டிருந்த கடிதத்தை அவளே எடுக்கிறாள். இறுதியில் திருமணத்துக்குச் செல்லும் வழியில் ‘’இப்போதாவது நான் செய்த தவறினைச் சொல்ல அனுமதியுங்கள்’’ என்று அவனிடம் கெஞ்சுகிறாள். ‘’அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நானும் ஒரு தவறு செய்துள்ளேன். அதையெல்லாம் நாம் திருமணத்துக்குப் பின்னால் சொல்லிக்கொள்ளலாம்’’ என்று சொல்லி தவிர்த்து விடுகிறான். விதி வலியது! மனித முயற்சிகளைத் தோற்கடிக்கும் அளவிற்கு விதி வலியது. டெஸ் எவ்வளவு முயன்றும் அவள் விளக்கத்தைக் கேட்க மறுத்துவிடுகிறான் கிலேர்.
திருமணம் முடிந்ததும் கிலேர் ஏற்பாடு செய்திருந்த மாளிகையில் தங்குவதற்கு கிலேர் - டெஸ் தம்பதிகள் செல்கிறார்கள். டெஸ் தன் தாம்பத்திய வாழ்வு பெரு மகிழ்ச்சியுடன் தொடங்கவிருப்பதை நினைத்துப் பூரிப்படைகிறாள். ஆனால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது. இருவரும் முதலிரவில் தங்கள் மனதில் இருக்கும் ரகசியத்தைப் பரிமாறிக் கொள்கிறார்கள். கிலேர் செய்த தவறினை டெஸ்ஸினால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் டெஸ் செய்த தவறினை கிலேரினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் திருமண பந்தம் முதல் நாளே முறிகிறது. தம்பதிகள் பிரிகிறார்கள். டெஸ்ஸின் ஏழ்மை நிலைமையை நன்கறிந்த கிலேர் அவளுக்கு ஐம்பது பவுன் கொடுக்கிறான். தன்னுடைய பெற்றோரின் முகவரியையும் கொடுத்து. அவளுக்குப் பணம் தேவைப்படும்போது அவனுடைய பெற்றோரிடம் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லப் பிரிகிறான்.
கிலேர் பால் பண்ணை துவங்குவதற்காக பிரேசில் புறப்படுகிறான். டெஸ் மீண்டும் தன் குடும்பத்தினருடன் சேர்ந்திட மர்லாட் புறப்படுகிறாள். வழியில் விதி மீண்டும் விளையாடுகிறது. அவள் விரும்பியவன் அவளைவிட்டு விலகிச் செல்ல, அவள் விரும்பாதவன் அவள் வழியில் குறுக்கே வருகிறான். ஆம்; இப்போது அலெக் டர்பர்வில் மதப் பிரச்சாரகர் வேடம் பூண்டுள்ளான். தெரு முனையில் நின்று சுவிஷேசப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறான். டெஸ்ஸைக் கண்டதும் பிரச்சாரத்தைப் பாதியில் விட்டுவிட்டு அவளைத் தொடருகிறான்.
சற்றும் எதிர்பாராத இந்தச் சந்திப்பு டெஸ்ஸுக்கு பெரும் எரிச்சலைத் தருகிறது. தன்னைத் தொடர வேண்டாம் என்று அவனை விரட்டுகிறாள். தான் திருமணம் ஆனவள் என்றும்; பிரேசில் சென்றுள்ள தன்னுடைய கணவன் அவளிடம் மீண்டும் வந்து சேருவான் என்றும் சொல்லி அவனை விரட்டிவிட்டு, வீட்டுக்கு வருகிறாள். வீடே சோகத்தில் ஆழ்கிறது. பெற்றோர் இருவரும் நோயில் விழுகின்றனர். தந்தை முந்திக் கொள்கிறார். அவரின் மரணத்துக்குப் பிறகு டெஸ்ஸின் பொறுப்பு கூடுகிறது. வீட்டு வாடகை கொடுக்காததால் வீட்டைவிட்டு துரத்தி அடிக்கப்படுகின்றனர். வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோல்வியைச் சந்திக்கும் டெஸ் விரக்தியின் உச்சத்தில் ‘’என்னுடைய உண்மையான அன்பைப் புரிந்துகொண்டு உடனே புறப்பட்டு வாருங்கள்,’’ என்று கிலேருக்கு கடிதம் எழுதுகிறாள். பதில் இல்லை. ஆனால் அலெக்கின் தொந்திரவு தொடருகிறது. வீட்டில் வறுமை சம்மணம் போட்டு உட்கார்ந்துள்ளது. வேறுவழியும், விருப்பமும் இல்லாமல் டெஸ் மீண்டும் அலெக்கிடம் இணைகிறாள்.
டெஸ்ஸின் கடிதத்தைப் படித்ததும் கிலேர் உடனே இங்கிலாந்து திரும்புகிறான். மர்லாட் வருகிறான். டெஸ் குடும்பம் அங்கில்லை. தேடி அலைந்து டெஸ் இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கிறான். டெஸ் ஒரு வீட்டு, மாடியில் குடியிருக்கிறாள். கீழிருக்கும் வீட்டின் சொந்தக்காரி, ’’திருமதி டர்பர்வில் மாடியில் குடியிருக்கிறார், மேலே சென்று பாருங்கள்’’ என்று சொன்னதும் கிலேர் அதிர்ச்சி அடைகிறான். டெஸ், ‘’திருமதி டர்பர்வில்’ ஆனது அவன் அறியாதது. மாடியில் சென்று டெஸ்ஸைச் சந்திக்கிறான். டெஸ் ‘’இது காலங்கடந்த சந்திப்பு. நாம் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை,’’ என்று சொன்னதும் கிலேர் மனமுடைந்து திரும்புகிறான்.
கிலேரின் வருகை அலெக்கைப் பதற்றம் அடையச் செய்கிறது. கிலேர் சென்றதும் அலெக் – டெஸ் இடையில் சண்டை நடக்கிறது. தன் வாழ்வைச் சீரழித்த அலெக்கை கத்தியில் குத்திக் கொன்றுவிட்டு கிலேரைத் தேடி டெஸ் ஓடுகிறாள். இருவரும் இறுதியில் ஒன்று சேருகிறார்கள். போலீஸ் துரத்துகிறது. ஒரு பாழடைந்த மாளிகையில் இருவரும் ஐந்து நாட்கள் ஒளிந்திருக்கிறார்கள். கிலேர் இரவில் சாப்பாடு வாங்கி வருகிறான். டெஸ் தன் வாழ்வின் இறுதியை உணர்கிறாள். தன் தங்கை லிசா லூவை திருமணம் செய்து கிலேர் அவளுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள். போலீஸ் நெருங்கி வருகிறது. டெஸ் கைது செய்யப்படுகிறாள்.
சில நாட்கள் கழித்து கிலேர் – லிசா லூயி தம்பதிகள் ஒரு கட்டிடத்தின் உயரத்திலிருந்து சிறை வளாகத்தை உற்று நோக்குகிறார்கள். சிறைக் கோபுரத்தில் கருப்புக் கொடி ஏற்றப்படுவதைப் பார்க்கிறார்கள். அது தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கான அடையாளம். ’’வாழ்நாள் முழுவதும் துயரில் தோய்ந்திருந்த டெஸ் தூக்கில் அமைதியாகத் துயில் கொள்கிறாள்’’ எனும் நாவலின் கடைசி வரி நெஞ்சை நெகிழச் செய்கிறது. ‘’நீதி நிலைநிறுத்தப்படுகிறது. மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் இறைவன், அந்த ’அலகிலா விளையாட்டுடையான்’ டெஸ்ஸிடம் விளையாடுவதை நிறுத்திக் கொள்கிறான்’’ என்று முடிகிறது நாவல். கிலேர் – லிசா லூயி தம்பதிகள் டெஸ்ஸுக்கு மௌன அஞ்சலி செலுத்திவிட்டு இருவரும் கைகோர்த்துச் செல்கின்றனர்.
டெஸ், ஜூடு தி அப்ஸ்கியூர் இரு நாவல்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிந்தனை ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் நாவல்கள். மத நம்பிக்கைகளை அசைக்கத் தொடங்கிய சமூகம் அது. திருமண பந்தத்தின் புனிதத்தைக் கேள்வி கேட்ட சமூகம் அது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதை நம்ப மறுத்த சமூகம் அது. எனவே கத்தோலிக்கத் திருச்சபை இவ்விரு நாவல்களையும் அன்று தடை செய்ததில் வியப்பில்லை. இன்று தடையை விலக்கிக் கொண்டதிலும் வியப்பில்லை. துன்பியல் நாவல்களான டெஸ், ஜூட் தி அப்ஸ்கியூர் இரு நாவல்களையும் கனத்த மனதுடனேயே படிக்க முடியும். தாமஸ் ஹார்டியின் நாவல்கள் கிரேக்க துன்பியல் காவியங்களுக்கு இணையானவை என்பதில் ஐயமில்லை.
--------------------------
Comments
Post a Comment